Published:Updated:

“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”

“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”

தமிழ்ப் பிரபா, படங்கள்: எஸ்.தேவராஜன்

“நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்னு எத்தனையோ முறை நியூஸ்ல படிச்சு இருப்பீங்களே... எப்பவாவது எங்களுக்கு என்ன பிரச்னை... என்ன ஏதுன்னு யாராவது வந்து கேட்டுருக்கீங்களா” என்று முகத்தில் அறைந்ததுபோல் கேட்டவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஷிஃப்ட் முடித்துவிட்டுக் கரி படிந்த மூக்குடன் டீக்கடையில் இளைப்பாறிக் கொண்டிருந்தவரிடம் என்னை ஒரு பத்திரிகையாளன் என்று அறிமுகப்படுத்திகொண்டவுடன், அவர் சொன்னதுதான் அது. முப்பத்தாறு ஆண்டுகாலம் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெறப்போகும் முதிர்ந்த மனிதரின் மனக்குமுறல்!

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தன்மை இருக்கிறதென்றாலும், நாம் செய்ய முடியாத, செய்ய மறுக்கிற வேலைகளைப் பிழைப்பின் நிமித்தம் செய்பவர்களுக்கு அதற்கான மதிப்பை நாம் தருகிறோமா, அங்கீகாரம் கொடுக்கிறோமா என்கிற கேள்வியின் தேடலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் நெய்வேலி அனல்மின் நிலையத் தொழிலாளர்களைச் சந்தித்தேன். இயல்பாகவே வெயில் அதிகம் இருக்கும் பகுதி நெய்வேலி. மணிக்கணக்கில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்காக பூமியிலிருந்து நானூறு அடிக்கும் கீழ் அனல் தகிக்கும் சுரங்கத்தில் வேலைசெய்துவரும் அவர்களின் துயரங்களை `அய்யோ பாவம்...’ என ‘உச்’ கொட்டிச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”

“நீங்கசெய்ற அதே வேலையைத்தான் உங்க பக்கத்துல இருக்கிறவரும் செய்றாருனு வெச்சுக்குங்க தம்பி. உங்களுக்குப் பத்தாயிரம் அவருக்கு எழுபதாயிரம்னு சம்பளம் இருந்தா உங்களால அங்க நிம்மதியா வேலைசெய்ய முடியுமா? பல வருஷங்களா அப்டித்தான் செஞ்சிட்டு வர்றோம். ஏன்னா நாங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள். அவங்க நிரந்தரத் தொழிலாளர்கள். அவங்களுக்கு என்ன விலைவாசி விக்குதோ அதுதானே எங்களுக்கும். அவங்களுக்கு என்ன வாழ்க்கைத் தேவைகள் இருக்கோ அதேதானே எங்களுக்கும். அப்புறம் நாங்க எந்த விதத்துல வேறுபட்டவங்க? நானூத்தி எண்பது நாள்கள் வேலைசெஞ்சாலே பணி நிரந்தரம் செய்யணும்னு சட்டம் சொல்லுதுங்க. இன்னைக்குவரை அந்தச் சட்டத்தை நெய்வேலி அதிகாரிகள் அமல்படுத்தவும் இல்ல. மாநில அரசு அதைக் கண்டுக்கவும் இல்ல. இன்னைக்கு நேத்து இல்லங்க. பதினேழு வருஷமா போராடுறாம்” எனப் பேசிக் கொண்டிருந்த வெங்கடேசன் என்பவரை இடைமறித்து “இவரு பேசுறதுல ஏதாவது தப்பு இருக்காங்கஎங்களுக்காக அதிகாரிகள்கிட்ட போய் பேசுனார்னு இந்த மனுஷனை வேலையை விட்டே தூக்கிட்டானுங்க” என்றார் அவர் பக்கத்தில் நின்றிருந்தவர்.

“உத்தராயன் என் தம்பி மாதிரிங்க. சின்னப் பையன். எப்பவும் என்கூடவேதான் இருப்பான். ஒரே யூனிட்லதான் வேலை செஞ்சோம். கன்வேயர் பெல்ட்னு ஒண்ணு இருக்குங்க. அது சுத்துறதுக்கு ஒரு ரோலர் இருக்கும். அந்த ரோலர்க்குக் கீழ ஒருமுறை கரி லாக் ஆகிப்போச்சு. அங்கிருந்த அதிகாரி `வெங்கடேசா அதை உள்ள இறங்கிச் சுத்தம் செய்’னு சொன்னதும், ‘அண்ணே நீ இரு. உனக்குத்தான் அப்பப்போ மூச்சு வாங்குதே’னு என்னை ஓரந்தள்ளி, ப்ரேக் ஆஃப் பண்ணிட்டுத் தரையில படுத்தபடி ஊர்ந்துகிட்டே உள்ளபோய் கரியைச் சுத்தம் பண்ணிட்டு இருக்கான். அது தெரியாம வேற ஒரு ஸ்பாட்ல அதே கன்வேயர் லேன்ல வேலை பாத்தவன் பெல்ட்டை ஆன் பண்ணி விட்டுட்டான். உள்ள போனவன் சுழண்டு அந்தப் பக்கம் கொழம்பாதாங்க வெளிய வந்தான். இப்படி இங்கே பல விபத்துகள் நடந்துகிட்டேயிருக்குங்க. என்னானு கேட்கத்தான் மனுஷங்க இல்லை’’ என்ற வெங்கடேசன், கடையினுள் அழைத்துச் சென்று மற்ற தொழிலாளிகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”

சுரங்கத்தில் குடிநீர் வசதி இல்லை, அவசரத்திற்கு மலம்கழிக்க வேண்டுமென்றாலும் கூட வெட்டவெளியைத் தேடி ஓடுகிற அவலம், நிலக்கரியில இருந்து வெளியாகக்கூடிய தூசு உண்டாக்கக்கூடிய சுவாசப் பிரச்னை, வெடி மருந்து வைக்கும் வேலையைச் செய்பவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது என அவரவர் தங்களின் பிரச்னைகளை ஒரு மீட்பரிடம் முறையிடுவதுபோலச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். மழைக்காலத்தில் சொதசொதவென்று இருக்கும் நிலத்தில் முழங்கால்வரை புதைந்தபடி வேலைசெய்யும் கொடுமையைக் கையில் டீ வைத்தபடியே ஒருவர் செய்து காண்பிக்கையில் மற்றவர் அனைவரும் சிரிக்கிறார்கள். ``உங்களுடைய பெயரைச் சொல்லுங்க, புகைப்படம் எடுத்துக்கலாமா’’ எனக் கேட்டபோது சிரிப்பு அடங்கி ஒருவரையொருவர் முகம் பார்த்துப் பிறகு தீர்க்கமாக தங்கள் அடையாளங்கள் வேண்டாமென மறுத்துவிட்டார்கள்.

காரணம், தற்போதைய சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையும் பறிபோகக்கூடிய சூழல் அங்கே நிலவுகிறது என்கிறார்கள். அவுட் சோர்சிங் என்கிற பெயரில் டெண்டர் விட்டு வட மாநிலங்களில் இருந்து மாதம் 2500 ரூபாய் சம்பளம்,  மூன்று வேளை சாப்பாடுக்குத் தினமும் தமிழக ரயில்வே நிலையங்களில் இறங்கி நெய்வேலி நோக்கி அதிகம்பேர் வர ஆரம்பித்திருக்கிறார்கள். உள்ளூர் ஒப்பந்தத் தொழிலாளிகளின் வேலை பறிபோவது என்பதுடன் அவர்கள் கவலைப்படுவது வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றித்தான். “எங்களுக்கு ஏதாவது ஒண்ணுனாலும் ஊர்க்காரங்க கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அவங்கள நெனச்சாதான் பாவமா இருக்கு. அவங்களுக்காக யார் பேச வருவா? என்னவோ தம்பி, எங்களையும் ஒரு ஆளா மதிச்சு வந்து பேசுனீங்களே அதுவே சந்தோஷம்” என்று வழியனுப்பி வைத்தார்கள்.

இது வெறும் நெய்வேலி சுரங்க மற்றும் அனல்மின் நிலையத் தொழிலாளர்களின் நிலைதான். இந்த நெய்வேலி அனல்மின் நிலையங்களைச் சுற்றி இருக்கும் கிராம மக்களின் வாழ்க்கை அதைவிடத் துயரமானதாக இருக்கிறது.

வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுச் சிதிலமடைந்துபோன கிராமங்களாகவே அவை காட்சியளித்தன. பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் இல்லை. திண்ணையில் உட்கார்ந்திருந்த ஊர்க்காரரிடம் பேசினேன். “மந்தராக் குப்பத்தின் அருகே எய்ட்டின் ப்ளாக் முழுக்க நூறு குடும்பம் இருக்கும். நாங்க வெளியாளுக இல்லைங்க. சுரங்கத்துலதான் வேலைசெய்றோம். அது மட்டுமில்லாம ஆபிசர்ஸ்  வீட்ல வேலைசெய்றோம். இங்கயே இருந்தா டென்ட் அடிச்சுடுவோம்னு எங்களுக்கே கரன்ட் தர மாட்றாங்க. இது ஊரோ, பஞ்சாயத்து டிவிஷனையோ சேர்ந்தது இல்லைங்கிறதுக்காக எங்களை யாரும் கண்டுக்க மாட்றாங்க.

நெய்வேலியச் சுத்தி இருக்கிற கிராமங்களோட முக்கியப் பிரச்னையே கழிவுநீர்தான். மழைக்காலத்துல சுரங்கத்துல தேங்கி நிக்கிற கழிவு நீரை உடனடியாக வெளியேத்தணும்னு எந்தப் பக்கமெல்லாம் வாய்க்கா இருக்கோ அங்கெல்லாம் திறந்து விட்டுடுறாங்க. அது எல்லாமே வயல்ல போயி தேங்கி நின்னுடுது. பயிரெல்லாம் நாசமகிடுது.

என்.எல்.சி நெனச்சா அவங்களுக்கு வர லாபத்துக்கு மொத்த கிராமத்தையே தத்தெடுக்கலாம் ஆனா, எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை அவங்க நடத்துறாங்க தெரியுமா!” என்று ஆவேசமும் இயலாமையும் கலந்து பொருமினார்.

தண்ணீர் வசதி இல்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்துபோய் கையில் ஒரு குடம், தலையில் ஒரு குடம் என்று மூச்சு வாங்க நடந்து வந்துகொண்டிருந்த சிறுமியிடம் “பாப்பா, இங்க எவ்ளோ நாளா கரன்ட் இல்லமா” என்று கேட்டால் “நா பொறந்ததுல இருந்து எங்க வீட்ல கரன்ட்டே இல்லங்ண்ணா” என்று சிரித்துவிட்டுத் தள்ளாடித் தள்ளாடி நடந்து போனாள். அங்கிருந்த இன்னொரு பெண் “நாங்க எங்க பிள்ளைகுட்டிகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறது அதுகபோயி காத்தாட சத்த இருந்துட்டு வரும்னுதாங்க” என்றார். மாலை வந்து இருள் கவிந்ததும் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்ததுபோலவே இருந்தது அந்தச்சூழல்.

“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?”

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கெல்லாம் மின்சாரம் வழங்கிவரும் நெய்வேலி தன் மடியில் வசிக்கும் பிள்ளைகளை நடத்துகிறவிதம் கொடூரமாக இருக்கிறது. வளர்ச்சி என்பது நம் நாட்டிற்கு அவசியமே என்றாலும் நாட்டு மக்களின் அழுகுரல்களால் அதைக் கட்டி எழுப்பக் கூடாது என்கிற அறம் ஆட்சி செய்பவர்களுக்கு எப்போது புரியுமோ?!

நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்தரப்பைச் சார்ந்த அதிகாரியிடம் பேசினோம். ``என் பெயரை எழுதக் கூடாது’’ என்கிற நிபந்தனையோடு பேசினார்.

``எல்லா இடத்திலும் அவுட்சோர்சிங் என்கிற கான்செப்ட்தான் சார் இப்போ போயிட்டு இருக்கு. பப்ளிக் செக்டார் மட்டுமில்லாம இதை ப்ராஃபிட் சென்டராவும் வெச்சுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கு. இருபது வருஷத்துக்கு முன்னால நாங்க வெச்சதுதான் சட்டம். நாங்க கொடுக்கிற பவர்தான் ரேட்டுன்னு இருந்தது. இப்போ பவர் ரேட்லாம் இறங்கிப் போனதால போட்டி அதிகமாயிடுச்சு. அதனால, செலவைக் குறைக்கணும்னா அவுட்சோர்ஸ் பண்ணித்தான் ஆகணும். `Contingent Could not Claim for Permanent’-ங்கிற கண்டிஷன்ல சொல்லித்தான் வேலை கொடுக்கிறோம். இருந்தும் சீனியாரிட்டி அடிப்படையில் பர்மனென்ட் பண்ணிட்டுத்தான் இருக்கோம். கழிவறையைப் பத்திச் சொல்லணும்னா பெரிய மைன் நகர்கிற இடத்திலெல்லாம் கழிப்பறை கட்ட முடியாது. வேலைசெய்ற இடத்துல கழிவறை இல்லன்னாலும் இவங்களை இறக்கிவிடுற இடத்துல இருக்கு. அதுதவிர நிரந்தரமாக எங்களுக்கு யார்ட்ஸ், ஷெட்ஸ் இருக்க இடத்துல கழிவறை இருக்கத்தான் செய்யுது. கரன்ட் அவங்களுக்கு இல்லாம இருக்கிறது காரணம் தமிழ்நாடு பவர் சப்ளை நிறுவனம். அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?’’ என்று ஓர் அதிகாரியாகவே பேசிமுடித்தார்.