Published:Updated:

`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்' சீனிவாசன் 

`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்' சீனிவாசன் 
`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்' சீனிவாசன் 

சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி, பெண் பி.ஆர்.ஓ. மூலம் நடிகர் `பவர் ஸ்டார்'  சீனிவாசன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் மனைவியின் பெயரில் உள்ள ஊட்டி வீட்டை மிரட்டி வாங்க முயன்ற கடத்தல் கும்பலை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். 

சென்னை அண்ணாநகர், கிழக்கு 4-வது தெருவைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர், கடந்த 5-ம் தேதி கடத்தப்பட்டதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, பவர் ஸ்டார் சீனிவாசன், அவரின் மனைவி ஜூலி ஆகியோரைக் கடத்திய கும்பலை மடக்கிப் பிடித்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரின் மனைவி ஜூலி கடந்த 5-ம் தேதி எங்களிடம் தெரிவித்தார். அதன்பிறகு, ஜூலியையும் கடத்திவிட்டதாக அவரின் குடும்பத்தினர் கூறினர். இதனால் கடத்தல் கும்பலைப் பிடிக்க திட்டம் வகுத்தோம். ஊட்டியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஜூலியின் பெயரில் உள்ள சொத்தை பத்திரப்பதிவு செய்யப்போகும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அங்கு சென்று, கடத்தல் கும்பலை மடக்கினோம். எங்களிடம் சிக்கியவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

இந்த நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், சினிமா பி.ஆர்.ஓ பிரித்தி, செல்வின், ஆலம் உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த 3-ம் தேதி இரவு 7 மணியளவில், பவர் ஸ்டார் சீனிவாசனிடம் சினிமா பி.ஆர்.ஓ பிரித்தி என்பவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, உங்களுக்கு 10 நாள் கால்ஷீட் உள்ளது என்றும் 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தருகிறேன் என்றும் போனில் கூறியுள்ளார். 5.12.2018, காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நீங்கள் வந்தால், படத்தின் தயாரிப்பாளரைச் சந்திக்கலாம் என்று பிரித்தி தெரிவித்துள்ளார்.

இதனால் நடிகர் பவர் ஸ்டார், கோயம்புத்தூரிலிருந்து கோயம்பேடுக்கு வந்துள்ளார். ஹோட்டல் அறை எண் 210-ல் பி.ஆர்.ஓ பிரித்தி மட்டும் இருந்தார். அவரிடம் தயாரிப்பாளர் குறித்து பவர் ஸ்டார்  கேட்டுள்ளார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர் என்று செல்வின் என்பவர் வந்துள்ளார். அவருடன் பெயர் தெரியாத சிலரும் மதுரவாயலைச் சேர்ந்த ஸ்டன்ட் யூனியனைச் சேர்ந்த ஒருவரும் வந்தார். வந்தவர்களில் 3 பேர், தங்களை வக்கீல் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.  அவர்கள் அறைக்குள் வந்தவுடன் பவர் ஸ்டார் சீனிவாசனிடமிருந்த  இரண்டு செல்போன்களையும் பறித்துள்ளனர். பிறகு,  பவர்ஸ்டாரின் பேன்ட், சட்டை தொப்பி ஆகியவற்றைக் கழற்றும்படி அவர்கள் மிரட்டியுள்ளனர். 

எதற்காக என்னை மிரட்டுகிறீர்கள் என்று  நடிகர் பவர் ஸ்டார் கேட்டுள்ளார். அதற்குக் கடத்தல் கும்பல், `நீங்கள் பெங்களூரைச் சேர்ந்த ஆலம் என்பவரிடம் 90 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளீர்கள். அந்தப் பணத்தை ஒழுங்காக திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என்று  மிரட்டியுள்ளனர். அதற்கு சீனிவாசன், `தன்னிடம் பணம் இல்லை' என்று கூறியுள்ளார். உடனே, ஊட்டியில் உள்ள வீட்டை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டல் கும்பல் கூறியுள்ளது. அப்போது, ஊட்டி வீடு என்னுடைய மனைவியின் பெயரில் உள்ளதாக பவர் ஸ்டார்  கூறியுள்ளார். உடனே, பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவியை ஹோட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர், `என் மனைவி ஹோட்டலுக்கு எல்லாம் வரமாட்டார்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு, நடிகர் பவர் ஸ்டாரை காரில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டுக்கு  சென்றுள்ளனர். அங்கு வைத்து 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அப்போது அவர், `தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய்கூட இல்லை' என்று கூறியுள்ளார். அதன்பிறகு, செல்வின், பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியிடம் போனில் பேசியுள்ளார். பின்னர் அந்தக் கும்பல், அண்ணா நகருக்கு பவர் ஸ்டாரை அழைத்துவந்துள்ளது. இரவு 10 மணியளவில், மீண்டும் கோயம்பேட்டில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

அரைமணி நேரத்துக்குள் பணத்தைத் தரவில்லை என்றால், 'குழந்தைகளைத் தூக்கிவிடுவோம்' என்று பவர் ஸ்டாரை மிரட்டியுள்ளனர். அதன்பிறகு, வக்கீலை சந்திக்க வண்டலூருக்குச் செல்ல வேண்டும் என்று பவர் ஸ்டாரிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், தனக்கு உடம்பு சரியில்லை, வக்கீலை கோயம்பேடு ஹோட்டலுக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் பவர் ஸ்டாரை காரில் ஊட்டிக்குக் கடத்தி சென்றுள்ளனர்.

6.1.2.2018 காலை 6 மணிக்கு ஊட்டிக்குச் சென்றபோது, ரயில் நிலையம் அருகே ஆலம் வந்துள்ளார். ஆலம் கூறியதன் பேரில் ஜூலி  விமானம் மூலம் ஊட்டிக்கு வந்துள்ளார். சீனிவாசனை அங்குள்ள காட்டேஜில் தங்க வைத்துவிட்டு, ஜூலியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளது அந்தக் கும்பல். அதன்பிறகு, சில பேப்பர்களில் நடிகர் பவர் ஸ்டாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இன்று (திங்கள்கிழமை) பத்திரப்பதிவு நடக்கவுள்ளதாக ஆலம், நடிகர் பவர் ஸ்டாரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு,  அவரை கடத்தல் கும்பல் விட்டுள்ளது. அப்போது அவரிடம், 'ஒழுங்கா போய் குழந்தைகளைப் பார்த்துவிட்டு திங்கள்கிழமை இங்கு வந்திடணும். போலீஸிடம் எதுவும் போகக் கூடாது. நீ வரும் வரை ஜூலி எங்களுடன் இருப்பார்' என்று சொல்லி, பவர் ஸ்டாரை காரில் அனுப்பிவைத்துள்ளனர். 9.12.2018 சென்னைக்கு வந்த பவர் ஸ்டார், நடந்த சம்பவங்களை எங்களிடம் கூறினார். வீட்டின் ஒரிஜினல் டாக்குமென்ட், ஆலம் கும்பலிடம் உள்ளதாக நடிகர் பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.  அவர் கொடுத்த தகவலின்படி, ஜூலியை மீட்டு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரை பிடித்துள்ளோம்'' என்றார். 

பவர் ஸ்டார் சீனிவாசனிடம் போலீஸார் விசாரித்தபோது, கடத்தல் கும்பலால் தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட சித்ரவதைகளைத்  தெளிவாகக் கூறியுள்ளார். சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி என்பவர் மூலம் ஆலம், ஸ்கெட்ச் போட்டு நடிகர் பவர் ஸ்டாரை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தியுள்ளார். போலீஸாரின் துரித நடவடிக்கையால், கடத்தல் கும்பலிடமிருந்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி மீட்கப்பட்டுள்ளார்.