
விகடன் டீம், படங்கள்: தே.அசோக்குமார்
மழையைப் பார்த்தாலே சென்னைவாசிகளை பயப்படவைத்த டிசம்பர்-1 பெருமழைச் சம்பவம் நடந்து

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சாதாரண பருவமழைக்கே மக்கள் திகிலடையக் காரணம், ஏரிகள் ஆக்கிரமிப்பும், சரியான பராமரிப்பு இல்லாததும்தான். இதனால் வாசகர்களின் துணையோடு களத்தில் இறங்கியது விகடனின் `நிலம் நீர் நீதி.’ இரண்டு ஆண்டுகளில் நாம் செய்த பணிகள் இங்கே!
‘‘2015-ம் வருஷம், ஊரைச் சுத்தி இருக்கிற மூணு ஏரிகளும் உடைச்சுக்கிட்டு ஊருக்குள்ள புகுந்தப்ப... நாங்க பட்டபாடு இருக்கே, அப்பப்பா. வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்து, வயலெல்லாம் பயிருங்க அழுகி, பாம்பு, தேள், பூரான்னு ஒரு வாரம் நாங்கபட்ட அவஸ்தை, இப்ப நினைச்சாலும் நடுங்குது. ஆனா, இந்த 2017-ம் வருஷம் மழை கொட்டித்தீர்த்திருக்கு. ஆனா, மூணு ஏரியிலயும் தண்ணி நிரம்பிக்கிடக்கே தவிர, எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்க விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தேவையான தண்ணி நிறைஞ்சிருக்கிறத பார்க்க பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு. ஏரிக்கரையை மட்டுமில்ல, ஊரையும் காப்பாத்தியாச்சு.”
இது சென்னை அருகே இருக்கும் சாலமங்கலம் ஊராட்சி மக்களின் உற்சாகக் குரல்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. அதேபோன்று வடகிழக்குப் பருவமழையும் பெரும்பான்மையான இடங்களில் பெய்து வருகிறது. ஆக்கிரமிப்பு, தூர்வாரப்படாத நீர்நிலைகள் என்று பல இடங்களில் தண்ணீர் சேமிப்பு முழுமையாக இல்லை. இதனால், கிடைத்த மழையையும் தவறிவிட்டுவிட்டோமே என்று வருத்தப்படுபவர்கள் பலர். இப்படியிருக்கும் சூழ்நிலையில்தான் வண்டலூர்-ஒரகடம் சாலையில் அமைந்துள்ள சாலமங்கலம் ஊராட்சியின் பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம், வாசகர்களுடன் கைகோத்து நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்தாம்!
2015-ம் ஆண்டு சென்னையை பாதித்த வெள்ளத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தது அடையாறு. காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகேயுள்ள மலைப்பட்டு ஏரியிலிருந்து உருவாகும் இந்த ஆற்றுடன், வழியெங்கும் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் ஓடைகளின் நீரும் சேர்ந்து, பெரிய ஆறாக வடிவெடுத்து, பட்டினப்பாக்கம் மற்றும் அடையாறு இரண்டுக்கும் இடையே கடலில் கலக்கிறது.
விகடன் முன்னெடுத்த `நிலம் நீர் நீதி’ திட்டத்தின் அடிப்படையில், நீரியல் மற்றும் சூழலியல் நிபுணர்கள் இந்த ஆற்றின் உபநில வடிப்பகுதிகளையும் அங்குள்ள ஏரிகளையும் ஆய்வு செய்தனர். இங்குள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளைச் சரிசெய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்றதொரு வெள்ளப்பெருக்கைத் தடுக்க முடியும் என்று தங்கள் முடிவுகளை அவர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்துதான் சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி, சாலமங்கலம் ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள், அரசுத்துறைகளின் அனுமதியோடு முழுமூச்சாக மேற்கொள்ளப்பட்டன. 2016, ஜூலை மாதம் தொடங்கிய பணிகள் பற்றி விகடன் குழும இதழ்களில் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஏரிகளில் அடுத்து மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளின் விவரம் இங்கே இடம் பெறுகிறது.
சாலமங்கலம் ஏரி
பொதுப்பணித்துறையின்கீழ் வரும் இந்த ஏரி, வண்டலூர்-ஒரகடம் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது. 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிமூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களின் அளவு 150 ஏக்கர். கரைகள் பலப்படுத்துதல், ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்கால்வாய் எடுக்கப்படுதல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டது குறித்து முன்பே தெரிவித்திருக் கிறோம். என்னதான் நாம் சீரமைத்தாலும், இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் போதுதான் ஏரிகளின் பாதுகாப்பு நூறு சதவிகிதம் உறுதியாகும். அதற்காகவே, ஏரியின் இயற்கைச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக தற்போது மரக்கன்றுகள் நடும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. பனை விதைகள், இலுப்பை, பூவரசு, புங்கன், வேம்பு, நீர்மருது ஆகியவை நடப்பட்டு வளர்ந்து வருகின்றன. அவை பாதுகாப்பாக வளரவேண்டி, ஒவ்வொரு மரக்கன்றையும் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் இந்த ஏரியில் 28 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளின்போது ஏற்படுத்தப்பட்ட நீர்ப்பள்ளங்களின்மூலம் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாகத் தேங்கி நிற்கிறது.

“2012-ம் வருஷம் பொதுப்பணித்துறைமூலம் கரையை பலப்படுத்தினாங்க. ஆனா, 2015 வெள்ளத்துல சேதமாயிடுச்சு. இப்ப `நிலம் நீர் நீதி’ திட்டம்மூலமா கரையை பலப்படுத்தி, உயரத்தை அதிகரிச்சிருக்காங்க. கரை மேலயே வண்டிகள் போயிட்டு வர்ற அளவுக்கு இருக்கு. முன்பைவிட அதிகளவுல தண்ணியும் தேங்கி நிக்கறத நாங்களே எதிர்பார்க்கல. ஏரியோட நீர்மட்டம் அதிகரிச்சிருக்கு. இங்க நெல்லுதான் முக்கியமான பயிர். இப்போ, 80 ஏக்கர் நிலத்துல விவசாயம் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். ஏரியோட எதிர்காலப் பாதுகாப்புக்காக மரக்கன்றுகளையும் நட்டு, விகடன் மூலமாவே பராமரிக்கிறது எங்களை நெகிழ வைக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் சாலமங்கலத்தைச் சேர்ந்த கணேசன்.

சிறுமாத்தூர் ஏரி
சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தச் சிறுமாத்தூர் ஏரியின்மூலம் 70 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. சென்னையின் புறநகர்ப்பகுதி என்பதால், அதிகரித்துவரும் குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. ஏரிக்குள் உருவாக்கப்பட்டுள்ள தண்ணீர் தேங்கும் 6 பள்ளங்களின் மூலம் 32.8 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கூடுதலாகத் தேக்கி வைக்க முடியும்.
ஏரியின் ஒரு பகுதியில் இரண்டாயிரம் சதுர அடிக்குச் சுவர் எழுப்பப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முதலில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் இதுசம்பந்தமாகக் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் மூலமாக மாவட்ட சப் கலெக்டர், பெரும்புதூர் தாசில்தார் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் வந்து ஏரியை அளந்தனர். பிறகு ஆக்கிரமிப்பு நிலம் அடையாளம் காணப்பட்டு, ஆக்கிரமிப் பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று அவர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டனர். அதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.
சுமார் 1,013 மீட்டர் நீளத்துக்கு பலப் படுத்தப்பட்டுள்ள கரையையொட்டிப் பனை விதைகள், புளியங்கன்று, புங்கன், பூவரசு, இலுப்பை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இப்போது மழைக்காலம் என்பதால் மரக்கன்றுகள் நன்றாக வேர்பிடித்து வளர்ந்து வருகின்றன.
இப்பணிகள் குறித்துப் பேசிய அப்பகுதி விவசாயி சேகர், “மூணாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கழனி விவசாயம்தான் செய்றேன். ஏரி பெருசா இருந்தாலும், தண்ணி முழுசா நிரம்பாது. கரையில அங்காங்க உடைப்பு ஏற்பட்டு தண்ணி வழிஞ்சு போயிடும். கரையிலயும் புதர் மண்டிக்கிடந்ததால, ஆடு மாடு மேய்க்கறவங்க கரைமேலகூட நடக்க முடியாது. விகடன் மூலமா வந்து இந்த ஏரியைச் சரிபண்ணுனதால, கரையெல்லாம் புதர்கள் இல்லாம, பார்ப்பதற்கு ரம்மியமா இருக்கு. தண்ணியும் போதுமான அளவுக்குச் சேகரமானதால, எல்லோரும் விவசாய வேலைகள தொடங்கி செஞ்சிட்டிருக்கோம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு பிரச்னையில்லாம விவசாயம் செய்ய முடியும். இந்த ஏரியைப் பாதுகாப்பா வெச்சுக்கிறது எங்களோட கடமை” என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
அதே ஊரைச் சேர்ந்த கமலா பேசும்போது, “இந்த ஏரியை ஒட்டியே மலை இருக்கிறதால, மழை பெய்தா தண்ணி அதிகளவு வரும். எவ்வளவு தண்ணி வந்தாலும் வழிஞ்சுடும். இப்போ, ஏரிக்குள்ள பள்ளங்கள் எடுத்து, கரையை நல்லா பலப்படுத்தியிருக்கிறதால, தண்ணியோட அளவு அதிகரிச்சிருக்கு. விவசாயத்துக்கு மட்டுமில்லாம, குடிதண்ணிக்கும் பிரச்னை இருக்காது. இந்தப்பகுதி கிணறுகள்ல தண்ணி நிரம்பியிருக்கு. சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமா பிக்னிக் மாதிரி வந்துட்டுப் போறாங்க” என்றார் புன்முறுவலோடு.

நரியம்பாக்கம் ஏரி
முதன்முதலில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது 71 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில்தான். இன்றும் இந்த ஏரியை நம்பி 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. ஏரியில் கூடுதலாகத் தண்ணீர் தேங்கும் நீர்ப்பள்ளங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏரியில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, கரைகள் சில இடங்களில் லேசாகச் சரிந்துள்ளன. மண்ணின் தன்மை காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சரிவுகளைச் சீர்படுத்தி, மேற்கொண்டு சரிவுகள் ஏற்படாமல் உறுதியான அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் கோடைக்காலத்தின்போது இந்தப் பணிகள் முடிக்கப்படும். அதைத்தொடர்ந்து இங்கேயும் மரக்கன்றுகள் நடப்படும்.
இந்தச் சீரமைப்புப் பணிகள் இவ்வளவு தூரம் சிறப்பாக நடந்தேறிக்கொண்டிருப்பதற்கு, அரசுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து உதவி வருகின்றனர். வாசகர்களுடன் இணைந்து `நிலம் நீர் நீதி’ திட்டத்தை விகடன் நிறுவனம் முன்னெடுத்திருப்பதை, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, உடனடியாகப் பொதுப் பணித் துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தந்து, இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்படி அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்துதான் பணிகள் வேகமெடுத்தன. குறிப்பாக, தமிழகப் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறைப் பொறியாளர்கள், அலுவலர்கள், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர், பொறியாளர்கள், மற்றுமுள்ள அரசுத் துறையினர் ஆகியோருக்கு இந்நேரத்தில் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, தங்கள் ஊரின் ஏரிகள் மற்றும் குளங்கள் சீரமைக்கப்படுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிவரும் சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் சிறுமாத்தூர் கிராம பொதுமக்கள், விவசாயிகள், தங்கள் நன்றிகளை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்.
பணிகள் அடுத்தடுத்த கட்டங்களை அடையும் போது... வழக்கம்போல உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்!
பனைவிதைகள், மரக்கன்றுகள், வெட்டிவேர்...
நன்கொடையாக அளித்த உள்ளங்கள்
ஏரிக்கரை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நடுவதற்காக மரக்கன்றுகள் விலைகொடுத்து வாங்கப்பட்டன. இப்படி விலைக்குக் கேட்ட சில இடங்களில், நம் நோக்கம் அறிந்து, மரக்கன்றுகளுக்குப் பணம் தேவையில்லை... உங்களின் நல்லநோக்கம் நிறைவேற அணில் பங்காக நாங்களும் சேர்ந்துகொள்கிறோம் என்றபடி இலவசமாகவே சிலர் கொடுத்துள்ளனர். இரண்டாயிரம் பனை விதைகளைத் தன்னுடைய கிராமத்தில் சேகரித்து வைத்து, ஏரியில் பதிப்பதற்காக நன்கொடையாக அளித்துள்ளார் உத்திரமேரூரைச் சேர்ந்த பரத். செங்கல்பட்டு அருகேயுள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த எழில்சோலை மாசிலாமணி... இலுப்பை, நீர்மருது, இலைமுரசு, பாதாம் ஆகியவற்றில் 250 மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்துள்ளார். இதேபோன்று வெட்டிவேர் அமைப்பைச் சேர்ந்த அசோக்குமார், பிரசன்னா ஆகியோர் 3 ஆயிரம் வெட்டிவேர் நாற்றுகளை நன்கொடையாக அளித்துள்ளார்கள். அனைவருக்கும் விகடன் வாசகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறுமாத்தூர்-மணிமங்கலம் ஏரி இணைப்புக் கால்வாய்
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுமாத்தூர் ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர், மணிமங்கலம் ஏரியில் சென்று கலக்கிறது. சிறுமாத்துரைவிட மணிமங்கலம் ஏரி மிகப்பெரியது. இந்த இரண்டு ஏரிக்கும் இடையிலான நீர் செல்லும் கால்வாய் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் புதர் மண்டிக் கிடந்தது. ஊராட்சித் துறையிடம் அனுமதிபெற்று 425 மீட்டர் நீளமுள்ள கால்வாய் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் சில பகுதிகள், காப்புக்காடுகளின் வழியாகச் செல்வதால், வனத்துறையிடம் அனுமதி வேண்டிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுமாத்தூர் ஏரியிலிருந்து உபரிநீர் இந்தக் கால்வாய் வழியாகத் தங்கு தடையின்றி தற்போதே ஓட ஆரம்பித் திருப்பது குறித்துப் பகிர்ந்துகொண்ட சிறுமாத்துரைச் சேர்ந்த குமார், “இந்தக் கால்வாய் பாழடைஞ்சு கிடந்ததால, தண்ணி சரியா போறதில்ல. விளை நிலங்களுக்குள்ள புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திடும். இப்போ கால்வாய் ரெடி பண்ணியிருக்கிறதால, நேரா மணிமங்கலம் ஏரியில கலந்திடுது. கால்வாயில் நீரோட்டம் இருக்கிறதால, இனி ரெண்டு போகம் விவசாயம் நடக்கும்னு எதிர்பார்க்கிறேன். கால்வாயைச் சீரமைச்சது... ஆடு மாடுகள் மேஞ்சிட்டு ஈஸியா வரதுக்கும், ஆட்கள் போக வரவும் உதவியா இருக்கு. யாரும் கண்டுக்காத கால்வாயை, கண்டுபுடிச்சு சரிபடுத்தினதுக்கு நன்றி சொல்லிக்கிறேன்” என்றார் மலர்ச்சியோடு.