Published:Updated:

எச்சரிக்கை மணி!

எச்சரிக்கை மணி!
பிரீமியம் ஸ்டோரி
எச்சரிக்கை மணி!

எச்சரிக்கை மணி!

எச்சரிக்கை மணி!

எச்சரிக்கை மணி!

Published:Updated:
எச்சரிக்கை மணி!
பிரீமியம் ஸ்டோரி
எச்சரிக்கை மணி!

பா.ஜ.க தரப்பில் வெற்றிக்கொண்டாட்டங்கள் தெறிக்கின்றன. குஜராத் மாநிலத்தை மீண்டும்

எச்சரிக்கை மணி!

தக்கவைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க, இமாசலப்பிரதேச மாநிலத்தை காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குஜராத் தேர்தல். மூன்றரை ஆண்டுகளை பிரதமராக மோடி கடந்திருக்கும் நிலையில் வந்திருக்கும் தேர்தல், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் வெற்றிக்குக் கட்டியம் கூறப்போகும் தேர்தல்... என்பவையெல்லாம் இந்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருந்தன.

கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் கோட்டை குஜராத். இங்கு முதல்வராக இருந்தபோதுதான் தேசிய அரசியலில் கால்பதிக்க முடிந்தது என்பதால், ‘சொந்த பூமியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்‘ என்கிற பதற்றம், ஆரம்பத்திலிருந்தே மோடியிடம் தென்பட்டது. ‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது’, ‘என்னைக் கொல்வதற்கான சதித்திட்டம் பாகிஸ்தானின் உதவியுடன் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் நடத்தப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் பிரசாரத்தின்போது வழக்கத்துக்கு மாறாக அவர் பேசியது, சொந்தக் கட்சியினராலேயே வியப்போடு பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளால் பெருத்த விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

எல்லாவற்றையும்மீறி குஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு வெற்றிமாலையையே சூட்டியிருந்தாலும், அது மோடி தரப்புக்கு முழுமையான மனநிறைவை அளிக்கும்வகையில் இல்லை என்பதே உண்மை. காங்கிரஸூடன் கடும்போராட்டத்தை நடத்தி, நெருக்கடியானதொரு வெற்றியைத்தான் பெற்றிருக்கிறது பா.ஜ.க. பல தொகுதிகளில் வாக்குவித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

‘குஜராத் மாடல்’, ‘துடிப்புமிக்க குஜராத்’ என்ற கவர்ச்சிகரமான வாசகங்களை முன்னிறுத்தித்தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு, வெற்றிபெற்றுப் பிரதமராகவும் ஆனார் மோடி. இப்போது அந்த குஜராத் மாநிலத்திலேயே காங்கிரஸிடம் பல தொகுதிகளைப் பறிகொடுத்துள்ளது பா.ஜ.க. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்ற  பொருளாதாரக் கொள்கை நோக்கங்களின் பலன் முழுமையாக மக்களைச் சென்றுசேரவில்லை என்கிற கசப்பான உண்மையை பா.ஜ.க தலைமை உணர்ந்துகொள்ளவேண்டும். அதேபோல, மக்களின் தேவைகளையும், கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் மட்டுமே முனைப்பு காட்டவேண்டும் என்பதை முதன்மைப் பணியாகவும் பா.ஜ.க எடுத்துக்கொள்ளவேண்டும்.

பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாவிட்டாலும், காங்கிரஸ் வென்றிருக்கும் தொகுதிகளும், பெற்றிருக்கும் வாக்குகளும் ராகுல் காந்திக்கு சற்றே ஆறுதல் அளிக்கலாம். கிட்டத்தட்ட இரண்டு சதவிகித வாக்குகள், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக, காங்கிரஸ், பா.ஜ.க உட்பட எந்த அரசியல்கட்சியின் மீதுமே நம்பிக்கையில்லை என்கிற கூட்டமும் இங்கே வேகமாக வளர ஆரம்பித்திருக்கிறது.

எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும், ஜனநாயகத்தில் இறுதி எஜமானன் மக்களே. வாக்கு என்னும் வலிமையான ஆயுதத்தைக் கொண்டு, அந்த மக்கள் வழங்கிய ஆட்சியை, மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தாத எந்தக் கட்சிக்கும் பிரகாசமான எதிர்காலமில்லை. இதைத்தான் அனைவருக்குமான எச்சரிக்கை மணியாக ஓங்கி ஒலிக்கிறது இந்தத் தேர்தல் முடிவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism