Published:Updated:

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

Published:Updated:
 ##~##
ஜினியின் புதுப் படத்துக்கு டிக்கெட் வாங்குவது மாதிரி, முதல் நாள் காலை 6.30 மணிக்கே சபா வாசலில் டெய்லி டிக்கெட் வாங்க க்யூ! கச்சேரி தினத்தன்று 4 மணியில் இருந்தே உள்ளே நுழைய வரிசைகட்டி ரசிகர்கள். நாரத கான சபாவில் அருணா சாய்ராம்!

அருணாம்மாவின் சொந்த மைக் செட் இன்னமும் ரெடியாகவில்லை.

'ரசிகர்கள்தான் எனக்கு எல்லாமே...அவங்க வெளியே கால் கடுக்க நிற்க வேண்டாம்... உள்ளே வந்து உட்காரட்டும். நான் மைக் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்' என்று சபா செயலரிடம் சொல்லியிருக்கிறார்.

சரிகமபதநி டைரி 2010

மேடையில் திரை தூக்கப்பட்டு இருந்தது. கல்யாணியில் சாம்பிள் ஸ்வரம் பாடியபடியே தனக்கும், வயலின் - மிருதங்கம் - கடத்துக்கும் மைக்கை பாலன்ஸ் செய்துகொண்டார் அருணா. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த விளையாட்டு தொடர்ந்தது.

'தேகத்தை ஒருபுறமும், மனதை ஒருபுறமும், தகுந்த வேஷத்தை மற்றொரு புறமும் வைத்து, மாந்தரை ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி கிடைக்குமா?’ - தியாகராஜர் நாயகியில் கேட்பதை நாயகி அருணா கேட்டார்.

'சத்தம் அதிகம்...’ என்று நான்கைந்து பேர் எழுந்து குரல் கொடுத்தார்கள். மேலும் இரண்டு பாடல்கள் முடிந்து, பூதத்தாழ்வாரின் பாசுரத்தைத் தோடியில் ஆரம்பித்தபோதும் அது குறையவில்லை. ஐந்தாறு பேர் எழுந்து நடையைக் கட்டினார்கள்!

'இவங்களுக்கு இருக்கற கணீர் குரலுக்கு  மைக் இல்லாமலே பாடலாமே...' - பக்கத்து இருக்கைக்காரர் முணுமுணுத்தார்!

சரிகமபதநி டைரி 2010

பளீரென்று மத்யமாவதியை ஆரம்பித்தார் அருணா. மூன்று ஸ்தாயிகளிலும் மும்முரமாகச் சஞ்சரித்தார். காமாட்சி மீது சியாமா சாஸ்திரி பாடியிருக்கும் பாடலை பக்திபூர்வமாகப் பாடி முடித்து, 'சங்கீத சாம்ராஜ்ய சஞ்சாரி நீ’ என்ற மோகனகல்யாணி ராகப் பாடல். 'சஞ்சாரி நான்’ இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்!

முடிவுப் பகுதியில் கைதட்டல்களை அள்ளிச் செல்ல துக்கடாக்கள், ஓர் அபங்கம் உட்பட. 'சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் பாடி முடித்து பெரிய கும்பிடு போட்டார் அருணா. கச்சேரி முடிந்துவிட்டது என்பது புரியவே சில விநாடிகள் ஆகின!

அருணாவுக்குக் கூட்டம் அலை மோதுவதுதான் இந்த டிசம்பரிலும் ஹாட் டாபிக்!

சென்ட்ரல் ஸ்டேஷனில் கூட்டம் குவிகிறது... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரவர, விமான நிலையத்திலும் கால்வைக்க இடம் இல்லாமல் ஜன நெரிசல்... பயணிகள் அனைவருமே வீடு போய்ச் சேர்ந்ததும் பயணம் செய்த ரயில்/பஸ்/விமானத்தை மறந்துவிடுகிறார்கள்!

மேடையில் (கிருஷ்ண கான சபா) பாடகர்கள் இருவர். வயலின், மிருதங்கம், கடத்துக்கு மூவர். இந்த ஐவரையும் ஒண்டி ஆளாக நின்று வம்புக்கு இழுத்துக் கொண்டு இருந்தது சபா மைக்!

'மிருதங்கம் காதுலேயே விழலே...’

'கடம் சுத்தமா கேட்கலே...’

'மொத்த சவுண்டையும் குறைக்கச் சொல்லுங்க...’

அரங்கில் இருந்து முதல் அரை மணி நேரத்துக்கு எசப்பாட்டு!

'ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் ஒரு அரை மணி நேரம் முன்னால் வந்து, மைக்கை செட் பண்ணிக்கிட்டா இந்தப் பிரச்னை வராது. ஆனா, கச்சேரி ஆரம்பிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கும்போதுதான் இவங்க வராங்க... நாங்க என்ன செய்ய முடியும்?' என்று கை விரித்தார் சபாவின் செயலர்.

இத்தனை அல்லாடல்களுக்கு மத்தியிலும் இங்கு மல்லாடி சகோதரர்கள், சங்கராபரணத்தில் சியாமா சாஸ்திரியின் 'சரோஜ தள நேத்ரி’யைப் பாடி, 'சாம கான விநோதினி’யில் நிரவல், ஸ்வரங்களைப் பாடி முடித்ததும், மேடை அருகே ஓடி வந்தார் பெரியவர் ஒருவர்.

'உங்க பாட்டு - குறிப்பா சாம கான விநோதினி - எம்.எஸ். அம்மாவை நினைவுபடுத்தியது. இப்போ பாட்டுல ஹைதராபாத்துக்குத்தான் முதல் இடம். சென்னை, இரண்டாவது இடத்துக்குப் போயிடுச்சு...' என்று ஓவராக உணர்ச்சிவசப்பட்டார்!

சரிகமபதநி டைரி 2010

வீட்டில் சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளை, நெய் போட்டுக் குழைவாக பிசைந்த பருப்பு சாத டப்பாவுடன் விசாகா ஹரி யின் நிகழ்ச்சிக்கு அழைத்துப் போய்விடலாம்.

குழந்தைகளுக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக ராமாயணக் கதை சொல்கிறார் விசாகா. இனிமையான குரலில் இவர் குரல் உயர்த்திப் பாடுவதைக் கேட்டு பெரிசுகள் கிறங்கிப்போய், 'இவ மட்டும் முழு நேரக் கச்சேரி மேடைக்கு வந்துட்டா, இன்னிக்கு ரொம்பப் பேர் காணாமப் போயிடுவாங்க..’ என்று சிலிர்க்கிறார்கள்!

கிருஷ்ண கான சபாவில் சுந்தர காண்டம் சொல்லி, பாடினார் விசாகா. சாருகேசி ராகத்தை அடித்தளமாக அமைத்துக்கொண்டு வால்மீகி சுலோகங்களைச் சொல்லி, கபக்கென்று தியாகராஜருக்குத் தாவி, 'ஆடமோடி கலதே’ கீர்த்தனையை முழுவதுமாகப் பாடி முடித்தபோது, 'இதற்குத்தானே ஆசைப்பட்டோம்’ என்று கூட்டம் அகமகிழ்ந்தது!

அசோக வனத்தில் சீதையை முதன்முதலில் சந்திக்கும் அனுமன், தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள சுய புராணம் வாசிக்கவில்லை. மாறாக, ராமாயணக் கதையைக் கடகடவென்று சொல்வார். 'அண்ணா’ என்று அழைக்கப்படும் கிருஷ்ண பிரேமி இதை அப்படியே தமிழில் வடிவமைத்து இருப்பதை விசாகா விறுவிறுவென்று பாடி முடித்தபோது, ஏதோ விஸ்வரூப ஆஞ்சநேயரை நேரில் தரிசித்துவிட்டதுபோல் கூட்டம் கன்னத்தில் போட்டுக்கொண்டது!

மைலாப்பூர், மாம்பலம் ஏரியாக்களில் தாமரை சின்னத்தில் விசாகா போட்டியிட்டால் நிச்சயம் டெபாசிட் பறிபோகாது!

னக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் டி.வி.சங்கரநாராயணனின் எந்தக் கச்சேரியும் சோடை போகாது. பார்த்தசாரதி சுவாமி சபாவில் வயலின் எம்.சந்திரசேகரன், மிருதங்கம் - சீனியர் மோஸ்ட் வித்வான் டி.கே.மூர்த்தி, அவர் பக்கத்தில் உதவிக்கு இன்னொரு மிருதங்கம் (ஙி.சிவராமன்), கஞ்சிராவுடன் நெற்குணம் சங்கர் என்று ஃபுல் பெஞ்ச்!

சரிகமபதநி டைரி 2010

இங்கு பைரவியை அதன் பாதாளம் வரை சென்று கலக்கினார் டி.வி.எஸ். அந்த நாளைய 'வின்டேஜ்’ பைரவி அது. காலப் பெட்டகத்தில் இருந்து பொக்கிஷமாகக் கருதப்படும் சுத்தமான, ஒரிஜினல் சங்கதிகளை எடுத்து வந்து, மூன்று காலங்களில் பைரவியை வளர்த்து, ஆளாக்கி மேடையில் சங்கரநாராயணன் நிறுத்தியபோது, 'இப்படி ஒரு பைரவியைக் கேட்டு எத்தனை நாளாச்சு?’ என்று டி.கே.மூர்த்தி நெகிழ்ந்து பாராட்டினார்!

அன்று சாரங்கா, தன்யாசி, வாசஸ்பதி என்று வேறு பல ராகங்களையும் டி.வி.எஸ்., பாடினாலும், வின்னிங் போஸ்ட்டை முதலாவதாகத் தொட்டு, வெற்றிவாகை சூடியது பைரவிதான்!

மியூஸிக் அகாடமியில் ஆர்.சூர்யபிரகாஷ்.

இவரது அணுகுமுறையில் நிறையவே மாற்றங்கள். முன்பு மாதிரி காட்டுக் கத்தல் கத்துவது இல்லை. குரல் அடக்கிப் பாடுகிறார். குரு பரம்பரையின் விவகாரங்களை கார்பன் காப்பி எடுப்பது இல்லை. சொந்தக் காலில் (குரலில்) நிற்க நிறையவே முயற்சி செய்கிறார். கீப் இட் அப் சூர்யா!

அகாடமியில் ஸ்வர்ணாங்கி ராகம் பாடினார் சூர்யபிரகாஷ். ஆனால், அதைப் பாடும்போது கூடவே சுபபந்துவராளியை அழைத்து வருவா னேன்? 'நானும் வருவேன்’ என்று பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சு.ப., என்னதான் அடம் பிடித்தாலும், 'இன்னொரு நாள் உன்னைத் தனியாவே அழைச்சுட்டுப் போறேன்’ என்று கண்டிப்புடன் சொல்லி இருக்க வேண்டாமோ!

- டைரி புரளும்...  , படங்கள் : கே.ராஜசேகரன்