Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

கமல்ஹாசன்படம்: ஜி.வெங்கட்ராம்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

கமல்ஹாசன்படம்: ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

ன்னும் சில ஆசிரியர்கள் பற்றி அடுத்த வாரமும் சொல்கிறேன் என்று கடந்த வாரம் முடித்திருந்தேன். அதில் ஒரு திருத்தம். ‘சில’ என்பது தவறான பதம். ஏனெனில், நம்மைக் கடந்து செல்லும் சக மனிதர்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொருவரும் நமக்கான ஆசிரியர்தான். அப்படிக் கடக்கையில் என்னிடம் சில விஷயங்களை விதைத்துச் சென்றவர்கள், இன்னும் விதைத்துக் கொண்டிருப்பவர்கள்... இப்படிப் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஓரிரு வாரங்கள் பேசலாம் என நினைக்கிறேன். இவை, ‘இப்படியாக நானே ஓர் ஆசிரியராக வளர்ந்து நிற்கிறேன்’ என்ற பெருமிதத்துக்காகச் சொல்லப்படுபவை அல்ல. நான் எப்போதும் என்னை ஒரு மாணவனாகத் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையை உணர்த்தவே இவற்றைப் பகிர்கிறேன்.

நடன உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்தபோது எனக்கு 16 வயதிருக்கும். மலையாளப் படங்களில் பணிபுரிய அவருடன் முதல்முறையாகக் கேரளாவுக்குச் சென்றிருந்தேன். அந்த நாள்கள் இன்னும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளன. உணவு, உடை, கலாசாரம், சூழல் என நம்மில் இருந்து முற்றிலும் வேறாக இருந்ததைப் பார்த்ததும் ஏதோ வெளிநாடு ஒன்றுக்கு வந்ததைப்போன்ற ஓர் உணர்வு. ‘ஒருகாலத்தில் ஒரே நாடாக வாழ்ந்திருக்கிறோம். தமிழ் பேசியிருக்கிறோம். ஆனால், இன்று எப்படி முழுமையாக மாறுபட்டு இருக்கிறது’ என்று பெரிய ஆச்சர்யம்.

அங்கு நாங்கள் மேரிலேண்ட் சுப்ரமணியம்பிள்ளை அவர்களின் இடத்தில் வேலைசெய்துகொண்டிருந்தோம். ஓய்வான நேரங்களில் கேரளாவைச் சுற்றிப்பார்க்கக் கிளம்புவோம். அப்போது அங்கே ஒரு பொதுக்கூட்டம். ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். திக்கித் திக்கிப் பேசும் அவரின் பேச்சைக் கேட்கையில் எனக்கு பயங்கரச் சிரிப்பு வந்தது. ஆனால், கூட்டத்தில் ஒருவர்கூட சிரிக்காமல், அவரின் பேச்சை ஆமோதிப்பதைப்போல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். சென்னையில் கண்ணதாசன், ஜெயகாந்தன் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். தி.மு. கழகத்தைச் சேர்ந்த கலைஞர் போன்றோரின் பேச்சின் வீரியம் எனக்குத் தெரியும். காங்கிரஸ்காரராக இருந்த ஈ.வி.கே. சம்பத் பரமக்குடியில் பேசியதை எங்கள் அப்பா ரெக்கார்டு செய்து சென்னையில் எங்களுக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்.

அப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு அந்தத் திக்குவாய்ப் பேச்சு பயங்கர ஆச்சர்யம். ‘இவர் யார்’ என்று விசாரித்தேன். ‘இவர்தான் காம்ரேட் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்’ என்றார்கள். அப்போது தான் ஈ.எம்.எஸ் எனக்கு அறிமுகமாகிறார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் ஈ.எம்.எஸ்-ஸிடம், ‘உங்களுக்கு எப்போதுமே இந்தத் திக்கு உண்டா’ என்று பேட்டிப் பளபளப்புக்காக, குறும்பாக அந்தக் கேள்வியைக் கேட்கிறார். அவருக்கு ஈ.எம்.எஸ் சொன்ன பதில் இதுதான், ‘இல்லைங்க, பேசும்போது மட்டும்தான்.’ இப்படித் தன் நகைச்சுவையும் எளிமையுமாக எனக்குள் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை விதைத்த காம்ரேட் ஈ.எம்.எஸ் இன்றும் எனக்கு ஆகச்சிறந்த ஆசான். 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

அந்தத் தாக்கம்தான் என்னை ‘தாஸ் கேபிடல்’ படிக்கத் தூண்டியது.அன்று சஃபையர் திரையரங்குக்கு எதிரே ‘சோவியத் எக்ஸ்போர்ட்’ என்று ஒரு புத்தகக்கடை இருக்கும். இந்தப்பக்கம் அமெரிக்கத் துணைத்தூதரகம், அந்தப்பக்கம் சோவியத் எக்ஸ்போர்ட் என்று நல்ல புத்தகங்களைப் போட்டி போட்டுக்கொண்டு விற்பார்கள். அங்கு மூன்று ரூபாய்க்கும் நான்கு ரூபாய்க்கும் புத்தகங்கள் கிடைக்கும். அப்படித்தான் நான் `தாஸ் கேபிடல்’ புத்தகத்தின் மூன்று வால்யூம்களையும் மொத்தம் 12 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதுவும் ஆங்கிலத் தொகுப்பு. அதை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளேன் என்பது எனக்கான பெருமை. லெனினின் எழுத்துகளும் அப்படித்தான் அறிமுகமாகின. ‘நாம பள்ளிப்படிப்பையே முடிக்கலை’ என்கிற பதற்றம்தான் காசு வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கக் காரணம் என நினைக்கிறேன்.

சினிமாவும் அரசியலும் தொட்டுக்கொண்டே இருப்பதை ஏதோ மாபாதகச் செயல்போலச் சித்திரிக்கிறார்கள். ஆனால், ஒன்றின் சுதந்திரத்தில் மற்றது தலையிடாது. எப்போது விலகி இருக்கவேண்டும் எப்போதெல்லாம் நெருங்கிவர வேண்டும் என்பதைப் புரிந்து, அறிந்து இருந்தால் அது ஒன்றும் தவறில்லை. தமிழகத்தில் அந்தச் சூழல் இன்றுவேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால், அன்று அந்தச் சூழல் இங்கும் இருந்தது. சாருஹாசன் திமுக, அப்பா காங்கிரஸ் என்று இரு குரல்களும் வீட்டிலேயே கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம் உண்டு. சாருஹாசன் பரமக்குடியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நண்பர்களுடன் கூடி அரட்டை அடிப்பார். நானும் அண்ணனுடன் போய்விடுவேன். இன்னொரு பக்கம் அப்பாவைப் பார்க்க பக்தவத்சலம், காமராஜர், கக்கன் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு பெரிய மனிதர்கள் என்பது  அப்போது எனக்குத் தெரியாது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முக்தா சீனிவாசன் அவர்கள் எடுத்த, ‘சினிமா பைத்தியம்’ என்ற ஒரு படத்தைப்பார்க்க காமராஜர் வந்திருந்தார். அந்தப் படத்தில் நானும் நடித்திருந்தேன். படத்தில் சிவாஜி சார் திருப்பூர் குமரனாக கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தார். காமராஜர் அதைப்பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்தவர், ‘என்ன நீ முடிவே பண்ணிட்டியா’ என்றார். ‘ஆமாங்கய்யா இப்ப ஓரளவுக்கு நடிக்கக் கூப்பிடுறாங்க’ என்றேன். உடனே பக்கத்தில் உள்ளவர்களிடம், ‘யாரு தெரியும்ல, நம்ம பரமக்குடி சீனிவாசன் பையன்’ என்றார். பிற்பாடு சண்முகம் அண்ணாச்சி நாடகங்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் வருவார். நான் சிறுவனாக இருந்தபோது அவர் அன்பளித்த தங்கம் பதித்த முத்துமாலையை நீண்டநாள் வைத்திருந்தேன். வளர்ந்த பிறகு அதை அவரிடமே காட்டி மகிழ்ந்திருக்கிறேன். இப்படி இங்கு கலையும் அரசியலும் கலந்தேதான் வளர்ந்தன. அது எனக்குக் கெடுதலாகவும் தெரியவில்லை, நல்லதாகவும் தோன்றவில்லை. சென்னையில் சூடு, ஊட்டியில் குளிர் என்பதுபோல் அது ஒரு சூழல்.

எம்.ஆர்.ராதா அண்ணனின் நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவர் தன் நாடகங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை அடித்து விட்டார் என்றால் ஒட்டுமொத்த ஏரியாவும் பதற்றமாகிவிடும். ‘இப்படியெல்லாம் சொல்கிறாரே, மொத்த நாடக் கொட்டகையையும் கொளுத்தி விடுவார்களே’ என்று பார்ப்பவர்களே பதறுவார்கள். இப்படி ராதா அண்ணன் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மனிதர். சிவாஜி,
எம்.ஜி.ஆரே அவரைப்பார்த்தால், ‘அண்ணே வணக்கம்’ என்று சொல்லும்போது நாங்கள் எம்மாத்திரம். அவரிடம் நானும் நெருங்கியதில்லை. ஆனால், அவர்மீது மாறாத மரியாதை உண்டு. ‘நேத்துகூட ராதா அண்ணனைப் பார்த்தேன்’ என்று சொல்லி சக நடிகர்கள் சந்தோஷப் படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவுக்கும் அவர் தேனாம்பேட்டையில் தெருவில் நடந்துபோகும்போது பார்த்திருப்பார்கள். அவ்வளவுதான்.

சமீபத்தில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஐக் என் உதவியாளர். இவர் ராதா அண்ணனின் பேரன். ஐக்கின் அம்மா திருமணத்துக்கு நான் போயிருந்தேன். அந்தச் சமயம் ராதா அண்ணன் ஜெயிலிலிருந்து வந்திருந்தார். நான் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டேன் என்பது அவருக்குத் தெரியும். என் அருகில் வந்தவர், ‘பாலேவூ ஃபான்ஸே’ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஃப்ரென்ச் கத்துக்கிட்டேன், ஜெயில்ல’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறைக்கூடத்தையே கல்விக் கூடமாக நினைத்த அவரின் மனம் எப்படிப்பட்டது என்று பாருங்கள். கற்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் சூழல் அதுவாகவே அமையும் என்பதற்கு இவர்கள் எல்லாம் உதாரணங்கள்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

ங்கைவிட மலையாள, மேற்கு வங்க சினிமாக்களில் அரசியல் இன்னும் வீரியமாகத் தொட்டுக்கொண்டு இருக்கும். ‘இவன் என்ன எதற்கெடுத்தாலும் கேரளா, வங்கம் என இடதாகவே பேசுகிறான்’ எனச் சிலர் நினைக்கலாம். அவர் களிடமிருந்து நாம் கற்கவேண்டிய உதாரணங்கள் அப்படித்தான் சொல்கின்றன. அவற்றில் ஓர் உதாரணம்... கேரளத்தில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு திரைப்படம், ‘லெஃப்ட், ரைட்’. அதில் நடை, உடை, பாவனை என அப்படியே பினராயி விஜயன் அவர்களை நகலெடுத்திருந்தார்கள். ‘நீங்கள் படம் பார்த்தீங்களா? அதில் தோழரை தவறா சித்திரிச்சிருக்காங்க’ என்று அங்கிருந்து பேசினர்.  ‘பார்த்தேன். ஆனால் ஐயாவிடம் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இது குரல். விமர்சனங்களை அனுமதிப்பதுதான் உங்கள் தனித்துவம். அதற்கு நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ‘ராஜன் பறைஞ்ச கதா’ என்று எமர்ஜென்சியின்போது கொலை ஒன்றைப் பற்றி ஒரு படம் எடுத்தார்கள். அந்த தைரியம் உள்ள ஊர். இப்போது அதைக் கெடுத்தது  இந்த மாதிரியான ஓர் அமைப்பாக இருக்கக்கூடாது’ என்றேன். விட்டுவிட்டார்கள். நான் சொன்னதால் அவர் விட்டுவிட்டார் என்றில்லை. கேட்டார்கள் சொன்னேன். அவரும் அதைப் புரிந்துவைத்திருந்தார். இதுதான் அவர்களின் பெருந்தன்மை.

ஆர்.சி.சக்தி என் 16-வது வயதில் கொஞ்சம் தாமதமாகக் கேட்ட நாத்திகக் குரல். ஆனால், அதற்கு முன் சாருஹாசன், எங்கள் மாமா ஜி.சீனிவாசன் என்று என் ஏழெட்டு வயதில் இருந்தே இந்த எதிர்க்குரல்கள் எனக்குள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஆனாலும், அருகில் இருந்த ஆத்திக சமாஜத்துக்குப்போய் கிருபானந்த வாரியாரின் கதைகள் கேட்பது பிடிக்கும். கதை சொல்வதுதான் பிற்பாடு என் தொழிலாகப்போகிறது என்பது எனக்கு அப்போது தெரியாது. மூன்று மணிநேரம் முழுக் கதையையும் கேட்கும் பிள்ளைகள் அரிது என்பதால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ‘இதுக்கென்ன பதில்’ என்று கேள்வி கேட்பார் வாரியார். கையைத்தூக்கி பதில் சொன்னால் உடனே ஒரு புத்தகம் பரிசாகக் கொடுப்பார். அப்படி நான் பல புத்தகங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறேன். அவை என் தமிழ் வளர்ச்சிக்கும், கதை சொல்லும் திறனை  வளர்த்துக்கொள்ளவும் பேருதவியாக இருந்தன. பிற்பாடு அது என் தொழிலுக்கே உபயோகமாக இருந்தது என்பது நிதர்சனம்.

பிறகு நான் வளர்ந்து ஆரம்பக்கட்ட நடிகனாக இருந்தபோது கோயில் கட்ட நிதி திரட்டியபடி வீடு வீடாக வந்துகொண்டிருந்தார் கிருபானந்த வாரியார். அப்படி என்னிடம் வந்தவர், ‘நீங்க, யார், இப்ப என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அன்று என்னிடம் விபூதி வாங்கிய நீங்கள் இன்று வேறுமாதிரி பேசலாம். ஆனால், இருவரும் அன்பைத்தான் பேசுகிறோம். அந்தவகையில் கட்டும் கோயிலுக்கு நீங்கள் நிதி உதவி பண்ணணும்’ என்றார். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அன்று ஒரு படத்துக்கான என் மொத்தச் சம்பளமே 18 ஆயிரம் ரூபாய்தான். பிறகு இந்த விஷயம் கேள்விப்பட்டு என்னிடம் பேசிய சாருஹாசன், ‘என்னடா, பேசுறது ஒண்ணாவும் செய்யுறது வேறொண்ணாவும் இருக்கு’ என்றார். ‘அவர் என்னவேணும்னாலும் கட்டிக்கட்டும். ஆனால், அவர் எனக்குள் தமிழ்க் கோயில் கட்டினவர். அதற்காகத்தான் கொடுத்தேன்’ என்றேன்.

ப்படி எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதைசொல்லி, பாலகிருஷ்ண சாஸ்திரிகள். இவர் மௌலியின் அப்பா என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆறேழு வயதில் தொடங்கி, கிட்டத்தட்ட பதின்மூன்று வயதுவரை தொடர்ச்சியாக இவர் சொன்ன கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது பீம்சிங் சாரின் இடம் என நினைக்கிறேன். பக்கத்திலேயே பீம்சிங் சாரின் வீடும் இருக்கும். பெரிய திடலாக இருக்கும் அந்த இடத்தை, அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் கொடுத்திருந்தார். அங்கு நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் ஹரிகதா காலட்சேபம் முக்கியமானது.

தினமும் மாலை அங்குபோய் உட்கார்ந்துவிடுவேன். வெற்றுடம்புடன் அமர்ந்து நான்கைந்து பக்கவாத்தியக் கலைஞர்களுடன் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லுவார். சிரிப்பு, அழுகை... என அனைத்தையும் தன் குரலிலேயே கொண்டுவருவார். ஏதோ கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுவதுபோன்ற அழுகையைத் தன் குரலிலேயே கொண்டுவருவதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கும். சம்ஸ்கிருதத்தில் சொல்லி, அதற்குத் தமிழில் அர்த்தம் உணர்த்தி... இப்படி ஒவ்வொரு கதையையும் காட்சியையும் விவரிக்கும்போது சினிமா பார்க்கும் உணர்வைத் தரும். அதற்குப் பின் உள்ள அவரின் அசாத்திய சாதகத்தை நினைத்து இப்போதும் வியக்கிறேன்.

அவர், இன்றைய ஸ்டேட் வங்கி என்று அழைக்கப்படும் அன்றைய இம்பீரியல் வங்கியில் உயரதிகாரி.  ஒருமுறை அவர் அலுவலகம் போகும் கோட்சூட் காஸ்ட்யூமை மௌலி சார் என்னிடம் காட்டியபோது வியப்பாக இருந்தது. அங்கு கோட்சூட் போட்ட வங்கி அதிகாரி, இங்கு வெற்றுடம்புடன் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கதைசொல்லி... அது வேறு, இது வேறு என்று தோன்றும் ஓர் உருவ மாற்றமாகவே எனக்குப் பட்டது. அது, மிகவும் ஆச்சர்யமான டிரான்ஸ்ஃபர்மேஷன்.

இன்னும் சொல்லப்போனால் மௌலி சாரே எனக்கு ஆச்சர்யம்தான். பட்டை பட்டையாக விபூதி, குடுமியுடன் ஒரு பையனாக இருப்பார் என்று நினைத்தால் கிட்டத்தட்ட பாலசந்தர் சார் பேசும் விஷயங்கள் எல்லாவற்றையுமே அவரின் நாடகங்களில் தைரியமாகப் பேசக்கூடியவர். அவரின் இளைய சகோதரர், கிரேஸி மோகன் ட்ரூப்பில் டைரக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். அவை மேடை நாடகம் என்றாலும் மிகவும் வித்தியாசமான, எடுத்தெறிந்த ஹியூமர் இல்லையா? கிரேஸிமோகன் பேசுவது, ‘ஃப்ளைட் 172’-ல் மௌலி சார் எழுதியவை எல்லாம் நல்ல முன்னோடி ஹியூமர். துறுதுறுவென வரக்கூடிய காட்சிகளாக நன்றாக இருக்கும். இப்படி நாங்கள் ஒருவரை மற்றவர் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருப்போம். அவை நியாயமான பாராட்டாகத்தான் தோன்றும்.

ன்னோர் ஆச்சர்யமான விஷயம், என் வாழ்க்கையில் பிற்பாடு நடந்தது. ‘ஹேராம்’ படத்துக்குக் கிடைத்ததிலேயே முக்கியமான பாராட்டு Philip Lutgendorf என்பவரின் பாராட்டு. அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் `ஹேராம்’ படத்தைப் பாராட்டி மிக அற்புதமான நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். இவரைப்பற்றி எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள். முதல் ஆச்சர்யம், அவர் `ஹேராம்’ படத்தைப் புரிந்துகொண்டு எழுதிய அந்தக் கட்டுரை. ‘இதெல்லாம் சிலருக்குப் புரியாது. இது என் சந்தோஷத்துக்கு’ என நினைத்து எடுத்ததை மிகமிக நுணுக்கமாகப் பிடித்து அவர் எழுதியிருந்தது, என் திரைக்கதையை அவர் வரிவரியாகப் படித்ததைப்போல் இருந்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘என்னென்ன பிடித்தது’ என்று பேச ஆரம்பித்து, நீண்ட நட்பாக இன்றும் தொடர்கிறது.

அவர் தன் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டரில் திரைப்படப் பிரிவு மாணவர்களுக்கு ‘ஹேராம்’ படத்தைப் பாடமாக நடத்திக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அது பெருமையாக இருந்தது. இதேபோல் ஐரா பாஸ்கர் என்ற பெண்மணி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ‘ஹேராம்’ படத்தைப் பாடமாக நடத்தினார்கள். அவர்களும் ஆச்சர்யம்தான். ஆனால், அவர்  ஓர் இந்தியர். அவர்களுக்கு `ஹேராம்’ புரிந்ததே எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அதில் இருக்கக்கூடிய புராண இதிகாசங்கள் பற்றிய புரிதல், அது வெறும் நையாண்டி மாத்திரம் அல்ல; கீமாயணம் மாதிரி நையாண்டி அல்ல ஹேராம். அழுத்தமான கோபம். அதை இங்கு ஒருவரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டவர் பிலிப் என்கிற எங்கோ இருக்கும் பேராசிரியர் என்பதுதான் எனக்கு ஆச்சர்யம். 

அவரைப் பற்றிய இரண்டாவது ஆச்சர்யம், ‘இதைப்படித்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று ஒரு புத்தகம் தந்தார். திறந்து பார்த்தால், ‘ஹரிகதா காலட்சேபம் எப்படிச் செய்வது’ என்பதற்கான விளக்கவுரை. இதுபோன்ற கதைகள் கேட்டிருக்கிறேனே தவிர, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் கிறித்தவருக்கு எப்படி இப்படி ஒரு தேடல்?  பிறகு, ‘இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை, படித்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று மௌலி சாரிடம் கொடுத்தேன். அந்தப் புத்தகம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் படுக்கையின் அருகேயே கடைசிவரை இருந்ததாம். படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ‘அந்தப்புத்தகம் திரும்ப வேணுமா’ என்று மௌலி கேட்டார். `அந்தப்புத்தகம் அங்குதான் இருக்கவேண்டும். அதை வைத்துப்படிக்க எனக்கு அருகதை இருக்கிறதா என்று தெரியாது. அவரிடமே இருக்கட்டும்’ என்றேன். இரண்டு பக்கங்கள் படித்துவிட்டுத் தூக்கிப்போடாமல் அவர் கடைசிவரை படித்துக் கொண்டிருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதில் எனக்குப் பெருமை. என்னமோ நான்தான் பிலிப் என்பது போன்ற ஒரு சந்தோஷம்.

கிருபானந்தவாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள்போக அப்போது மதுரம் அத்தை என்பவரிடம் தினமும் கதை கேட்பேன். ஆஸ்திக சமாஜத்தில் போய்க் கதை கேட்கவில்லை என்றால் அத்தையிடம் கேட்டுக்கொண்டிருப்பேன். புனைகதை. அந்தமாதிரி ஒரு புராணமே இருக்காது. 60, 70 நாள்கள் கதை சொல்ல வேண்டும் என்றால் அவரும் எங்குதான் போவார். இதெல்லாம்தான் என் சூழல்.

இன்று என் வீட்டிலேயே அனைவரும் தேடித்தேடி வாசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரிய அண்ணன் சாருஹாசனைப் பார்க்கப்போனால், ‘அந்தப் புத்தகம் படிச்சியா, இந்தப்புத்தகம் படிச்சியா’ என்று அண்ணியார் விசாரிப்பார். ‘அது என்ன புத்தகம், பதிப்பகம் என்ன’ என்று குறிப்பெடுத்துக்கொள்வார். 75 வயதுக்குமேல் ஆகிறது. ஆனால், ‘முந்திமாதிரி படிக்கவே முடியறதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார். நாத்திகர் தாய் மாமா இப்போது ஆத்திகர். கொடைக்கானலில் இருக்கிறார். ‘ராமானுஜரைப்பற்றி நல்ல வாழ்க்கை வரலாறு கிடைச்சா எனக்கு அனுப்புங்க’ என்கிறார். சாருஹாசன் போல் உள்ளவர்களும் இருக்கிறார்கள். மாமாவைப் போல் மாறியவர்களும் இருக்கிறார்கள். இந்தக்குரல் எங்கள் வீட்டிலேயே கேட்டுக்கொண்டிருப்பதால் எனக்கு இது மகா பாவமாகவோ, பெரிய சாதனை நிலையாகவோ தோன்றவில்லை. ஆனால், என்னைப்பார்த்து இந்து விரோதி என்றால், சிரிப்பாகத்தான் இருக்கிறது. நான் பிராமண விரோதியாகவும் இருக்கமுடியாது, இந்து விரோதியாகவும் இருக்க முடியாது, தலித் விரோதியாகவும் இருக்க முடியாது. ஏனெனில், என் குடும்பம், நட்பு, சூழல் அப்படிப்பட்டவை.

ந்தத் தேடலின் வழி வந்ததுதான் ‘மருதநாயகம்.’ ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்துடன் போருக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவசரப்பட்டுக் கோட்டைக் கதவை அடைத்துவிடுவார்கள். அதனால் மருதநாயகத்தின் படையில் இருந்த ஒரு மலையாளி வீரர் பிரிட்டிஷ் படையிடம் மாட்டி இறந்துவிடுவார். வெளியே வெள்ளைக்காரர்கள் போருக்காகக் காத்திருக்க, கோட்டைக்குள்ளே கலகத்துக்கான ஒரு சூழல் இருக்கும். ‘கதவடைத்தது முஸ்லிம்கள் வேண்டுமென்றே செய்த வேலை. அதனால் எதிர்த்தரப்பில் ஓர் ஆளை பலிகொடுத்தே ஆகவேண்டும்’ என்பார்கள் மலையாளிகள். `கொன்றது பிரிட்டிஷ் படை. ஆனால், எங்கள் தரப்பில் ஓர் உயிர் போனால் அவர்கள் தரப்பிலிருந்தும் ஓர் உயிர் போகவேண்டும்’ என்பார்கள் முஸ்லிம்கள். 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

அப்போது ஒரு வசனம் வரும். ‘நான் மகாராஜா. எனக்குப் போருக்கு ஆள் வேண்டும். ஆளுக்கு ஓர் ஆள் என்றால் இரண்டு பேரை என்னால் தரமுடியாது. வேண்டுமென்றால் ஒரே ஆள்தான் தரமுடியும்’ என்பான் மருதநாயகம். ‘அது நியாயமே கிடையாது’ என்று எதிர்க்குரல்கள் ஒலிக்கும். உடனே தன் கத்தியை உருவி வைத்துவிட்டு, ‘ஒரே ஆளைக் கொடுக்கிறேன். உங்களுக்கு 10 நொடி அவகாசம்’ என்று தன் கழுத்தைக் காட்டி, ‘இதற்குள் ஓர் இந்துவும் இருக்கிறான். ஒரு முஸ்லிமும் இருக்கிறான். இதை முடித்துவிட்டுப் போங்கள். உங்கள் பகை முடியும்’ என்று குனிவான். அவனது மொட்டைத் தலையைப் பார்க்கும்போதுதான் அவன் இஸ்லாத்துக்கு மாறிவிட்டான் என்ற முழு விவரம் மற்றவர்களுக்குத் தெரியும்.

‘நமாஸுக்குக் குனியும்போது நான் சரியான இஸ்லாத் எண்ணத்தில்தான் இருப்பேன். ஆனால், மீனாட்சி கோயிலை அண்ணாந்து பார்க்கும்போது எனக்குள் பழைய ஞாபகம் வரத்தான் செய்யும்’ என்று மருதநாயகம் பேசுவதாக இந்தப்படத்திலேயே இன்னொரு வசனம் எழுதியிருப்பேன். இப்படி நான் எழுதிய அந்த வசனத்தை எனக்குள் விதைத்தது என் வாசிப்பும், சூழலும்தானே தவிர வேறென்ன? எப்படி ஒரு தாஜ்மஹால் பார்க்கும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு போக முடியாதோ, மதுரை மீனாட்சி கோயிலைப் பார்க்கையில் கீழே குனிந்துகொள்ள முடியாதோ அப்படித்தான், இதிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது. ஏனெனில், இதுதான் நம் கலாசாரம்.

னால், இந்தப் பழைமையின் பெருமையையும் கலாசாரத்தையும் மொழியையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளாத இன்னும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.  திடீரென்று ஒரு வருடம் அமெரிக்கா போய் வந்தவர்களிடம் பேசிப்பாருங்கள், தமிழ் தெரியாதவர்கள்போல் நடிப்பார்கள். அதேபோல ஐந்து ஆண்டுகள் வடஇந்தியாவில் இருந்துவிட்டு வந்தவர்கள், அனைத்துக்கும் ‘அச்சா அச்சா’ என்பார்கள். அதாவது, தமிழ் மறந்துபோகிற அளவுக்கு அவர்களுக்கு அவ்வளவு நன்றாக இந்தி வருமாம். அதேபோல பிராமணப் பெண்கள் பலர், ‘ஷாப்ட்டேளா’ என்று ‘சா’ வரவேண்டிய இடங்கள் அனைத்திலும் ‘ஷா’ போட்டுப் பேசுவார்கள். சம்ஸ்கிருதத்தில் பேசிப்பேசி ‘சா’வெல்லாம் `ஷா’வாகிவிட்டது என்று சொல்ல விரும்பும் விஷயம்தான். இது உள்ளிருக்கும் நிஜத்தை மறைக்கக் காட்டிக்கொள்ளுதல்தான். ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.

 ‘ஆசிரியர்கள் என்று ஆரம்பித்து மதம், மொழியில் வந்து முடிக்கிறேன்’ என்று நினைக்கிறீர்களா? இவற்றைவிட சிறந்த ஆசான் வேறென்ன இருக்க முடியும்?

ஒரு நடிகன் ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதனையாகப் பார்க்கப்படும் இந்தச்சூழலில் நண்பனும்  இசை ராட்சசனுமான ஒருவருடன் நான் 100 படங்கள் பயணப்பட்டிருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய பயணம்? அந்த இசை ராட்சசன் பற்றியும், மேலும் பல ஆசான்களைப் பற்றியும் அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

ந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.