பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

மருதன்

ஹிட்லருக்குப் படம் பார்க்கப் பிடிக்கும். வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக இல்லாமல், ஓர் அரசியல்

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

கருவியாகவும் திரைப்படத்தைப் பயன்படுத்தமுடியும் என்று அவர் நம்பினார். ஏப்ரல் 1941-ல் ஜெர்மனியில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தைக் காண ஜெர்மானியர்கள் கும்பல் கும்பலாக அணிவகுத்துச் சென்று வரிசையில் நின்றனர். ஒருவர் பாக்கியில்லாமல் ஜெர்மானியர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஹிட்லரின் விருப்பமும். அதனால்தான் அவருடைய நாஜிக்கட்சி இந்தத் திரையிடலுக்கு மிகுந்த ஆதரவை அளித்தது. தேசபக்திமிக்க குடிமகன்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது என்று பிரசாரமும் செய்தது.

முழுப்படமும் அல்ல, அதன் இறுதிக்காட்சியே முக்கியமானது. அதில் சிறைக் கைதிகள் பலர்

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

காட்டப்படுவார்கள். இந்தக் கைதிகள்  பரிதாபகரமாக நலிந்தும் மெலிந்தும் இருப்பதைப் பார்க்கலாம். எதிர்காலம் குறித்த அச்சமும் தவிப்பும் அவர்களுடைய வாடி வதங்கிய முகங்களில் அப்பட்டமாகத் தெரிகின்றன. முதலில் ஒரு கைதியைப் பிடித்து இழுத்துவருகிறார்கள். கைது செய்யப்படுவதற்குமுன்பு அவன் ஒரு போர்வீரனாக இருந்தவன். அவனை இழுத்துவந்து தூக்கில் போடுகிறார்கள் அதிகாரிகள். அடுத்த காட்சியில் அவன் மனைவி சுட்டுக்கொல்லப்படுகிறார். இவர்களைத் தொடர்ந்து மற்ற கைதிகளும் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள்.

யார் இந்தக் கைதிகள்? எதற்காக  அவர்களுக்கு இந்தக் கொடூரமான தண்டனை? அவர்களுக்குத் தண்டனை விதிப்பவர்கள் யார்? இவை அனைத்தும் குழப்பமின்றித் திரைக்கதையில் விவரிக்கப் பட்டுள்ளன. இறுதிக் காட்சியில் காட்டப்படும் கைதிகள், ஆப்பிரிக் காவிலுள்ள போயர் பழங்குடிகள். இவர்களைச் சிறையில் அடைத்துத் தூக்கிலிட்டும் சுட்டுக் கொன்றும் தண்டிப்பவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். படத்தின் கதாநாயகர்கள் அவர்கள்தாம். பின்தங்கிய ஆப்பிரிக்காவை நல்வழிப்படுத்தி முன்னேற்றுவதற்காக அவர்கள் இத்தகைய தண்டனைகளை விதிக்கிறார்கள். பிரிட்டன் காலனிய அரசின் உன்னதமான நோக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் எதிர்த்தவர்கள்தாம் இந்தக் கைதிகள். எல்லாம் சரி, இந்தப் படத்தை ஹிட்லர் ஜெர்மனியில் திரையிட வேண்டிய அவசியம் என்ன? ஜெர்மானியக் குடிமகன்கள் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவர் விரும்பியது ஏன்?

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

ஏனென்றால், இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள் அனைத்தும் நடைபெறுவது வதைமுகாமில். ஹிட்லர் இதன்மூலம் தெரியப்படுத்த விரும்பிய செய்தி அழுத்தமானது. ஜெர்மனியிலும் இதே போன்ற வதைமுகாம்கள்தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஐயோ, நம் நாட்டில் இப்படிப்பட்ட ஓர் கொடூரமான அமைப்பு இருக்கிறதா என்று நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நாம்  கைதிகளை வதைக்கிறோமே, கொல்கிறோமே என்று அவமானம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. Ohm Kruger என்னும் திரைப்படத்தைப் பாருங்கள். அதிலும் வதைமுகாம் வருகிறது. நாம் உருவாக்கியதைப் போன்ற அதே வதைமுகாம். அதே போன்ற கைதிகள். அதே போன்ற தண்டனைகள். அங்கே கைதிகளாக இருந்தவர்கள் போயர்கள். நாம் கைது செய்து அடைத்து வைத்திருப்பது யூதர்களை. அதுதான் வேறுபாடு.

பிரிட்டிஷ் காலனிய அரசு பலமிக்கதாக ஆக ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்தவேண்டியிருந்தது. போயர்களை அழிக்கவேண்டி யிருந்தது. அதேபோல் ஜெர்மனி ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக மாறவேண்டுமானால் நாமும் பிற நாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும். நாமும் பெருமளவில் எதிரிகளை அழிக்கவேண்டும். இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல இதுவேதான் இயற்கை விதியும்கூட. யூதர்கள் பரவுவது நம் சுத்தமான ஆரிய இனத்துக்குக் கேடானது. நோய்களைப் பரப்பும் கொசுக்களை நாம் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்? பாவம் பறந்து போகட்டும் என்றா விட்டுவைப்போம்?

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

Ohm Kruger என்னும் இந்த ஜெர்மானியப் படத்தைத் திரையிட்டு ஜெர்மானியர்களை அதிக எண்ணிக்கையில் பார்க்க வைத்ததன்மூலம் ஜெர்மானியர்களின் கலங்கிய மனசாட்சியை வருடிக் கொடுக்க விரும்பினார் ஹிட்லர். வதைமுகாம் என்பது என் கண்டுபிடிப்பு அல்ல, உலகுக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த வெள்ளைக்காரர்கள்தான் அதையும் அறிமுகப்படுத்தினார்கள் என்று ஜெர்மானியர்களுக்கு மட்டுமல்ல உலகுக்கும் அவர் தெளிவுபடுத்த விரும்பினார். இறுதியாக,  யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்லர், அவர்கள் ஜெர்மானியர்களின் எதிரிகள் என்று அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்ய விரும்பினார். கதாநாயகர்களாக வலம் வரும் நல்ல பிரிட்டிஷ் அதிகாரிகள் கெட்டவர்களைச் சுட்டுக்கொன்றபோது கை தட்டி மகிழ்ந்தீர்கள் அல்லவா, அப்படியே யூதர்களை நாஜிகள் சுட்டுக் கொல்லும்போதும் மகிழுங்கள்!

கவனிக்கவும், பிரிட்டனைக் குற்றம்சாட்டுவதல்ல ஹிட்லரின் நோக்கம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கவே அவர் பிரிட்டனைத் துணைக்கிழுத்தார். ஒருமுறை, இருமுறை  அல்ல, தொடர்ச்சியாக ஹிட்லர் பிரிட்டனையும் போயர் வதைமுகாமையும் ஜெர்மானியர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார். இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது இந்தப் பிரசாரம் மேலும் தீவிரமடைந்தது. வதைமுகாம் என்பது அயல்நாடுகளில் காலம் காலமாக இருந்துவரும், மதிக்கத்தக்க ஒரு நிறுவனம் என்றார் ஹிட்லருடன் பணிபுரிந்த மற்றொரு உயர் அதிகாரி.

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

யூதர்களுக்கு எதிரான பெரும்போரைத் தொடங்குவதற்குமுன்பு ஹிட்லர் மேற்கொண்ட முதல் முக்கியமான நடவடிக்கை அவர்களுடைய குடியுரிமையைப் பறித்ததுதான். சட்டத்தின் உதவியைக் கொண்டு, ஆட்சி நிர்வாகத்தைப் பயன்படுத்தி அவர் இதனை அதிகாரபூர்வமாகச் செய்துமுடித்தார். சுத்த ரத்தத்தை உடலில் தாங்கி நிற்கும் ஆரியர்களான ஜெர்மானியர்கள் மட்டுமே நாட்டின் அதிகாரபூர்வமான குடிமக்களாக இருப்பார்கள். யூதர்கள் வெளியேற்றப்படவேண்டிய அந்நிய சக்திகள் அல்லது அழித்தொழிக்கவேண்டிய கிருமிகள். வதைமுகாமை ஹிட்லர்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படியே யூத வெறுப்பையும் அவர்தான் முதலில் தூண்டிவிட்டார் என்று சொல்லமுடியாது. பல நூற்றாண்டுக்கால வெறுப்பு அது. ஹிட்லர் செய்ததெல்லாம் இந்த வெறுப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக மேலும் வளர்த்தெடுத்து, கொடூரமானதோர் இனவொழிப்புக்கு இட்டுச் சென்றது மட்டும்தான்.

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

எந்த அளவுக்குத் தீவிரமான யூத வெறுப்பை ஹிட்லரும் அவருடைய அரசும் கொண்டிருந்தது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை வரலாறு சேமித்து வைத்திருக்கிறது. யூதர்களை அணு அணுவாகச் சிதைத்து முடித்த பிறகு எஞ்சியிருக்கும் உடலைத்தான் அவர்கள் இறுதியில் கொன்றார்கள். போலந்தில் உள்ள மாஜ்டெனெக் என்னும் முகாமில் ஒரு குளியலறை இருந்தது. அதைப் பயன்படுத்திய ஒரு கைதியின் குறிப்பு இது. ‘கைதிகள் எல்லோரும் அந்த அறையில்தான் குளிப்போம். மிகக் குறைவான குழாய்கள்தான் இருக்கும். நாங்கள் 4,500 பேர் இருந்தோம். அனைவரும் குளித்தாகவேண்டும். சோப் இருக்காது. துடைத்துக்கொள்ள டவல் கிடையாது.  ஒரு கைக்குட்டைகூட இருக்காது. ஆனாலும் குளித்தோம்.’

கழிப்பறை என்பது தோண்டப்பட்ட குழிகள்தாம். முழுக்க மலம் நிரம்பி வழியத் தொடங்கியபிறகும் மேலும் சில நூறு பேர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சுத்தப்படுத்திக்கொள்ள அழுக்கடைந்த சாக்கடை நீரே இருக்கும். வேலையின் ஒரு பகுதியாக மலக்குழிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளைக் கைதிகளே செய்தாகவேண்டும். இரண்டு பெரிய தகரப்பெட்டிகளில் கழிவுகளை வழிய வழிய நிரப்பிக்கொண்டபிறகு தோளில் சுமந்து நடக்கவேண்டும். சில கிலோ மீட்டர் இப்படி நடக்கவேண்டும். கவனமாக இருப்பது சுமப்பவருக்கு நல்லது; இல்லாவிட்டால் தகரப்பெட்டிகளில் இருப்பது உங்கள் கால்களிலும் தொடைகளிலும் சிந்தி வழியும்.

சுகாதாரமற்ற சூழல் பலவிதமான வியாதிகளை உற்பத்தி செய்தது. தொற்று நோய் மிக எளிதில் உடல் விட்டு உடல் தாவிப் படர்ந்தது. உடல் வியாதி சிலருக்கு மன வியாதியாகவும் மாறியது. பெர்கென் பெல்சன் முகாமைச் சேர்ந்த ஒரு யூதர் சொல்கிறார். ‘எங்கள் முகாமில் வியாதிகள் மிக வேகமாகப் பரவின. டைபாய்டு காய்ச்சல் பலருக்கும் வந்தது. சிலர் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினர். திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருந்தனர். பசியாலும் வியாதியாலும் நாங்கள் சாகவேண்டும் என்பதுதான் நாஜிக்களின் விருப்பமும்.’

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

அதிகபட்சக் காய்ச்சல் இருந்தாலும் கைதிகள் வேலை செய்தே தீரவேண்டும். ஒரு கூடுதல் கம்பளிகூடக் கிடைக்காது. ஒரு ஜோடி மரக்காலணி இருந்திருந்தால் குளிரிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கலாம். கொடுக்க மாட்டார்கள். வயிற்றுப்போக்கைத் தடுத்து நிறுத்த சில எளிய மாத்திரைகள் போதுமானதாக இருந்திருக்கும். அளிக்கமாட்டார்கள். அது வளர்ந்து வளர்ந்து அவரைக் கொல்லும்வரை காத்திருப்பார்கள். மலச்சிக்கல், பல் வலி, தலைவலி, உடல் வலி எதற்கும் சிகிச்சை கிடையாது. வலியிலும் காய்ச்சலிலும் செயலிழந்து புத்தி பேதலித்து தனக்குள் அரற்றிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டாலும்   சீந்த  ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

கிரேக்கத்திலிருந்து வந்திருந்த கைதிகள் என்று சிலரைக் கிடத்தி வைத்திருப்பார்கள். அவர்களுடைய உடல் பாதி எரிந்திருக்கும். சிலருடைய உடல்களில் பெரிய பெரிய ஓட்டைகள் போடப்பட்டிருக்கும் அல்லது ஆழமான தீக்காயங்கள் காணப்படும். 27 தினங்கள் தொடர்ச்சியாக உணவு இல்லாததால் இறந்த ஒரு யூதரின் சடலம் இருக்கும். முழுவதுமாகக் கிழிக்கப்பட்ட உடல்களையும் கண்கள் பிடுங்கப்பட்ட உடல்களையும் காண்பது இயல்பானது. யூதர்களை உயிருடன் படுக்கவைத்து விருப்பப்படி உடலைக் கிழித்தும் குதறியும்  போட்ட மருத்துவர்கள் பலர் இருந்தனர்.

வார்த்தைகளில் விவரிக்கமுடியாத பல கொடுமைகளை யூதர்கள் சந்தித்துக் கொண்டிருந்தபோது பெரும்பான்மை ஜெர்மானியர்கள் என்ன செய்துகொண்டி ருந்தார்கள் தெரியுமா? வாய்மூடி அமைதியாக இருந்தார்கள். இந்த அமைதிக்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். முதலாவது, பொருளாதாரக் காரணம். யூதர்களை அகற்றுவதன்மூலம்  சமூகத்தில் அவர்கள் இதுவரை வகித்துவந்த பாத்திரத்தை இனி நாம் வகிக்கலாம். அவர்களுடைய தொழில்களை நாம் நடத்தலாம். அவர்களுடைய செல்வத்தை, அவர்களுடைய சேமிப்புகளை, அவர்களுடைய வாய்ப்புகளை இனி நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். யூதர்களை அகற்றுவது தமக்கு லாபகரமானதாக இருக்கும் என்று ஜெர்மானியர்கள் நினைத்தனர்.

நான் அகதி! - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்

இரண்டாவது காரணம், வெறுப்பு அரசியல். யூதர்களை உள்ளபடியே வெறுத்த ஜெர்மானியர்கள் பலர் இருந்தனர். யூதர்களைச் சமூகத்திலிருந்து அகற்றமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உள்ளூரக் கனவு கண்டுகொண்டிருந்தவர்கள் இவர்கள். யூத வெறுப்பையே தன்னுடைய அரசியலாக அறிவித்துக்கொண்ட ஹிட்லரின் அதிரடி நுழைவு இவர்களை உற்சாகப்படுத்தியது. நாஜிக்கள் யூதர்களை வளைத்துப் பிடித்ததும், குடியுரிமையைப் பறித்ததும், வதைமுகாமில் அடைத்து வைத்துக்கொன்றதும் இவர்கள் மனசாட்சியைச் சிறிதும் அசைக்கவில்லை. உண்மையில் அவர்கள் இத்தனை காலமாகச் செய்ய நினைத்திருந்ததைத்தானே ஹிட்லர் சாதித்துக் காட்டியிருக்கிறார்?

மூன்றாவது பிரிவினரின் மனசாட்சி உயிர்ப்புடன் இருந்தது. ஆயிரம் சொன்னாலும் யூதர்களைக் கொல்வது ஏற்கத்தக்கதல்ல என்றே அவர்கள் நினைத்தனர். ஹிட்லரின் இனவெறி அரசியலோடு அவர்களால் ஒன்றமுடியவில்லை. யூதர்கள் ஒழிவது நமக்கு லாபகரமானதுதானே என்று மற்றவர்களைப் போல் அவ்வளவு எளிதாக அவர்களால் வதைமுகாமைக் கடந்துசெல்ல முடியவில்லை. `என் அரசு செய்வது தவறு’ என்று அவர்கள் உறுதியாக நம்பினர். இருந்தாலும், அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணம், அப்படி இருப்பதைத் தாண்டி வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான்.

யூத இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு  ஹிட்லர் மட்டுமன்று, இவர்களும்தான் காரணம். யூதர்கள் இல்லாத ஜெர்மனி அமையவேண்டும் என்பதே முதல் இரு பிரிவினரின் விருப்பம் என்பதால் அவர்கள் ஹிட்லரைத் தாங்கிப் பிடித்து நின்றனர். நாஜிப் படைகளோடு பல சமயம் இந்த இரு பிரிவினரும் இணைந்து யூதர்களின் குடியிருப்புகளையும் வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடினர். மறைந்து வாழ்ந்த யூதர்களைக் காட்டிக்கொடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. ஜெர்மனியின் வரலாற்றை ஹிட்லர் சரி செய்வார் என்றும், இழந்த பெருமிதங்களை மீட்டெடுப்பார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனநாயகத்தால் ஒரு பலனும் விளையப் போவதில்லை என்றும், ஹிட்லர் போன்ற ஒரு வலுவான தலைமை எடுக்கும் சில கடினமான முடிவுகள் தேசத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவே செய்யும் என்றும் இவர்கள் நம்பினர். மூன்றாவது பிரிவினருக்கு இத்தகைய நம்பிக்கைகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த பலவீனத்தால் ஹிட்லரின் பலத்தைப் பல மடங்கு பெருகச் செய்தனர்.

யூதர்கள் அன்றிருந்த நிலையில்தான் இன்றைய அகதிகள் பலர் இருக்கிறார்கள். நாஜிக்கள் போல் வகை வகையாகச் சித்ரவதைகள் செய்ய இன்று யாருமில்லை என்றபோதும் அகதிகள் சந்திக்கும் பல துயரங்கள் யூதர்கள் முன்பு சந்தித்த துயரங்களையே நினைவுபடுத்துகின்றன. ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமை எப்படிப் பறிக்கப்பட்டதோ அப்படித்தான் இன்று பல அகதிகளின் குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் படைகளுக்கு பயந்து தங்களுடைய நாட்டை விட்டுத் தப்பியோடிய யூத அகதிகள், எல்லாவற்றையும் போட்டது போட்டபடி தப்பியோடிய ரோஹிங்கியா முஸ்லிம்களையே நினைவுபடுத்துகிறார்கள். சிரியாவில் நடந்ததும் இதுவேதான். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இதுவேதான் நடந்தது. நீ இந்த நாட்டைச் சேர்ந்தவனல்லன். உன் வேர் இந்த மண்ணில் இல்லை. நீ அந்நியன். எனவே நீ வெளியேறியாகவேண்டும். இல்லாவிட்டால் கொல்லப்படுவாய்.

ஹிட்லர் இன்றில்லை. வதைமுகாம்கள் இல்லை. ஆனால், காளான் போல் பெருகிக்கொண்டே போகும் அகதி முகாம்கள் அழுத்தமாக அறிவிக்கும் செய்தி ஒன்றுதான். ஹிட்லரை பலப்படுத்திய மூன்று பிரிவினரும் இப்போதும் உலகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் நம் எதிரிகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை வெளியேற்றினால் அவர்களுடைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  என் அரசு செய்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், என்னால் என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள் என்று அமைதி காப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அகதி முகாம்கள் பெருகிக்கொண்டு போவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணம்தான்.

வரலாற்றிலிருந்து நாம் கற்கவில்லை என்பது பெருஞ்சோகம். ஹிட்லரின் கரங்களில் கடும் வதைகளை அனுபவித்த யூதர்கள், உலகம் முழுக்க அகதிகளாகச் சிதறியோடிய யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நல்லது. ஆனால், அதே யூதர்கள் இன்று பிரிவினைச் சுவர்களை எழுப்பி, பாலஸ்தீனர்களை அகதிகளாக மாற்றிச் சிதறடிக்கிறார்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
 
- சொந்தங்கள் வருவார்கள்