Published:Updated:

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’
பிரீமியம் ஸ்டோரி
``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: க.விக்னேஷ்வரன்

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: க.விக்னேஷ்வரன்

Published:Updated:
``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’
பிரீமியம் ஸ்டோரி
``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

``சில வருடங்களுக்கு முன்னர் கைதிகளுக்கு கவுன்சலிங் கொடுப்பதற்காக மைசூரு சிறைக்குச் சென்றிருந்தபோது, வயதுமுதிர்ந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். சந்தர்ப்பச்சூழலால் குற்றம் செய்து, ஆயுள்தண்டனைக் கைதியாகத் தீர்ப்பெழுத்தப்பட்டவர். தன் வாழ்வின் அதிமுக்கியமான காலகட்டங்களைச் சிறையில் கழித்துவிட்ட கவலையும், தன் கடைசிக்காலம் எப்படி இருக்கும் என்ற பயமும் ஒருசேரப் படர்ந்திருந்த அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. `மாசம் 150 ரூபாய் எனக்குக் கிடைச்சாப்போதும்.  நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. `150 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். `எனக்கு இரண்டு பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தன் அம்மாவோடு அவ்வப்போது வந்து என்னைச் சிறையில் பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு  இதுவரை நான் எதுவுமே செய்தது கிடையாது. அவர்களுக்கு  மிட்டாய் வாங்கிக் கொடுக்க எனக்கு  அந்தப்  பணம் தேவை’  என்று அவர் சொன்னபோது, நான் அதிர்ந்துபோனேன். அதன் பிறகு இப்படியான நிறைய கைதிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் சிறைக்கைதிகளுக்கு வெறும் கவுன்சலிங் மட்டும் போதாது என்பது புரிந்தது. கவுன்சலிங் கொடுக்கும் வேலையை விட்டுட்டு, கைதிகளுக்கு வேலை கொடுக்க முடிவெடுத்தேன்’’ என்று பீஸ் கபாய் சொல்ல, கோவை சிறைக்கைதிகள் தயாரித்து அனுப்பியிருக்கும்  கைவினைப்பொருள்களைப் பிரித்துக் காட்டியபடி புன்னகைக்கிறார் அவர் மனைவி  அனிக் கபாய்.

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

பீஸும், அனிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த காதல் தம்பதி. இப்போது, தங்களுடைய  இரண்டு குழந்தைகளுடன் ஊட்டியில் வசிக்கிறார்கள். கோவை மற்றும் மைசூரு  சிறையில் இருக்கும் கைதிகளுக்கு, பழைய பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்கள் தயாரிக்கச் சொல்லிக்கொடுப்பதும், கைதிகள்  தயாரித்துத் தரும் பொருள்களை மெருகேற்றி விற்பனை செய்வதும், அதில் கிடைக்கும் பணத்தில் பங்கை, கைதிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துவதும்தான் இவர்களின் வேலை. நாம் வேண்டாம் எனத் தூக்கி வீசிய பேப்பரில் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள், பழைய துணிகளில் தைக்கப்பட்ட  மாடல் பேக்குகள், பழைய டயர்களில் செய்யப்பட்ட அழகான சேர் மற்றும் டீப்பாய்கள் என, கலர்ஃபுல் கைவினைப்பொருள்கள் பீஸ் கபாயின்  வீடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. 

பீஸ் - அனிக்  இருவரின் பேச்சிலும் ஒட்டியிருந்த  அன்பின் ஈரத்தை, ஊட்டியின் கடுங்குளிரையும் தாண்டி உணர முடிந்தது.  ``மணிப்பூரில் உள்ள தங்கூல் நாகா என்கிற மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.  மணிப்பூரில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடந்த நான் அதிலிருந்து மீண்டு, நான்கு வருடங்கள் சிகிச்சைபெற்ற மறுவாழ்வு மையத்திலேயே பணியாற்றினேன்.  அப்போதுதான்  டி.பி நோயாளிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்காக, டெல்லியில் தங்கிப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.  சந்தோஷம் பொங்க டெல்லிக்கு வந்த எனக்கு, செம சர்ப்ரைஸ்!  நான் வேலை செய்யவேண்டிய குழுவில்  என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் என் பால்ய தோழியுமான அனிக் இருந்தாள்’’ அதற்குமேல் அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தை கிடைக்காமல் பீஸ் தடுமாற...

அனிக் ஆரம்பித்தார், ``எனக்கு பயங்கர ஷாக்.  போதைக்கு அடிமையாகி, அம்மாவுக்கு அடங்காமல் திரிந்துகொண்டிருந்த பீஸ், சமூகசேவகனாக என் முன்னாடி வந்து நின்றபோது  என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. நடந்ததை எல்லாம் விரிவாக பீஸ் சொன்னார்.  இருவரும் காதலித்தோம், திருமணம் செய்துகொண்டோம்.  குழந்தை பிறந்தது. அந்தச் சூழலில் என்னால் அலைந்து திரிந்து  வேலை செய்ய முடியவில்லை.  ஊட்டியில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கான  மறுவாழ்வு மையத்தில் உள்ள பெண்களுக்கு  கவுன்சலிங் கொடுக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. எனக்காக பீஸும் தன் வேலையை விட்டுவிட்டு, ஊட்டியில் உள்ள `ஆல்ஃபா’ தொண்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

ஆல்ஃபாவில் அவருக்கு, சிறைக் கைதிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கும் வேலை. தென்னிந்தியா முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு கவுன்சலிங் கொடுப்பதற்காகப்  புறப்பட்டார்  பீஸ். நான் ஊட்டியிலேயே இருந்து பாலியல் தொழிலாளிகளுக்கு கவுன்சலிங் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பீஸ் வீட்டுக்கு வரும்போதும், தான் சந்தித்த கைதிகளின் கதைகளை எனக்குச் சொல்வார். அது என்னை வெகுவாக பாதித்தது.

சந்தர்ப்பச்சூழலால் குற்றவாளிகளானவர்கள், தண்டனை அனுபவித்துத் திருந்தி வெளியில் வந்தாலும், இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சிலர் சொந்த வீடுகளிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எங்கும் வேலை கொடுப்பதில்லை. அதனால் 90 சதவிகிதக் கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சிறைக்குச் செல்கிறார்கள். பல கைதிகள், வெளியே சென்று என்ன செய்வது எனத் தெரியாத பயத்திலேயே விடுதலையை விரும்புவதில்லை. உள்ளுக்குள் இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என நீளும்  சிறைக்கைதிகளின் துயரம், பீஸ் மூலமாக எனக்கு ஆழமாகப் புரிய ஆரம்பித்தது. `அன்பும் அரவணைப்பும் சுத்தமாக அறுந்துபோன சிறைக் கைதிகளுக்கு நாம் உதவ வேண்டும்’ என பீஸும் விரும்பினார். 

பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு மையத்தில் நான் கற்றுக்கொண்ட க்ராஃப்ட் வேலைகளைக் கைதிகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம் என முடிவெடுத்தோம். பீஸ் வேலை பார்த்த நிறுவனத்தில் கவுன்சலிங்குக்கு மட்டும்தான் அனுமதி. ஊர்  ஊராகப் போய்கொண்டே இருக்க வேண்டும்.  அது அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. நாங்கள் இருவருமே எங்களின் வேலையை விட்டுட்டு,  சிறைக் கைதிகளுக்கு  க்ராஃப்ட்  செய்யக் கற்றுக்கொடுத்தோம்.  மெட்டீரியல்ஸ் வாங்கப் பெரிய முதலீடு தேவைப்படும். அப்படியே முதலீடு செய்தாலும், போட்ட பணம் முழுவதும் கிடைத்துவிடும் என  உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகையால், பழைய பொருள்களில் க்ராஃப்ட் செய்வது எப்படி என்பதை முதலில்  நாங்கள் கற்றுக்கொண்டோம். பழைய பொருள்களை ரீசைக்கிள் செய்து நிறைய பொருள்களை உருவாக்கினோம். அதன் பிறகு, அதைக் கைதிகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம்.

``குற்றவாளிகளை மீண்டும் குற்றவாளிகளாக்கக்கூடாது!’’

இதுவரை மைசூரு சிறை, கோயம்புத்தூர் சிறை இரண்டிலும்  சேர்த்து 70-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுக்குக் கைவினைப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுத்துள்ளோம். வேஸ்ட் மெட்டீரியல்ஸ் அனுப்பிவிட்டால் போதும், அதில் என்ன பொருள் செய்ய முடியுமோ அதைச் செய்து வைத்துவிடுவார்கள். அந்த எழுபது கைதிகளும் எங்களைப் பார்த்தால், பயங்கர சந்தோஷமாகிவிடுவார்கள். இத்தனைக்கும் நாங்கள் அவர்களுடைய மொழி பேசவில்லை, நாங்கள் பார்ப்பதற்கு அவர்களைப்போல் இல்லை. ஆனாலும், எங்களை அவர்களோடு பிணைத்துவைத்திருப்பது அன்பு மட்டும்தான்’’ என்று நெகிழ்கிறார் அனிக் கபாய்.

 “எதிர்காலத்தில், இதை எல்லாச் சிறைக் கைதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றபடி முடிக்கும் இருவரின் சிரிப்பிலும் பேரன்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism