Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
News
சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் பா.காளிமுத்து, ப.சரவணக்குமார்

‘நாளின் எல்லாக் காயங்களுக்கும்
களிம்பாக இருப்பது இசைதான்’


-முகநூலில் நண்பனின் அழகான பதிவுக்கு ஒரு லைக்!

சரிகமபதநி டைரி - 2017
சரிகமபதநி டைரி - 2017

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏ.கன்யாகுமரி குழுவினர்

‘எல்லோரும் கொண்டாடுவோம்... யுனெஸ்கோவின் பெயரைச் சொல்லி...’ என்று 88 வாத்திய இசைக் கலைஞர்களை அழைத்து வந்து ‘நாதலஹரி’ நிகழ்ச்சி நடத்தினார் வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமரி. அன்றைய மேடையில் வாய்ப்பாட்டுக்குத் தடா!

நாகஸ்வரம், தவில், சாக்ஸபோன், சித்ர வீணை, புல்லாங்குழல், வீணை, கீ-போர்டு, சிதார், மேண்டலின், ஷெனாய், வயலின் ஆகிய இசைக் கருவிகளுடன் மேடையேறிய கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிடப் பக்கம் காணாது. மிகக் குறுகிய கால அவகாசத்தில் இந்த மெகா கூட்டணியை அமைத்த கன்யாகுமரிக்குக் கடலளவு பாராட்டுகள்!

ஒவ்வொரு கருவியாளரும் ஒரு பாட்டு வாசித்துவிட்டு, அடுத்தவருக்கு மேடை கொடுத்து உதவினார்கள். டெக்னீஷியன்கள் மைக் ரெடி செய்யும் சின்ன இடைவேளையில் தொகுத்து வழங்கியவர் ‘பிளேடு’ போடுவதை ஒரு தவமாகச் செய்துகொண்டிருந்தார். ‘எல்லோரும் கைதட்டுங்க...’,  ‘இன்னும் ஜோரா கைதட்டுங்க...’, ‘எழுந்து நின்று கைதட்டுங்க...’ போன்று நிறைய உத்தரவுகள். நல்லவேளை, ஆடியன்ஸைக் குட்டிக்கரணமும் தோப்புக்கரணமும் போடச் சொல்லவில்லை.

முடிவாக, நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களும் மேடையில் கிடைத்த இண்டு இடுக்குகளிலெல்லாம் உட்கார்ந்து, ‘எந்தரோ மகானுபாவுலு’ வாசித்தது கண்கொள்ளாக் காட்சி.

இந்த நிகழ்ச்சியை யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைக் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன் மன வருத்தத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டார் கன்யாகுமரி.

‘`சபாக்கள் வாத்தியக் கருவிகளுக்குப் போதிய இடம் கொடுப்பதே இல்லை. வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பத்துப்பேருக்கு சான்ஸ் கொடுத்தால், இரண்டு மூன்று இசைக் கருவிகளுக்கே வாய்ப்பு தராங்க... நீங்கதான் (பார்வையாளர்கள்) வாத்திய இசைக் கலைஞர்களுக்கும் நிறைய சான்ஸ் தரும்படி சபாக்காரர்களிடம் சொல்லணும்...” என்றார்!

‘செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா?’ என்று கேட்காததுதான் குறை!

லஸ் கார்னர் அருகே ராகசுதா ஹால். இங்கே ‘பரம்பரா’ அமைப்பு நடத்திய ‘ராகசுதாரஸ’ தொடர் நிகழ்வுகளில் ஒரு நாள் மாலை ஜுகல்பந்தி. பரிமாறியவர்கள், ஸ்ரீராம் பரசுராம் (இந்துஸ்தானி வயலின்), அக்கரை சுப்புலட்சுமி (கர்னாடிக் வயலின்), ஆர்.சங்கர நாராயணன் (மிருதங்கம்), கார்த்திக் பட் (தபேலா) இட வலப் பக்கங்களில்.

குர்தாவின் மேல் அடர்த்தியான சிவப்பு நிறத்தில், கை வைக்காத, பட்டன் போடாத ஜாக்கெட் அணிந்து நார்த் இண்டியன் ஸ்டைலில் ஸ்ரீராம் பரசுராம். கர்நாடகப் பட்டுப்புடவையில் அக்கரை சுப்புலட்சுமி.
இலையில் பாயசம் வைப்பது மாதிரி, இருவரும் முதலில் பேகடா வர்ணத்தை வாசித்தனர். தொடர்ந்தது இரண்டு ஸ்டைலிலும் சவால் - ஜவாப்தான்! ஆடியன்ஸ் அத்தனை பேரும் பி.எஸ்.வீரப்பாக்களாக மாறி ‘சபாஷ், சரியான போட்டி’ என்று கைதட்டி மகிழ்ந்தார்கள்.

JOG (ஜோக் அல்ல!) ராகம் வாசித்தார் ஸ்ரீராம். வடக்கு வளர்ந்தது. துளியும் தேயாமல் தெற்கும் வளர்ந்தது, சுப்புலட்சுமியின் வாகதீஸ்வரியில்.

ஹம்ஸானந்தியை முடிந்துவிட்டு மெயினாக தோடி. இந்துஸ்தானியில் இதை ‘பில்ஹாரி தோடி’ என்று விளிக்கிறார்கள். இரு திசைகளிலிருந்தும் பறந்து வந்த தோடி காதுகளை வருடிவிட்டுச் சென்றது. அதுவும், சுப்புலட்சுமி கொடுத்த குழைவுகள் குளிர்காலத்தென்றல்!

தொடர்ந்தது தானம். ஹெலிகாப்டரிலிருந்து பொட்டலங்கள் போடுவது மாதிரி சங்கதிகளைத் தானமாக இருவரும் தூவிக்கொண்டே போக, அரங்கம் அவற்றைக் கைப்பையில் திணித்துக் கொண்டது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சரோட் - சிதார் - ஷெனாய் மாதிரியான கருவிகளுடன் வயலின் ஜோடி சேர்ந்து நடத்தும் ஜுகல்பந்திகளின் ருசி அலாதி ரகம். இரு வயலின்களில் அந்த ‘நார்த் சௌத்’ ருசி மிஸ்ஸிங்!

சரிகமபதநி டைரி - 2017

ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரின் ஏழாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக, ஓ.எஸ்.தியாகராஜன். அவர் சுருதி சேர்த்து முடிப்பதற்குள் சென்டர் பற்றி...

வங்கியில் பணிபுரிந்து, பின்னர் பங்கு சந்தையில் பாதம் பதித்த ராமகிருஷ்ணன், ஓர் இசை ரசிகரும்கூட. ஒருகட்டத்தில் இவரின் ரசிப்புத் திறமை, கணக்கு வழக்கு விவகாரத்திலிருந்து இவரை விடுவித்தது. இரண்டாயிரம் சதுரஅடி ஹால், 140 பேர் உட்காரக்கூடிய மினி கச்சேரி அரங்கமானது. ஏ.சி. வசதி, துல்லியமான ஒலி அமைப்பு உள்ளிட்ட நாலாவித சௌகரியங்களுடன் இலவசமாகப் பாட்டுக் கேட்டு ரசிக்கலாம். அநேகமாக தினமும் யாராவது ஒருவர் இங்கே பாடிக்கொண்டிருப்பார். கைகுலுக்கும் நெருக்கத்தில் ரசிகர்கள் உட்கார்ந்திருப்பார்கள். ‘ஆடியன்ஸ் பல்ஸ்’ கலைஞர்களுக்கு டப்டப் என்று கேட்கும்.

இரண்டு, மூன்று வருடங்களாகவே ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு ஓ.எஸ்.தியாகராஜனின் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. சீக்கிரம் பட்டம் பிராப்திரஸ்து!

கல்யாணி வர்ணத்தில் வார்ம் - அப் செய்து கொண்டு தொடர்ந்த கச்சேரியில் ஓ.எஸ்.டி. பாடிய ஊர்மிகா, உயர்வு ரகம். சுருதி சுத்தமான ஆலாபனை. அநாவசிய உருட்டல், மிரட்டல்கள் இல்லாத, காதுகளை இம்சிக்காத சங்கதிகள். சிம்மேந்திரமத்யமத்தின் ஜன்யமான ஊர்மிகாவில் மூன்று காலங்களிலும் பயணித்து, பல்லவி சேஷய்யரின் பாடலை மறைந்த டி.எம்.தியாக ராஜன் இணைத்த சிட்ட ஸ்வரங்களுடன் பாடி விட்டு, தோடியை கையில், ஸாரி குரலில் எடுத்தார். டைம் மிஷினில் பின்னோக்கிப் பயணித்து குதூகலித்தோம். அத்தனை சங்கதிகளும் பொக்கிஷக் குவியல்கள்.

‘உறக்கத்தை ஒழித்து, தம்புராவை அழகுடன் கையில் ஏந்தி, நிர்மலமான மனத்துடனும் ஸ்வரத்துடனும் நியமம் தவறாமல் உன்னைப் பஜனை செய்யும் பக்தர்களைப் பாலித்தருளும் தயாசீலன்’ என்று ராமனை அந்தத் தியாகராஜர் வர்ணிக்கும் ‘கத்தநுவாரிகி’ கீர்த்தனையை இந்தத் தியாகராஜன் பாடக் கேட்டு ரசித்தோம்.

நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), வி. சுரேஷ் (கடம்) இருவரும் தங்கள் இதமான வாசிப்பால் ஓ.எஸ்.டி-க்கு மசாஜ் செய்தது நமக்கும் சுகம்!

சரிகமபதநி டைரி - 2017

ராயப்பேட்டை, பாலாஜி நகரில், அனுமந்தா தெருவில் பழைமையான பங்களா, 1940-ல் ராவ்சாஹிப் கோபால் ராவ் கட்டியது. இங்கே திரிவிளக்கு வெளிச்சத்தில் சேம்பர் மியூசிக் நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஏற்பாடு செய்துவந்தார்கள். ARTery ராமநாதன் மற்றும் சுக்ருதம் அறக்கட்டளை அறங்காவலர், பாடகி எஸ்.சௌம்யா.

இப்போது கட்டடம் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது, அதன் கலை அழகு கொஞ்சமும் கெடாமல் மிதமான மின்சார வெளிச்சம் மட்டும் புது இணைப்பு.

புதிய சூழலில் முதல் கச்சேரி, ‘லிவிங் லெஜன்ட்’ டி.என்.கிருஷ்ணனின் வயலின் ஸோலோ. கடந்த அக்டோபர் 6-ம் தேதி அகவை 89 பூர்த்தி செய்த பிதாமகர். நாற்காலியில் அமர்ந்து வாசிக்கிறார் என்பதைத் தவிர, முதுமையின் தளர்ச்சி சிறிதும் வெளிப்படாத சரீரம். இவரது ‘வில்’லிலிருந்து வெளிப்படும் tonal beauty இன்னமும் மெருகு குலையாமல் அப்படியே இருப்பது இவருக்கே உரிய மேஜிக்.

வரவேற்பு அறையிலும், வராந்தாவிலுமாக மொத்தம் நாற்பது, ஐம்பது கிருஷ்ண விசிறிகள். மைக்லெஸ் கச்சேரி. எனவே, ஒலிப்பெருக்கியுடன் மல்லுக்கு நிற்கும் அவசியமும் கிடையாது. கிருஷ்ணனின் வயலின் எழுப்பும் ஓசை, எந்தப் புறக்கலப்பும் இல்லாமல், ஒரிஜினல் நாதமாகக் காதுகளை நிரப்பி, மனதுள் ஊடுருவுகிறது. இந்நாளில் கேட்கக் கிடைக்காத அபூர்வம். திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கமும், வைக்கம் கோபாலகிருஷ்ணன் கடமும் அனுசரணையின் உச்சம்.

சரிகமபதநி டைரி - 2017

வாதாபி கணபதியைத் துதித்துவிட்டு, கமாஸ். அதையடுத்து ஸ்ரீரஞ்சனியில் ‘மாருபல்க’ கீர்த்தனை. பின்னர், யதுகுல காம்போதியைக் குழைத்தார் டி.என்.கிருஷ்ணன். காம்போதியையும், ஹரிகாம்போதியையும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அனுமதிக்காத அசத்தல் ஆலாபனை.

போர்வெல் குழி மாதிரியான ராகம் தோடி. தோண்டத் தோண்ட சங்கதிகள் குபீர் குபீரென்று தெளித்துவிழும். எட்டு நிமிட வாசிப்பில் அதன் முழுச்சாரத்தையும் பிழிந்து  கொடுத்தார் இந்த சீனியர் வயலினிஸ்ட். தானத்தில் சஹானா, வராளி, பிலஹரி, காபி, பெஹாக் என்று பல ராக தானம். அத்தனையும் வின்டேஜ் சங்கீதம்.

இந்த வயதிலும் வீட்டில் தினமும் சாதகம் செய்வது உண்டா டி.என்.கிருஷ்ணன்?

“அநேகமாக எல்லா நாளும் வாசிப்பேன்... வயலினைக் கையில் எடுத்துட்டா, சாப்பாடு கூட தாமதமாகிவிடும்... என்னிக்காவது வாசிக்கலேன்னா, ‘இன்னிக்கு வாசிக்காம விட்டுட்டோமே’ன்னு மனசு வருத்தப்படும்... வயலினுக்கும் உயிர் உண்டே! நான் ஒருநாள் தொடாம இருந்துட்டா பாவம் அதுக்கும் ‘இன்னிக்கு அவர் வாசிக்கலையே’னு வேதனையா இருக்கும் இல்லையா?”

- என்று கேட்டுச் சிரிக்கிறார், எண்பது வருடங்களுக்கும் மேலாக ‘வில்’லும் வயலினுமாக இணைந்து இசைத்து வாழ்ந்துவரும் இந்த சாதனையாளர்.

பின்குறிப்பு: இசையைக் கேட்டால் மயக்கம் வரும் என்பது முழு உண்மையல்ல. சபாக்களின் சீஸன் டிக்கெட் விலையைக் கேட்டாலே மயக்கம் வந்துவிடும். உதாரணமாக, மியூசிக் அகாடமியிலும், தியாக பிரம்ம கான சபாவிலும் அதிகபட்ச சீஸன் டிக்கெட் விலை ஜி.எஸ்.டி 18% உள்பட 16,000 ரூபாய்!

- டைரி புரளும்....