Published:Updated:

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

ஆர்.சரண், படங்கள்: க.பாலாஜி

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

ஆர்.சரண், படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

சென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு சொர்க்கம் இருப்பது பலருக்குத் தெரியாது. ஆந்திராவின் தடா

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

மற்றும் கோனே ஆகிய இரண்டு அருவிகளுக்கும் ஒரே நாளில் சென்றுவர நானும் நண்பரும் திட்டம் போட்டோம். முன்பின் ஆந்திரா போகாதவர்கள் என்பதாலும் நிறைய ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுபவர்கள் என்பதாலும் கிளம்புவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தெலுங்கில் பேச முற்பட்டோம்.

 ப்ளான் போட்ட  அடுத்த நாளிலிருந்தே ‘தடாலு’ ‘கோனேலு’ என்றுதான் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். கிரீம்ஸ் ரோடு சாய் கிருஷ்ணா ஆந்திரா மெஸ்ஸில்தான் லன்ச். ‘பப்புக் கொண்ரா’, ‘தீஸ்கோரா’, ‘கூட்டு ஆயி போயிந்தி’, ‘மன்ச்சி ஆம்லேட்டு’, ‘மீ பேரு ஏன்டி?’, ‘ஏமண்டி இக்கட சூடண்டி!’... அவ்வளவு ஏன், கொத்தவரங்காயைக்கூட `கோரிசுகுடு காயலு’ என்றுதான் ஆர்டர் செய்தோம். ஆந்திரா மெஸ்ஸில் வேலைபார்க்கும் சின்னப் பசங்களை மிரட்டலடி அடித்தோம். யாரையும் ‘டேய்’ என அழைக்காமல் ‘உர்ரே’ என அழைக்கப் பழகியிருந்தோம். நண்பர் ஒருபடி மேலே போய் ஜூனியர் மற்றும் சீனியர் என்.டி.ஆர் படங்களை யூ-ட்யூபில் பார்த்து வெறியேற்றிக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

அட்வென்ச்சர் ட்ரிப்புக்கான நாளும் வந்தது. வீட்டிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குக் கிளம்புவதாக ப்ளான்லு. எனக்கும் அலாரத்துக்கும்  செட் ஆகாதுலு. எதிர்பார்த்தது போலவே அசதியில் குப்புறப்படுத்துத் தூங்கிவிட்டேன். அலாரம் அடித்திருக்கிறது. வீட்டுக்குக் கீழே நின்று எனக்குக் கால் பண்ணி ஓய்ந்துபோய் தேவுடு காத்த நண்பருக்கும், கூடவே வந்த போட்டோகிராபருக்கும் அது தெளிவாய்க்  கேட்டிருக்கிறது. ஓனர் வீட்டு நாய் போட்டோகிராபரைப் பார்த்துக் குரைத்ததா நண்பரைப் பார்த்துக் குரைத்ததா தெரியவில்லை. இருவரையும் அரெஸ்ட் செய்து வைத்ததை, பல் விளக்க பால்கனிக்கு வந்தபோதுதான் தெரிந்துகொண்டேன்... `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ க்ளைமாக்ஸில் அஜித் தபுவைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார்கள்.

எங்களின் அட்வென்ச்சர் வீட்டிலிருந்தே ஸ்டார்ட் ஆனதில் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார் நண்பர். தமிழ்நாட்டு எல்லையான ஊத்துக்கோட்டையில் ஒரு டீ வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தேன். “ஹை... ஆந்திராலு..!” - அங்கிருந்த ஒரு சிறிய பலகையைப் பார்த்து போட்டோகிராபர் உற்சாகமானார். ரோட்டுக்குள் ரோட்டைக் கண்டுபிடித்து பாம்புபோல வளைந்து வளைந்து ஓட்ட வேண்டிய நிலைமை. பைக்கில் சிறிது தூரம் சென்றதும் நிறைய ஜாங்கிரியைப் பிய்த்துப்போட்ட எழுத்துகளோடு நந்தனம், நாயுடுவேடு என கிராமங்கள் வந்தன. சாம்பல்மேடுகளும், சூழும் புகை மண்டலமுமாய் எங்கெங்கும் இருந்தது. நாகலாபுரம் வந்ததும் தான் கண்ணே தெரிந்தது. ‘அண்ணய்யா!’ என ஆரம்பித்து, ‘ஈ ரோடுலோ...’ என டீக்கடைக்காரர் ஒருவரிடம் நண்பர் அட்ரஸ் கேட்க முயற்சி செய்தார்.

“சொல்லுங்க தம்பி... ஃபால்ஸ்க்கு ரூட்டு கேட்கிறீங்களா..? பைக்கைக் கரை ஓரமா நிறுத்திட்டு ஓடை வழியாவே போனீங்கனாக்கா அருவிக்குப் போய்ச் சேர்ந்துரலாம்” என்றார் தமிழில். ஒரு மீடியம் ரக  ஓட்டலில்  பார்சல்  டிபன்  கட்டிக்கொண்டோம். ஒரு இட்லி ஒரு ரூபாய், ஒரு வடை 2 ரூபாய் என டன் கணக்கில் ஆச்சர்யப்படுத்தினார் பீமா ராவ் மெஸ் ஓனர். போகும் வழியில் எஸ்.எஸ்.புரம் என்ற கிராமத்தில் ‘தல அஜீத்குமார் பாய்ஸ்’ எனத் தெள்ளுதமிழில் கல்யாணத்துக்கு பேனர் வைத்திருந்தார்கள். விவேகம் அஜீத் எங்களைப் பார்த்துச் சிரித்தார்.

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

“என்ன நண்பா... இன்னும் தமிழ்நாட்டுலதான் இருக்கோமா... அஜீத்துக்கெலாம் போஸ்டர் இருக்கு?” என்று அஜீத் வாய்ஸில் கேட்டார் நண்பர். இப்படி ஏகப்பட்ட ஆச்சர்யங்களோடு நாகலாபுரம் காட்டுப்பகுதிக்கு வந்தோம். ‘`இங்கே ஃபால்ஸுலு...’’ என ஆரம்பித்து ஒரு பையனிடம் அட்ரஸ் கேட்டோம்.  `ஓ...சத்திகூடு மடுகு’க்குப் போகணுமா? இப்படிக்கா போங்க!’’ என ரூட் காட்டினான். ``என்ன நண்பா... நம்மளைத்தவிர எல்லோரும் தமிழ் பேசுறாங்க!’’ என்றேன். ‘`அதான் நண்பா பயமா இருக்கு!’’ என்றார் நண்பர். குழப்பத்தோடு காட்டின்வழி பயணமானோம்.

எல்லாப் பக்கமும் ஏகாந்த வனம். கரடுமுரடான பாறைகள். நிசப்தமே காதுக்குள் இரைச்சலை உண்டு பண்ணும் பேரமைதி. நடுவில் மணல்தானே என்று ஓர் இடத்தைக் கடந்தபோது புதை மணல். கெட்டியான சகதிக்குள் என்ஃபீல்டு மாட்டிக்கொண்டு இன்ஜின்வரை மூழ்கிவிட்டது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. போட்டோகிராபரின் பல்ஸரும் பாதி புதைந்துவிட்டது. மிகவும் போராடி அடுத்த அரைமணி நேரத்திற்குள் இரண்டு பைக்கையும் மீட்டோம்.

புதைமணலைத் தாண்டியதும் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன. வண்டியை இங்கேயே நிறுத்திவிட்டுப் போவது அல்லது ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட காட்டுக்குள் அருவிவரை பைக்கிலேயே முன்னேறிச் செல்வது!  நாங்கள் இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தோம். காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், ஊறுகாய், சிக்கன் மசாலா பாக்கெட்டுகள், கூடவே பாறாங்கற்களில் அடுப்பு வைத்துக் கறி சமைத்த சுவடுகளும் எங்கும் நீக்கமற நிரம்பிக் கிடந்தன. 3 கிலோமீட்டர் போயிருப்போம், சாலையோரம் இடப்பக்கம்  ஒரு புதர் மட்டும் வினோதமாய் சலசலவென அசைந்தது. ‘புலி’ படத்தில் விஜய்யைப் புதருக்குள் அட்டாக் செய்யும் கறும்புலிபோல எதுவும் இருக்குமோ என இன்ஜினை ஆஃப் செய்தோம். சலசலப்பு நின்றுவிட்டது. எனக்கு இதயம் துடிப்பது வெளியே கேட்க ஆரம்பித்தது.போட்டோகிராபர் தன் கேமராவை எடுத்துக்கொண்டு புதரை நோக்கிப் போனார். ஒரு நிமிடம் யோசித்திருப்பேன். சடாரென ஆக்ஸிலேட்டரை வேகமாக  அழுத்தியபடி, “பாலாஜி... வேணாம். வா போலாம்..!” என்று சத்தமாகச் சொல்லி பைக்கைக் கிளப்பினேன். புதரைத் தாண்டும்போது திரும்பிப் பார்த்தேன். அங்கே...

 இந்த இடத்தில் ‘தொடரும்...’ போட்டு இந்தக் கட்டுரையைத் தொடராக எழுதி சஸ்பென்ஸ் கூட்டலாம்தான். ஆனால்,  அவ்வளவு சீனெல்லாம் இல்லை. புதருக்குள்... ஒரு காதல் ஜோடி ‘மனசுவிட்டு’ பேசிக் கொண்டிருந்தார்கள். கடந்து காட்டுக்குள் போனோம். காட்டின் நிசப்தத்தைக் கீறியபடி ‘ஹோ’வென ஆர்ப்பரித்து விழுந்தது அந்த அருவி. நண்பர் ஷார்ட்ஸோடு இறங்கிக் குதியாட்டம் போட ஆரம்பித்தார். போட்டோகிராபர் சிங்கிள் பீஸில் வேல்கம்பைப் போல உடுப்பைக் கலைந்தும் இடுக்கண் கலைந்து `மயக்கம் என்ன’ தனுஷாய் மாறி போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தார்.   குளித்து முடித்துவிட்டு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டால்... ‘ஆஹா என்ன டேஸ்ட்டுய்யா. சல்லிசு ரேட்டில் செம டேஸ்ட்.’ பீமா ராவ் அண்ணய்யாவுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தோம். மறக்காமல் அந்தப் புதர் ஜோடியைத் தொந்தரவு செய்யாமல் வேறு ரூட்டில் காட்டைக் கடந்து வெளியே வந்தோம்.

 “ஹலோ நிறுத்துங்க..!” குரல் கேட்ட திசையில் ஓடைக் கரையில் இரண்டு போலீஸ்காரர்கள். தோள்பட்டையில் ‘ஆந்திர பிரதேஷ் போலீஸ்’ என்ற பேட்ஜ் இருந்தது. இளவட்ட போலீஸாக இருந்தார்கள். பவண் கல்யாண் ரசிகர்களாக இருக்கும்போல. இன் பண்ணாத சட்டைக்கு மேலே பெல்ட் போட்டிருந்தார்கள். ‘எந்தோ சின்னதி ஜீவிதம். இந்தா சின்னதி யவ்வனம்’ என பாக்கெட்டில் இருக்கும் ரேடியோவில் கண்டசாலாவின் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. “ஃபாரஸ்ட் ஏரியா சார். போன மாசம் மட்டும் 3 பைக்கு திருட்டுப்போச்சு. ஊர்க்காரரு நீங்க உள்ளே போனதா சொன்னாரு. அதான் வெளியே நீங்க வர்றவரை இங்கே வெயிட் செஞ்சோம். இனிமே இங்கெல்லாம் வந்தா பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க சார்! நிறைய க்ரைம் நடக்குது சார். பாவம் மெட்ராஸ் பசங்க” என்றார் ஒருவர். 

தடாலு... கோனேலு... ஆந்திராலு! - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி

``பேசாம கோனே போனீங்கன்னா ஃப்ரீயா குளிக்கலாம் சார். அங்கே நம்ம ஓட்டல் இருக்கு’’ ஆசைவார்த்தை காட்டினார் அங்கிருந்த டீக்கடைக்காரர் ஒருவர். திருப்பதி செல்லும் சாலையில் கோனே அருவிக்கு பைக்கை விரட்டினோம். 75 கிலோமீட்டர் கரடுமுரடான சாலையைக் கடந்து போவதற்குள் 2 மணியைத் தாண்டிவிட்டது. நடுவழியில் கீழப்புடி என்ற கிராமத்தைத் தாண்டி ஒரு ஹோட்டலில் நிறுத்தினோம்.

 கோனேவுக்குப் போய்ச் சேர்ந்தபோது சுடச்சுட சோறும் மீன்குழம்பும் கிடைத்தது. ஆனால், குரங்குகளின் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை. `காதல் தேசம்’ வினீத் ஹேர்ஸ்டைலோடு இருந்த அந்தக் குரங்குகள் உரிமையோடு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தன. ``பார்த்துங்க... குரங்கு பிஸ்கட்டைப் பறிச்சிடப்போகுது..!’’-சொல்லிக்கொண்டிருந்த நண்பரின் கையைக் கடித்து பிஸ்கட் பாக்கெட்டைத் தட்டிப் பறித்து ஓடியது ஒரு சேட்டைக்குரங்கு.

 குளிக்க, துண்டெல்லாம் வாங்கி மேலே அருவிக்குப் போனால் செம ஷாக். கிழிந்த கோவணம் போல இருந்தது அருவி. வீட்டு பைப்பிலிருந்து வரும் தண்ணீரைவிடக் கொஞ்சம் கூடுதலாய் இருக்கும் அளவுக்கே போனால் போகுதென்று தண்ணீர் விழுந்துகொண்டிருந்தது. இதுக்கு முன்னால் தண்ணீரையே பார்க்காதவர்கள் போல உற்சாகமாகச் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்.

சோகமாக அருவியிலிருந்து இறங்கி, கீழே நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது இடப்பக்கம் குறுகலான மலைப்பாதை மேலே சென்றது. ஆர்வத்தோடு ஏறினோம். பெரிய பெரிய பாறைகளை இயற்கையே படிக்கட்டுகளைச் செதுக்கியதுபோல அடுக்கி வைத்திருந்தது. மூச்சிரைக்க மெதுவாக மேலே ஏறி உச்சியை அடைந்தோம். அங்கே நாம் கண்ட காட்சி வேற லெவல்.

கீழே தீர்த்தமாக குளிக்கும் நீர் மேலே ஒரு குளம்போன்ற இடத்தில் தேங்கித்தான் வழிந்து கீழே விழுகிறது. அந்தக் குளத்திற்குள் சிலர் சரக்கு பாட்டில்களோடு `பில்லா’ அஜீத் ரேஞ்சுக்கு ரொம்பவே ஃபீல் செய்து குளித்துக் கொண்டிருந்தார்கள். சொல்லி வைத்ததுபோல அத்தனைபேரும் தமிழ்தான் பேசினார்கள். “ஓ... என்ன இது பரம சுகம்... யூரியான்!” என சூரியன் கவுண்டமணி போல ஃபீல் செய்தார் ஒருவர்.

உச்சியிலிருந்து பார்த்தால்  முதுகைச் சில்லிடவைக்கும் செம வியூ. திருப்பதி மலைவரை தெரிகிறது. அப்படியே அமர்ந்து அரைமணிநேரம் ஆர அமர இயற்கையை ரசித்துவிட்டுக் கீழே இறங்கிவரும்போது கீழே அருவியில் 20 பேர் உல்லாசங்கா உற்சாகங்காவெனக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

கீழே பைக் ஸ்டாண்டு அருகில் பாட்டிகள் வடை சுட்டுக் கொண்டிருந்தார்கள். கம்பு அதிரசம் வாங்கி, குரங்குகளுக்குத் தெரியாமல் என் ஜெர்க்கினுக்குள் வைத்துக்கொண்டேன். போகும்வழியில் சாப்பிடலாம் என்று ப்ளான். ஆனால், தமிழ்நாட்டைத் தொடும்வரை சிமென்ட் புழுதி இரவின் இருளில் ஹெட்லைட்டையும் மீறி ஸ்மோக் எஃபெக்ட் கொடுக்க... சீக்கிரம் வீடுபோய்ச் சேர்ந்தால் போதுமென விரட்டினோம். வீட்டுக்கு வந்தபோது 9 மணி. `பாலா’ பட க்ளைமாக்ஸ் ஹீரோ போல இருவரும் இருந்தார்கள். ஆனாலும், ‘ஒன்ஸ்மோர் ஆந்திரா போகணும்’ என்று சிலிர்க்க வைத்தார்கள். ஜெர்க்கினுக்குள் வைத்திருந்த அதிரசம், மாவாக மாறியிருந்தது. கரண்டி வைத்துதான் வெளியே எடுத்துக் கொட்டினேன்.

அன்றிரவு  தூங்குவதற்கு முன், டூரில் கீழப்புடி என்ற ஊரில் நான் எடுத்த ஒரு குறும்புப் போட்டோவை 6 பேர் மட்டுமே கொண்ட ஒரு வாட்ஸ்-அப் க்ரூப்பில் விளையாட்டாய் ஷேர் பண்ணியிருந்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு என் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆகும் என்று அப்போது எனக்குத் தெரியாது!