Published:Updated:

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

ஞா.சக்திவேல் முருகன், படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

ஞா.சக்திவேல் முருகன், படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

ல்ல கனவுகள் நனவாகும் என்ற வாக்கியத்தைத் தங்கள் வாழ்க்கையாக்கிக்கொண்டு சாதித்தவர்களின் சங்கமம் இது. நாணயம் விகடனின்  `பிசினஸ் ஸ்டார் விருதுகள்’ மேடை.

 டிசம்பர் 22-ம் தேதி சென்னை ஹயாத் ஹோட்டலில் பிரமாண்டமாக அரங்கேறியது பிசினஸ் சூப்பர் ஸ்டார்களின் ஒன்றுகூடல். 

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

‘`விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான்.என் சொந்த ஊர் கோவை, பெருந்துறைக்கு அருகில் உள்ள கள்ளியம்புதூர் என்கிற குக்கிராமம். விவசாயம் கைகொடுக்காதபோது, 8,000  ரூபாய் முதலீட்டுடன் விசைத்தறித் தொழிலில் இறங்கினேன். வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தொடங்கினேன் என்று சொல்வார்களே, அதுதான் எனக்கும் நடந்தது.  நான்கு பவர்லூம்கள் பத்து ஆண்டில் 40 பவர்லூம்களாகின. இன்று எங்கள் நிறுவனத்தில் 22 ஆயிரம் பெண் ஊழியர்கள் பணியாற்று கிறார்கள். புதிதாக எந்த தொழிலைத் தொடங்கும் போதும் உற்சாகம், ஒரு மோட்டிவேஷன் வேண்டும். அப்போதுதான் வெற்றிப்பாதையை நோக்கிப்பயணிக்க முடியும். அதேபோல் ஊழியர்களை உற்சாகப்படுத்தினால் போதும், வேலைதானாக நடக்கும்.’’ என உற்சாகம் பொங்கப் பேசினார் கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ராமசாமி.

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

கே.பி.ராமசாமிக்கு நாணயம் விகடனின் ‘செல்ஃப் மேட் ஆந்த்ரபிரனார்’  விருதை வழங்கி கெளரவித்தார் டி.வி.எஸ் லாஜிஸ்ட்டிக்ஸ் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். தினேஷ்.

பிசினஸ் மென்ட்டார் விருது!

இளம் தொழிலதிபர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் ஒரு தந்தையின் கரிசனத்தோடும், நண்பனின் அக்கறையோடும், ஆசிரியரின் முதிர்ச்சியோடும் ஆலோசனைகளை வழங்குபவர் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன். அவருக்கு பிசினஸ் மென்ட்டார்  விருதினை வழங்கினார் டய் (TiE) நிறுவனத்தின் தலைவர் வி.சங்கர்.

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

``வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிற எந்த நிறுவனமுமே தோற்றுப்போகாது. வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைக்கவேண்டும். அப்போதுதான் பிசினஸில் நிலைத்து நிற்க முடியும். நாம் தயாரிக்கும், விற்பனை செய்யும் பொருள் போட்டியாளர்களை விட இன்னும் தரமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாகவும் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் ரொம்ப சிம்பிள். வீடு, கார் என எந்தப் பொருளை வாங்கவேண்டும் என்றாலும், இரண்டு மூன்று காரணங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த மூன்று காரணங்களையும் நாம் கண்டறிந்து போட்டி யாளர்களைவிட நம்முடைய பொருளை பெட்டராகக், கொடுத்தால் வெற்றி நமக்குத்தான். முயற்சிகள் தவறாகிப்போனால் கவலைப்படத் தேவையில்லை. தவறுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றியடையலாம். நாங்கள் அப்படித் தான் வெற்றிபெற்றோம்” என விழாவுக்கு வந்திருந்த அத்தனைபேரையும் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தினார் சி.கே.ஆர்.

ரைசிங் ஸ்டார் விருது!

சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் மத்திய அரசின் அனுமதியோடு தொடங்கப் பட்டிருக்கும் தமிழ்நாட்டின் முதல் தனியார் வங்கி  ஈக்விட்டாஸ். முகவரியற்ற மனிதர்களுக்கும் கடன் தருவதுதான் மைக்ரோ ஃபைனான்ஸ். அப்படி மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஈக்விட்டாஸ் இன்று முழுமையான வங்கியாக மாறியிருக்கிறது. இந்தியா முழுக்க 332 கிளைகளுடன் இயங்கும் ஈக்விட்டாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான பி.என்.வாசுதேவனுக்கு `ரைசிங் ஸ்டார் விருது’ வழங்கப்பட்டது. பொன்ப்யூர் கெமிக்கல் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி இந்த விருதை வழங்கினார்.

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

`` `நான் 90 செஞ்சுரி அடிச்சிருந்தாலும் புதுசா ஒரு இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு ரன்னுமே டென்ஷன்தான். ஒவ்வொரு இன்னிங்ஸையுமே நம்பிக்கையுடன் தொடங்குவேன்’னு சச்சின் டெண்டுல்கர் அடிக்கடி சொல்லுவார். அதுபோலத்தான் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயத்தை ஆரம்பிக்கும்போது அதன்மீது மிகப்பெரிய நம்பிக்கை வைக்கவேண்டும். நம்பிக்கை ஒன்றுதான் நான் இந்த முன்னேற்றத்தை அடைய முதற்காரணம். எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தது ஸ்ரீராம் ஃபைனான்ஸ். இரண்டாவது நம்பிக்கை என் ஊழியர்கள். இன்று ஈக்விட்டாஸ் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய எங்கள் ஊழியர்கள்தாம் காரணம்” என்றார் வாசுதேவன்.

கோல்டன்  ஃபீனிக்ஸ் விருது!

`யாரோ டு ஹீரோ’ விருதுதான் கோல்டன் ஃபீனிக்ஸ் விருது. இந்த விருதை வென்றவர் கேப்ளின்பாய்ன்ட் லெபாரட்டரீஸ்  நிறுவனத்தின் நிறுவனர் சி.சி.பார்த்திபன். கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள பூவலம்பேடு என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவர் பார்த்திபன். 5,000 ரூபாய்  முதலீட்டில் கேப்ளின்பாய்ன்ட் என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை 1990-ல் தொடங்கினார் பார்த்திபன். மூன்று ஆண்டுகள் கழித்து  நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட போது அதன் மதிப்பு உச்சத்தைத் தொட்டது. ஆனால், மருந்து தயாரிக்கும்போது ஏற்பட்ட சிறு தவறினால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நிறுவனத்தையே மூடும் நிலை. பங்குச்சந்தையில் கம்பெனியின் ஸ்டாக்குகள் மொத்தமாக வீழ்ந்தன. நாட்டை விட்டு ஆப்பிரிக்காவுக்கே போனார் பார்த்திபன்.   ஆனால், புதிய முயற்சிகளைக் கைவிடவில்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய புதிய தொழில்கள் கைகொடுக்க, அங்கு கிடைத்த வருமானத்தை வைத்து இந்தியாவில் மீண்டும் பிசினஸைத் தொடங்கி இன்று 5,000 கோடி ரூபாய் நிறுவனமாகக் கேப்ளின்பாய்ன்ட் லெபாரட்டரீஸை வளர்த்தெடுத்திருக்கிறார் பார்த்திபன்.

இவருக்கான விருதை எம்.எம். ஃபோர்ஜிங் நிறுவனத்தின் தலைவர் வித்யாசங்கர் கிருஷ்ணன் வழங்கினார். ``தைரியம் மட்டும் இல்லைனா என் வாழ்க்கை `தெனாலி’ கமல் மாதிரி ஆகியிருக்கும். தோல்வியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது.  அதேபோல் தோல்வி என்பது வாழ்க்கையில் ஒரு நிலை எனக் கடந்துபோய்விடவும்முடியாது. தோல்விகள் மிகப்பெரிய வலிகளைத்தரும். ஆனால், அதிலிருந்து திரும்பி எழக் கற்றுக்கொள்ள வேண்டும்.  அதற்கு மீண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்கவேண்டும். ரிஸ்க் எடுக்கவில்லையென்றால் சாதாரண ஒரு வாழ்க்கையைத்தான் வாழமுடியும்” என்று நம்பிக்கை கொடுத்தார் பார்த்திபன்.

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

சோஷியல் கான்ஷியஸ்னஸ் விருது!

சேவை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சோஷியல் கான்ஷியஸ்னஸ் விருது வழங்கப்பட்டது. பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.வி.ஆறுமுகம் இந்த விருதினை வழங்கினார். 

அரவிந்த் கண் மருத்துவமனையின் கெளரவத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமி விருதைப் பெற்றுக்கொண்டார். ``கடந்த ஆண்டு மட்டும் 4.29 லட்சம்  பேருக்குக் கண் சிகிச்சை வழங்கியிருக்கிறோம். இதில் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாகச் சிகிச்சை செய்திருக்கிறோம். இந்த மனநிறைவே எங்களை ஊக்குவிக்கிறது. 2022-ம் ஆண்டில் ஆண்டுக்கு 10 லட்சம்  பேருக்குக் கண் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறோம்” என்றார் நம்பெருமாள்சாமி. 

சிறந்த இன்னோவேஷன் விருது!

சாதி, மதம், ஊர், மாநிலம், மொழி எனக் குறுகிய வட்டத்தில் நிச்சயமாகிவந்த திருமணத்தைத் தொழில்நுட்ப வசதிகள் மூலம் உலகமயமாக்கியவர் மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான முருகவேல் ஜானகிராமன், இவருக்கு பிசினஸ் இன்னோவேஷன் விருது அளிக்கப்பட்டது. சி.ஐ.ஐ அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவரும் டான்ஃபாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான பி.ரவிச்சந்திரன் விருதை வழங்கினார்.

விருது பெற்ற முருகவேல், ``மனிதர்களுக்கு உடல் சார்ந்த, மனம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த தேவைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. தேவையை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். தேவையை நிறைவேற்றுவதே பிசினஸ். இது பொருள் சார்ந்ததாகவோ, சேவை சார்ந்ததாகவோ இருக்கலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் அளவுக்கு உயரும். அப்போது தனிமனிதனின் வருமானம் 4,000 டாலராக உயரும். சேவை சார்ந்த தொழில்களுக்கு அமோக வரவேற்பு இருக்கும். வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்தாலே மல்ட்டி பில்லியன் டாலர் பிசினஸை உருவாக்கலாம்” என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது! 

நாணயம் விகடனின் வாழ்நாள் சாதனையாளர் விருது சுந்தரம் ஃபாசனர்ஸ்  நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது. சுந்தரம் ஃபாசனர்ஸ் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்த நிறுவனம்.  `கடந்த 50  ஆண்டுகளாக வேலைநிறுத்தம் என ஒரு நாள்கூட  நிறுவனம் முடங்கியதில்லை’ என்பது சுந்தரம் ஃபாசனர்ஸின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. வாழ்நாள் சாதனையாளர் விருதினை சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஸ்ரீராம் குரூப் ஆப் கம்பெனீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் வழங்கினார்.

 ``டி.வி.எஸ் சர்வதேச அளவில் சிறந்த நிறுவனமாக விளங்குவதற்குக் காரணம் எங்கள் ஊழியர்கள்தாம். இன்று ஒரு நிறுவனத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுத்து முதலீடு செய்யப் பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆர்வமுள்ள ஊழியர்களை விலைக்கு வாங்கவே முடியாது. ஊழியர்கள் வேலைக்கு வரும்போது பெரும் கனவுகளோடு வருகிறார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையை நல்ல முறையில் மேம்படுத்துவது ஒவ்வொரு நிறுவனத்தின் பொறுப்பு. அதனை நிறைவேற்றுவதில் நாங்கள் ஒருபோதும் தவறியதில்லை’’ என்றார் பெருமையுடன்.

விருதுவிழாவில் பேசிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், முதலாளி என்பவர் யார் என்பது குறித்துப் பேசினார்.

‘`முதலாளி என்ற சொல் அதிகாரம் என்றும், பயம் என்றும் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையில் நிறுவனத்தின் முதல் தொழிலாளிதான் முதலாளி. ஒரு கனவைச் சுமந்து அதை நிறைவேற்றத் துடிப்பவன் முதலாளி. அந்தக் கனவில் பிறரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு வளர்ச்சியைத் தருபவன்தான் முதலாளி. நிறுவனத்தின் அத்தனை பிரச்னைகளையும் சவால்களையும் முதல் ஆளாகச் சந்திப்பவனே முதலாளி. தோல்விகளையெல்லாம் தனதாக்கிக்கொண்டு வெற்றிகளைப் பகிர்ந்துகொள்பவன் முதலாளி. அப்படிப்பட்ட சிறந்த முதல் தொழிலாளிகளுக்கு பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கிக் கெளரவித்ததில் நாணயம் விகடன் பெருமிதம் கொள்கிறது’’ என்றார்.

அடுத்த ஆண்டு பிசினஸ் ஸ்டார் விருது வாங்கத் தயாராகுங்க முதல் தொழிலாளிகளே!

ஸ்டார்ட் அப் சாம்பியன் விருது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற அதில் ஷெட்டி, `ஏதோ  ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதைவிட, ஒரு புதுமையான நிறுவனத்தை நாமே உருவாக்கலாமே’ என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் bankbazzar.com என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம். வங்கிகளின் வட்டி விவரங்களையும், எந்தெந்த வங்கிகள் என்னென்ன மாதிரியான சேவைகளை வழங்குகின்றன என்பது உள்ளிட்ட பல விவரங்களையும் விரல்நுனிக்கே கொண்டு வந்திருக்கும் அதில் ஷெட்டிக்கு ஸ்டார்ட் அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டது. லைஃப்செல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமார் இந்த விருதினை வழங்கினார்.

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

விருது பெற்ற அதில் ஷெட்டி, “இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் இணைய வசதி பரவியிருக்கும் இந்த வேளையில், மொபைல், இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்பட்டால், நீங்களும் வெற்றியாளராகலாம்” என்றார்.

பிசினஸ் மென்ட்டார் விருது (இன்ஸ்டிட்யூஷன்)

பிசினஸில் சிக்கல்கள் வரும்போதெல்லாம் ஆலோசனைகளைச் சொல்லி அந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட உதவி செய்யும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்துவருகிறது கொடீசியா நிறுவனம். கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் ஒன்றுகூடி இழுத்த தேர்தான் கொடீசியா. இதுவரை ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருந்த கொடீசியா அமைப்புக்கு  பிசினஸ் மென்ட்டார் விருது (இன்ஸ்டிட்யூஷன்) வழங்கப்பட்டது. 

பிசினஸ் சூப்பர் ஸ்டார்ஸ்!

கொடீசியா அமைப்புக்கு இந்த விருதை வழங்கினார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். “விடாமுயற்சிக்கு ஒரு நல்ல உதாரணம்தான் கொடீசியா. இதில் 5,000 பேருக்கும் மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 40 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சீனியர் தொழிலதிபர்கள் புதிதாக தொழில்தொடங்க வருபவர்களுடன் கலந்தோலோசித்து அறிவுரைகள் வழங்குகிறார்கள். இதுவும் விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டுதான்’’ என்றார் இந்த விருதினைப்பெற்றுக்கொண்ட கொடீசியா அமைப்பின் வி.சுந்தரம்.