Published:Updated:

சிந்து 25

சிந்து 25
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்து 25

பரிசல் கிருஷ்ணா

ங்கக் கனவுகளுடன் பாட்மின்டன் உலகில் மினுமினுத்துக் கொண்டிருக்கிறார் பி.வி.சிந்து. 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றபின் சிந்துவின் வெற்றிகள் தொடர்கின்றன. சில ஆண்டுகள் முன்புவரை பாட்மின்டன் தரவரிசையில் 255வது இடத்தில் இருந்தவர், இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 22 வயதேயான சிந்துவின் சிறப்பு 25 இங்கே!

சிந்து 25

1. அப்பா ரமணா, அம்மா விஜயா இருவருமே வாலிபால் வீரர்கள். ரமணா இந்திய தேசிய வாலிபால் குழுவுக்காக விளையாடிவர். இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. சிந்துவின் அம்மா விஜயா சென்னையில் படித்தவர். சிந்துவின் அக்கா திவ்யா மருத்துவர்.  

2. பெற்றோர் வாலிபால் விளையாடும்போது, உடன் செல்வார் சிந்து. அப்போது அருகில் இருக்கும் பாட்மின்டன் கோர்ட்டில் ‘விளையாட்டாக’ விளையாட ஆரம்பித்திருக்கிறார். சிந்துவுக்கு பாட்மின்டனில் அதிக ஆர்வம் இருப்பதைக் கண்ட அவரின் தந்தை 7 வயதில் முறையான பயிற்சியில் சேர்த்திருக்கிறார். 

3. பல வருடங்களாகக் காலையில் எழும் நேரம் 3.30. அதிகாலை 4.30 மணிக்கு பாட்மின்டன் பயிற்சி அரங்கில் இருப்பார். “ஒருமுறை குரல் கொடுத்தால் போதும். உடனே எழுந்து ரெடியாகிவிடுவார்” என்று சிந்துவின் அப்பா இப்போதும் பெருமையாகச் சொல்வார்.

4. வீட்டிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் பயிற்சி மையம். முடிந்ததும் பள்ளிக்கூடம். மீண்டும் மாலை பயிற்சி. ஒன்பது வயதிலிருந்து சிந்துவின் தினசரி வழக்கம் இதுதான். இந்த உழைப்புதான் அவரை 13 வயதில் சர்வதேசப்போட்டிகளில் விளையாட வைத்திருக்கிறது.

5. பயிற்சியின்போது கோபிசந்த், சிந்துவுக்குத் தெரியாமல் சர்ப்ரைஸ் டார்கெட் வைப்பார். ஆனால்,  பயிற்சி முடியும்போது கோபிக்குதான் சர்ப்ரைஸ் இருக்கும். அவர் நினைத்த டார்கெட்டைவிட, ஒருபடி அதிக பாய்ன்ட்ஸ் எடுத்திருப்பார் சிந்து.

​ 6. தீவிர கடவுள் பக்தை. தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வார்.​ விளையாடக் களத்தில் இறங்கும் முன் பிரார்த்தனை செய்வார். எல்லாவற்றையும்விட, மறக்காமல் சிந்து செய்யும் ஒரு விஷயம், போட்டி தொடங்கும் முன், எனர்ஜியைக் கூட்டுவதற்காக  அடிவயிற்றிலிருந்து ‘கமான்’ என்று உரக்கக் கத்துவதுதான். ``அந்தச் சத்தம் எனக்குள் மிகப்பெரிய எனர்ஜியைக் கொடுக்கும்’’  என்கிறார் சிந்து.  ​

7.  சினிமா ரசிகை. இந்தி, ஆங்கிலம், தெலுங்குப் படங்கள் பார்ப்பார். ஹீரோயிசப் படங்கள், ஹாரர் படங்கள் சிந்துவுக்குப் பிடித்தவை. பிடித்த நடிகர்கள் மகேஷ் பாபு, பிரபாஸ். பாலிவுட்டில் ஹ்ரித்திக், ரன்பீர். சமீபத்தில் பார்த்த படம் அர்ஜுன் ரெட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிந்து 25

8. டிராவல் மிகவும் பிடிக்கும். பயணங்களின்போது படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும் பொழுதுபோக்கு.

9. “பிரபலமாக வேண்டும் என்ற குறுகுறுப்பு சின்ன வயதிலிருந்தே இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரியோ ஒலிம்பிற்குப் பிறகு வெளிநாடுகளிலும் ஆட்டோகிராப் வாங்கும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டதை, ஓர் ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்” என்கிறார் சிந்து.

10. விதவிதமாக உடைகள் அணிவது சிந்துவுக்கு மிகவும் பிடிக்கும். எந்த நாட்டுக்கு விளையாடச் சென்றாலும் ஷாப்பிங் சென்று உடைகளை அள்ளிக்கொண்டு வருவார். இந்தியாவில் இருந்தால் புதன் மாலை அல்லது ஞாயிறுகளில் இவரை ஹைதராபாத் மால்களில் பார்க்கலாம்.  

11. சிந்து உணவுப் பிரியையும்கூட. ஐஸ்க்ரீம், பாஸ்தா, பீட்சா, ஸ்வீட் என்று சான்ஸ் கிடைத்தால் புகுந்து விளையாடுவார். தினமும் சாப்பிட நினைக்கும் ஓர் உணவுவகை: ஹைதராபாத் பிரியாணி.

12. பாட்மின்டன் கோர்ட்டுக்கு அடுத்து சிந்துவுக்குப் பிடித்த இடம், இப்போது புதிதாகக் குடிபோன வீட்டில் உள்ள  அவரது அறை. அந்த அறையின் வண்ணங்கள், பொருள்கள் என்று பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் சிந்து.

13. செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். ஒரே காரணம்: ஃபேன்ஸி நம்பர் ரசிகை. அப்போது வைத்திருப்பதைவிட, ஃபேன்ஸியாக ஒரு நம்பர் கிடைத்தால் உடனே மாற்றிவிடுவார். எப்படியும் வருடத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டிருப்பார். ஆனால், இப்போது இரண்டு வருடங்களாக ஒரே நம்பர்தான். ``முன்புபோல் இப்போது சுதந்திரமாக இருக்க முடியவில்லை’’ என்கிறார் சிந்து.

14. ஒருநாள் குறைந்தது 6 மணிநேரத்திலிருந்து 10 மணிநேரம் வரை பயிற்சி மேற்கொள்பவர் சிந்து. ‘தொடர்ந்த பயிற்சிமூலம் மட்டுமே புதிய புதிய டெக்னிக்குகளைக் கற்றுக்கொள்ளவும், உடல் தகுதியை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்’ என்பது சிந்து சொல்லும் சீக்ரெட்.

15. கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தபடியாக தற்போது அதிக விளம்பரங்களில் நடிப்பவர் சிந்து. ``நான் இவ்வளவு சம்பாதிப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. இந்தப் பணத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டேயிருக்கிறேன்’’ என்கிறார் சிந்து.

16. 2015-ம் ஆண்டு ஜனவரி  மாதம், எழுந்து நடக்க முடியாத அளவுக்குக் காலில் காயம்பட்டு வீல்சேரில் இருந்தார் சிந்து. ஆனால், ஒலிம்பிக் பதக்கக் கனவில் இருந்து மனம் தளரவேயில்லை. பயிற்சிகளுக்கு பிரேக் விடாமல் வீல்சேரில் உட்கார்ந்தபடியே பயிற்சியைத் தொடர்ந்தார். மூன்று மாதங்கள் வரை இந்த வீல்சேர் பயிற்சி தொடர்ந்திருக்கிறது.

17. படிப்பிலும் கில்லி. செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் பி.காம் படித்தவர் தற்போது எம்.பி.ஏ படித்துமுடித்திருக்கிறார்.

18. பயோகிராபி எழுதும் எண்ணத்தில் இருக்கிறார்.  “பலருக்கும், குறிப்பாக விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதாலேயே எழுதப்போகிறேன்” என்கிறார் சிந்து.

19. சிந்துவுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். முக்கியமான போட்டிகளில் எல்லாம் மஞ்சள் நிறத்தில் பார்க்கலாம்.

சிந்து 25

20. பெரும்பாலும் சகவீரர்களோடு நட்போடே இருப்பது சிந்துவின் ஸ்பெஷாலிட்டி. ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் மோதிய ஸ்பெய்ன் வீராங்கனை கரோலினாவுடனும் கோர்ட்டுக்கு வெளியே கலகலவென்று பேசிக்கொண்டிருப்பார்.

21. பாட்மின்டன் வீரர்களில் சிந்துவின் நெருங்கிய தோழி,  சிக்கி ரெட்டி. இவரும் கோபிசந்திடம் பயின்றவர்தான்.

22. பெற்றோருக்கு இணையாக இவர் மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் நபர் கோச் கோபிசந்த். தன் ரோல் மாடலாகவும் கோபியைத்தான் குறிப்பிடுகிறார் சிந்து. ஆரம்பத்தில் அமைதியானவராக இருந்தவரை ஆக்ரோஷமாக மாற்றியவர் கோபிசந்த்.

23. அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்று விளையாட்டுக்கான உயரிய விருதுகள் பெற்றிருக்கிறார். ஆனாலும், ஒரு போட்டியில் ஜெயித்த பிறகு,  அந்தப் போட்டியில் குறிப்பிட்ட கணத்தில் சிந்து செயல்பட்டதைக் குறிப்பிட்டு கோச் கோபிசந்த் பாராட்டுவதுதான் எல்லாவற்றிலும் பெரிய விருது என்பார் சிந்து.

24. உங்களைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்றால் சிந்து சொல்வது: “களத்துக்கு வெளியே மிகவும் நட்பானவள்; களத்தினுள் மிகவும் ஆக்ரோஷமானவள்.”

25. “ஒரு விஷயத்தில் பயிற்சி எடுத்துவிட்டு, களத்தில் இறங்கினால் உங்கள் 100% திறமையைக் காட்டவேண்டும். 99%கூட அங்கே பேசப்படாது. நூறு சதவிகிதம் என்றால் நூறு சதவிகிதம்தான்” என்பது சிந்து சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்