Published:Updated:

சாதி வெறி சாதித்தது என்ன?

சாதி வெறி சாதித்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
சாதி வெறி சாதித்தது என்ன?

சுகுணா திவாகர், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சாதி வெறி சாதித்தது என்ன?

சுகுணா திவாகர், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
சாதி வெறி சாதித்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
சாதி வெறி சாதித்தது என்ன?

ட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த படுகொலை... ஜாமீனே இல்லாமல் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை... ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை என சங்கர் - கெளசல்யா ஆணவக்கொலை வழக்கு தமிழ்நாடே பேசும், விவாதிக்கும், கருத்து மாறுபடும் ஒன்றாகியிருக்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது கெளசல்யாவின் துணிச்சல். தன் காதல் கணவனைச் சாதிவெறிப் படுகொலைக்குப் பலி கொடுத்தபிறகு அவர் விரக்தியில் ஓய்ந்துவிடவில்லை. சங்கரின் குடும்பத்தையே தன் குடும்பமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் வாழ்ந்துகாட்டுகிறார். அதேநேரத்தில் சங்கர் படுகொலைக்குக் காரணமான தன் பெற்றோர் உட்பட உறவினர்களுக்கு எதிரான சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டார். இதைத் தனிப்பட்ட இழப்பாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இதற்கு அடிப்படையான சாதியை ஒழிப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருவேளை இந்தப் படுகொலை நடக்காமல் இருந்திருந்தால் கெளசல்யாவும் ஒரு சராசரிப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். ஆனால், அவரை அரசியல் உணர்வுகொள்ள வைத்ததும், போராளி ஆக்கியதும் சங்கரின் படுகொலைக்குக் காரணமான சாதிவெறிதான். தன் கணவனின் மரணத்துக்கு நீதி கேட்ட கண்ணகியை நாம் படித்திருக்கிறோம்; கெளசல்யாவை நாம் பார்க்கிறோம், பாராட்டுகிறோம். கெளசல்யாவுக்குத் துணைநின்ற முற்போக் காளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பாராட்டத்தக்கவர்கள்.

சாதி வெறி சாதித்தது என்ன?

1917-ல் வெளியான அம்பேத்கரின் முதல் புத்தகம் ‘இந்தியாவில் சாதிகள்.’ சாதி எப்படித் தோன்றியது என்பதைப் பல ஆய்வுகளுடன் விளக்கும் அம்பேத்கர், இறுதியாக ‘சாதி தோன்றியதற்குக் காரணம் அகமணம் எனப்படும் ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணமே’ என்பதை நிறுவுவார். அம்பேத்கரின் புத்தகம் வெளியாகி, நூறு ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் சாதிமறுப்புத் திருமணத்தைக் கொலைகளின் வழியாக எதிர்கொள்ளும் சமூக அவலத்தை என்னவென்பது?

சங்கர் கொலைவழக்கில் தீர்ப்பு வந்தபோது சமூகவலைதளங்களில் எழுதப்பட்ட பல கருத்துகள், நாம் இன்னும் நவீனமாகவில்லை என்பதற்கான சான்றுகள். கொலைக் குற்றவாளிகளைத் தியாகிகளாகச் சித்திரித்த பலர், கெளசல்யாவையும் ‘பெற்றோர் சாவுக்குக் காரணமானவள்’ என்று திட்டிக்குவிக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், கெளசல்யாவைக் கொச்சைப்படுத்தவும் பலர் தயங்கவில்லை. நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டபோது அதற்காகக் கண்ணீர் சிந்தியவர்கள், கண்டனங்களை முன்வைத்தவர்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் செய்தி கேட்டுத் தன் துயரங்களைப் பகிர்ந்துகொள்பவர்களில் மேற்கண்டவர்களும் அடக்கம். ஆனால், தன் கணவனைப் படுகொலைக்கு இழந்த கெளசல்யாவின் துயரை ஏன் இவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை? வீரத்தைத் தங்கள் சாதிக்கே உரிய குணாம்சமாக முன்னிறுத்துபவர்கள், மன உறுதியுடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்டப்போராட்டத்தை மேற்கொண்ட கெளசல்யாவை ஏன் இவர்களால் வீரப்பெண்ணாகப் பார்க்கமுடியவில்லை? பட்டப்பகலில் நடந்த ஒரு படுகொலையை இவர்களால் எப்படிக் கொண்டாட முடிகிறது? எல்லாவற்றுக்கும் காரணம் சாதிமனநிலை என்றால் அதைவிடவும் ஆபத்தான ஒன்று இருக்கிறதா என்ன?

கெளசல்யாவைக் கொச்சைப்படுத்தியும் ஆணவக்கொலைக் குற்றவாளிகளைத் தியாகிகளாகச் சித்திரித்தும் சமூகவலைதளங்களில் எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டவர்கள் அல்லர். சொந்தப்பெயருடன் தங்கள் புகைப்படங்களுடன்தான் சட்டவிரோத வாசகங்களை எழுதுகிறார்கள். மோடியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் சமூகவலைதளங்களில் அவதூறு செய்துவிட்டார்கள் என்று கைதுகள் நடக்கின்றன. ஆனால், வெளிப்படையாகச் சாதிவெறியைத் தூண்டும், கொலைகளை நியாயப்படுத்தும் இவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? ‘`தமிழகத்தில் கௌரவக்கொலைகளே இல்லை” என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையிலேயே தெரிவித்தார். அந்தத் தவற்றுக்கான பரிகாரமாகவாவது, சமூகவலைதளங்களில் சாதிவெறிக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு குடும்பப்பிரச்னையாக மட்டுமே இருந்த சாதி மறுப்புத் திருமணங்களைத் தமிழகம் தழுவிய பிரச்னையாக மாற்றுபவர்கள், ஆதிக்கச்சாதிக் கட்சித் தலைவர்கள். உண்மையில் இவர்களுக்குச் சொந்தச் சாதியில்கூடப் பெரிய செல்வாக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் தனித்து நின்று, கணிசமான வாக்குகளைப் பெற்று வென்றதாகவும் வரலாறு இல்லை. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய அரசியல் இயக்கங்கள் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்காக இவர்களைக் கூட்டணியில் இணைத்துக்கொள்வதால்தான் முக்கியத்துவம் பெறுகிறார்கள். பெரும்பாலான சாதித்தலைவர்கள் தங்கள் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளவும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்யவும், இழந்த செல்வாக்கை மீட்டுக்கொள்ளவும்தான் சாதியைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பெரிய அரசியல் இயக்கங்கள் இவர்களைப் புறக்கணித்துத் தனிமைப்படுத்துவதன் மூலம் இவர்களது செல்வாக்கைக் குறைக்கலாம்.

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் என்பது அவசியம். அதேபோல் கேரள அரசு சமீபத்தில் அறிவித்துள்ளதைப்போல, ‘சாதியற்றோருக்கான இட ஒதுக்கீட்டை’த் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். இப்படியான சட்ட நடவடிக்கைகள் அவசியமானவை என்றபோதிலும் கருத்தியல்ரீதியிலான மாற்றங்களும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதி வெறி சாதித்தது என்ன?

குறிப்பாகத் தமிழ் சினிமாக்கள் எவ்வளவு அபத்தமானவையாக இருந்தபோதும் தொடர்ச்சியாகச் சாதிக்கு அப்பாற்பட்ட காதலைப் பேசிவந்திருக்கின்றன. ஆனால், சமீபகாலமாகத் தமிழ் சினிமாக்கள் ‘காதலை’க் கைவிட்டுவிட்டன என்றே சொல்லலாம். சாதிப்பெருமிதம் பேசும் சினிமாக்களின் வருகைக்குப் பிறகு ஒரே சாதிக் காதல், சொந்தங்களுக்குள் காதல் என்று பேசும் சினிமாக்கள் அதிகரித்திருக்கின்றன. காதலுக்கு எதிரியாகச் சாதியையும் சாதியைக் காப்பாற்றும் பெற்றோர்களையும் காட்டிய சினிமாக்கள் முற்றிலுமாக இல்லாமல்போய், பெண்களையே காதலித்து ஏமாற்றுபவர்களாகச் சித்திரிக்கும் அபத்தமான போக்கு தமிழ் சினிமாக்களில் அதிகரித்திருக்கிறது. தலித் வாழ்வியலை முன்வைத்த ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, வெளிப்படையாகவே சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்த ‘மாவீரன் கிட்டு’, சங்கர் படுகொலையைக் காட்சியாகவே வைத்த ‘மகளிர் மட்டும்’  போன்ற படங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், தமிழ்க் கலைஞர்கள் கூடுதலான சமூகப்பொறுப்பு உணர்வுடன் இயங்கவேண்டியது அவசியம்.

பெரியார் காலத்தில் சாதிமறுப்புத் திருமணங்கள் செய்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகவே முன்வைத்தனர். ஆனால் இப்போது பல முற்போக்கு இயக்கங்களே சாதிமறுப்புத் திருமணங்களைக் கைவிட்டுவிட்டன. இடதுசாரி இயக்கங்கள், பெரியாரியக்கங்கள், தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஆகியவற்றில் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் அல்லது தங்கள் குடும்பத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்களையே பொறுப்பாளர்களாக அறிவிக்கவேண்டும். கல்விமுறையிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டியது அவசியம். நமது பாடத்திட்டம் தீண்டாமையின் வரலாற்றை விளக்கும்வகையில் அமையவேண்டும். தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எப்படிப்பட்ட மனித விரோதச் செயல் என்பது பள்ளி அளவிலேயே உணர்த்தப்பட வேண்டும்.

‘கௌரவக்கொலை’ என்றழைக்கப்பட்ட வார்த்தை, ‘ஆணவக்கொலை’ என்று மாற்றப்பட்டு நிலைத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது வார்த்தைப் பயன்பாடு தொடர்பான மாற்றமாக மட்டுமில்லாமல் கருத்தியல் மாற்றமாகவும் இருக்கவேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism