Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

கமல்ஹாசன்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

கமல்ஹாசன்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

ஆர்.சி.சக்தி, என் கையில் பேனாவைக் கொடுத்து, ‘நீ எழுத்தாளன்’ என்று என்னை நம்ப வைக்க, நானும் நம்பி ஆரம்பித்துவிட்டேன். கிராமத்திலிருந்து வரும் பணக்காரரை சினிமா எடுக்கவைத்து

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இழுத்துவிடுவார்களே, அப்படி நானும் ‘எழுத்தாளன்’ என்று நம்பி கலர்கலராக பேனா வாங்கியதுதான் மிச்சம். அப்படி எழுதுவதற்காக மட்டுமே நான் படிக்க ஆரம்பித்தேன். நமக்குள் தோன்றும் எண்ணங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், அவை ஓரிடத்தில் தேங்கி நிற்கும் குளமாக இருக்கிறதே, ஓடவேண்டாமா? ஓடவேண்டும் என்றால் இன்னோர் ஆற்றுடன் கலந்தால்தான் முடியும். ஓடையாக ஓரிடத்தில் நின்றால் யாராவது கழுவிவிட்டுச் சென்றுவிடுவார்கள். நதியோடு கலந்தால்தான் நமக்குப் பெருமை என்பது போகப்போகப் புரிந்தது. ஆனால், சீக்கிரமே புரிந்துவிட்டது என்பதுதான் பெரிய நன்மை. அதைப் புரியவைக்க மிகப்பெரிய ஊக்கியாக இருந்த எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி சொல்கிறேன்.

ட்சி, இலக்கு, எண்கள்... இவை முழுவதும் ஆர்.சி.சக்தி மூலமாக எனக்குக் கிடைத்தவை. ‘அவை மாத்திரம் போதாது’ என்று சொல்லி, தமிழிலேயே வந்த சில முக்கியமான புத்தகங்களைக் கொடுத்தது சில நண்பர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் எனக்கு அறிமுகமானவர் சுஜாதா. எனக்கு முன்பே எங்கள் வீட்டில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். என் அண்ணன்மார்களைப் போல் வீட்டுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்கும் பிராமணப் பிள்ளைகளில் அவரும் ஒருவர். எல்டாம்ஸ் சாலையில் அவர்களுக்கு இருந்த ஒரே புகைப்போக்கி, எங்கள் வீட்டின்  மொட்டைமாடி. அப்போது அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஆனால், இவர்தான் சுஜாதா என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. ஆனாலும், அவரைச் சின்ன வயதில் இருந்தே தொடர்ந்து படிப்பேன். ஏனெனில் எங்கள் அக்கா, சுஜாதாவின் ரசிகை. அந்த வயதில் தி.ஜானகிராமன் ரொம்பவே ஹெவி. அதனால் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும்.

சுஜாதா அப்போது தினமணிக் கதிரில் ‘சொர்க்கத் தீவு’ என்றொரு கதை எழுதிக்கொண்டு இருந்தார். அதன் மூலக்கதையைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், ‘இதுதான் அந்தக்கதை’ என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்திவிட்டோம். உடனே அவர் கோபித்துக்கொண்டு அந்தத் தொடரையே நிறுத்திவிட்டார். ஆனால், எங்களுக்கு அதை நிறுத்திய சந்தோஷம் கொஞ்சநாள்களே இருந்தன. பிறகு ‘எங்கோ ஒரு சாயல் இருந்ததற்காக நல்லா எழுதிட்டு இருந்த மனிதரை நிறுத்தவைத்து விட்டோமே’ என்று வருந்தினேன். பிற்பாடு அதை அவரிடம் சொன்னபோது,  ‘`அடப்போடா பித்துக்குளி... உனக்கு பயந்து நிறுத்திய நான் பெரிய பித்துக்குளி’’ என்று சிரித்தார். 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

பிறகு சுஜாதா பெங்களூரில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் குடியிருந்தபோது அவரைப் பார்க்க அடிக்கடி செல்வதுண்டு. இயக்குநர் பி.வி.காரந்த்தைப் பார்த்துவிட்டு சுஜாதாவையும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். அப்படி என்னுடன் சுஜாதா வீட்டுக்கு வந்த அன்றைய இயக்குநர்கள் இன்று அங்கு சீனியர் இயக்குநர்களாக இருக்கிறார்கள். பி.எஸ்.ரங்கா உட்பட பல இயக்குநர்கள் தங்களுடைய மோட்டார் பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு போய் சுஜாதா வீட்டில் விட்டுவிட்டு ‘இரண்டு மணிநேரம் கழித்து வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.  அப்போது சுஜாதாவுடன் இருந்த நாள்கள், அவர் எழுதப்போகும் நாவலைப் பற்றி சொன்னவை என, சென்னை வந்த பிறகும் நண்பர்கள் வட்டத்தில் அவரைப் பற்றிய பேச்சே ஒரு வாரம் ஓடும். ‘அவர் அப்படிச் சொன்னார், நான் அதற்கு இப்படிச் சொன்னேன்’ என்று அங்கு பேசிக்கொண்டிருந்ததைச் சொல்வதே மிகப்பெரிய சந்தோஷம். இப்படி பெங்களூரு செல்லும் பழக்கம், பிறகு அங்கு நடக்கும் சினிமா விழாக்களுக்குச் சென்று படங்கள் பார்ப்பதுமாகத் தொடர்ந்தது. அனந்து சாரும் நானும் வண்டி எடுத்துக் கொண்டு அங்கு போய், குறைந்தபட்சம் 10 படங்களாவது பார்த்துவிட்டுத் திரும்புவோம். ஏனெனில் இங்கு அந்தப் படங்கள் காணக்கிடைக்காதவை. இப்படி தேடித்தேடி சினிமா பார்ப்பதும் அவ்வளவு இஷ்டம்.

சுஜாதா பற்றிய விவரங்களை எம்.எஸ்.பெருமாளிடம் சொல்வேன். எம்.எஸ்.பெருமாள், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் எழுத்தாளர். அவரின் சுஜாதா பற்றிய விமர்சனங்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ‘என்ன அவ்வளவு பெரிய எழுத்தாளரை இப்படித் தூக்கிப்போடுகிறார்கள். சுஜாதாவையே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே’ என்று தோன்றும். அதெல்லாம் எனக்கு மிக வியப்பாக இருக்கும். ‘இதுதான் சரி, இவையெல்லாம் தவறு’ என்ற அவர்களின் விமர்சனத் தோரணையும் என் எழுத்துக்கு உந்துதலாக இருந்தது.

இந்த எம்.எஸ்.பெருமாள்தான் எனக்கு தி.ஜானகிராமன் போன்ற சில எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தவர். அந்த 18 வயதுதான் தி.ஜாவைப் படிக்க சரியான வயதும்கூட. அதற்கு முன் அவரை வாசிக்க முயற்சி செய்திருந்தால் சில சங்கேதங்கள் புரியாமல் போயிருக்கும். ‘மோகமுள்’, ‘மரப்பசு’ புரிவதற்கெல்லாம் அந்த வயதாவது வந்திருக்கவேண்டும். அதேபோல இந்திரா பார்த்தசாரதி அவர்களின், ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ போன்ற நாவல்கள் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை. அவரைப் போன்றே நான்கைந்து பக்கங்கள் எழுதிப்பார்த்துவிட்டு, பிறகு வெட்கப்பட்டு நிறுத்தியதெல்லாம் உண்டு.  

‘அவள் ஒரு தொடர்கதை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இரண்டு எழுத்தாளர்கள் செட்டுக்கு வந்து பேட்டி எடுத்தார்கள். அந்தப் பேட்டியை, படப்பிடிப்பு சூழல்களைச் சொல்லி இடதுசாரித் தன்மையுடன் எழுதியிருந்தார்கள். செட்டில் இயக்குநர், நடிகர்கள் போன்றோர் சுகமாக இருப்பதுபோன்றும், லைட் பாய்ஸ் வியர்க்க விறுவிறுக்கக் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். ‘உங்களை செட்டுக்குள்ள விட்டா, நாங்க என்னமோ இங்க பலபேரை அடிமைத்தனம் பண்றமாதிரி எழுதியிருக்கீங்க. இங்க எல்லாவிதமான வேலைகளும்தான் இருக்கு’ என்று பாலசந்தர் சார்க்கு பயங்கரக் கோபம். அவர் மனம் வருத்தப்பட்டுச் சொன்னவை எல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப்பேட்டியை எழுதியவர் வேறு யாருமல்லர், பாலகுமாரன்தான். பிற்பாடு அவரே பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராகச் சேருவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பிறகு பாலகுமாரன் மூலமாக விஸ்வநாதன் என்கிற சுப்ரமணிய ராஜு பழக்கம். நாங்கள் செருப்பு தேய எல்டாம்ஸ் சாலையில் நடந்தபடி பேசிய கதைகளை நினைத்துப்பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. சமயத்தில் வீடு வந்து சேர்ந்தபிறகும்கூட வீட்டுக்குள் போனால் சாப்பிடக் கூப்பிடுவார்கள், வேறு வேலைகள் இருக்கும்... பேச்சு சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திட்டு அதுமேலேயே அமர்ந்து மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. அடுத்து ஜெயபாரதி, கொஞ்சநாள் கழித்து ருத்ரய்யா. அதன்பின்னர் வண்ணநிலவன், இப்படிப் பலபேர். பிறகு நானாகத் தேடிப்போய் முகவரி கண்டறிந்து கிருஷ்ணவேணி டாக்கீஸ் பக்கத்தில் அசோகமித்திரன் சாரைச் சந்தித் ததும், பிறகு தொடர்ந்து சந்தித்துப் பேசியதும் மறக்க முடியாத நினைவுகள்.

புவியரசு, என்னைத் தேடி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். வானம்பாடி கவிஞர். பல ஆண்டு களுக்கு முன்பே அவரின் பேரனுக்கு என் பெயரை வைக்கும் அளவுக்கு அதிதீவிர ரசிகர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரம்ப கமல்ஹாசனுக்கு நானே ரசிகன் கிடையாது. ‘நல்லாதான் நடிக்கிறோமோ’ என்று சந்தேகத்துடனேயே என்னைப் பார்த்துக்கொண்டு இருந்த நாள்கள் அவை. ஆனால், அவர் என்னை அப்படி ரசிப்பார். அவர்மூலமாக ‘அமர காவியம்’ என்ற தலைப்பில் மொத்த சினிமாவையும் கவிதை நடையில் எழுதவேண்டும் என்று உட்கார்ந்து எழுத ஆரம்பித்து விட்டோம். ‘இரண்டுபேர் போதாது’ என்று ஞானக்கூத்தனை அழைத்துவந்தோம். பிறகு மகுடேசுவரனையும் கூப்பிட்டோம். மகுடேசுவரனுக்கு நான் ரசிகன் என்பது அவருக்கும் தெரியும்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

தில் நான் கூப்பிட்டு நடக்காமல் போன விஷயங்களும் உண்டு. ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்த ஜெயந்தனை எப்படியாவது சினிமாவுக்குக் கூட்டி வரணும் என்று விரும்பி அழைத்துவந்தோம். ஒருநாள் அலுவலகத்தில் வந்தமர்ந்தவர், ‘இந்தச் சூழல் எனக்கு சரிவராது தம்பி’ என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார். அவரையெல்லாம் இழுக்கமுடியவில்லை. ஆனால், என் முதல் சினிமா தயாரிப்புக்காக மிகவும் ஆர்வமாக வந்து, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக அமர்ந்து கதைபேசிய எழுத்தாளர் சாண்டில்யன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ போல் ஒரு பீரியட் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் சிங்கீதம் சீனிவாசராவ், நான்,  அவர் என்று பேசிக்கொண்டிருந்தோம். படத்தின் பெயர், `சிந்துபாத்.’ சரித்திரப் புனைவுடன் பண்ணவேண்டும் என்ற விருப்பத்தில் பண்ணிக்கொண்டிருந்தோம். சிந்துபாத் கேரக்டரில் நான் நடிப்பதாக இருந்தது. அது அற்புதமான அனுபவம். ஆனால், அந்தப் படமே எடுக்கப்படவில்லை. சாண்டில்யனுடன் தினமும் சந்திப்பு நடந்த  மூன்று நான்கு மாதங்களை நான் இழந்தவாய்ப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவையெல்லாம் இன்றைய கமலுக்கான அஸ்திவாரங்கள் என்பது போகப்போகத்தான் நானே உணர்ந்தேன். அன்று அவர்கள் கதை புனைவதையும் பேசுவதையும் அருகிலிருந்து கண்ட எனக்கு அவை இன்னும் பிரயோஜனமாக உள்ளன.

காலகட்டங்கள் கடந்து பிற்பாடு ரா.கி.ரங்கராஜன் வந்தார். இவர் பல பெயர்களில் குமுதத்தில் எழுதுகிறார் என்பது தெரியும். இவரிடம் எனக்கு நிறைய வருத்தங்கள்கூட உண்டு. நிறைய கிசுகிசுக்கள் எழுதிவிடுவார். இருந்தாலும் அவரின் எழுத்து எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடன் தொடர்ந்து பேசுவேன். ஒருமுறை, `‘உங்களுக்கு எந்த எழுத்தாளர் பிடிக்கும்’’ என்றார். ஜெயகாந்தனில் தொடங்கி, பலபேரைப் பட்டியலிட்டேன். `‘குமுதம் படிப்பேளா’’ என்றார். ``படிப்பேன் சார்’’ என்று சொல்லிவிட்டு, `‘அதில் மோகினினு ஒரு அம்மா ரொம்பப் பிரமாதமா எழுதுறாங்க’’ என்றேன். ‘`ம்ம்... அதென்ன அவங்கமேல அவ்வளவு பிரியம்’’ என்றார். `‘ரொம்பப் பிடிக்கும் சார். ‘அடிமையின் காதல்’னு ஒரு கதை. ஆச்சர்யமா இருக்கும். கடைசியில் ‘காஞ்சிபுரத்தான் கொடி கோட்டையில் பறந்தது’ என்று எழுதி முடிப்பாங்க. பிறகு அடுத்த மூணு வாரத்துல அண்ணா முதல்வரா வந்துட்டார்’’ என்றேன். ‘`ஓ... அப்படியா’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். ‘`அந்த அம்மா யார் சார்’’ என்றேன். சிரித்தபடி, `‘நான்தான் அந்த அம்மா’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது.

‘மகாநதி’க்கு வசனம் எழுத அவரை அழைத்து வந்தேன். ‘`இந்தா பாருங்க. இதெல்லாம் அப்படி இருக்கக்கூடாது. நீங்கள் இந்த வசனம் சொல்லப்படாது” என்று சண்டை போடுவார். ‘தெனாலி’ பட வேல், அவரிடமிருந்து காப்பி அடித்த விஷயம். அவரின் கையில் எப்போதும் வேல் ஒன்று இருக்கும். `‘என்னத்துக்கு சார் இப்படி ஒரு கம்பி வேல். குத்திடப்போகுது’’ என்றால், ‘`தைரியத்துக்கு கமல்’’ என்பார். ஆனால், அவர் வைணவர். இப்படி வைணவம் டு சைவப் பயணம்தான் அவர்கள் பகுத்தறிந்த தூரம். அதற்கு அவர் சொன்ன கதை நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய அப்பா கொஞ்சம் கோபக்காரர். அதனால் அடிக்கடி அடிவிழுமாம். அப்படி அவர் அடிக்க வரும்போது அவரிடமிருந்து தப்பித்து ஒளிந்துகொண்டது முழுக்க சைவக்கோயிலில் தானாம். ‘அதனாலயே பக்தி வந்துடுச்சு போலிருக்கிறது’ என்றார். ‘பயபக்தி போலிருக்கிறது’ என்றேன். சிரித்துவிட்டார். அவருடன் செலவிட்டவை மிகவும் சந்தோஷமான நேரங்கள். 

டுத்து ஞானக்கூத்தன். அற்புதமான விஷயங்களை நிகழ்த்திக்காட்டியவர். அவருடன் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். ‘ஹேராம்’ சமயத்தில் கூடவே இருந்தார். என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேட்டுக்கொள்வேன். நான் கவிதை எழுதினால், அதை அவர் திருத்துவதையே நம் அனைவருக்குமான பாடமாக எடுத்துக் கொள்ளலாம். அவரை, ‘அம்மா’ என்பதா, ‘அப்பா’ என்பதா... ஆனால், அந்த ஸ்தானத்தில் இருந்து அன்பு, பிரியம் கலந்து கடமைபோல் கலை செய்வார். அதேபோல்தான் புவியரசும். இருவரும், ‘அடித்துத் திருத்துகிறேன்’ என்று வாத்தியார் வேலை பார்க்கவே மாட்டார்கள். இத்தனைக்கும் ஒருவர் நிஜமாகவே வாத்தியார். கவிதை சொன்னால், `‘அதை இன்னொரு வாட்டி நீங்களே படிங்க. மாறும் பாருங்க’’ என்பார் புவியரசு. அது, ‘`அதுல ஏதோ தவறு இருக்கிறது’’ என்று சொல்லும் விஷயம், அவ்வளவுதான். ஆனால், இருவரும் அதில் உள்ள கருத்தை முதலில் எடுத்துக்கொள்வார்கள். இருவரும், தமிழ் சரியாகக் கற்கவில்லை, இலக்கணம் கற்கவில்லை என்ற என் பயத்தை எடுத்து வெளியே வைத்துவிட்டனர்.

ங்கொன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் எழுதும் கவிதை, உரைநடை அனைத்துக்கும் தாளம்தான் இலக்கணம். பரதநாட்டியம், மிருதங்கம் கற்றுக்கொண்டதால் அந்த ஜதியை மனதில் வைத்தே எழுதுவேன். என்னைப் பொறுத்தவரை இலக்கணம், தாளம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் போலிருக்கிறது. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில், இந்த இரண்டு கணிதங்களும் எங்கோ ஒரு புள்ளியில் இணைவதாக எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்த கணிதத்தில் நான் கணக்கு போடுகிறேன். இதைச் சொல்வதில் வெட்கம் கிட்கம் எதுவும் எனக்குக் கிடையாது. புலவன் செருக்கும் எனக்குக் கிடையாது. ஏனெனில் நான் ஒரு நாட்டுப்பாடகன்.

அப்படி நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்தேன். அதில், ‘பெருங்கவி நகர்கையில் சிறுகவி சாவான். எனக்கு நகரவும் பயமில்லை. சாகவும் பயமில்லை’ என்று எழுதியிருந்தேன். அதேபோல்தான் ஒரு நாட்டுப்பாடகனுக்கு, ‘கண்ணதாசன் உன்னைவிட நன்றாக எழுதியிருக்கிறார்’ என்றால், அவன், ‘யார் கண்ணதாசன்’ என்று கேட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்தளவுக்கு தமிழ் தெரியாமல் இருக்கக்கூடியவன்தான் அவன். அந்தமாதிரியான ஓர் ஆளாகத்தான் என்னை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஏதோ ஒரு சந்தோஷத்தில் அது வந்துவிடுகிறது. இல்லையெனில் எங்கோ ஒரு நாட்டுப்பாடகன், ‘தண்ணி தெளிச்சாப்போல் தோளிலே தேமல் ரெண்டு’ என்று எழுதிய வரி, அவன் எவ்வளவு பெரிய பொற்காசு பெற்ற கவிஞனாக இருக்கவேண்டும் என்று யோசித்துப்பார்ப்பேன். அவன் எங்கோ கிராமத்தில் உட்கார்ந்து எழுதிவிட்டுக் காணாமல் போய்விட்டான். அதைப்போன்ற பெயர்தெரியாத கவிஞனிடமிருந்து எடுத்ததுதான் ‘இஞ்சி இடுப்பழகா.’ ஆம், அது அவனுடைய காயினேஜ்தான். இந்த உவமை நமக்குத் தோணவே தோணாது. ‘இஞ்சி இடுப்பழகா எண்ணத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா மஞ்சச் சரவிளக்க மறக்க மனங்கூடுதில்லையே’ இது நாட்டுப்பாடல். இது நம் எல்லோருக்கும் சொந்தம். அது சினிமாவில் வந்ததால் பாப்புலர் ஆனது. ஆனால், அதை எழுதிய அந்த ஆள், எந்த ஜில்லாவில் எங்கு தப்பு தட்டிக்கொண்டிருந்து காணாமல் போனானோ தெரியாது.

ந்தச் சூழல்களில் நான் இருக்கும்போது திடீரென ஒருநாள் சுந்தர ராமசாமி வந்திருந்தார். ‘உங்க இரண்டு பேரையும் பேசவைத்துப் பார்க்கணும்’ என்று ஞானக்கூத்தன் அழைத்து வந்திருந்தார். எங்கள் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு அது. ‘இங்க வாங்க, நீங்களும் வந்து உட்காருங்க’ என்று ஞானக்கூத்தனை சோபாவுக்கு அழைக்கிறேன். ‘இல்ல நீங்க பேசுங்க’ என்று சொல்லிவிட்டு சு.ரா-வுக்குப் பின்னால் அவரின் நிழல்போல் நின்றிருந்தார் ஞானக்கூத்தன். நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப் பதிவு பண்ணாமல் போய்விட்டேன். ஏனெனில், எனக்குத்தோன்றும் கேள்விகள் அனைத்தையும் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

 “ `ஒரு எழுத்தாளனாக நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?’- ஒரு திரைக்கதை எழுத்தாளனாக நான் இதைக்கேட்கிறேன். ஏனெனில் எனக்கு அந்த டெக்னிக் வேண்டும். இந்தக் கேள்வியை லைட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது பேட்டியல்ல. இன்னொருவருக்குச் செய்யும் தானம்’’ என்றே ஆரம்பித்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் எனக்கு ஆச்சர்யம். ‘`எழுதும்போது ரெஃபரன்ஸுக்கு நிறைய படிப்பீர்களா’’ என்றேன். `‘இல்லில்ல... எழுதும் போது நான் படிப்பதே இல்லை. குழம்பிடும். நான் என்ன எழுத வர்றேன் என்பதுபோய், என்னைவிட நல்லா எழுதி இருந்தால் அதைப்பிடித்தே தொங்கிக்கொண்டிருப்பேன். அதனால எனக்கு என்ன வேணும்னு தோணுதோ அதைமட்டுமே யோசித்துக் கொண்டிருப்பேன். எழுதும்போது படிப்பு குறைஞ்சே போயிடும்’’ என்றார்.

டுத்து ஜெயகாந்தன். ‘`கமலுக்கு என்னைத் தெரியும்’’ என்பார். அவர் அப்படிச் சொல்வது தன்னைத் தாழ்த்திக்கொண்டு அல்ல. ‘சினிமாக்காரன் ஒருவனுக்கு ஜெயகாந்தனை உணரமுடிகிறதே’ என்ற சந்தோஷம். அவர் என்னிடம் பிரியமாக இருப்பார். அவரை நான் எந்தளவுக்கு ஆராதிக்கிறேன் என்பது அவருக்கே தெரியும். ஏனெனில் அவருடன் நெருக்கமாக இருந்த  பலர்  என்னிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜ்கமல் கண்ணன் உட்பட சிலர் ஜெயகாந்தனை, ஏதோ அவருடன் படித்தவர்போல், ‘ஜே.கே’ என்றுதான் கூப்பிடுவார்கள். அவரும், ‘ கூப்பிடத்தானய்யா பெயர்’ என்பதைப்போலக் கடந்துபோவார். எனக்கு வியப்பாக இருக்கும். நற்பணி மன்ற நிகழ்ச்சி, சினிமா என்று எதற்கு அழைத்தாலும் வந்துவிடுவார். அது அவர் தன் ரசிகனுக்குத் தரும் உச்சபட்ச சந்தோஷம் என்றே நினைக்கிறேன். `மும்பை எக்ஸ்பிரஸ்’ பார்க்க எங்கள் அலுவலகத்துக்கே வந்துவிட்டார். ‘`எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. ஆனா எனக்குப் பிடிச்சிருந்தா ஆபத்தாச்சே, பதற்றமா இருக்கு’’ என்றார். ‘அமானுஷ்ய பலம்’ என்பார்களே, இவர்களுடன் பேசிவந்ததால் எனக்குக் கிடைத்ததை அப்படிச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

ப்படி எத்தனை பேரைச் சொல்லுவேன். ‘இந்தாளு பேசுறதை நீ கேட்கணும்’ என்று மேடையில் இருந்த இவரை விளித்து அருகில் இருந்த சுஜாதா என்னிடம் சொல்லி அறிமுகமானவர்தான், கு.ஞானசம்பந்தம். அந்த முதல் சந்திப்பில் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது. நான் ‘விருமாண்டி’ பண்ணும்போது, ‘`இது மதுரைக்களம். நீங்களும் என்னுடன் இருக்கணும்’’ என்றேன். உடன் இருந்து உதவிகள் செய்தார். ஒருநாள், ‘`இதுல நீங்க நடிக்கிறீங்களா?’’ என்று கேட்டேன். ‘`இது மாடு புடிக்கிற படம். என்னால நடிக்க முடியாது’’ என்றார். `‘மாட்டை நான் பிடிக்கிறேன். மைக்கை நீங்க பிடிங்க’’ என்று சொல்லி ஜல்லிக்கட்டுக்கு வர்ணனை பண்ணும் கேரக்டரில் அவரை நடிக்கவைத்தேன்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

பிறகு தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்தவர், ஒருநாள் என்னிடம் மிக முக்கியமான கேள்வியைக் கேட்டார். அது பலருக்கும் பயனளிக்கக்கூடிய கேள்வி என்பதால் அதை இங்கே பதிவிடுகிறேன். அவரும் இதைச் சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ‘`ஒரு கேரக்டர்ல நடிச்சிட்டிருக்கும் போது கைய என்ன பண்றது” என்றார். ‘`நீங்க மேடையில பேசிட்டிருக்கும் போது கைய என்ன பண்ணுவீங்க” என்றேன். அதற்கு அவர், ‘`எனக்குக் கை இருக்குறதே மறந்துபோயிடும்’’ என்றார். ‘`அதுதான் முக்கியம். நீங்க அந்த கேரக்டரா மாறிட்டீங்கனா கையைப்பற்றிக் கவலையே படமாட்டீங்க’’ என்றேன். நடிப்பு என்பதால் எனக்குத் தெரிந்ததை அவரிடம் சொன்னேன். அதேபோல் என் தமிழ் ஆசான்களில் அவரும் ஒருவர். வேறொருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது, ‘`உங்களுக்கும் எனக்கும் என்ன சார் சம்பந்தம்” என்று கேட்டார். ‘`ஞானசம்பந்தம்’’ என்றேன். சிரித்துவிட்டார்.

ஆமாம், இந்த ஞானத் தேடல்தான் எங்களை இணைத்திருக்கிறது. இன்றுவரை நாங்கள் இருவரும் வெளியே போனால் இருவேறு புத்தகங்களை வாங்கிவந்துவிடுவோம். அதில் ஒன்றை நான் வைத்துக்கொண்டு இன்னொன்றை அவரிடம் கொடுத்துவிடுவேன். இருவரும் படித்த பிறகு புத்தகங்களை மாற்றிக் கொள்வோம். அப்படி அவரிடம் நான் கடைசியாகத் தந்த புத்தகம் ஜெயமோகன் எழுதிய ‘அறம்’. ஜெயமோகன் எந்தமாதிரியான மயக்கத்தில் எழுதுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரைப் படிப்பவர்களுக்கும் அதே மயக்கத்தைத் தரக்கூடிய எழுத்து. நாம் எழுதும்போது நம்மையே வியக்கவைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் வந்து விழும். அதை, சிலர் தெய்வாம்சம் என்பார்கள். சிலர் கற்பனை வளம் என்பார்கள். நான் அதை ‘இன்னர் பேஷன்’ என்பேன். நமக்குள் இருக்கும் அதைக் கொஞ்சம் தூண்டிவிடவேண்டும், அவ்வளவுதான். ஜெமோவின் ‘கொற்றவை’ படித்துவிட்டு நானும் ஞானசம்பந்தமும் அப்படி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

ப்படி நண்பர்களுடன் அன்று தெருவில் பேசத்தொடங்கிய கதைகள், இன்று அலைபேசியிலும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்கின்றன. இந்த நேரத்தில் சினிமாக் கதை பேச நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போடுவதை நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், அது ஏன் ரூம் போட்டு பந்தா பண்ணுகிறோம் என்பது பிற்பாடு புரிந்தது. ஏனெனில், இப்படி அள்ளிக் கொடுத்தால் அதைச் சிதறடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். தர்மாஸ்பத்திரி போல இலவசமாகக் கொடுத்தால் அதை மதிக்காமல் காசுகொடுத்து வைத்தியம் பார்க்கக்கூடிய வேறு மருத்துவமனையைத் தேடிப்போவார்களே அப்படி. ஆனால், அன்று தெருவில் தொடங்கி இன்று இப்படிப் பல தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் எனக்குள் கதைகளைப் பதியவைத்தவர்களுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்.

இப்படியான என் இலக்கியச் சந்திப்புகளைப் பார்த்துவிட்டு அன்று சினிமாவில் இருந்த சிலர், ‘என்னது இது, இவனுக்கு சினிமாவில் மார்க்கெட் நல்லாதானே இருக்கு. ஆனால், இவன் ஏன் யார்யாரோ பெயர் தெரியாத எழுத்தாளர்களை எல்லாம் தேடிப்போய்ப் பார்க்கிறான்’ என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் அதுதான் எனக்கு இஷ்டம்.

40
ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். சென்னை அண்ணாசாலை எல்.எல்.ஏ கட்டடத்தில் ‘சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் பாலம் சரியாக அமைய வில்லை’  என்ற கருத்தை மையப்படுத்திப் பேசக்கூடிய ஒரு கூட்டம். ‘இதைப்பேசணும், அதைப்பேசணும்’ என்று பாலகுமாரனும் சில நண்பர்களும் என் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று என்னை, பின்னால் இருந்து இயக்கிய அந்தக் கருத்தரங்கை நினைத்துப் பார்க்கிறேன். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படிக் கூட்டம்கூட்டிப் பேசவேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது  என்பதுதான் கவலையளிக்கக்கூடிய ஆச்சர்யம்.

‘`நான் என்ன வாலியா, வாலி பாலா? ரெண்டு பேரும் மாறிமாறி எத்துறீங்க’’ என்ற வாலி சாரின் கோபம், லிப் ஸிங்க்- கத்திச் சண்டை என்று ஒருவரிடம் மற்றவர் கற்ற சிவாஜி-எம்ஜிஆர் புரிதல், ரஜினியை இன்ஃபுளுயன்ஸ் செய்த சிவாஜி... என் வாத்தியார்கள் பற்றி அடுத்த வாரமும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.