Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் பா.காளிமுத்து

சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் பா.காளிமுத்து

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017

முதல் நாள் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் இசைப் பேரொளி விருதும், மொய்ப் பணமாக (cash award) ஒண்ணேகால் லட்சம் ரூபாய் காசோலையும் வாங்கிக்கொண்டு, அடுத்த நாள் அதே சபாவுக்காகக் கச்சேரி செய்தார் எஸ்.மஹதி. சம்பவம் நடந்த இடம், நாரத கான சபா அரங்கம்.

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா, டி.என். சேஷகோபாலன் இருவரிடமும் இசையில் ‘மேல் படிப்பு’ படித்தவர் இவர். இன்னொரு பக்கம், திரை இசையில் நான்கு மொழிகளிலுமாகச் சேர்த்து 600 பாடல்கள் வரை இதுவரை பாடியிருக்கிறார்.

வயலின் மைசூர் ஸ்ரீகாந்த், மிருதங்கம் பத்ரி சதீஷ்குமார், கடம் திருச்சி கிருஷ்ணசாமி துணையுடன் மேடையேறிய மஹதி, தோடி வர்ணம் பாடிவிட்டு, மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில் மலயமாருதம். இந்த ராகத்தில் அமைந்த தியாகராஜரின் ‘மநஸா எடுலோ’ பாடலை மஹதி பாடியபோது சின்ன மேடம் அன்று ஃபுல் ஃபார்மில் இருப்பது புரிந்தது.

சரிகமபதநி டைரி - 2017

மெயின் காம்போதி. மின்சாரம் பாய்ந்தது மாதிரியான சுறுசுறுப்பு ஆலாபனையில். ஆனால், சட்ஜத்துக்குக் கீழே சென்று ராகத்தை ஆரம்பிக்கும்போது மட்டும் ஏகத்துக்கும் திணறல்! மூச்சுக்காற்றுகூட மைக்கில் கேட்காத அளவு ஓர் மயான அமைதி! படிப்படியாக ராகத்தை வளர விட்டு மேல் ஸ்தாயியில் பாடியபோது காம்போதி களை கட்டியது. பாடகியின் தன்னம்பிக்கையும் ஜோராக வெளிப்பட்டது. ராகத்திலிருந்து வெளியேற மறுபடியும் சட்ஜத்துக்குக் கீழே திரும்பியபோது அதே திணறல்!

தீட்சிதரின் ‘ஸ்ரீ சுப்ரஹ்மண்யாய நமஸ்தே நமஸ்தே’ மாஸ்டர்பீஸ் பாடல், ‘வாஸவாதி ஸகலதேவ வந்தி தாய...’ வரியில் நிரவல், ஸ்வரங்கள்... அடுத்துவந்த சண்முகப்ரியாவை எடுபடவிடாமல் காம்போதி ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது!

மஹதிக்கு மியூசிக் அகாடமி இன்னமும் கதவு திறக்கவில்லை. இதற்கு உச்சநீதிமன்றக் கதவையெல்லாம் தட்ட முடியாது! ஆனாலும், லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் கனவு யாருக்கும் இருக்கும்தானே!
“வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம் சில நேரங்களில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமாகக் கச்சேரிகள் ஒப்புக் கொண்டுவிடுவது உண்டாம்... கடைசி நேரத்தில் ‘காய்ச்சல்’ என்று ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி ஒரு பாடகரின் ரத்த அழுத்தத்தை எகிறவிட்டுவிட்டு, இன்னொரு மேடையில் வந்து உட்கார்ந்துவிடுவாராம்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரிகமபதநி டைரி - 2017

``அப்படியா? இன்னிக்கு இங்கே வருவார்தானே?” - பாரதிய வித்யா பவனில் திரை விலகும் வரை பின் இருக்கையில் விவாதம் ஓடிக்கொண்டிருந்தது! விலகியதும் மேடையில் ‘ஸ்ரீராம தரிசனம்’ கிடைத்த பின்னர்தான் அவர்களுக்கு நிம்மதி!

வாசிப்பைப் பொறுத்தமட்டில் பழுது சொல்ல முடியாது ஸ்ரீராமிடம். பாடகரை நிழல் மாதிரி பின்தொடர்ந்து, அவர் பாடும் சங்கதிகளை யெல்லாம் அச்சு அசலாக வயலினில் திருப்பிக் கொடுப்பதில் கெட்டிக்காரர். அன்றும், என்றும்!

பரமாச்சாரியார்மீது தியான ஸ்லோகமும், பைரவி வர்ணமும் சன்னமான குரலில் பாடினார் சந்தானகோபாலன். பயணிக்கும் பாதையில் மேடுபள்ளங்கள் என்றால் ஓட்டுநர்கள் கவனமாக வாகனத்தைச் செலுத்துவது மாதிரி, தன் குரலில் ஏற்பட்டுவிட்ட பின்னடைவு உணர்ந்து பாடுபவர் இவர்.

பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது மாதிரி, மெயின் சங்கராபரணத்தைக் கொஞ்சமாக ஆலாபனை செய்தார் நெய்வேலியார். கீவளூரில் தீட்சிதர் பாடிய ‘அட்ஷய லிங்க விபோ’ கீர்த்தனை. ஸ்வரங்களில் அந்தப் பூக்களாலேயே பூமாலை தொடுத்தார். மேலே போக வேண்டிய இடங்களில் குரல் ஒத்துழைக்காதபோது நாகை ஸ்ரீராமை கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யச் சொல்லிவிடுகிறார்!

‘பதரிவன மூல நாயிகா...’ வரியை நிரவலுக்கு எடுத்துக்கொள்வதற்கு முன், பதரி என்பது இலந்தைப் பழத்தைக் குறிக்கும் வடமொழிச் சொல் என்பதை அவையோர் அறியச் செய்தார் சந்தானகோபாலன்.
பத்ரீ சதீஷ்குமார் - புருஷோத்தமன் மிருதங்கம், கஞ்சிரா வழியே ‘தனி’யில் நடத்திய லய உரையாடல்கள் திகட்டாத விறுவிறுப்பு!

மேடையில் பாடகர் அக்‌ஷய் பத்மநாபன், வயலின் ஆர்.ராகுல், மிருதங்கம் குருராகவேந்திரா மூவருக்கும் வயது முப்பதுக்கு இந்தப் பக்கம், அந்தப்பக்கம்தான் இருக்கும். ஆடியன்ஸில் எந்தப் பக்கம் திரும்பினாலும் எழுபதுகளின் பக்கத்தில் இருந்தார்கள்! (ஆர்.கே.கன்வென்ஷன் சென்ட்டர்/மதுரத்வனி) மனைவி மட்டுமல்ல, குரல் அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம்தான்! பி.எஸ்.நாராயணசுவாமியின் ஸ்கூலிலிருந்து பேர் சொல்லப் போகும் சீடரான அக்‌ஷய் பத்மநாபனுக்கு கணீர் குரல். அதில் அசாத்தியமான ஆளுமை. கீழ் ஸ்தாயியில் தடங்கலுக்கு வருந்தாமல் பயணிக்கிறார். பக்கவாத்தியக் கலைஞர்களைப் பங்காளியாகப் பார்க்காமல், மேடையில் நட்புடன் பழகுகிறார்.

சுகம் தரும் நளினகாந்தி. ஏதோ பத்து, இருபது வருடங்களாகப் பாடிக்கொண்டிருப்பது மாதிரி அநாயச சஞ்சாரங்கள். பின்னால் வரிசை கட்டி வந்த சிம்மேந்திரமத்யமும், ஸ்ரீரஞ்சனியும் அக்‌ஷயின் அரவணைப்பில் குளிர்காய்ந்தன. தரப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் ராகம் - தானம் - பல்லவி உட்பட கச்சிதமாக முடித்த கணக்குப் பிள்ளை!

எதிர்காலத்துக்கு... கரெக்ட்... இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம்!

சரிகமபதநி டைரி - 2017

அடையாறு... இந்திராநகர்... திருவான்மியூர் ஏரியா ஜனங்களுக்கு இலவச இசை விருந்து படைக்கிறது மார்கழி மஹா உற்சவம். இது பதினெட்டாவது வருடம். இந்திரா நகர் இளைஞர் விடுதியில் வளரும், வளர்ந்த கலைஞர்கள் என்று தினமும் இரண்டு கச்சேரிகள்.

இங்கு பாடிய அமிர்தா முரளிக்கு கடம் வாசித்த சந்திரசேகர சர்மா இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் கல்யாணம் முடித்தவர். முன்தினம் சென்னையில் வரவேற்பு. கச்சேரி மேடையில் புதுச்சட்டையில் மாப்பிள்ளை மிடுக்குடன் சர்மா. கணவரின் கடம் வாசிப்பு கேட்க பானை பிடித்த பாக்கியசாலி வந்தாரா என்பது தெரியவில்லை!

கச்சேரியில் அமிர்தா முரளி பாடியது ஆல் டமில் சாங்ஸ்! ராமசுவாமி சிவன், சுத்தானந்த பாரதி, முத்துதாண்டவர், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, ராமலிங்க அடிகளார் மாதிரியான தமிழ்க் காவலர்களின் பாடல்களைத் தலைகீழ் பாடமாகப் பாடினார் அமிர்தா.

சரிகமபதநி டைரி - 2017

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரக் கச்சேரியில், துவார பாலகர்கள் மாதிரி பின்னால் இரண்டு தம்புராக்கள் நிற்க, கொஞ்சமாக ராகம் பாடி, நிரவல் ஸ்வரங்களை அதைவிடக் கம்மியாகப் பாடி, அரைவயிறு நிரப்பி அனுப்பினார் அமிர்தா. முழுவயிறு நிரம்ப மியூசிக் அகாடமிக்குப் போக வேணும்!

இந்தமுறை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் ‘இசைப் பேரொளி’ விருதினை நூலிழையில் தவறவிட்ட அமிர்தா முரளிக்குப் பிடித்த ராகங்கள் தோடி, பைரவி என்பது கொசுறுத் தகவல்!

காஷ்மீர் ஆப்பிள் மாதிரி நிறைய மொபைல் ஆப்ஸ் இன்று பாட்டுலகில் கடைவிரிக்கப்பட்டு வருகிறது.  இவற்றுக்குக் கொள்வார் இருப்பதாகவே தகவல்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன், ‘பாலம் ரேடியோ’ என்றொரு ஆப் அறிமுகப்படுத்தினார், முத்ரா பாஸ்கர். தினம் 24 மணி நேரமும் பாடும் ரேடியோ இது. எப்போது உள்ளே போனாலும், தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன், ஹைதராபாத் சகோதரர்கள், ஓ.எஸ்.அருண், விட்டல் ராமமூர்த்தி போன்ற பிரபலங்கள் பாடிக்கொண்டும், இசைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ராத்திரி தூக்கம் வரவில்லையென்றால் மாத்திரைக்குப் பதில் இந்த ரேடியோவைப் போட்டுவிட்டுக் கண்களை மூடினால் நித்திரை நிச்சயம்!

பாடகர் பாலக்காடு ராம்பிரசாத் (மேதை பாலக்காடு மணி ஐயரின் பேரன்) பெரிய படிப்பாளி. ஹார்வேர்டில் படித்துப் பட்டங்கள் பல பெற்றவர். நமது கலாசாரத்திலும் பாரம்பர்யத்திலும் கால் அழுந்தி நிற்பவர்.
இசைமீது மோகம் கொண்ட வாணிபிரியாவின் Zeekh App உள்ளே புகுந்து, ‘மணிப்பிரவாகம்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராம்பிரசாத். காலத்தால் நிலைத்து நிற்கும் ‘அரியக்குடி பாணி’யில் கச்சேரியை அமைத்துக் கொள்வதை வலியுறுத்துவது இந்த அம்சத்தின் அடிப்படை.

எந்தப் பாடகரும் தான் ஒவ்வொரு கச்சேரியில் பாடிய பாடல்களின் பட்டியலை இதில் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்த கச்சேரியில் ரிபீட் ஆவது இதனால் தவிர்க்க இயலும். அதே மாதிரி ஒரே சாயலில் இரண்டு ராகங்கள் தேர்வாகியிருந்தால் மணிப்பிரவாகம் மணி அடித்து எச்சரிக்கும்.

ரசிகர்களும் இந்த App-ஐப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே பாடகருக்கு தங்கள் ‘விஷ் லிஸ்ட்’டைத் தெரிவிக்கலாம். பாதிக் கச்சேரியில் ‘எப்போ வருவாரோ’ என்று துண்டுச்சீட்டில் எழுதி மேடைக்கு அனுப்ப வேண்டாம்!

கவர்னரின் தலைமையில் பிரம்மகான சபா துவக்க விழா அநியாயத்துக்கு கச்சிதம்! விருது பெற்ற நால்வர் சார்பாக ஏற்புரைத்த டி.வி.கோபாலகிருஷ்ணனும், வாழ்த்திய உமையாள்புரம் சிவராமனும் நேரத்துக்குக் கட்டுப்பட்டு உரையை அடக்கி வாசித்தார்கள். ‘நாட்டிய பத்மம்’ விருது வாங்கிய நந்தினி ரமணியைப் பாராட்டிய ஊர்மிளா சத்யநாராயணன், ‘`அவருடைய ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்த்தால் நூறு வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு சமம்...” என்றார். சூப்பர் ஸ்டாரின் ரசிகையோ ஊர்மிளா?!

இவ்விடத்தில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. நான்கு பேரிடம் விசாரித்த வரையில், இவர் கடந்த ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரையில் 100 கச்சேரிகள் பாடியிருக்கிறாராம். இவற்றில் வெளி நாடுகளில் பாடிய கச்சேரிகளும் அடக்கம். இந்த டிசம்பரில் மட்டும் ஈரேழு இடங்களில் பாடுகிறார். சக்கைப்போடு போடு ராஜா!

சரிகமபதநி டைரி - 2017

உயர்ந்த இடம் நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் பாலமுரளி, ஆரம்ப சக்ரவாகம் ராகத்திலேயே சங்கதிகளை உருட்டி விளையாடியது சிறப்பு! ‘ரன்னிங் நோஸ்’ இருந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அவர்!

கேட்டு மகிழ சுகமான ராகம் ஹேமவதி. (தீட்சிதர் சிலபஸ்ஸில் இது தேஷிஸிம்ஹாரவம்) இதைப் பாடிய போது பரம சுகம் தந்தார் பாலமுரளி. மூன்று ஸ்தாயி பயணமும் நாகஸ்வர சங்கதிகளுடன், செம ஏற்ற இறக்கங்களுடன் வழுக்கிச் சென்றன. ஹேமவதியைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றவர், பாதிவழியில் தர்மவதியுடன் ஓடிவிடாமல் அறம் காத்தார்! ‘ஸ்ரீகாந்திமதீம்’ பாடலும், ஸ்வரங்களும் கூடுதல் போனஸ். டெல்லி சுந்தரராஜன் வயலினில் ஹேமவதியுடன் குழைந்தார்!

பாட்டுக்கு வாசிக்கும்போது, அங்கங்கே பாடகரின் குரலை லேசாக அமுக்கினாலும், ‘தனி’யின் போது பிய்த்து உதறிவிட்டார் திருவாரூர் பக்தவத்சலம். கஞ்சிரா புருஷோத்தமனும் உடன் சேர்ந்துகொள்ள, பத்தாயிரம் வாலா பட்டாசுதான்!

பாலமுரளியிடம் குறையே கிடையாதா என்று கேட்பவர்களுக்கு - அவர் சட்டையின் மேல் பட்டனைப் போடுவதில்லை என்பதை வேண்டுமானால் சொல்லலாம்!

- டைரி புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism