Published:Updated:

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

வி.எஸ்.சரவணன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

வி.எஸ்.சரவணன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

ப்போதும் சிரித்த முகம் சிவகாமிக்கு. ஒரு நிமிடம்கூட ஓய்வை விரும்பாதவளைப் போலத் துறுதுறுவென இருக்கும் சேட்டைக்காரிக்கு வயது 11. கற்றுக்கொடுப்பதை விரைவாக மனதில் பதித்துக்கொள்வாள். ஏதேனும் ஒரு பாடலை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டிருப்பாள். எந்த விளையாட்டானாலும் சரி, முதல் ஆளாய்த் தன் பெயரைத் தருவாள். பார்த்தவுடனே ஒட்டிக்கொள்ளும் பழகும் தன்மை கொண்டவள். சிவகாமியைப் பற்றிப் படிக்கையில் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதா? நிச்சயம் பார்க்கலாம். பசுமை சூழ்ந்த அந்தியூர், பர்கூர் பகுதி மலைக்கிராமம் ஒன்றில் பாடிக்கொண்டே ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறாள் சிவகாமி. ஆமாம்... சிவகாமி மட்டுமன்றி அவள் தோழிகளும் ஆடு மாடுகள்தான் மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மலைக் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கு இன்றுவரை சரியான கல்வி சென்றுசேரவில்லை என்பதற்கு உதாரணம்தான் சிவகாமி.  மலை என்றால் பசுமையும் குளிரும் மட்டும்தானே நம் நினைவுக்கு வரும். ஆனால், அங்கு வாழ்பவர்கள், அதிலும் குழந்தைகள் கல்வி பெறுவதில் பெரும் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.

மாணவரின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் தொடக்கப்பள்ளி அமைந்திருக்க வேண்டும் என்பதே கல்வி உரிமைச் சட்டத்தில் முதன்மையான விதி. அந்த விதி சமவெளியில் நடைமுறையில் இருக்கிறதா இல்லையோ, மலைப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், மேடும் பள்ளமுமாக, அடிக்கடி மழை பெய்து மண் சரிகிற பகுதி என்பதால், குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று திரும்ப, அண்மைப் பள்ளிகள் அவசியம்.

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

நான் முதலில் சென்றது கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திலிருக்கும் விளாங்கோம்பை கிராமத்துக்கு. டி.என். பாளையம் எனும் ஊரிலிருந்து பிரிந்து சுமார் 12 கிலோமீட்டர் செல்ல வேண்டும். குண்டேரி பள்ளம் அணையிலிருந்து பிரியும் சாலை எட்டு கிலோமீட்டருக்குக் காட்டுக்குள் செல்கிறது. இந்தத் தொலைவை நடந்து அல்லது இரு சக்கர வாகனத்தில்தான் கடக்க வேண்டும். எப்போதோ போடப்பட்ட தார்ச்சாலை, இடையிடையே மட்டும் தன் முகத்தைக் காட்டுகிறது. பெரியதும் சிறியதுமான நான்கு ஆறுகள் குறுக்கிடுகின்றன. வழியில் பல இடங்களில் யானை தின்றுவிட்டுப் போட்டிருக்கும் மூங்கில் மரங்கள் கிடக்கின்றன. சிறுத்தைகளையும் அடிக்கடி பார்க்க முடியுமாம். சாகசப் பயணத்துக்குப் பின் அழகான விளாங்கோம்பை கிராமத்துக்குள் நுழைந்தேன்.

46 குடும்பங்கள் இருக்கும் இந்தக் கிராமத்தில் ரேஷன் கடை, மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. ‘சுடர்’ என்ற அமைப்பின் முயற்சியால் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி இருக்கிறது. அதில் ஆசிரியராகப் பணிபுரியும் கேசவனிடம் பேசினேன். ``இந்தப் பள்ளி தொடங்கப்படுவதற்கு முன் ஒரு வேன் மூலம் மாணவர்களை, வினோபா நகர் பள்ளிக்கு அழைத்துச்சென்று, திரும்பக் கொண்டுவந்து விட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருநாள் ஏற்பட்ட விபத்தில் ஒரு பையனுக்கு அடிபட்டுவிட்டது. ‘எங்க புள்ளைங்க படிக்காட்டாலும் பரவாயில்ல, உசுரோட இருந்தா போதும்’ என்று பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். 2007-ல் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. நான் நான்கு வருடங்களாக இங்கே வேலைபார்த்துவருகிறேன். இப்போதைக்கு 23 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் ஒருசிலர் தொடர்ச்சியாகப் பள்ளி வருவதில்லை. அப்பா, அம்மாவோடு வேலைக்குப் போய்விடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

தினமும் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்குச் சென்று அவர்களை அழைத்துவர வேண்டும். நான் அழைக்கப் போகவில்லை என்றால் பள்ளிக்கு லீவு என்று நினைத்துவிடுவார்கள். அதனால்தான் நான் இங்கேயே தங்கிவிடுகிறேன்” என்கிறார். கேசவனைப் பார்க்கும்போது ஆசிரியருக்கான தோற்றமே இல்லை. அந்த ஊரில் ஒருவரைப்போல மாறியிருந்தார். குழந்தைகள் அவர்மீது ஏறி, விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஊர் மக்களின் பிரதானமான கோரிக்கைகள் இரண்டு. வீட்டுப் பட்டா மற்றும் ஊரைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி. ஏனெனில், ஊருக்குள் அடிக்கடி யானைகள் வந்துவிடுகின்றன. பள்ளியின் முன்னிருக்கும் தண்ணீர்த் தொட்டியின் குழாய்களை யானை உடைத்திருந்ததைப் பார்த்தேன். அதேபோல, பள்ளிக்கென்று நஞ்சில்லாக் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கும் இடத்திலும் யானையின் கால் தடங்கள் இருந்தன.

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

அடுத்து, அந்தியூரிலிருந்து தாமரைக்கரை ஊரைக் கடந்து, பல இடங்களில் செங்குத்தான சாலைகளைக் கடந்து, அக்னிபாவி எனும் மலைக் கிராமத்தை அடைந்தேன். மழை தூற, ‘ஹோய்’ என்ற மகிழ்ச்சிக் கூச்சல்களுக்கு இடையே பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் சோமசுந்தரம்.

``ரோபோட்டிக்ஸ் படித்திருக்கிறேன். கேசவன்தான் கொங்காடை பகுதியில் பணி இருப்பதாகச் சொன்னார். செல்போன் டவர் இல்லாத ஊருக்குச் செல்வது அதுவே முதன்முறை. முதல்நாள் இரவுப் பள்ளியில் தங்கியிருந்தபோது, அரிசி மூட்டையும் இருந்ததால் எலிகள் என்னை ஒரு வழி பண்ணிவிட்டன. பிறகு இந்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள். இந்தக் குழந்தைகளோடு பழகப் பழக இந்த இடத்தை விட்டுப் போக மனசு வரவில்லை” என்கிறார்.

அக்னிபாவி பள்ளிப் பகுதியில் தூர தூரமாகத்தான் வீடுகள் இருக்கின்றன. மேடும் பள்ளமுமாக இருக்கும் அந்த இடத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆசிரியர் சென்று குழந்தைகளை அழைத்துவந்து பள்ளியைத் தொடங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆனால், பள்ளியின் ஆசிரியர்கள் தினந்தோறும் சளைக்காமல் இதைச் செய்கிறார்கள்.

சிவகாமிகள் இன்னும் ஆடுதான் மேய்க்கிறார்கள்!

அக்னிபாவி மட்டுமன்று, கொங்காடை, போரே தொட்டி, எஸ்.டி.காலனி, சுண்டைப்போடு உள்ளிட்ட பள்ளிகளிலும் இதே நிலைதான். இந்தப் பள்ளிகள் அனைத்தும் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளே. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் பள்ளியிலேயே தங்கி, அந்த மக்களோடு ஒருவராக வாழ்ந்துவருகின்றனர். மாணவர்களும் விளையாட்டோடு படிப்பையும் கற்றுவருகின்றனர்.

சரி, சிவகாமி ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதற்கு வருவோம். சிவகாமி பிறந்த சில வருடங்களிலேயே அவளின் பெற்றோர் இறந்துவிட்டனர். இப்போது வயதான தாத்தா பாட்டியின் கவனிப்பில் இருக்கிறாள். வீட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஆடு மாடுகளை வளர்த்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு. அந்தச் சூழலிலும் படிக்க ஆசைப்படுகிறாள். எனவே, அவற்றையெல்லாம் சமாளித்து, பள்ளிக்குக் கிளம்ப நினைத்தால், பள்ளி எங்கே? அப்படியே இருந்தாலும், அதைச் சென்றடைவது எப்படி? அந்தப் பகுதியில் ஏராளமான சிவகாமிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி சேர முடியாமல் தடுக்கும் காரணங்களைத் தகர்க்கவேண்டியது அரசின் கடமை!

மலைப்பகுதிக் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம்!

கல்வித் திட்டங்களை உருவாக்கும்போது மலைப்பகுதிக் குழந்தைகளுக்கு எனச் சிறப்புத் திட்டம் கொண்டுவர வேண்டும். அதில் அவசியமாக இருக்க வேண்டியவை எனக் கல்வியாளர்கள் முன் வைப்பவை...

* இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாழிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொடக்கப்பள்ளி எனும் விதியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அது நடுநிலைப் பள்ளியாக இருந்தால் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பெறுவர். இப்போது நடுநிலைப் பள்ளிகளாக இருப்பவற்றை உயர்நிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.

இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களாக, அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்ட, ஆர்வமிக்கவர்களை நியமனம் செய்ய வேண்டும். மலைப்பகுதிக்கு என ஆசிரியர் தேர்வு தனியே நடத்தப்பட வேண்டும்.

மலைப்பகுதிக்கு, சமவெளிக்கு என்ற பார்வையோடு தனிப் பாடத்திட்டம் வேண்டும்.  மலைப் பகுதிக்கான கல்வியில் எவையெல்லாம் அமைய வேண்டும் என்பதைக் கல்வியாளர்கள், மலைப்பகுதியில் பணியாற்றுபவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட குழு வரையறை செய்ய வேண்டும்.

நான்கு பக்கச் சுவர்கள் என்ற வழக்கமான கட்டடமாக இல்லாமல், மலைப்பகுதிக்கேற்ற பிரத்யேக முறையில் கட்டடம் கட்ட வேண்டும்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகேயே தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்கள் வந்துசெல்ல போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும்.

இங்கே வசிப்பவர்களுக்குச் சாதிச் சான்றிதழை `ஆர்.டி.ஓ’தான் வழங்க முடியும் என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு முகாம் அமைத்து சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் கல்வி மையங்களில் 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு 6,000 ரூபாயும் மாநில அரசு 500 ரூபாயும் சம்பளமாக வழங்குகின்றன. மத்திய அரசின் தொகை 1,500 ரூபாயிலிருந்து படிப்படியாக தற்போது 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு தொகையை உயர்த்தவேயில்லை. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அரசு 150 ரூபாய் உதவித்தொகையாக அளித்துவருகிறது.

லைப்பகுதிகளில் நடைபெறும் திருமணங்களில் 80% குழந்தைத் திருமணங்களே. கல்வியின்மையின் மற்றோர் அபாய விளைவு இது.

கல்வியில் முன்னோடி மாவட்டமான ஈரோட்டின் மறுபக்கம்!

``10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாவட்டமாக ஈரோடு இருந்துவருகிறது. இதனால், கல்வியில் முன்னோடி மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மறுபக்கம், எழுத்தறிவில் பின்தங்கிய ஐந்து மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. தமிழக அளவில் கல்வியில் பின்தங்கிய 15 ஒன்றியங்களில் தாளவாடி, சத்தி, அந்தியூர், நம்பியூர் என நான்கு ஊர்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன. இந்த முரண்பாடு ஏன்? மலைப்பகுதிக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்காததே காரணம்.

மலைவாழ் மக்களுக்குக் கல்வி சேரவில்லையென்றால் மூன்று பெரிய பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவது, குழந்தைத் திருமணங்கள், மற்றும் வெளியுலகத் தொடர்பில்லாததால் எளிதில் கொத்தடிமையாகச் சென்றுவிடும் அபாயம். அதைத் தடுக்கும் கடமை அரசுக்கு உண்டு’’ என்கிறார்  `சுடர்’ அமைப்பின் நடராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism