பொங்கலுக்குத் தன் சொந்த ஊருக்குப் போக அலுவலக நண்பர் ஒருவர் முன்பதிவு செய்யப் பரபரத்துக் கொண்டிருந்தார். அவருக்கு எப்போதுமே ஊர்ப் பெருமை அதிகம் உண்டு. என்ன சார், ஊருக்கா எனக் கேட்டுவிட்டால் போதும்...``இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? யாரோடயும் பழகாம ஆபீசுக்கும் வீட்டுக்குமா அல்லாடிக்கிட்டு, மெஷின் கணக்கா வேலை செய்றோம். மாமன், மச்சான்னு அங்கதான் உசுரே இருக்கு!’’ என்பார். அவர் சென்னை வந்து செட்டிலாகி ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவருக்கு இங்கே ஒரு பிடிப்பு வரவில்லை. சக மனிதர்களுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்த ஒருவருக்கு 15 ஆண்டுக்கால அவகாசம் போதாதா?

அடல்ட்ஸ் ஒன்லி - 11

தம் ரத்த சொந்தங்களைத் தாண்டிப் பிற மனிதர்களுடன் கலந்து வாழ்வதில் நமக்குப் பல வகையான

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடல்ட்ஸ் ஒன்லி - 11

மனத்தடைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சமத்துவத்தின் மீதான நமது வெறுப்பு! எந்த இரண்டு இந்தியரும் ஒருவரை ஒருவர் சமமாகக் கருதிக் கொள்வதில்லை. ஒரே வேலை பார்த்தாலும், ஒரே நிறத்தில் இருந்தாலும், ஒரே மொழி பேசினாலும், ஒரே சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் இன்னொரு மனிதர் என்றால் அவர் எனக்கு இணையானவர் இல்லை என நாம் கருதுகிறோம். அதனால்தான் நம்மால் யாருடனும் உறவைப் பேண முடிவதில்லை. நகரங்களுக்கு வந்து செட்டிலாகிறவர்கள் சொந்தங்களோடு கூடி மகிழ்ந்திருக்க ஒவ்வொரு விடுமுறைக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். இங்கே யாருடனும் பழக முடியாததால், ``இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?’’ எனப் புலம்புகின்றனர்.

கிராம வாழ்க்கை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை மேல் ஓர் ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. தாத்தா பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் ஒரே கூரையின் கீழிருந்த அந்த வாழ்க்கை முறையில் குழந்தை வளர்ப்பு சிறப்பாக இருந்ததாக நம்பப்படுகிறது. சமூகப் பார்வையில் இது சரிதானா என நிச்சயம் ஆய்வு செய்தாக வேண்டும்! ஏனென்றால், கூட்டுக் குடும்ப வாழ்க்கையானது ரத்த உறவுகளுடனான பந்தத்தை மட்டுமே உறுதி செய்துகொடுத்தது. ரத்த சொந்தம் அல்லாதவர்களுடனான நல்லிணக்கத்தை அது தடை செய்தது.

ஒரு கிராமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த கிராமம் முழுக்க யார் இருப்பார்கள்? உங்கள் சொந்த பந்தங்கள்தான். அவர்களைத் தாண்டி, பிற சமூகத்தினருடன் பழகவோ கலந்து வாழவோ அனுமதி இருந்திருக்காது. அதே பழக்கம்தான் வேலை வாய்ப்புக்காக இடம்பெயர்ந்து வருகிற நிலையில்கூட நம்மை அண்டை வீட்டாருடன் கலக்கவிடாமல் செய்கிறது. யாராக, என்ன ஆளாக இருப்பார்களோ என்று தயங்குகிறோம். ஆக, நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் பண்பாடான கூட்டுக்குடும்ப முறையிலும் சரி, இன்றைய நடைமுறையாகிவிட்ட தனிக்குடித்தன முறையிலும் சரி, இரண்டிலுமே சக மனிதர்களோடு கலந்து வாழ வாய்ப்பில்லை.

தனிமையில் உழல்கின்றன என்பதுதான் இன்றைய குழந்தைகளின் ஆகப்பெரும் பிரச்னை. எனில், அதற்கு யார் காரணம்? சக மனிதர்களுடன் கலப்பதற்கான குடும்பச் சூழலோ சமூகச் சூழலோ இங்கே இல்லை. அதை உருவாக்காமல் நாம்தாம் தடுத்து நிற்கிறோம். சந்தோஷமெல்லாம் நம் சொந்தபந்தங்களிடம் மட்டும்தான் கிடைக்கும் என்பதாக குழந்தைகளுக்குத் தவறான பாடத்தைக் கற்பிக்கிறோம். `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மிக அற்புதமான தத்துவம் நம் முன்னோரால்தான் எழுதப்பட்டது. ஆனால், அவரவர் ஊரைத் தாண்டி எதுவுமே வாழத் தகுதியானதில்லை என நிராகரிக்கிறோம். அவரவர் உறவுகளைத் தாண்டி யாருமே சரியான மனிதர்கள் இல்லை எனப் புறக்கணிக்கிறோம். குழந்தைகளைப் பூட்டி வைக்கும் நிலை, அதனால்தான் உருவாகிறது.

மேற்கத்திய நாடுகளில் ஒருவரைக் கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டால், உடனே `ஹலோ’ என்று புன்னகைப்பார்கள். அது அவர்களின் பண்பாடு. கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டு, புன்னகைக்காமல் போனால் நீங்கள் அவரை அவமரியாதை செய்ததாக அர்த்தம். பேச்சு வந்துவிட்ட குட்டிக் குழந்தைகளும் இதைப் பின்பற்றுகின்றன. ஆனால், நாமோ சக மனிதரைப் பார்த்தால் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்கிறோம். எதிரில் யாரேனும் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தால், சட்டெனப் பின்னால் திரும்பிப் பார்ப்போம். ``யார் இவர், எங்கே பார்த்தோம், நம்மைப் பார்த்து ஏன் சிரிக்கிறார், பதிலுக்குச் சிரித்தால் தப்பாகிவிடுமோ, இல்லை இந்த ஆளு லூசோ’’ என ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் அலைக்கழிக்கப்படுவோம். ஒரு சிரிப்புக்கு இத்தனை அக்கப்போரா?

அடல்ட்ஸ் ஒன்லி - 11

நாமே இப்படி இருக்கும்போது குழந்தைகள் என்ன செய்யும்? சக மனிதரைப் பார்த்தால் பயப்படுகின்றன, ஓடி ஒளிகின்றன அல்லது அவமரியாதை செய்கின்றன. `எல்லா மனிதரும் நம்மைப் போன்றவர்களே’ என்ற அடிப்படையான வாழ்வியல் தத்துவத்தை, சமத்துவக் கல்வியை நாம் குழந்தைகளுக்குத் தர மறுக்கிறோம். சிவப்பே அழகு, கறுப்பு அசிங்கம் என்ற தவறான புரிதல் குழந்தைக்கு எங்கே இருந்து வந்தது? பள்ளியில் ஆசிரியரும், அங்கே பணிபுரியும் துப்புரவுப் பணியாளரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என,  குழந்தை எப்படி நினைத்துக் கொள்கிறது? இருவருமே சம்பாதிக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள் என்ற நிலையிலும் அம்மாவைவிட அப்பா உயர்ந்தவர் என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு விதைத்தது யார்? மனிதர்களின் தோற்றம், செய்யும் வேலை, நிறம், பாலினம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை வைத்து மரியாதையைக் கூட்டவும் குறைக்கவும் குழந்தைக்கு யார்தான் கற்பிக்கிறார்கள்?

ஒவ்வொரு நாள் காலையும் நம் வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்க துப்புரவுப் பணியாளர் வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவார். அவரைப் பற்றிய நமது மதிப்பீடு என்ன? அண்மையில் நடந்த சம்பவம் இது. தன் மகனிடம் குப்பைப் பையைக் கொடுத்துவிட்டார் ஒரு தந்தை. அவன் ``அங்கிள்’’ எனக் கத்திக்கொண்டே ஓடினான். திரும்பி வந்தவுடனே முதுகில் டம்மென்று ஒரு போடு போட்டு, ``குப்பை பொறுக்குறவனை அங்கிள்னு கூப்பிடுற, அறிவில்ல உனக்கு’’ என்றார். அவன் ``பின்ன எப்படிப்பா கூப்பிடுறது?’’ என்றான். ``குப்பைனு கூப்பிடு போதும். நீ ஓடாத, அவனே வருவான்’’ என்றார். இன்னொரு நாள் என் கீழ் வீட்டில் இருக்கும் பெண்மணி, துப்புரவுப் பணியாளர் மேல் தளத்திற்கு வர முற்பட்டதற்காக நாயை அவிழ்த்துவிட்டார்.

ஒவ்வொரு மனிதருக்கும் மூன்று விதமான வாழ்க்கைகள் உள்ளன, அவை முறையே தனிப்பட்ட வாழ்க்கை (Personal life), பொருளீட்டும் வாழ்க்கை (Professional life), சமூக வாழ்க்கை (Social life). தனக்கான உறவு மற்றும் நட்புகளுடன் பொழுதைக் கழித்து மகிழ்ந்திருக்கும் தனிப்பட்ட வாழ்வில் நாம் எந்தக் குறையும் வைப்பதில்லை. நம் தனிப்பட்ட வாழ்வின் தேவைக்காகப் பொருளீட்டும் வாழ்க்கையிலும் நாம் சமரசம் செய்து கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தலைமுறை பொருளீட்டுவதற்காகத்தான் உயிர் வாழ்கிறது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவதுகூட அதற்கு இரண்டாம்பட்சம்தான். மூன்றாவதான சமூக வாழ்க்கை என்றால் நமக்கெல்லாம் என்னவென்றே தெரியாது. சமூக வாழ்க்கை என்றதும் போராடக் கூப்பிடுகிறார்களோ எனக் கற்பனை செய்துவிடாதீர்கள். கொடி பிடித்துக் கொண்டு வீதிக்கு வர அழைக்கிறார்களோ என நினைத்துவிடாதீர்கள். இச்சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் சமூக வாழ்க்கையைப் புறக்கணித்ததால்தான் வெகுசிலர் எப்போதும் கொடி பிடித்துக் கொண்டிருக்க நேரிடுகிறது!

இந்த பூமியில் நீங்கள் மட்டும்தான் வாழ்கிறீர்கள் என்றால் பர்சனல் மற்றும் புரொஃபஷனல் வாழ்க்கை மட்டும் போதுமானது. ஆனால், இரண்டாவதாக இன்னொரு மனிதர் வந்துவிட்டாலே அங்கே சமூக வாழ்க்கைக்கான தேவை உருவாகிவிடுகிறது. நீங்கள் அவரோடு நல்லிணக்கம் கொள்ள வேண்டும். கிடைக்கும் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சண்டையில்லாமல் நிம்மதியாக வாழ முடியும். இல்லையெனில் போட்டி அதிகரித்து, யார் பெரியவர் என மல்லுக்கட்டி யாராவது மற்றவரை வீழ்த்தி ஜெயிக்க வேண்டி வரும். நாமெல்லோரும் அப்படித்தான் நம் சக மனிதர்களை வீழ்த்துவதையே முழுநேர வேலையாகக் கொண்டு சமூகத்தின் அமைதியைக் கெடுத்துவிட்டோம்.

பர்சனல் மற்றும் புரொஃபஷனல் வாழ்க்கையை மட்டும் ஒருவர் வாழ்கிறார் எனில் அவர் சுயநலவாதி. தன் வீட்டிற்கு வெளியே என்ன நடந்தாலும் அவருக்குக் கவலை இல்லை. அசம்பாவிதம் நடந்தால் இன்னும் இரண்டு பூட்டுகளை வாங்கி வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்துகொள்வார். அப்படித்தான் நாம் எல்லோரும் சாலை சரியில்லை என்றால் ரூட்டை மாற்றப் பழகிக்கொண்டோம். பொதுப் போக்குவரத்து நெரிசலானதும் தனியாக வாகனம் வைத்துக்கொள்ளத் தயாரானோம். பொதுக் குடிநீர் விநியோகம் பிரச்னை ஆனதும் காசு கொடுத்து கேன்களை வாங்கத் துணிந்தோம். ஏரி, குளம், ஆறுகளை அழிக்க ஏன் அனுமதித்தோம் எனில் அவை பொதுப் பயன்பாட்டிற்கானவை. நமக்கே நமக்கான ஒரு சதுர அடியில்கூட சமரசம் செய்துகொள்ளாத நாம், நம் இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாட விட்டோம். ஏனென்றால், அவற்றால் நமக்கு நேரடியான லாபங்கள் இல்லை.

அடல்ட்ஸ் ஒன்லி - 11

கணினியில் உட்கார்ந்தபடி ஈட்டும் பணத்தை வைத்து நம்மால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும். வேறென்ன வேண்டும் நமக்கு? குடியிருக்கும் குளத்தின் நீரைத் தவளை குடித்துத் தீர்ப்பதில்லை. ஆனால், நாம் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டே எவ்வளவு சுரண்டுகிறோம்? பொது என்ற வார்த்தையே நம் அகராதியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

குழந்தைகள் என்ன பார்க்கிறார்களோ அதைத்தான் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் நாம் சுயநலமாக வாழ்வதைப் பார்க்கின்றனர். அவ்வழியிலேயே நடக்கின்றனர். பெரியவர்களுக்கு சமூக வாழ்க்கை என ஒன்றே இல்லாத போது குழந்தைகளுக்கு எப்படி தன்னோடு வாழும் சக மனிதர்மீதும் தான் வாழும் இந்த பூமியின் மீதும் பற்று வரும்?! மண்ணையும் மனிதர்களையும் நேசிக்காத தலைமுறையால் யாருக்கு என்ன பயன்? 

`கடைசி மரம் வெட்டிச் சாய்க்கப்படும்போது, கடைசி மீன் பிடிக்கப்பட்டுவிடும்போது, கடைசி ஆறு விஷமாக்கப்படும்போதுதான் நமக்குப் புரியும், நம்மால் பணத்தைத் தின்ன முடியாதென.’ - என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. இந்தச் செவ்விந்தியச் சொல்வழக்கு நமக்கான ஆதி எச்சரிக்கை. மரம், மீன், ஆறுகள், இவற்றோடு மனிதரையும் சேர்த்துக்கொள்வோம். நமக்கென இருக்கும் கடைசி மனிதரும் வெறுப்பு உணர்வால் கொல்லப்படும்போதுதான் நமக்கு இழப்பின் ஆழம் புரியும். மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் முளைத்துக் கிடக்கும் கட்டடக் காட்டைப்  பாருங்கள்! கடலில் ரசாயனக் கழிவு கலந்து, செத்துக் கரையொதுங்கும் மீன்களைப் பாருங்கள்! முன்பு ஆறுகள் ஓடிய இடத்தில் மணல் லாரிகள் மொய்த்துக் கிடப்பதைப் பாருங்கள்! வாழ வேண்டிய வயதில் வெறுப்பு உணர்வாலும் பசியாலும் நோயாலும் வன்முறையாலும், நம்மைப்போன்ற மனிதர் செத்து மடிவதைப் பாருங்கள்! நாம் அழிவின் விளிம்பில் நிற்கிறோம். இது பயமுறுத்தல் அல்ல, எச்சரிக்கை. 

கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் நாம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறோம். ஆனால், இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தக் காலத்தில் சமூக சமத்துவமின்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எல்லா வகையான பாகுபாடுகளும், வன்மங்களும் கூர்மையடைகின்றன. இதில் பெற்றோர்களாகிய நமக்கு எந்தப் பங்கும் இல்லையா?

சமூக விலங்கான மனிதர்கள் சமூக வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு சுயநலமாக வெறுமனே பிழைத்திருக்க முடியாது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திம்மக்கா பாட்டியை உங்களுக்குத் தெரியுமா? வயது நூற்று சொச்சம். தான் வாழும் கிராமத்தில் பல பத்தாண்டுகளாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரம் ஆலமரங்களை நட்டு வளர்த்து பூமியைக் குளிர்வித்தவர். வெப்பம் தகித்துக்கிடந்த அந்த ஊர் இப்போது வேர் பிடித்த ஆலமரங்களால் சில்லென்று இருக்கிறது. வாழ்கிற தலைமுறை மட்டுமன்றி எதிர்காலத் தலைமுறையும் அவரை வாழ்த்தும். இதுதான் சமூக வாழ்க்கை! நம் வாரிசுகளுக்குச் சொத்து சேர்த்ததைத் தவிர, எதிர்காலத் தலைமுறைக்கென நாம் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்போமா? நம் பிள்ளைகளும் இந்த பூமியில்தானே வாழப் போகின்றன. அந்த பூமியின் நன்மைக்கு நாம் ஏதேனும் செய்தோமா?

நாம் செய்ய வேண்டியதெல்லாம் எளிய விஷயங்கள்தான். பிடுங்கப்பட்ட ஒவ்வொரு மரத்தையும் ஈடு செய்ய ஆயிரம் விதைகளை நாம் ஊன்றியாக வேண்டும். வெறுப்பால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரிடமும் மன்னிப்பு கோரும் வகையில் மொத்த மானுட சமூகத்தையே நாம் நேசத்தால் குளிப்பாட்ட வேண்டும். வீடே கதி எனக் கிடப்பதை விட்டு, வேலை வேலை என ஓடுவதைச் சற்று நிறுத்தி உங்கள் பிள்ளைகளின் கைபிடித்து வீதிக்கு நடந்து வாருங்கள்!

கறுப்பு சிவப்பு, ஏழை பணக்காரர், அந்த வேலை இந்த வேலை, அந்த மதம் இந்த மதம் என்ற பாகுபாடில்லாமல் அவர்கள் எல்லோருடனும் கைகுலுக்கட்டும். எல்லோரையும் மதிக்கட்டும். எல்லோரைப் பார்த்தும் புன்னகைக்கட்டும். எல்லோருடனும் பழகும்போதுதான் சமத்துவத்தின் மீது குழந்தை பிடிப்பு கொள்ளும்.  தொலைதூரப் பயணங்கள் கூட்டிப் போங்கள். பல வகையான மொழி பேசும், வெவ்வேறு வகையான உணவுகளை உண்ணும், உடைகளை உடுத்தும் மக்களை அறிமுகம் செய்யுங்கள்.  எல்லோருக்கும் நம்மைப் போல நல்வாழ்க்கை வாழ உரிமையுண்டு என்பது குழந்தைக்குப் புரியும். பன்முகத் தன்மையை அங்கீகரிக்கத் தொடங்கும். குழந்தை உங்களிடமிருந்து இப்படியான விஷயங்களைக் கற்கட்டும். இதுதான் சமூக வாழ்க்கை. சமூக, பொருளாதார, மத ரீதியான ஆதிக்கங்களுக்கு ஆட்படாத வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைக்கு அளிக்க முடியுமானால் நீங்களே சிறந்த பெற்றோர். அதுதான் உங்களின் ஆகச் சிறந்த சமூகப் பங்களிப்பு!

- நிறைய பேசுவோம்...

அடல்ட்ஸ் ஒன்லி - 11

குழந்தையிடம் சமூகப் பொறுப்பை வளர்த்தெடுக்க சில வழிமுறைகள்!

1. தானம் என்றாலே பழையதைக் கொடுப்பதே நம் வழக்கம். அதற்கு மாறாக, புதிய ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், பொருள்களை வாங்கி ’தேவைப்படும்’ மற்றொரு குழந்தைக்குப் பரிசளிக்கப் பழக்கப்படுத்துங்கள். தன் பென்சிலைத் தோழிக்குக் கொடுத்து உதவினேன் என்று சொல்லும் பிள்ளையைப் பாராட்டுங்கள்.  இந்தப் பழக்கம், `கொடுத்து மகிழும்’ பண்பை வளர்த்தெடுக்கும்.

2. குழந்தையின் நண்பர்களுக்குள் ஏற்றத்தாழ்வு பார்க்காதீர்கள். குழந்தையின் நண்பர்கள் ஒரே அந்தஸ்தில் இருக்கும் பட்சத்தில் வெவ்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்த புதிய நண்பர்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களுடன் விளையாடுவது, வரைவது, பாடுவது, படிப்பது போன்ற செயல்களைச் செய்யட்டும்.

3. வார இறுதியில் மால்களுக்கு அழைத்துப் போவதற்கு பதிலாக, இயற்கை சூழ்ந்த இடங்கள், வனவிலங்குச் சரணாலயங்களுக்குக் கூட்டிச் செல்லுங்கள். இன்றைய குழந்தைகளுக்கு இந்த பூமியில் மனிதர்களைத் தவிர வேறு உயிர்கள் இருக்கின்றனவா என்பதே தெரியாது! உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிர்ச்சங்கிலியைப் புரிய வையுங்கள்.

4. பொருள்களைக் குறைவாகப் பயன்படுத்தப் பழக்குங்கள். கிழிந்த துணியைத் தைத்துப் போடுவது, உடைந்த பொருளை ஒட்டிப் பயன்படுத்துவது, ரிப்பேர் ஆனவற்றை பழுது நீக்குவது, மறு சுழற்சி, மறு பயன்பாடு ஆகியவற்றைக் கற்பியுங்கள். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இந்த பூமியில் வளங்களைச் சுரண்டியே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் அவற்றின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். பணம், தண்ணீர், மின்சாரம் எல்லாவற்றையும் சிக்கனமாகச் செலவழிக்கச் சொல்லித் தாருங்கள். சிக்கனத்தைக் கற்ற குழந்தை ஒரு போதும் வாழ்க்கையில் சிரமப்படாது.

5. எல்லோருக்கும் மரியாதை அளியுங்கள். உங்களைப் பார்த்து குழந்தையும் அதைப் பின்பற்றும். காய்கறி விற்பவர், துப்புரவுப் பணி செய்பவர், வீட்டு வேலை செய்பவர் எல்லோரையும் சமமான மரியாதையோடு நடத்துங்கள். குழந்தை தவறிழைத்தால் உடனே திருத்துங்கள்.

6. செய்தியிலோ, நிகழ்ச்சிகளிலோ நன்மை செய்பவர்கள் பற்றி குறிப்பு வந்தால் மனதார வாய்விட்டுப் பாராட்டுங்கள். அவர் என்ன நன்மை செய்தார் என்பதைக் கதையாகச் சொல்லுங்கள். சமூகத்திற்கு நன்மை செய்பவர்களே உண்மையான கதாநாயகர்கள் என்று எடுத்துரையுங்கள். குழந்தை அப்படியொரு ஹீரோவாகக் கனவு காணத் தொடங்கும்.

7. சுற்றுலாக்களைவிடவும் பயணங்களுக்குத் திட்டமிடுங்கள். புதிய மனிதர்களை அறிமுகம் செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். 

8. உங்கள் ரத்த சொந்தங்களைக் கடந்த நண்பர்களுடனான நிகழ்வுகளுக்கும் பயணங்களுக்கும் திட்டமிடுங்கள். சமூகக் கலப்பை இயல்பாகப் பழக்குங்கள்.

9.  உங்கள் நம்பிக்கை என்னவாக இருந்தாலும் உண்மையை மட்டுமே பேசுங்கள். யாரைக் குறித்தும் குழந்தையிடம் தவறாகப் பேசி வெறுப்பு உணர்வை விதைக்காதீர்கள்.

10. நீதிக்கதைகள் சொல்லுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism