Published:Updated:

ரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!
ரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

ரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

பிரீமியம் ஸ்டோரி

ஜினி நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களை ஒருங்கிணைத்து ரத்த தானம் செய்வதைப் பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வெங்காடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் என்ற ரஜினி ரசிகர். 1987-ல், ‘ரஜினி ரத்த தானக் கழகம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை 11 பேருடன் தொடங்கிய திருமாறன், சுற்றுவட்டாரங்களில் பல ரத்த தானக் குழுக்களை உருவாக்கினார். இந்த அமைப்பில் தற்போது 1,68,000 குருதிக்கொடையாளர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் 2,085 முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. இதன் காரணமாக, கின்னஸ் சாதனையையும் இந்த அமைப்பு படைத்துள்ளது. தற்போது, ரஜினி ரத்த தானக் கழகம் சார்பில் இங்கிலாந்திலும் முகாம்கள் நடத்தி முடித்து வந்துள்ளார் திருமாறன். அவரிடம் பேசினோம்.

ரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

“ரசிகர் மன்றம் என்பது வெறும் பொழுதுபோக்குக்கானது என்பதை மாற்ற வேண்டுமென்று நினைத்து, 31 வருடங்களுக்கு முன்பு ரஜினி ரத்த தானக் கழகத்தைத் தொடங்கினோம். ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து ரத்த தானம் வழங்கினர். அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் எங்கள் சுற்றுவட்டாரத்தில் பல ஊர்களிலும் ரத்த தான அமைப்புகளைத் தொடங்கினோம். கல்லூரிகளுக்குச் சென்று ரத்த தான விழிப்புஉணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். கல்யாண வீடு, காதுகுத்து வீடு, சினிமா தியேட்டர், கோயில்கள் என எல்லா இடங்களிலும் முகாம்கள் நடத்தியுள்ளோம். நான், இதுவரை 51 முறை ரத்த தானம் செய்திருக்கிறேன். இந்தப் பணியைப் பார்த்து ரஜினி எங்களை உற்சாகப்படுத்தினார். 20 தடவைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களுக்கு, அவரே கையெழுத்துப் போட்டுச் சான்றிதழ் வழங்கினார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ், எங்கள் கிராமத்துக்கே வந்து எங்களுக்கு ஊக்கமளித்தார்.

எங்களின் செயல்பாடு இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து, அங்குள்ள தேசிய சுகாதாரம் மற்றும் சமூக நல இயக்கம் சார்பாக எங்களின் பணிகள் பற்றிப் பேச அழைத்தார்கள். அதை ரஜினிக்குத் தெரிவித்தோம். உடனடியாக சுதாகர் மூலம் என்னைத் தொடர்புகொண்ட ரஜினி, இங்கிலாந்து நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூறினார். எங்களை அழைத்த அமைப்பு, உலகிலேயே மிகப்பெரிய ரத்த வங்கியாகச் செயல்படுகிறது. எங்கள் அமைப்பு பற்றி ஆர்வத்துடன் கேட்டார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சியில், ‘எங்கள் ஊரில் சாதி, மதம், மொழி எனப் பல பிரிவுகள் இருந்தபோதிலும், சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த ரஜினியின் பெயரால் அமைப்பைத் தொடங்கியதால், எங்களால் வெற்றிபெற முடிந்தது. நீங்களும் ராணி எலிசபெத், மறைந்த டயானா, ஜேம்ஸ்பாண்ட் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களில் அமைப்பு தொடங்குங்கள்’ என்று குறிப்பிட்டேன்.

நிகழ்ச்சி நடத்த கிங்ஸ்டன் நகரில் ரத்த தானம் பற்றிப் பேசினேன். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பலர், ரஜினியின் படத்தைக் கையில் ஏந்தியபடி ரத்த தானம் செய்தார்கள். கிங்ஸ்டன் நகரின் மேயராக இலங்கைத் தமிழரான வைத்தீஸ்வரன் தயாளன் இருக்கிறார். ரஜினி பெயரில் நடக்கும் இந்தப் பணிகள் குறித்துக் கேட்டறிந்த அவர், விரைவில் தமிழகத்துக்கு வந்து ரஜினியைச் சந்திக்க இருப்பதாகக் கூறினார். அவர், ரஜினியை இங்கிலாந்து அழைத்துச்சென்று ரத்த தானம் குறித்து வாய்ஸ் கொடுக்கவைக்க விரும்புவதாகவும் சொன்னார்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

அரசியலைத் தாண்டிய அக்கறைப்பணி.

- பி.ஆண்டனிராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு