Published:Updated:

இனி காற்றும் காசுதான்!

இனி காற்றும் காசுதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி காற்றும் காசுதான்!

ர.சீனிவாசன், இரா.கலைச்செல்வன்

இனி காற்றும் காசுதான்!

ர.சீனிவாசன், இரா.கலைச்செல்வன்

Published:Updated:
இனி காற்றும் காசுதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி காற்றும் காசுதான்!

“காற்றைப் பிடிக்க எல்லோரும் ரெடியா?”

``ரெடி”

``கையில் அந்த வலையை எடுத்துக் கொள்ளுங்கள். ரெடி, ஸ்டார்ட், 1...2...3...”

எல்லோரும் அந்த மலையுச்சியில் வேகமாக ஓடுகிறார்கள். கைகளில் பெரிய கம்பு. அதன் முனையில் சிறிய வலை. அதை மேல் நோக்கிக் காட்டியபடியே சில நிமிடங்கள் ஓடுகிறார்கள்.

“சரி போதும்... பிடித்த காற்றை இதில் நிரப்புங்கள்.”

அங்கு ஒரு மேஜையில் வைக்கப் பட்டிருக்கும் கண்ணாடிக் குடுவைக்குள் வலையில் பிடித்த காற்றை அடைக்கிறார்கள். காற்று வெளியே போகும் முன் அதை மூடி, சீல் செய்கிறார்கள். இப்படியாகச் சில மணிநேரம் கழிகிறது. பல கண்ணாடிக் குடுவைகள் காற்றால் நிரப்பப் படுகின்றன.

“சரி... சீக்கிரம் கிளம்பலாம். சீனாவிலிருந்து 100 பாட்டில்கள் ஆர்டர் வந்திருக்கு. இன்னிக்கு அதையெல்லாம் ஏற்றுமதி செய்தாகணும்.”

இனி காற்றும் காசுதான்!

இவர்கள் அனைவரையும் காற்று அறுவடையாளர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் செய்வது காற்று விவசாயம் என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கற்பனையாக மட்டுமே இருந்த இந்த வார்த்தைகள் இப்போது நிஜமாகி யிருக்கின்றன. 

இங்கிலாந்தைச் சேர்ந்த லியோ டே வாட்ஸ் கடந்த வருடம் `Aethaer’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் விற்பனை செய்வது ``அடைக்கப்பட்ட சுத்தமான காற்று” என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. காற்றைப் பிடிக்கும் இவரின் செயலைக் கண்டு பல மேலை நாடுகளும் சிரித்தன. அறிவியல் ரீதியாக இப்படி ஒரு விஷயத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதும் தெரியவில்லை. ஆனால், நாம் அவரின் செயலைக் கண்டு சிரிக்க வேண்டியதில்லை. காரணம்...நாளுக்கு நாள் அவரின் வியாபாரம் பெருகிக் கொண்டேயிருக்கிறது. அவர் தன் தூய காற்றை அதிகம் ஏற்றுமதி செய்வது சீனாவிற்கு. அவர் தன் பொருளுக்கான அடுத்த முக்கியச் சந்தையாகக் கருதும் நாடு இந்தியா. காரணம், உலகளவில் மிக மோசமான காற்று மாசு பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது இந்தியாவும் சீனாவும்தான்.

“என் மூன்று வயதுக் குழந்தை எப்போதும் இருமிக்கொண்டேயிருக்கிறாள். டாக்டர்கள் காற்று மாசுதான் காரணம் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியேயில்லாமல் என் சக்தியை மீறி இந்த ‘வைட்டாலிட்டி ஏர்’ கேனை வாங்கி அவளுக்குத் தருகிறேன். இதனால் அவளுக்கு உடல் சீராகிவிடுமா என்று தெரியவில்லை. ஆனால், என்னுடைய நம்பிக்கைக்காகத்தான் இதை வாங்குகிறேன்” என்கிறார் சீனாவின் பீய்ஜிங் நகரைச் சேர்ந்த லீ தியான்க்வின் எனும் பெண்மணி. சீனாவில் தூய காற்றுக்கு முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பது கர்ப்பிணிகளும், சின்னக் குழந்தைகளைக் கொண்டிருக்கும் இளம் தாய்மார்களும்தாம்.

கனடாவைச் சேர்ந்த மோசஸ் லாம் என்பவர் 2014-ல் `வைட்டாலிட்டி ஏர்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் காற்றை ஸ்பிரே கேன்களில் அடைத்து விற்றுவருகிறார். இவர் காற்றை எப்படிப் பிடிக்கிறார் என்பதுபற்றி எந்தத் தகவலும் வெளியிடவில்லை. ஆனால், இரண்டு நறுமணங்களில் அவர் விற்கும் கேன்களுக்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு இருக்கிறது. டெல்லியில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சோதனை ஓட்டமாக முதலில் 100 கேன்களை இறக்குமதி செய்திருக்கிறது இந்த நிறுவனம். 8 லிட்டர் கேன் இந்திய மதிப்பில் 2,800 ரூபாய். அதாவது, ஒருமுறை இழுக்கும் மூச்சிற்கு 12.50 ரூபாய்.

`எதிர்காலத்தில் சீனாவைவிட அதிகமான காற்று மாசு இந்தியாவில்தான் இருக்கும். அதனால், இந்தியாவில் எங்களுக்கான சந்தை மிகப் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என ஆரூடம் சொல்கிறார் மோசஸ்.

`இதெல்லாம் அவசியமற்ற பதற்றம்’, `அதீதமான மிகைக் கற்பனை’ என்று சொல்லி இதை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. நடக்கும் நிகழ்வுகள் இதை நிச்சயம் சாத்தியப்படுத்திவிடும் என்பது போலவே இருக்கின்றன. இதன் பிரச்னைகளை, சமீபத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த டெல்லி  புகைபனிக் கதையிலிருந்து தொடங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி காற்றும் காசுதான்!

2017, நவம்பர் மாதம் முதல் வாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

``டெல்லியின் அனைத்துப் பள்ளிகளும் அடுத்த மூன்று நாள்களுக்கு மூடப்படும். அடுத்த 5 நாள்களுக்கு டெல்லி நகரில் எந்தக் கட்டுமான, இடிமானப் பணிகளும் நடைபெறக் கூடாது.சாலைகளில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளிவராமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.’’

இது ஒரு சுற்றுச்சூழல் எமர்ஜென்ஸி என்றது டெல்லி அரசு. ஒரு தேசத்தின் தலைநகரம் மொத்தமாக ஸ்தம்பிக்கிறது. காற்று தரக் குறியீட்டின் அனுமதிக்கப்பட்ட அளவு 50 புள்ளிகள். 50-ஐத் தாண்டினாலே அது பல கேடுகளை விளைவிக்கக் கூடியது. ஆனால், டெல்லியில் கடந்த நவம்பர் 7-ம் தேதி இதன் அளவு 999. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். இது ஏதோ திடீரென ஒரு நாளில் நடந்து விட்ட விபத்து கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நாள் வரும் என்பதும், இதைவிட மோசமான நாள்கள் வரும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

1996-ல் டெல்லியைச் சேர்ந்த சூழலியலாளர் எம்.சி.மேத்தா, உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்கிறார். “வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.  இனி வரும் நாள்களில் மிக மோசமான சூழலியல் பிரச்னைகளைச் சந்திக்கவுள்ளது. அரசு சரியான நடவடிக்கைகளைத் துரிதமாகத் தொடங்க வேண்டும்’’ என்று சொல்கிறார்.
அந்தப் பொதுநல வழக்கின் தீர்ப்பாக ``டெல்லியின் அனைத்து பொதுப் போக்குவரத்து களையும், மாசு ஏற்படுத்தாத சி.என்.ஜிக்களாக மாற்ற வேண்டும், காற்று மாசைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு தீவிரமாக  மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிடுகிறது. ஆனால், இதோ இருபது வருடங்கள் ஆகியும் டெல்லியின் பிரச்னை தீர்க்கப்படவில்லை. மாறாக மிக மோசமான அழிவை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறது.

உலகளவில் காற்று மாசுக்கு முக்கியக் காரணிகளாக இருப்பவை தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள், பயிர் எரிப்பு ஆகியவைதாம். டெல்லியில் இவை அனைத்துமே பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன.

இனி காற்றும் காசுதான்!

டெல்லி பாதிக்கப்பட்ட அதே சமயத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. டெல்லியின் அதே பிரச்னைதான் லாகூருக்கும். எல்லாப் பிரச்னை களையும் கடந்து, இந்தியாவும்  பாகிஸ்தானும் இணைந்துதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் எனச் சொல்கிறார்கள் சூழலியலாளர்கள். டெல்லி, லாகூர், பீய்ஜிங், லண்டன், வாஷிங்டன் என உலகின் பல நாடுகளின் முக்கிய நகரங்களும், காற்று மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் அதிக காற்று மாசடைந்த முதல் இருபது நகரங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 13 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

முகத்திற்குப் போடும் மாஸ்க்குகளும், அறைகளில் மாட்டப்படும் காற்று சுத்திகரிப்பான்களும் இல்லாத வீடுகளே டெல்லியில் இல்லை என்ற நிலை என்றோ எட்டப்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான், தூய கற்றை வழங்கும் ஸ்பிரே கேன்களும், ஆக்ஸிஜன் பார்லர்களும் எனக் காற்றை அடிப்படையாகக் கொண்டு புதுப்புது விஷயங்கள் வியாபாரத்தில் களம் காண்கின்றன.

இனி காற்றும் காசுதான்!

“காற்று நிச்சயம் எதிர்காலத்தில் மிக முக்கியமான வியாபாரப் பொருளாக மாறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தண்ணீர் கேன்களின் அதே கதைதான்,  காற்று விஷயத்திலும் நடக்கவிருக்கிறது. இனி வரும் காலங்களில் காற்று மாசைத் தடுக்க வேண்டும் என்றால், அரசாங்கம் மிகத் துரிதமாகச் செயல்பட வேண்டும். அதுவும் தொழிற்சாலை, போக்குவரத்து எனப் பல துறைகளிலும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். ஆனால், அவையெல்லாம் சரியாக நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. காரணம், காற்று வியாபாரம்  மிகப் பெரிய பொருளாதார அனுகூலங்களை அவர்களுக்குக் கொடுக்கலாம். நகரங்களில் பிழைப்பிற்காக வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையான சுவாசப் பிரச்னைகளில் அவதிப்படுகின்றனர். அவர்கள் வேலை செய்யும் இடம், வாழுமிடம் எல்லாமே அவர்கள் உடலைக் கடுமையாக பாதிக்கும் சூழலிலேயே இருக்கிறது. அலர்ஜிகளும், சுவாசப் பிரச்னைகளும், இன்னும் பல நோய்களும் இந்த எளிய மக்களை அதிகம் தாக்கும் நிலையில், இந்த வியாபாரம் அசுர வளர்ச்சி அடைய வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, காற்று இலவசமாகக் கிடைக்கக் கூடியது. ஒரு வியாபாரத்திற்கான மூலப் பொருளே இலவசமாகக் கிடைக்கக் கூடியது என்றால், அது நிச்சயம் பெரிய சந்தையாக உருவாகும். அதற்கான தேவைகளை, நம்மை ஆளும் வர்க்கம் நமக்கு ஏற்கெனவே ஏற்படுத்திவிட்டது. இனி சுத்தமான காற்றுக்கு நீங்கள் காசு கொடுக்கத்தான் வேண்டி வரும்” என்று அபாயங்களைச் சுட்டிக் காட்டுகிறார் சூழலியலாளர் நக்கீரன்.

அமெரிக்காவைச் சேர்ந்த `தி ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் காற்று மாசினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை, 1990-2015 வரையிலான காலகட்டத்தில்  150 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. அதோடு, “டெல்லியில் இருக்கும் 44 லட்சம் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர் களுக்கு நிரந்தர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது” என்கிற அதிர்ச்சிகரமான ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது.

இனி காற்றும் காசுதான்!

நாம் உண்ணும் உணவு விஷமாகிப்போனது. குடிக்கும் தண்ணீரும் விஷமாகிப்போனது. இதோ... காற்றும் முழு நஞ்சாக மாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பூர்வகுடியான சியாட்டில் செவ்விந்தியத் தலைவர் துவாமிஷ், 1800களின் இறுதியில் அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார்...

“ஜனாதிபதி எங்கள் நிலங்களை வாங்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு ஒன்று புரியவில்லை... நிலத்தை எப்படி விலைக்கு வாங்குவீர்கள்? அந்த யோசனையே எங்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. நாம் சொந்தம் கொண்டாட முடியாத  இந்தத் தூய்மையான காற்றையும், மினுமினுக்கும் நீரையும் நாம் எப்படி விற்க முடியும்?

இந்த நிலம் உங்களுக்கு வேண்டுமென்றால்,  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்தக் காற்று எங்களுக்குப் புனிதமானது. தான் வருடிச் செல்லும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அது உயிர் ஆதாரமாக இருக்கிறது. இந்தக் காற்றை பத்திரமாக வைத்திருங்கள். எந்த மனிதனும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து, அதன் சுவை மிகுந்த வாசத்தை நுகரட்டும்.’’

சியாட்டில் கற்பனை செய்யவே பயந்தது இன்று சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. தண்ணீருக்காக அலைவதுபோல காற்றுக்காக  நாம் அலையப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை!

இனி காற்றும் காசுதான்!

 “காற்று மாசிலிருக்கும் சின்ன சின்னத் துகள்கள் நுரையீரலின் காற்றுக்குழாய்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் நுரையீரலின் விரிவுத் திறன் பாதிக்கப்படும். வீசிங், அலர்ஜி, ஆஸ்துமா, COPD (Chronic Obstructive Pulmonary Disease) போன்ற சுவாசப் பிரச்னைகள் அதிகம் வரும். இது உடலின் எதிர்ப்பு சக்தியைக் கடுமையாக பாதிக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்துகளைக் கொடுக்கக் கூடியது. நுரையீரல் பாதிப்பு விரைவிலேயே இதயத்தை பாதிக்கும். மற்றபடி கேன்களில் அடைக்கப்படும் சுத்தமான காற்று என்பதெல்லாம் இதுவரை அறிவியல் பூர்வமாகவோ, மருத்துவ ரீதியிலோ நிரூபிக்கப்படாதது’’ என்கிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் வேல் குமார்.