Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணக்குமார், பா.காளிமுத்து, க.பாலாஜி

சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணக்குமார், பா.காளிமுத்து, க.பாலாஜி

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017
சரிகமபதநி டைரி - 2017

ட்டமாகக் கொண்டை, அதைச் சுற்றி வளைவாக மல்லிகைப் பூ, காதுகளில் ஜிமிக்கி. பரிசளிப்பு விழாவுக்குத் தலைமையேற்க வரும் ஜில்லா கலெக்டர் மாதிரியாக மேடையில் பாம்பே ஜெயஸ்ரீ!

தொடக்கத்தில் மியூசிக் அகாடமியின் கீழ்த்தளம் நிரம்பி வழிந்தது. கூடுதலாக பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன. ஆனால், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, பாட்டுக்குச் சிலராக வெளிநடப்பு செய்ய, முடியும் நேரம் ஹாலில் முக்கால்வாசிக்கும் குறைவான தலைகளே இருந்தன என்பது கண்களால் கண்ட மெய்!

முத்தையா பாகவதர் சுத்த தன்யாசி ராகத்தில் இயற்றியுள்ள `ஸ்ரீ ராஜமாதங்கி...’ வர்ணம் ஆரம்பம். ஒரே இழுப்பில் ராகத்தை அறிமுகப்படுத்தி, மென்மையாக வளரச் செய்து அதன் முழு சொரூபத்தையும் வெளிப்படுத்தினார் ஜெயஸ்ரீ எனச் சொல்வது, சர்க்கரை இனிக்கும் அல்லது மெட்ரோ ரயில் புகைவிடாது எனச் சொல்வதற்குச் சமம்!

ரஞ்சனியை எடுத்த எடுப்பில் மேல் ஸ்தாயியில் அழைத்து வந்தபோது கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. ஜெயஸ்ரீயின் `வசீகரா...’ குரலில் ரஞ்சனி பருவங்கள் மாறிப் பளீரிட்டாள்.

சரிகமபதநி டைரி - 2017

பேகடாவில் சங்கதிகளுடன் சறுக்குமரம் ஏறி விளையாடினார் பாம்பே ஜெயஸ்ரீ.  படிப்படியாக மேலேறிப் போய், `சர்’ரென வழுக்கி இறங்கி வந்து, அழகு தமிழில் ஸ்பென்சர் வேணுகோபால் இயற்றியிருக்கும் `வா... வா... முருகா வா...’ பாடலில் காவடி தூக்கி முருகனை தரிசிக்கவைத்தது தேன் மதுரச் சுவை!

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பைரவியில் ராகம் - தானம் - பல்லவி. ராகத்துக்கு மேலும் பாலீஷ் செய்வதுபோல் தானம். பல்லவியைப் பின்தொடர்ந்த ஸ்வரங்களில் ராகமாலிகையைத் தவிர்த்து பைரவிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டபோது, ஒரிஜினல் ஜெயஸ்ரீயைத் தேடவேண்டியதாகிவிட்டது. மொத்தத்தில்  ஜெயஸ்ரீயின் அகாடமி கச்சேரி மனதில் நீங்கா இடம் பெறவில்லை!

`ராரா மாயிண்டிதாக ரகு...’ என்று மியூசிக் அகாடமி மேடைக்கு முதலில் தியாகராஜரின் ராமனை அஸாவேரியில் அழைத்தார் எஸ்.சௌம்யா.

அடுத்து பூர்விகல்யாணி. சியாமா சாஸ்திரி வந்தார். `ஓ! நிகிலலோக ஜனனி... உன்னைத் தவிர, வேறு யார் எனக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றுவார்?’ என்று வேண்டும்விதமாக `நின்னுவினாக மரி திக்கெவருன்னாரு...’ பாடல்.

இதோ, முத்துசுவாமி தீட்ஷிதர் arrived safely! இது சனிப்பெயர்ச்சி சீஸன் என்பதால் சனீஸ்வரர் மீது பாடப்பட்ட கீர்த்தனை. யதுகுலகாம்போதி ராகத்தில் `திவாகரதனுஜம்...’ என்ற பாடல் மூலமாக மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதியான சனிபகவானைத் துதித்தார்.

கமாஸ் ராகத்தில் மறுபடியும் தியாகராஜர். `சுஜநஜீவந சுகுண பூஷண ராம...’ என்ற பல்லவி வரியில் விதவிதமான சங்கதிகளில் ராமனை அழைத்து அசத்தினார் சௌம்யா.

சரிகமபதநி டைரி - 2017

மத்யமாவதியில் ராகம் விரிவாக. தானம் கொஞ்சமாக. பல்லவிக்கு `கிருஷ்ணா நின்னே நம்மி நானு...’ வரி. ஆக, எப்போதும்  ராமனையோ கிருஷ்ணனையோ நம்பியபடியே இருந்தார் சௌம்யா!

இவரின் குரலில் முன்பு இருந்த தேனில் கலந்த பலாச்சுளை இனிமை இப்போதில்லை. குறிப்பாக, ஆலாபனைகளின்போது மேல் ஸ்தாயியில் தொண்டை கட்டிவிட்டது போன்றதொரு தொனி. அனுபவமும், சங்கீத அறிவும்கொண்ட சௌம்யா, இது பற்றிக் கவலைப்படவில்லை. நாகை ஸ்ரீராம் வயலினில் ஸ்லீப்பர் செல்லாக இல்லாமல், இனிமை பொங்க வாசித்து சௌம்யாவுக்கு ஆதரவு நல்கினார்.

`க்ளீன் கங்கா’ திட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் `திருச்சூர் பிரதர்ஸ்’ ஸ்ரீகிருஷ்ண மோகன் - ராம்குமார் மோகன். இதற்காக மோடியின் தொகுதியான வாரணாசிக்குச் சென்றிருக்கிறார்கள் இவர்கள்.  போன இடத்தில் சும்மா இருக்காமல் பெஹாக் ராகத்தில் பல்லவியை இயற்றியிருக்கிறார் மூத்தவர் ஸ்ரீகிருஷ்ணா. தியாக பிரம்மகான சபாவில் பெஹாக் ஆலாபனை செய்து, இந்தப் பல்லவியைப் பாடி கங்கையைச் சுத்தப்படுத்தினார்கள்.

சகோதரர்கள் மேடையில் பளிச்சென்று இருக்கிறார்கள். குரல் பளீர். இருவருக்கும் புரிதல் நிறைய. அண்ணா ஆலாபனை செய்யும்போது, நாகஸ்வரத்துக்கு ஒத்து ஊதுவதுபோல் தம்பி `ஹம்’ செய்துகொண்டே வருவது எஃபெக்ட் கூட்டுகிறது.

பிலஹரி, ஸாவேரி, மத்யமாவதி என இவர்கள் பாடிய ராகங்கள் எந்தவித மேல்பூச்சும் இல்லாமலேயே கேட்க இனிமையாக இருந்தன. வசந்தாவில் ஆலாபனை கிடையாது. ஸோ வாட்? பலமுறை கேட்டு ஆனந்தித்த `ஸீதம்ம மாயம்மா...’வைப் பாடினார்கள். தீபாவளி டமாக்கா கணக்கில் ஸ்வரம் பாடி முடித்தபோது இருவரும் கொடுத்தது இரட்டிப்பு ஆனந்தம்!

சரிகமபதநி டைரி - 2017

ஒருசில பாடல்கள்தான் கேட்கும்போதே கண்களைக் கலங்கவைக்கும்; நெஞ்சு குலுங்கச் செய்யும். கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் ஒன்றான `வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவுந்நான்...’ பாடலுக்கு அந்தப் பட்டியலில் முதல் இடம். பார்த்தசாரதி சுவாமி சபாவில் நாகஸ்வர வித்வான் மறைந்த குளிக்கரை பிச்சையப்பாவின் பேரரான
வி.கே.மணிமாறன் இதைப் பாடியபோது, `பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே... நான் புண்ணியம் செய்யாமல் இருந்தேனே...’ என்ற சரண வரிகளில்தான் எத்துணை உருக்கம். 

மெயினாக லதாங்கி. `நீ மமுதோ நீ பாதமுலனு’ எனும் வீணை குப்பையரின் கீர்த்தனை.

டி.எம்.தியாகராஜரின் சிட்ட ஸ்வரங்கள் இணைப்பு. மணிமாறனும் வயலின் நாகை ஸ்ரீராமும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து வெளுத்துக்கட்டினார்கள்!

மற்ற கச்சேரிகள் ஏற்பாடு செய்யும் தனது நிர்வாகப் பணிகளை வி.கே.மணிமாறன் குறைத்துக்கொண்டு, கச்சேரி மேடைகளில் நிறைய பாட வேண்டும். அப்படிப் பாடும்போது மேடையில் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் சிரித்துப் பேசி அரட்டை  அடிப்பதைத்  தவிர்க்க வேண்டும்.

குரு பி.எஸ்.நாராயணசுவாமியின் லேட்டஸ்ட் தயாரிப்பு, `அவரைக் கண்டிப்பா கேளுங்க...’ என்று பலரால் சிபாரிசு செய்யப்படும் விஷ்ணுதேவ் நம்பூதிரி. பிரம்மகான சபா டிரஸ்ட் சார்பில் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் விஷ்ணுதேவ் பாடினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இருவர் கைப்பிடித்து அழைத்து வர, சிஷ்யப் பிள்ளை பாடுவதைக் கேட்க வந்திருந்தார் பி.எஸ்.என். ஹால் குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டரைப் பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் புறப்பட்டார். கிரேட் டீச்சர்!

கல்யாணி ஆலாபனையில் சின்ன வயசு ஜேசுதாஸாக ஒலித்தார் விஷ்ணுதேவ். `கண்டேன் கலி தீர்ந்தேன் கருணைக் கடலை’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்... பல்லவி வரியையே நிரவலுக்கும் எடுத்துக்கொண்டு உச்சரிப்புச் சுத்தமாகப் பாடினார். கேரள வாடை இல்லை!

பிரதானமாக பைரவி. இதன் விரிவாக்கத்தில் மூன்று காலங்களிலும் விஷ்ணுதேவ் பாடிய சங்கதிகளில் எந்தவித மலிவு அம்சமும் இல்லாமல் படு சுத்த பைரவி. தியாகராஜரின் `ரக்ஷ பெட்டரெ...’ கீர்த்தனை கேட்டு எத்தனை நாளாச்சு... மகிழ்ச்சி!

 காலூன்றும் கட்டத்திலேயே நான்கு கால் மணி நேரத்துக்கு ராகம் (துவஜாவந்தி), ராகமாலிகையில் தானம், பல்லவி முடிந்து ராகமாலிகை ஸ்வரம் என்று நேரம் செலவிட்டது வளரும் பிள்ளைக்கு டூமச்!
சின்னச் சின்னப் பாடல்கள் நிறைய பாடணும் ப்ரோ!

- டைரி புரளும்...