Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்,பா.காளிமுத்து, க.பாலாஜி

சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்,பா.காளிமுத்து, க.பாலாஜி

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017
சரிகமபதநி டைரி - 2017

டிசம்பர் சீஸனில் அரங்கில் பாட்டு கேட்டுக்கொண்டே ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் லைவ் கச்சேரி அப்டேட்ஸ் கொடுப்பது இப்போது வைரலாகிவிட்டது. அதே ஸ்டைலில் ஒரு முயற்சி...

* நாரத கான சபா அரங்கில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் ஆதரவில் சஞ்சய் சுப்ரமணியன். தலைவா... கலக்கு!

* ஜெயித்திருந்தால் துணை ஜனாதிபதி ஆகியிருக்கக்கூடிய கோபாலகிருஷ்ண காந்தி, உள்ளே நுழைகிறார். கனிமொழி, முன்வரிசையில் உட்காரவைக்கப்படுகிறார். #கனிமொழி@கச்சேரி

* என் பக்கத்தில் சஞ்சய் சுப்ரமணியனின் தந்தை சங்கரன். மகன் பாடிக்கொண்டே இருக்க, இவர் `அப்படிப் போடு...’ `சபாஷ்...’ `பலே...’ எனப் பாராட்டிக்கொண்டே இருந்தார். `தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்ற குறள் நினைவுக்கு வந்தது. சஞ்சய், மங்களம் பாடி முடித்ததும் தலை குனிந்து, கண்கள் மூடி, இரு கரம் கூப்பி சில விநாடிகள் பிரார்த்தனை செய்தார் சங்கரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* அஷ்வின் - ஜடேஜா இல்லாத கோலி மாதிரி வரதராஜன், நெய்வேலி வெங்கடேஷ் இல்லாத சஞ்சய்! இன்று இளம் ஆர்.ராகுல் வயலின், நாஞ்சில் அருள் மிருதங்கம், ஆலந்தூர் ராஜகணேஷ் கஞ்சிரா.

* தர்பார் வர்ணத்தை அலட்டல், அலம்பல் இன்றி அமைதியாகப் பாடிவிட்டு, கேதாரத்தில் `மறவாதிரு மனமே...’ பாடல். தனக்காகவும் சஞ்சய் அதைப் பாடியிருக்கலாம். ஸ்ரீரஞ்சனி ஆலாபனை. பின்வரிசையில் ஆன்ட்டி ஒருவர் கூடவே பாடிக்கொண்டு வந்தார். சின்ன வயதில் வீட்டுக்கு வாத்தியாரை வரவழைத்துப் பாட்டு கற்றுக்கொண்டிருப்பவராக இருக்கும்.

* காதலை வளர்க்கும் கடைக்கண் பார்வை உடையவளும், காவிய நடையை ரசிப்பவளும், புன்முறுவல் தவழும் முகத்தைக்கொண்டவளுமான திருநெல்வேலி `பர்வதராஜகுமாரி பார்வதி...’ (தீட்ஷிதர்) பாடலை சஞ்சய் பாடி முடிக்க, அவர் பாட்டு மீது காதல்கொண்டவர்கள் பூரித்தார்கள்.

* #NowSinging தோடி. இதுமாதிரியான ராகங்கள் சஞ்சயின் கப் ஆஃப் டீ! கார்வைகள், கமகங்கள், பிருகாக்கள், வளைந்து நெளியும் சங்கதிகள், நாகஸ்வரப் பிடிகள் என சில மணித்துளிகளுக்கு சஞ்சய் மேஜிக்! ஆனால், இதைவிடப் பிரமாதமாக இதற்கு முன் இவர் தோடிக்குத் தோரணம் கட்டியதுண்டு.

* தியாகராஜரின் `பிருந்தாவன லோல...’ பாடலை நிரவல், ஸ்வரங்களுடன் சஞ்சய் பாடி முடித்ததும் `தனி’ விடுவார் என எதிர்பார்த்த பெருசுகளுக்கு `ரெஸ்ட் ரூம்’ போக முடியாத ஏமாற்றம்! சட்டென வாசஸ்பதிக்குத் தாவிவிட்டார் பாடகர்.

* ஆலாபனை முடிந்தது. இப்போது தானம். கோலிக்குண்டுகளை உருட்டிவிட்டதுபோல் சங்கதிகள். கொள்ளிடம் பாலத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஓடுவது மாதிரி ஸ்வரங்கள்.

* ஜி.என்.பி-க்கு, சிறுவயது லால்குடி வயலின் வாசித்த நாள்களை நினைவுபடுத்தியது, சஞ்சய் - ராகுல் காம்பினேஷன். பாடகரின் ஒவ்வோர் அடிக்கும் இவர் கொடுத்த பதிலடிகள் ஜோர்!

* மிருதங்கம், கஞ்சிரா தனி ஆவர்த்தனம் முடிந்து எழும்பிய ஆரவாரக் கைத்தட்டல்கள், சங்கீதத்தின் மேன்மைக்கு ரசிகர்கள்தாம் காரணம் என்பதற்குச் சான்று.

* மங்களம் முடிந்து, கொட்டகை காலியாகும் நேரம். `இன்னும் கொஞ்சம் வருடங்களுக்கு இந்தத் தமிழன்தான் ஆளப்போறான்...’ என்றபடியே கலைந்து சென்றனர் சிலர்!

சரிகமபதநி டைரி - 2017

ல்லூரி மாணவிகள் திரண்டு வந்திருந்தார்கள், சிக்கில் குருசரண் கச்சேரிக்கு, `விசுவாசம்’ அஜித் மாதிரி `சிக்’கென இவர் இருப்பது ஒரு காரணம் என்றால், கச்சேரி நடந்தது மீனாட்சி மகளிர் கல்லூரி வளாகத்தில் என்பது இன்னொரு முக்கியமான காரணம்.

கானடா வர்ணத்துடன் கடைவிரித்தார் குருசரண். மேடையேறிய நாள் முதல் சேதாரம் இல்லாமல் குரலைப் பாதுகாத்துவருபவர். அவசரமாக உச்சம் தொடும் வெறி இன்றி, நின்று நிதானித்துப் படிப்படியாக முன்னேறி வருபவர்.

சண்முகப்ரியா ஆலாபனை மெல்லிசை கலக்காத நல்லிசை. நழுவி விழும் நைஸான சங்கதிகள், பட்டணம் சுப்பிரமணியம் ஐயரின் `மரிவேர திக் எவரோ...’ கீர்த்தனை. இதில் அனுபல்லவியின் கடைசி வரி, `தய தேசி புரோச்சே தார நீவு காதா’ என்று முடியும். `நீவு கதா’ என்று குருசரண் பாடியதுபோல் காதில் விழுந்தது. வரியை ரிபீட் செய்தபோதும் அப்படியே. பாடகரின் உச்சரிப்பு தவறா அல்லது காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் yours truly போக வேண்டுமா?

பிலஹரி ஆலாபனையும் தியாகராஜரின் `தொரகுநா இடுவண்டி ஸேவ...’ கீர்த்தனையும் குருசரண் பாடியவிதம் அக்மார்க் சுத்தம்.

வயலின் ஷ்ரேயா தேவ்நாத்தின் வாசிப்பில், இளமை... இனிமை! பாடகர் 14 நிமிடம் பாடிய ஆலாபனையை, தன் முறை வந்தபோது 8 நிமிடத்தில் முடித்து, பக்கவாத்திய தர்மத்தை நிலைநிறுத்தினார், லால்குடி ஜெயராமனின் இந்தச் சீடர்.

தஞ்சாவூர் முருகபூபதி (மிருதங்கம்) அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா) வாசிப்பு, சுகமோ சுகம்!

சரிகமபதநி டைரி - 2017

முத்ராவில் Excellence award, மூத்த வயலின் கலைஞர் வி.வி.சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது. விருது வாங்கிய கையோடு மகன் வி.வி.எஸ். முராரியுடன் வயலின் டூயட். வழக்கம்போல் தொடக்க விழா முடியத் தாமதமானது. எனவே, ஒரு மணி நேரக் கச்சேரியாகச் சுருங்கிவிட்டது. (எந்த விழாவாவது குறித்த நேரத்தில் தொடங்கி, குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தால் தெருமுக்குப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு, அது இன்னும் நிறைவேறியபாடில்லை!)

வி.வி.எஸ். வயலினிலிருந்து `ச’ புறப்பட்டு வந்தால், அது அரங்கம் முழுக்க ஒலித்து எதிரொலிக்கிறது. சாகித்யம் வாசிக்கும்போது வயலின் பாடுவது போன்று பிரமை ஏற்படுகிறது. வில் பவர்!

தந்தையும் மகனும் கொடுத்த ஒன் பை டூ காபி, செம திக்! அதேபோல் மூன்று ஸ்தாயியிலும் தவழ்ந்த காம்போதி, நாற்பது வருடங்கள் பின்னோக்கி நேயர்களை அழைத்துச் சென்றது விந்தையடா! `ஓ ரங்க சாயீ...’யில் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் பூலோக வைகுண்டமாகி உளம் நெகிழவைத்தது.

வி.வி.எஸ். மாதிரியானவர்களின் வாசிப்புக்கு, ஒரு மணி நேரமெல்லாம் சோளப்பொரி!

பக்கவாத்தியமாக - ஸாரி - சத்த வாத்தியமாக திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம்! கஞ்சிராவில் கே.வி.கோபாலகிருஷ்ணன், குறை ஒன்றுமில்லை கோபாலா!

சரிகமபதநி டைரி - 2017

`சின்மயா சிஸ்டர்ஸ்’ என்று அறியப்படும். உமா, ராதிகா சகோதரிகளின் பாட்டு பாரதிய வித்யா பவனில். உஷா ராஜகோபாலன் (வயலின்), கணபதி ராமன் (மிருதங்கம்), ஏ.எஸ்.கிருஷ்ணன் (மோர்சிங்) கூட்டணி.
ரீதிகௌள ரா கத்தில் பாபநாசம் சிவனின் `தத்வமறியத் தரமா..!’ பாடல் தொடக்கத்தில் தரமாகவே இருந்தது. லேசான சாருகேசியின் சாயலில் ஸரசாங்கி பாடினார் ராதிகா. வயலினில் அந்நியச் சாயல் எதுவும் கேட்கவில்லை.

மத்யமாவதியை, உமா தனதாக்கிக்கொண்டார். தியாகராஜரின் `ராம கதா சுதா’ பாடலை நிரவல், ஸ்வரங்களுடன் இருவருமாகப் பாடி முடிக்க, மிருதங்கம் - மோர்சிங் `தனி’ ரொம்பச் சின்னதாக!

கச்சேரி சர்க்யூட்டில் இன்று நிறையவே சகோதரிகள் வலம் வந்தவண்ணம் இருக்கிறார்கள். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அளவுக்கு பலமான போட்டி. டெபாசிட் கிடைக்க, சகோதரிகள் நிறைய உழைக்க வேண்டும்!

நிற்க, பாடும் சகோதர-சகோதரிகள் எல்லோருமே கச்சேரிக்கு நடுவே தலை சாய்த்து, வாய் பொத்தி அவ்வப்போது என்ன பேசிக்கொள்வார்கள் என்று அறிய அவா! பின்னால் உட்காரும் தம்புராக் கலைஞர்களைக் கேட்கலாமா?

``அவர் கங்கை... நான் கங்கை சொம்பு...” என்றார் ஓ.எஸ்.தியாகராஜனின் மனைவி. காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் முன்னிலையில் தியாக பிரம்ம கான சபாவின் `வாணி கலா சுதா’ விருதை கணவரின் சார்பில் பெற்றுக்கொண்டபோது ஏற்புரையில் மனைவி சொன்னது இது!

அன்றைய தினம் கங்கைக்கு, காவேரி ஓடும் கர்நாடகாவில் கச்சேரி. எனில், அங்கே கச்சேரிக்கு ஒப்புக்கொண்ட வித்வான், இங்கே அதே தேதியில் விருது பெறவும் சம்மதித்தது எப்படி? அவர் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால், சபா நிர்வாகிகள் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விடாதது ஏன்? புரியலே! சி.வி.சந்திரசேகர்,

எஸ்.வரதராஜன், திருவாரூர் வைத்தியநாதன், ஸ்ரீவத்ஸன் ஆகியோர் இங்கே விருது வாங்கிய மற்ற நால்வர்.

மிழிசைச் சங்கத்தின் `இசைப் பேரறிஞர்’ விருது பெறும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்தும் பாராட்டும். ஒரு டவுட். `சிஸ்டம் சரியில்லை’ என்று சொல்லி, கடந்த சில வருடங்களாக டிசம்பர் சீஸனில் சபாக்களில் பாடுவதைத் தவிர்த்துவரும் கிருஷ்ணா, அதே டிசம்பரில் ஒரு சபா கொடுக்கும் விருதை மறுப்புத் தெரிவிக்காமல் வாங்கிக்கொள்வது எப்படி? Nation wants to know!

சரிகமபதநி டைரி - 2017

மியூசிக் அகாடமியின் 91-வது இசை மாநாட்டைத் தொடங்கிவைக்க இசைஞானி இளையராஜாவை அழைத்துவந்தார் அகாடமியின் தலைவர் என்.முரளி.

புத்தாண்டு நாளன்று இங்கே `சங்கீத கலாநிதி’ விருது பெறவிருக்கும் ரவிகிரண், தனது ஏற்புரையில் ``வாத்தியக் கலைஞர்களை ஆடியன்ஸ் ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள, அவருக்குப் பதிலடி கொடுத்தார் ராஜா. ``ஆடியன்ஸை திரண்டு வாங்கன்னு நீங்க கூப்பிடக் கூடாது. உங்க மியூசிக்தான் அவங்களை வரவழைக்கணும்” என்றார். நியாயமான, மற்ற வாத்தியக் கலைஞர்களும் புரிந்து கொள்ளவேண்டிய பாயின்ட்!

சுய தம்பட்டமும் சேர்ந்த ரவிகிரணின் ஏற்புரை மிக மிக நீளம்!

- டைரி புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism