Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

விகடன் விமர்சனக்குழு

வீயெஸ்வி, படங்கள்: ப.சரவணக்குமார், க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

ராகவேந்திரா  மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி... அதே நாளில் வாணிமகாலில் ராகவேந்திரரை தரிசித்த ரசிகர்கள்! முன்னது ஆன்மிக அரசியல்; பின்னது ஆன்மிக ஹரிகதா கச்சேரி!

தியாக பிரம்ம கான சபாவுக்காக `ஸ்ரீராகவேந்திர வைபவம்’ என்ற தலைப்பில் ஹரிகதை - கம் - கச்சேரி நிகழ்த்தினார் விசாகா ஹரி. ராகவேந்திரரின் குடும்பமே  வீணைப் பரம்பரை என்பதால், வயலின், மிருதங்கம், கடத்துடன் மேடையில் வீணையும் உண்டு. முடிகொண்டான் ரமேஷ். இவரையும், வயலின் வாசித்த திருவனந்தபுரம் சம்பத்தையும் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் கணக்கில் கண்களாலேயே டிரில் வாங்கிக்கொண்டிருந்தார் விசாகா!

`துங்கா தீர விராஜம்...’ என்ற யமுனா கல்யாணி ராகப் பாடலைப் பாடிவிட்டு மகானின் வாழ்க்கை சரிதம் ஆரம்பித்தார். துறவுக்கு முன்னர் வேங்கடநாதன் என்ற பெயர் கொண்டவராக இருந்திருக்கிறார் ராகவேந்திர சுவாமிகள். இவர் சகோதரியின் மகன் நாராயணாச்சார். இவர் தன் தாய்மாமனின் வாழ்க்கைக் கதையை `ஸ்ரீமத் ராகவேந்திர விஜயம்’ என்ற தலைப்பில் வடமொழியில் எழுதியிருக்கிறார். கதைசொல்லி விசாகா, தான் இதையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சரிகமபதநி டைரி - 2017

நேரம் போனதே தெரியாமல், மூன்று மணி நேரத்துக்குக் கதையும் கச்சேரியுமாகத் தொடர்ந்தது. தானா சேர்ந்த கூட்டம் மகிழ்ந்தது!

சிதம்பரத்துக்கு அருகில் புவனகிரி, மதுரை, பிற்பாடு தஞ்சாவூரில் துறவறம் எனத் தமிழ்நாடுதான் ராகவேந்திரருக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததையும், இறுதியில் மந்தராலயம் சென்று மகான் ஜீவசமாதி அடைந்ததையும் ஜீவன் கெடாமல் விவரித்தார் விசாகா. 42 கிரந்தங்களும் ஒரேயொரு கீர்த்தனையும் மட்டுமே சுவாமிகள் இயற்றியதாகத் தகவல் சொன்னார். சமையல்காரர் சுப்பண்ணா என்கிற அணுக்கத்தொண்டருக்கு ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதத்தை விசாகா விவரித்தது சிலிர்ப்பூட்டியது. கதைக்கு நடுவே விசாகாவின் இனிமை பொழியும் குரலில் கச்சேரியும் உண்டு. ராகம், தானம், நிரவல் உண்டு. தனி ஆவர்த்தனமும் உண்டு. சரி, முழு நிகழ்ச்சியில் கதை அதிகமா அல்லது பாட்டுக் கச்சேரியா? எடை போட்டுப்பார்த்தால் தராசு முள், கச்சேரியின் பக்கமே லேசாகச் சாயும்!

பாரத் கலாச்சாரில் பாட்டும் நாம சங்கீர்த்தனமும் ஒரே மேடையில் இணையக் கண்டோம்! கூட்டணியில் செங்கோட்டை ஹரி பாகவதர் நாம சங்கீர்த்தனம் செய்ய, சங்கீதம் பிரிவுக்கு கே.என். சசிகிரண் - பி.கணேஷ் இன்சார்ஜ்! இரண்டு கோஷ்டிகளுக்கும் பொதுவாக எம்.ஏ.சுந்தரேசன் (வயலின்), தஞ்சாவூர் முருகபூபதி (மிருதங்கம்), திருச்சி முரளி (கடம்).

நாராயணன் மீதான நாமாவளியுடன் ஹரி பாகவதர் ஹைபிட்சில் ஆரம்பித்துவைக்க, தொடர்ந்தது ஒரு கீர்த்தனை. மறுபடியும் பாகவதர். அவர் நிறுத்தியதும் வித்வான்கள். இப்படி நிறைய கடவுளர்களும், தியாகராஜர், சியாமா சாஸ்திரி என வாக்யேயக்காரர்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். கல்யாணியும், தேனுகாவும், ரீதிகௌளையும், சிவரஞ்சனியும் மூவரும் பாட, வயலின் எம்.ஏ.எஸ் எந்தவித நார்மல் கச்சேரிக் கட்டுப்பாடும் இல்லாமல் சொந்தச் சரக்கை நிறைய  வாசித்தார். நாம சங்கீர்த்தனம் - கச்சேரி இரண்டுக்கும் மிருதங்கம் வாசிப்பவர், ஆதலால் முருகபூபதியும் கூட்டணிக்கு ஜோராக வக்காலத்து வாங்கினார்.

வழக்கமான விரிவான ராக ஆலாபனை, தானம், பல்லவி என ஒரு மாதமாகக் கேட்ட காதுகளுக்கு இந்த நிகழ்ச்சி ஆறுதலான மாறுதல்!

சரிகமபதநி டைரி - 2017

சின்ன வயதிலேயே மியூசிக் அகாடமியின் சீனியர் ஸ்லாட்டுக்கு மேடை உயர்வு கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர், கே.காயத்ரி. நடந்து முடிந்த சீஸனில் இங்கே சீனியர் பிரிவில் மிகச்சிறந்த பாடகியாகத் தேர்வுசெய்யப்பட்டார் இவர்.

அகாடமி கச்சேரி என்றால், பல்லவியில் ஸ்பெஷல் கவனம் செலுத்துபவர் காயத்ரி. ஏற்கெனவே இதற்கான இரண்டு, மூன்று தங்கப்பதக்கங்கள் இவரின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன!

பூர்விகல்யாணி ராகத்தில் காயத்ரி பாடிய பல்லவி, மார்க தாளத்தில் அமைந்தது. இதற்கு `சட்பித புத்ரிகம்’ என்று பெயர். (மேற்கொண்டு விவரம் வேண்டுபவர்கள், பாடகியைத் தொடர்புகொள்ளவும்!) பல்லவி மற்றும் ஸ்வரங்கள் பாடும்போது வலது உள்ளங்கையை மூடிக்கொண்டு, தபால் ஆபீஸில் அரைவட்டமாக முத்திரை குத்துவதுபோல் கையை நகர்த்திக்கொண்டே போய் வந்தது... தாளக்கணக்கு வசப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்! சொந்தமாகத் தயாரித்த பல்லவிக்காக ஒரு மாதம் உழைத்திருக்கிறார் காயத்ரி. சி.ஏ தேர்வுக்குப் படிப்பதுபோல் அநேகமாக தினமும் பிராக்டீஸ் செய்திருக்கிறார். உழைப்பு வீண்போகலே!
முன்னதாக, முகாரியை மிக்ஸியில் போட்டு ஜூஸ் பிழிந்து கொடுத்தார் காயத்ரி. ராமனைக் கண்ணார தரிசித்து, அவனுக்கு இனிய கனிகளை அளித்து, அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, பிறவியற்ற மோட்சப் பதவியை அடைந்த சபரி பற்றி தியாகராஜர் பேசும் பாடல், வால்மீகிதானே தியாகராஜருக்கு இன்ஸ்பிரேஷன்!

சங்கராபரணத்திலும் ஸ்கோர்செய்தார் காயத்ரி. முக்கியமாக, மேல் ஸ்தாயிப் பயணத்தில் சுதா, சௌம்யாவின் சங்கதிகளுடன் பிரச்னை இல்லாமல் பயணித்தார். வரும் வருடங்களில் இன்னும் சிறிது மசாலா தூவி, விறுவிறுப்பு கூட்ட வேண்டும் இவர்!

யிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன். `தோட்டத்துக் குயில்’ என்று அழைக்கலாம் இவரை. அந்த அளவுக்கு இனிமை சொட்டும் குரல். இவர் அழைப்புக்கு எப்போதும் காத்திருக்கும் சங்கதிகள், பிருக்காக்கள்.

விட்டல் ரங்கனின் வயலின் வாசிப்பும், சுமேஷ் நாராயணன், சுனில் குமாரின் மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பும் ஸ்ரீரஞ்சனிக்குப் பக்கா துணை.

நாகஸ்வராளி ராகத்தில் `ஸ்ரீபதே...’ கீர்த்தனை. ஸ்வரங்களில் ரங்கோலி கோலம் போட்டார் ச.கோபாலனின் புதல்வி. தியாகராஜரின் சூர்யகாந்தம் ராகப் பாடலான `முத்துமோமு ...’விலும், முன்னர் ராக ஆலாபனையிலும் சரசரச் சங்கதிகள். முக்கியமாக, உதடுகளை மூடிய நிலையில் அங்கங்கே இவர் ராகத்தை `ஹம்’ செய்தது அழகு!

ரீதிகௌளை ராகத்தில் `ஜனனி நின்னுவினா...’ பாடிக்கொண்டிருக்கும்போது மைக் தன் வேலையைக் காட்டிவிட்டது. இந்தப் பாடலின் முக்கியமான சரணவரிகளை ஒழுங்காகப் பாடவிடாமல் தொந்தரவு கொடுத்தவண்ணம் இருந்தது ஒலிபெருக்கி.

சபா நிர்வாகிகளில் யாருமே ஹாலில் இருந்ததாகத் தெரியவில்லை. `உங்க பாடு... மைக்காரர் பாடு’ என ஒதுங்கிக்கொண்டு, மாலைக் கச்சேரிக்கு டிக்கெட் விற்க கவுன்ட்டரில் உட்கார்ந்துவிடுகிறார்களோ என்னவோ! பெரும்பாலான சபாக்களில் இதுவே நிலைமை.

சரிகமபதநி டைரி - 2017

ங்கீத கலாநிதி விருது அதிகாரபூர்வமாகக் கிடைப்பதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னர், மியூசிக் அகாடமியில் ரவிகிரணின் சித்ரவீணை இசைக் கச்சேரி. அக்கரை சுப்புலட்சுமி வயலின். கே.வி.பிரசாத் மிருதங்கம். பக்கவாத்தியமாக இந்த இரண்டும் ஓகே. ஆனால், கடமும் கஞ்சிராவும் தேவையில்லாத எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்!

``சித்ரவீணை வாசிக்கும்போது நாங்கள் நியூரோ சர்ஜன் மாதிரியாக மாறிவிடுவோம். குனிந்த தலை நிமிர முடியாது” என்பார் ரவிகிரண். எப்போதும்போல் அன்றும் ஆபரேஷன் சக்சஸ்!

ஊர்மிகா ராக ஆலாபனை செம கூர்மை. முக்காலப் பயணங்களிலும் சொக்கவைத்த அதிசயம். அதே மாதிரி சங்கராபரணம். மாதா மாதாம் சீட்டு கட்டி முடிவில் ஆபரணம் வாங்கும்போது ஏற்படும் திருப்தியையும் சந்தோஷத்தையும் சித்ரவீணை வழியே சங்கராபரணம் வழங்கியது. இரண்டு ராகங்களிலும் சுப்புலட்சுமியின் வாசிப்பு வெண்ணெய்! வாசிப்பதே தெரியாமல் மிருதங்கம் வாசித்து கச்சேரியின் அந்தஸ்தை உயர்த்தினார் கே.வி.பிரசாத்.

ரவிகிரணின் இந்தக் கச்சேரியின் பட்டியலில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஊத்துக்காடு வேங்கடகவிக்கு இடம் ஒதுக்கப்படாதது ஆச்சர்யம்!

அடுத்த முறை நாரத கான சபாவின் விழா மேடையை இன்னும் கலைநயத்துடன் அமைக்க கலைவாணி அருள்புரியட்டும்! கண்களைக் கூசும் அளவு விளக்கு வெளிச்சம் - இரவு நேரம் சாலையில் எதிர்த்திசையில் வரும் லாரிகளின் ஹெட்லைட் மாதிரி தாக்கியது.

சரிகமபதநி டைரி - 2017

இந்த சபாவில் `நாத பிரம்மம்’ விருதும் ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் பெற்ற டி.என். சேஷகோபாலனின் கச்சேரி ஜனவரி முதல் தேதி காலையில்.

அம்மாம் பெரிய ஹாலில் இருநூறு பேர்கூட இல்லாமல் இந்த சீனியர் வித்வான் பாட நேரிட்டது, பார்க்கவும் கேட்கவும் வேதனை.

பூர்விகல்யாணி ராகத்தை சேஷகோபாலன் ஆலாபனை செய்தபோது, `இந்த மகாவித்வான் அந்த நாளில் இதையே எவ்வளவு பிரமாதமாகப் பாடியிருக்கிறார்!’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. அதே மாதிரி காபி, ஆபேரி என டி.என்.எஸ்., பாடிய சமயமெல்லாம் இவர் `பீக்’கில் இருந்த சமயம் பாடியதுதான் நினைவில் வந்தது!

டி.என்.சேஷகோபாலன் நன்றாக வீணையும் வாசிப்பார் என்பது சபாக்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்!

- டைரி புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு