Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

கமல்ஹாசன்படங்கள்: ஜி.வெங்கட்ராம், ப.சரவணகுமார், ஓவியம்: ஹாசிப்கான்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

கமல்ஹாசன்படங்கள்: ஜி.வெங்கட்ராம், ப.சரவணகுமார், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த,

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூடச் சொல்லமாட்டேன்.  ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

‘முதல்வர் தொடங்கி போர்ட்ஃபோலியோவில் கடைசிக்கட்ட அமைச்சர்வரை ஒவ்வொருவரும் இத்தனை வாக்காளர்களுக்கு, தலைக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று தொகை நிர்ணயித்து அதைக் கச்சிதமாகச் செயல்படுத்தியும் காட்டியதற்கான ஆதாரம் ஊடகங்களில் வெளியானது. அதனால் நின்ற இடைத்தேர்தல் மீண்டும் நடப்பதற்குள் ஆட்கள், அணிகள், சின்னங்கள் இடம்மாறினர்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

நின்ற தேர்தல் மீண்டும் நடந்தபோது, ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த (!) சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று... ஆர்.கே. நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன. தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக்கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

இந்த வெற்றியில் பலருக்கும் எழும் கேள்விகள்போல் எனக்கும் பல கேள்விகள். கேட்கிறேன், பதிலிருந்தால் பகிருங்கள். முதல் கேள்வி. என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் ‘அடடா, ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது, இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது’ என்று பாராட்டுகிறார்கள். ‘நாங்கள் பார்க்காத சிறைக்கூடங்களா, ரெய்டுகளா’ என்ற சுயேச்சையின் பதிலில் மயங்கிய என் ஊடக நண்பர்கள்கூட, ‘என்ன ஒரு நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்’ என்றும் போட்டிபோட்டுக்கொண்டு பாராட்டுகிறார்கள். சில அரசியல் அறிஞர்களும்,  ‘ஆஹா... இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்றும் பட்டியல்போட்டுப் பாராட்டுகிறார்கள். அவற்றில், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா’ என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஆகப்பெரிய அவமானம் எந்தப் புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பதுதான் எனக்குப் பிடிபடாத கேள்வி. இதுதான் புதிய புரட்சி என்றால், இன்றைய தேதி வரையிலும் நாம் பிரிட்டிஷின் காலனி ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாமே, எதற்கு அந்தப் பழைய சுதந்திரப் புரட்சி? ‘ரோடு போடுறான், ரயில் விடுறான். அது போதும் சார் நமக்கு. வைரம்தானே... கோகினூர் வைரம்தானே... சுரண்டிக்கொண்டு போகட்டும். நாம அவன் தர்ற ரோடு, ரயில்களை வெச்சுக்கிட்டு  அடிமைகளா வாழ்ந்துட்டுப் போயிடலாமே’ என்கிற அதே பழைய குணாதிசயம் நல்லதா?  அன்றைய ரயில், ரோடுகள்... இன்றைய 20 ரூபாய் டோக்கன்களாக மாறி நிற்கின்றன. கோகினூர் வைரம் போன்ற நம் ஜனநாயகம் சுரண்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆமாம், அன்றைய கிழக்கிந்திய காலனியை ஒத்த நிலைமைக்குத்தான் தமிழகம் மறுபடியும் வந்திருக்கிறது. இதைச்சொன்னால், ‘இந்த வேகம், அந்த வியூகத்துக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீர்கள் சார்’ என்று, குற்றத்தையே என் தகுதியின்மையாக மாற்றப் பார்க்கிறார்கள் சில நண்பர்கள். 

அடுத்த கேள்வி, அந்த தேவதூதனைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் மக்களுக்கு... உங்கள் உள்ளம் எவ்வளவு அழகான உலகம். உங்களின் அன்பும் அதன் வெளிப்பாடான நெகிழ்வும் என்ன செய்யும் என்பதைச் சென்னை வெள்ளத்தில் உங்களின் உதவிகள் மூலம் இந்த உலகத்துக்குக் காட்டினீர்களே, அப்படிப்பட்ட நீங்கள்தாம்  இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளீர்கள். இது பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? உங்களிடத்தில் மனிதம் இல்லாமல் இல்லை. ஆனால், வறுமை உங்களின் மனிதம் மறைத்து அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறது. உங்களின் வறுமையை இல்லாமல் செய்ய, உங்களின் நேர்மையான வாக்குகள்தாம் ஒரே ஆயுதம். இந்த ஆயுதம் வேண்டுமானால் நீங்கள் பெற்ற டோக்கன்களைப்போல் இன்ஸ்டன்ட் இன்பம் அளிக்காமல் இருக்கலாம். ஆனால், நேர்மையாகச் செலுத்தும் உங்களின் வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத் தரும் என்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக வாக்காளர்களுக்கான கேள்வி. ஆறாயிரம் கொடுத்த பின்பும் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு இல்லையே என்று சுயேச்சைக்குத் துணைபோன கறுப்பு ஆடுகளைக்  கண்டுபிடித்து, கட்சியை விட்டு நீக்குகிறார்களாம் ஆளுகிறவர்கள். இந்தத் திருடன்-திருடன் விளையாட்டை எப்போது முடித்துக்கொள்வதாய் உத்தேசம் திருவாளர்களே? இந்தத் திருடன் - திருடன் விளையாட்டை எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்போகிறீர்கள் வாக்காளர்களே?

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

நிற்க. இதைப்பற்றியெல்லாம் உடனுக்குடன் கருத்து சொல்லும் களமாக இருந்த ட்விட்டருக்கு நீ ஏன் விடுமுறை விட்டாய்’ என்று கேட்கிறார்கள். ‘ஒன்றன்பின் ஒன்றாக தமிழகத்தில் எத்தனை விஷயங்கள் நடக்கின்றன. அவற்றைப்பற்றி எல்லாம் கருத்து சொல்லாமல் அமெரிக்காவில் ‘விஸ்வரூபம்-2’ வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்னமாதிரியான மனிதர் இவர்’ என்கிறார்கள். ட்விட்டரில் அடிக்கடி அரசியல் பற்றிக் கோபப்பட்டுக் கீச்சிக்கொண்டிருப்பது  மட்டுமே என் வேலையன்று. ஆமாம், அந்தக் கோபத்தை வெறும் கோபமாக மட்டுமே வைத்திருப்பதிலும் அர்த்தமில்லை. அதைக் கட்டுப்படுத்தி, விவேகத்தோடு செயலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது இனி அதிகம் பேசிப் பயனில்லை.

தவிர சமீப தமிழக நடப்புகள் பற்றிப் பேச என்ன இருக்கிறது? கவிதைகளுக்குப் பொழிப்புரை சொல்லலாம், களங்கங்களுக்கு எப்படிப் பொழிப்புரை சொல்லமுடியும்? அதனால்தான் பொழிப்புரையை நிறுத்திவிட்டேன்.  ‘இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்’ என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு மட்டுமே இருப்பதில் அர்த்தம் இல்லை.

தவிர அதற்குக் காரணமான மக்களையும் நான் எவ்வளவுதான் திட்ட முடியும்? நானும் அறுபதைக் கடந்துவிட்டேன். அப்படியெனில் ஜனத்தொகையில் பெரும்பான்மையோர் என் தம்பிகள், என் பிள்ளைகள். அவ்வளவு ஏன், பேரன்கள்கூட இருக்கலாம். இந்த வயதில்போய் நான் அவர்களைத் திட்டிக்கொண்டிருக்க முடியுமா? நான் திட்டுவதற்கும் அவர்களைக் குறைகூறிப் பேசுவதற்கும் கரகோஷம் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக என் மக்களை இழிவுபடுத்திப் பேசிக்கொண்டே இருக்க முடியுமா?

நான் யாரைப்பற்றிப் பேசினால் என்ன, அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினால் என்ன, எந்த சாமியைப் பற்றிப் பேசினால் என்ன, தமிழ்சாமியாக இருக்கும்பட்சத்தில்... எந்தச் செல்வத்தைப்பற்றிப் பேசினால் என்ன, அது தமிழ்ச்செல்வமாக இருக்கும்பட்சத்தில்... இவர்களெல்லாம் என் மக்களைச் சார்ந்தவர்கள்தானே, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், என்ன மொழி பேசுகிறார்கள்... அதே மொழியில் அவர்களைத் தொடர்ந்து திட்டுவது எனக்கும் அவமானமில்லையா? திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டி அவர்களைத் திட்டித் திருத்தமுடியாது. திருத்தி மேம்படுத்த வேண்டும். அதைத்தான் நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

இனி செயல்படவேண்டியது மக்களுடைய வேலை. அதற்கு நான் ஊக்கியாக இருக்கலாம். ‘நாங்கள் எந்தப் பாதையில் நடப்பது என்று தெரியவில்லை’ என்று அவர்கள் சொன்னால் நான் பாதையைக் காட்டலாம். அதே பாதை கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறதே என்றால் நான் அவர்களுக்குச் செருப்பாகலாம். இவ்வளவுதான் நான் பண்ண முடியும்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

ஏனெனில், இவற்றைப்பற்றி மீம்ஸ் போட்டு, ட்வீட் போட்டுக் கிண்டலடிக்கவேண்டிய நேரங்கள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆம், மக்கள் செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைச் சொல்கிறேன். வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளுங்கள், வேண்டாம் என்றால் தூக்கிப்போட்டுவிடுங்கள். நான் முக்கியமல்லன். நம்மையும்விடப் பெரியது ஜனநாயகம். அதை மதிக்கத் தெரியவேண்டும். அதை மதிக்கவில்லை என்றால் இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கும் இவ்வளவு வலிமையான அரசியலமைப்பு பண்ணியிருப்பதற்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

ஏனெனில், நமக்குப் பக்கத்து நாடுகளில் எல்லாம் நம்மைப்போல் இருக்கக்கூடாது, வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நம் சாயலில் சற்றே வித்தியாசமான அரசியலமைப்பைப் பண்ணிக்கொண்டார்கள். அதற்கு பாகிஸ்தான், சில ஆப்பிரிக்க நாடுகளை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இன்றும் தள்ளாடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் நிமிர்ந்து நிற்கும் ஜனநாயகமாக நாம் நிலைத்து நிற்கிறோம். அந்த அரசியலமைப்பு அதிசயத்தை என்னால் வியக்காமல் இருக்கவே முடியாது.

அதேநேரத்தில், இதுதான் ஜனநாயகம், இப்படித்தான் நடக்கும், இவ்வளவுதான் என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். ஜனநாயகம் என்பது பிழையாப் பெருமையுள்ள ஓர் அரசியல் சித்தாந்தம் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அந்த ஜனநாயகம் மூலமாகத்தான் ஹிட்லர் பதவிக்கு வந்தார். இதே ஜனநாயகத்தைப் பயன்படுத்திதான் எமர்ஜென்சி இங்கே கொண்டுவரப்பட்டது. ஆதலால் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.  ஏனெனில், இந்த அபாயத்தை உணராமலும் இருக்கமுடியாது.

இப்படி எவ்வளவு சொல்லிப் புலம்புவது. ட்வீட் பண்ண என் கைகள் துடிக்கின்றன. கோபத்தில் வந்த வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள் என்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்கிறேன். இப்போது நான் செய்துகொண்டிருப்பது எல்லாம், என் சினிமா வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதுதான்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக்கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ என்று சொல்வதை அமெரிக்காவில் மிகப்பெரிய சோகமாகப் பார்க்கிறார்கள். என் முடிவை மாற்றி சினிமாப்பக்கமே என்னை மீண்டும் மடைமாற்ற, எல்லோரும் என்னையும் என் கலையையும் வியந்து வியந்து பேசுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். ‘இங்கே வந்துவிடுங்கள்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், எனக்கப்படித் தோன்றவில்லை. பரமக்குடியில பிறந்த பையன், எப்படி சென்னைக்கு வந்தேனோ அப்படித்தான் இந்த சினிமா டு அரசியல் பயணத்தைப் பார்க்கிறேன்.  அவ்வளவுதான். ஆனால், என்னமாதிரியான அரசியல், எப்படிப்பட்ட அரசியல் என்பதெல்லாம் முக்கியமே கிடையாது. அரசியலுக்கு வரும் அவலத்துக்கு என்னைமாத்திரமன்று, தமிழக மக்களையும் ஆளாக்கிவிட்டார்கள். இப்போது எல்லோரும் வந்துதான் ஆகவேண்டும்.

‘எல்லோரும் அரசியலுக்கு வரும்போது, நானும் வருவேன்’ என்று பழைய பேட்டிகளில் பலமுறை சொல்லியிருந்தேன். அதையேதான் மறுபடியும் சொல்கிறேன். எல்லோரும் வரவேண்டிய சமயம் வந்துவிட்டது. எல்லோரும் அரசியலில் புகுந்து நல்லுணர்வோடு, நேர்மையோடு செயல்படவில்லை என்றால், உங்களுக்கு நிகழப்போகும் விபத்துகள், அபாயங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தகுதியானவர்கள். `நீ என்ன பெரிய ரிஷியா, சாபம் கொடுக்குற’ என்று கேட்கலாம். சாபம் கொடுக்கவில்லை, வரும்முன் சொல்கிறேன்.

தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது. ‘அடிமை ஒருவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறான், அவனைத் தூங்கவிடு’ என்று சொல்லும்போது கலீல் ஜிப்ரான், ‘இல்லையில்லை, அவனை எழுப்பி, சுதந்திரத்தைப்பற்றிச் சொல்லிக்கொடு’ என்பார். இன்று தமிழக மக்கள் அப்படித்தான் தூங்குவதுபோல் நடிக்கிறார்கள். அவர்களை என்ன பண்ணியாவது துயிலெழுப்பி, ‘நடிக்காதே, வா... இது உன்னுடைய வேலையும்தான்’ என்று கூட்டிக்கொண்டு போகவேண்டிய வேலையில் அவனுக்கு முன்னதாக எழுந்த சக மனிதர்கள், சக தோழர்கள் அனைவருக்கும் பங்குண்டு. இந்த முயற்சியில் தோற்றாலும் வெற்றிதான். ஏனெனில் அது முதல் நகர்வாக இருக்கும்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

எல்லா நேரங்களிலும் ரூபாய் வெல்வது என்பது நடக்காது. ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு வாழமுடியாது. என்னுடைய ஆதங்கமும் அவமானமும் தாங்கொணாதது. மண்ணில் தலைபுதைக்கும் நேரம் இதுவன்று. எழுந்து தலையைச் சிலுப்பிக்கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் எழுப்பிவிடவேண்டும். ஒரு அறிவாளி இன்னோர் அறிவாளியைப்பார்த்து, ‘‘அவர்கள் ஏழைகள். அவர்களின் அறிவு மட்டம் அவ்வளவுதான்’’ என்று சொல்வதெல்லாம் அசிங்கம். அவர்களின் அறிவுமட்டத்தை உயர்த்த வேண்டும். அவன் அவ்வளவு அறிவிலி கிடையாது. அவர்களுடைய வறுமை, அந்தத் தவறுகளையெல்லாம் செய்ய வைக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்கச்செய்வதற்கு, திருடர்கள் திருடுவதை இல்லாமலேயே போகவைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் அள்ளிக்கொண்டு இருந்ததில் 50 சதவிகிதம் குறைத்துக்கொண்டால் தமிழகம் முன்னேறிவிடும்.

ஓட்டுக்கு லஞ்சமாக மக்களுக்குக் கொடுக்கக்கூடிய பணத்தை மக்களுக்கு அவர்கள் அர்ப்பணித்தாலே போதும், தமிழகத்தின் பாதி சோகங்கள் தீர்ந்துவிடும். இதுதான் நிஜம். அது எல்லோருக்கும் தெரிந்த நிஜம்.  அது தெரிந்திருந்தும், நம் வீட்டில் ஒரு ஏசி, ஃபிரிட்ஜ்  தவறான வழிகளில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் சுயநலம், அது பக்கத்து வீட்டை, பக்கத்து ஊரை மட்டும் கெடுக்காது, உன்னையும் கெடுக்கும்.

ஆம், ஓட்டப்பம் வீட்டைச்சுடும். இதற்குமேல் ஓட்டுக்குப் பெரிய அர்த்தம் சொல்ல முடியாது.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.