Published:Updated:

அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!
பிரீமியம் ஸ்டோரி
News
அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

ரமணி மோகனகிருஷ்ணன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ப.பிரியங்கா,

``அமைதி அமைதி
அமைதியோ அமைதி
அமைதி அமைதி
அமைதிக்கெல்லாம் அமைதி...’’


- இப்போதைய ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் இதுதான். இந்தப் புன்னகை மந்திரத்தை அருளியவர், 5 வயது கார்ட்டூன் கேரக்டர், ஷின் சான்!

90’ஸ் `கிட்ஸை’ மட்டுமல்லாமல், 80’ஸ், 70’ஸ் `கிட்ஸை’யெல்லாம்கூடக் கட்டிப் போட்டிருக்கும் சுட்டிப்பையன் ஷின் சான்தான், கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாவின் கூல் டாப்பிக். டிவியில் ஒரு பக்கம் ஷின் சான் குழந்தைகளைக் குளிர்வித்துக் கொண்டிருக்க, ஆன்லைனில் ஷின் சானுக்கு வளர்ந்தவர்கள் எல்லோருமே ரசிகர்கள். ஜப்பானிய மொழியில் வெளிவந்துகொண்டிருந்த ஓர் அனிமேட்டட் சீரிஸை  தமிழில் சூப்பர் டூப்பர் ‘பொம்மைப் படமாக’ நமக்குத் தந்த பெருமை அதன் டப்பிங் குழுவைச் சேரும். ‘ஷின் சான்’ குரலுக்குச் சொந்தக் காரர்களைச் சந்தித்தேன்.

அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

‘`பாஸ், அந்த ‘அமைதி அமைதி’ டயலாக் என்னிக்கு, எப்போ பேசினேன்னு சாமி சத்தியமா ஞாபகம் இல்ல’’ என்று சிரித்தபடியே  பேசத்தொடங்கினார் ஷின் சான் குரலின் உரிமையாளர் ரகுவரன். `பென் 10’, `போக்கிமான்’, `க்ரிஷ் ரோல் நம்பர் 21’, `சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்’,  `சார்லி சாப்ளின்’ என்று இவருடைய டப்பிங் ஹிட் ஹிஸ்ட்டரி நீள்கிறது.

“எங்க குடும்பமே ஒரு டப்பிங் குடும்பம்தான். அம்மா, அப்பா ரெண்டு பேருமே அந்தக் காலத்துல பிரபல டப்பிங் கலைஞர்கள். ‘நாயகன்’ படத்துல வர்ற `நீங்க நல்லவரா கெட்டவரா’ டயலாக், என் அண்ணன் பேசினதுதான். 2008-ல் என் நண்பர் சபரிநாதன்தான், ஷின் சான் புராஜெக்ட் வாய்ப்பைக் கொடுத்தார்’’ என்கிறார் இப்போது பல பெரிய புராஜெக்ட்டுகளைக் கணக்கில்லாமல் கையில் வைத்துக்கொண்டிருக்கும் ரகு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“இந்த புராஜெக்ட் ஒரு சேலஞ்சாதான் எங்ககிட்ட வந்தது. இந்தியில் ஒளிபரப்பான ஷின் சான் தொடரை, 2008-ல் கொஞ்ச நாள் தடை செஞ்சிருந் தாங்க. பார்லி மென்ட்ல பேசுற அளவுக்குப் பெரிய பிரச்னை ஆச்சு’’ என்று ஆரம்பித்தார் கணேஷ். “ஜப்பான் வெர்ஷனை அப்படியே மொழிபெயர்த்து இந்தியில வெளியிட்டுட்டாங்க. அதில் சைட் அடிக்கிறது, டிரக் டீலிங்னு நிறைய அடல்ட் கன்டன்ட் வரும். அந்த நானோக்கா, ஷின் சானோட க்ரஷ். ஆனா, நாங்க நனோக்காவை அவனோட அக்கானு மாத்திட்டோம்” என்று சிரிக்கும் கணேஷ், ‘பு’ கேரக்டருக்கு டப் செய்யும் சவுண்ட் இன்ஜினீயர்.

“இப்படித்தான் நாங்க எங்களுக்குத் தோணுற மாதிரி, நம்ம குட்டீஸுக்கு ஏத்த மாதிரி எபிசோடு கன்டென்ட்டுகளை மாத்திக்கிறோம். அந்த ஃப்ரீடம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. கணேஷும் நானும் நைட் ஷோ படத்துக்குப் போயிட்டு வருவோம்; பேசிட்டிருக்கும்போது திடீர்னு ஒரு விஷயம் ‘நல்லா இருக்கே’ன்னு தோணும். ஸ்டுடியோ சாவி எங்ககிட்டதான் இருக்கும். அந்த  ராத்திரியே  அங்க  போய் வேலை பார்ப்போம்” என்று வொர்க்கிங் ப்ளான் பகிர்கிறார் ரகு.

ஷின் சானின் அம்மாவான, எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் மிட்ஷிக்கு டப் செய்யும் ஜெய் வித்யா, நிஜத்தில் அவ்வளவு அமைதி. “மிட்ஷி எப்பப் பார்த்தாலும் கத்திக்கிட்டே, திட்டிக்கிட்டே இருந்தாலும், வித்யாவுக்கு ஷின் சான் லூட்டிகள் அவ்வளவு பிடிக்கும். ‘நீங்கதான் ஷின் சானோட அம்மாவா?’னு என்னைக் கேட்கும்போது, இன்னும் பிடிக்கும்’’ என்கிறார் வித்யா.

அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

‘`நம்ம எல்லோரோட வீட்டிலும் ஷின் சான் மாதிரி பசங்க இருப்பாங்க. ஜப்பானுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு என்றாலும், ஆசியக் குடும்பங்களோட ஃபேமிலி வேல்யூஸ் எல்லாம் கிட்டத்தட்ட ஒண்ணுதான். அதுதான் ஷின் சான் ஹிட்டுக்குக் காரணம்” என்கிறார், ஹேரி கேரக்டருக்குக் குரல் கொடுக்கும் அருண் அலெக்சாண்டர். ‘அவதார்’ தமிழ் வெர்ஷனில் ஹீரோவுக்குக் குரல் கொடுத்தவர். ‘மாநகரம்’ படத்தில் வில்லனாகவும் நமக்கு அறிமுகமானவர்.

‘கசாமா, மசாவு எங்கே?’ என்று கேட்க “கண்ணா, கசாமாவும் நான்தான், மசாவுவும் நான்தான்” என்று வந்து நிற்கிறார், சத்யா. “கசாமாவும் ஷின் சானும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டாலும், அவங்களுக்குள்ள ஒரு பாண்டிங் இருக்கும். அது பியூட்டிஃபுல்’’ என்று சிலாகிக்கும் சத்யாவின் கண்களில் பூரிப்பு.

‘`ஷின்சான் ஏற்கெனவே வெற்றிபெற்ற ஷோதான்னாலும், ஃபேஸ்புக்ல கிடைச்சிருக்கிற கமென்ட்ஸ், மனசுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கு. ‘காலா’ படத்துல ரஜினியோட போட்டோவை எடுத்துட்டு ஷின் சானையும், பக்கத்துல அந்த நாய்க்கு பதிலா ஷீரோவையும் வெச்செல்லாம் போஸ்ட் பார்த்தோம். ஷின் சானை ‘தலைவா’ங்கிறாங்க. எக்கச்சக்க மீம்ஸ். எங்களை அடையாளம் காட்டினதுக்கு ‘ஷின் சான் பரிதாபங்கள்’ பக்கத்தோட அட்மினுக்கு நன்றி. ஒரு மனநல மருத்துவர் என்கிட்ட, ஷின் சான் பார்க்கச் சொல்லி, அவரோட பேஷன்ட்ஸுக்குப் பரிந்துரை செய்றதா சொன்னார். ஜாப் சாட்டிஸ் பேக்‌ஷன்னா இதுதான்’’ என்று ரகு சொல்ல, “என்னோட வேலைபார்க்கிற நண்பரின் மாமியாருக்கு 90 வயசு. இந்த ஷோ தன் மன அழுத்தத்தைக் குறைக்கிறதா அவங்க சொன்னப்போ, நெகிழ்ந்துட்டேன்’’ என்கிறார் கணேஷ்.

‘குழந்தைங்களை மாதிரி வாய்ஸ் மாத்துறதால தொண்டை வலிக்காதா?’ என்றால், ‘`நாங்க எதுக்காக மாத்தணும்? நாங்க குழந்தைங்கதானே?’’ என்று கலாய்க்கிறது ஷின் சான் கூட்டணி. ‘சரி பாஸ், எல்லோரும் போட்டோவுக்கு போஸ் கொடுங்க’ என்றால், ‘இருங்க... ஷீரோ மிஸ் ஆகுது’ என்று, ஓடிப்போய் ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிவந்து வைத்துக்கொள்கிறார்கள்.

என்ன, ஷின் சான் பாசமழை கன்னாபின்னானு கொட்டுதே!

அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

ஷின்சான் வரலாறு!

‘ஷின் சான்’ காமிக்கை எழுதியவர் யொஷிட்டோ உசுயி. ஷின் சான் என்கிற குழந்தை வளர்ந்து ஒரு கடையின் உரிமையாளராகும் கதையை எழுதியவர், திடீரென ஷின் சானை மட்டும் தனியாக எழுதலாமே என யோசிக்க அங்கிருந்து முளைத்ததே, இந்த கார்ட்டூன் சீரிஸ்!

டோரா குரல்!

`நேனி’க்குக் குரல்கொடுத்த யாமினி பிரியா, மூன்று வருடங்களுக்கு முன்னர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். டோரா புஜ்ஜியில் டோராவுக்குக் குரல் கொடுத்தவரும் இவரே!