பிரீமியம் ஸ்டோரி

போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் அதிர்ந்துபோய் இருக்கிறது தமிழ்நாடு.

அராஜக எஜமானன்!

பெரும்பாலான மக்கள் பேருந்துப் போக்குவரத்தை நம்பியிருப்பதால், இந்த வேலைநிறுத்தத்தின் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ‘சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே இதில் அரசியல் செய்கின்றன’ என்று தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால், தொழிற்சங்கங்கள் எடுத்துவைக்கும் அடுக்கடுக்கான காரணங்களோ நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கின்றன.

இது சம்பள உயர்வு தொடர்பான பிரச்னை மட்டுமன்று. இதற்கான அடிப்படைகளை ஆராய்ந்துபார்த்தால், சம்பளத்தைத்தாண்டிப் போக்குவரத்துக் கழகங்களின் ஆணிவேர்வரை அவலம் புரையோடிப்போயிருப்பதை அறியமுடிகிறது. ‘`போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் கேட்கும் அளவுக்கு ஊதிய உயர்வு கொடுக்க முடியாது’’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சொல்கிறார். போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்க யார் காரணம்?

பணிமனைகளை வங்கிகளில் அடமானம் வைக்கும் லட்சணத்தில்தானே போக்குவரத்துக் கழகங்களை அரசு ‘திறம்பட’ நிர்வகிக்கிறது. ஆறாண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குக்கூட தமிழக அரசு இன்னும் ஓய்வூதியப் பலன்களை வழங்கவில்லை என்பது, தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையைத்தானே காட்டுகிறது. தொழிலாளர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 4500 கோடி ரூபாய் பணம் எங்கேபோனது என்றே தெரியவில்லை, இதற்கு யார் பொறுப்பு? இந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்தச்சொல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் அரசு இதுநாள்வரை செயல்படுத்தவில்லையே, ஏன்? அரசுக்குச் சொந்தமான 22,000 பேருந்துகளில் கிட்டத்தட்ட 70 சதவிகிதப் பேருந்துகள் சாலைகளில் ஓட்டுவதற்குத் தகுதியற்றவையாக இருக்கின்றன என்றால், அலட்சியம் யாருடையது?

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றாலும், அவர்களின் வலியை நம்மால் உணரமுடிந்தாலும், திடீரென்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அல்லல்களையும் தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவேண்டும். பல இடங்களில் பாதிவழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு, திருமணத்துக்கு, அலுவலகத்துக்கு என எங்கும் போகமுடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பேருந்துகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவது அடித்தட்டு மக்களும் நடுத்தரவர்க்கத்து மக்களும்தாம். முறையான அறிவிப்புடன் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியிருந்தால் இந்த அசாதாரண நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

எப்படி இருந்தபோதும் இந்தப் பிரச்னையின் `மூலம்’ அரசிடம்தான் இருக்கிறது. தீர்வுக்கான சாவியும் அரசின் கைகளில்தான் இருக்கிறது. போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களுக்கு நீதி வழங்கத் தமிழக அரசு முன்வரவேண்டும்.

மாநிலத்தில் இருக்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய தமிழக அரசே இப்படி ஓர் அராஜக எஜமானனாக நடந்துகொள்வது கடும் கண்டனத்துக்குரியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு