Published:Updated:

கண்ணீருக்குக் காரணம் யார்?

கண்ணீருக்குக் காரணம் யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணீருக்குக் காரணம் யார்?

கண்ணீருக்குக் காரணம் யார்?

கி புயல் கடந்த அந்த பூமி, தற்போது கண்ணீர்க்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி

கண்ணீருக்குக் காரணம் யார்?

மாவட்டத்தையே புரட்டிப்போட்டிருக்கும் ஓகி புயலின் பெரும்சீற்றத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துவிட்டன; ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன; எண்ணற்ற மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டதால் மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன; எல்லாவற்றுக்கும்மேலாக, நடுக்கடலில் மாட்டிக்கொண்ட பல நூறு மீனவர்களின் நிலை, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புயலில் சிக்கி எத்தனை மீனவர்கள் பலியானார்களோ என்கிற அச்சம், கடல் கொந்தளிப்பைவிடவும் பெரும் மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலோரக் காவல் படை, பேரிடர் மீட்புப்படை என்று பலவிதமான படையினரும், காணாமல்போன மீனவர்களை மீட்கப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மற்றும் வழக்கமான படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என்று பலரும் இந்தப் புயலில் சிக்கிக்கொண்டுவிட்டனர். இத்தனைக்கும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் நவீனத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் இருக்கின்றன. மற்ற படகுகளில் செல்லும் மீனவர்களில் பெரும்பாலானவர்கள், தொடர்பு எல்லைக்குள்தான் இருப்பார்கள். இருந்தும்கூட இப்படியொரு மோசமான நிலை ஏற்பட்டிருப்பது வேதனையே.

ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கப்போகும் மீனவர்களுடன் பேசுவதற்குத் தேவையான தொழில்நுட்பச் சாதனங்கள் நம் கைவசப்பட்டுவிட்டன. புயல், மழையைத் துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை விடுப்பதிலும் பல மடங்கு முன்னேறியிருக்கிறோம். ஆனாலும், இவற்றின் பலன்களை சரிவர அறுவடை செய்யாமலிருப்பதுதான் பிரச்னைக்கு முக்கியக் காரணமே!

அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை சரியான நேரத்தில் விடுப்பதோடு அரசுத் துறைகளின் பணிகள் நின்றுவிடக்கூடாது. ‘மோசமான விளைவுகள் காத்திருக்கின்றன’ என்கிற அந்த எச்சரிக்கையானது, ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையச் செய்வதை உறுதிப்படுத்துவதும் அவசியம். அதேபோல, ஆபத்தை நூறு சதவிகிதம் உணர்ந்து, தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதைப் பொதுமக்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கான ஒரே வழி.

சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மைப் பயிற்சியைப் பொதுமக்களுக்கு, குறிப்பாகக் கடலோர மக்களுக்குக் கொடுப்பது பற்றியெல்லாம் பேசப்பட்டது. அதை இந்த நேரத்திலாவது கையில் எடுக்க வேண்டும். அனைத்துத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களும் கைவிட்டாலும், ஒருபோதும் கைவிடாத... ‘ஹாம் ரேடியோ’ எனும் மிகக்குறைந்த செலவில், எளிமையான பயிற்சியின் மூலம் அனைவருமே கையாளக்கூடிய சாதனத்தை, ஒவ்வொரு மீனவ கிராமத்துக்கும் கொடுத்து, மக்களைத் தயார்ப்படுத்தவேண்டும். 2014 சுனாமித்தாக்குதலின்போது, அந்தமான் தீவுகளில் மக்கள் வசிக்கும் சுமார் 37 தீவுகளையும் தகவல் தொடர்பால் இணைத்தது இந்த ஹாம் ரேடியோ மட்டுமே என்பது, நமக்கான அனுபவப்பாடம்.

தகவல்தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துகிடக்கும் இந்தக் காலத்திலும், விழிப்பு உணர்வு அற்றுக்கிடப்பது... ஆபத்து மட்டுமல்ல, அபத்தமும்கூட!