Published:Updated:

`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது!' - துணை நடிகை, இளம்பெண் புகார்

`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது!' - துணை நடிகை, இளம்பெண் புகார்
`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது!' - துணை நடிகை, இளம்பெண் புகார்

``சமூகவலைதளங்களில் நிர்வாணப் படங்கள் வெளியாகுவதற்குமுன் சினிமா இயக்குநரின் செல்போன், லேப்டாப், வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்து எங்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று கண்ணீர்மல்க துணை நடிகை, பட்டதாரி இளம்பெண் என இருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (பெயர் மாற்றம்) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.  அதில் ``நான் எம்.காம் படித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துவருகிறேன். சினமாத் துறையில் உள்ள பிரபலமான இயக்குநர் ஒருவர், எனக்கு சினிமாவில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வேலை வாங்கித் தராமல் அவர் இழுத்தடித்து வந்தார். பிறகு என்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் உனக்கு நான் வேலை வாங்கிக் கொடுப்பேன் என்று கூறினார். நான் மறுத்தேன். புகைப்படம் அனுப்ப முடியாது என்று கூறியவுடன் அவர் என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். என்னைப்பற்றிய தவறான விஷயங்களை மற்றவர்களிடம் பரப்பிவிடுவதாக என்னை மிரட்டினார். வேறுவழியின்றி என் புகைப்படங்களை அனுப்பும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இந்த விஷயம் இத்துடன் நில்லாமல் அவர் எனக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்னை தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தவும் செய்தார். அவருடைய நடத்தை எனக்குப்பிடிக்காததால் நான் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இயக்குநரின் அந்தரங்க வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எங்கே என் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவாரோ என்ற பயத்தினால் இந்தப் புகாரை கொடுக்கிறேன். வேறு சில ஆதாரங்களின் மூலமாக அவர் பெண்களின் புகைப்படங்களை வெளிநாட்டில் அவருடைய ஆட்களுக்கு பணத்துக்கு விற்பதாக கேள்விப்பட்டேன். அதை தடுக்கும் விதமாக அவருடைய செல்போன், லேப்டாப், வங்கி கணக்கு ஆகியவற்றை சோதனைக்கு உட்படுத்தினால் பல தகவல்கள் வெளிவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் எனக்கு அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக நான் மனரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளேன். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஞ்சனியைத் தொடர்ந்து துணை நடிகை ஒருவரும் அந்த இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். ``எனக்குச் சொந்த ஊர் பெங்களூரு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினேன். எனக்கு திருமணமாகிவிட்டது. நிறைய படங்களில் துணை நடிகை வேடங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளேன். இந்தச் சமயத்தில்தான்  என்னைக் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தைக் கூறினார். இதனால் அவரை முழுமையாக நம்பினேன். அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளேன். அப்போது சில இயக்குநர்களோடு பழகினால் சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் வரும் என்று கூறினார். அதோடு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம். அம்பாஸிடர் காரில் செல்லும் நீ, சொகுசு காரில் வலம் வரலாம் என்றும் தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இயக்குநர், பெண்களுடன் இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். நானும் அந்த இயக்குநர் வீட்டில் உடை மாற்றியுள்ளேன். அதை அவர் வீடியோவாக எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

இது குறித்து துணை நடிகை மற்றும் ரஞ்சனியின் வழக்கறிஞர் அபிமன்யூ கூறுகையில், ``சேலத்தைச் சேர்ந்த அந்த சினிமா இயக்குநர் சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். வீட்டுக்கு அருகிலேயே அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் சினிமாவில் துணை நடிகைகளைத் தேர்வு செய்து அனுப்பும் பணியைச் செய்து வருகிறார். ரஞ்சனி, துணை நடிகை ஆகியோரைப்போல பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவர்களின் ஆபாசப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி சினிமா வி.ஐ.பி-க்களுடன் சந்தோஷமாக இருக்கும்படி அவர் கூறியுள்ளார். அவரின் மிரட்டலால் பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. மேலும், அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறியதால் சில பெண்கள் சினிமா வி.ஐ.பி-க்களுடன் பழக வைத்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட பெண்களின் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் தடுப்பதோடு சம்பந்தப்பட்ட இயக்குநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

இந்தப் புகார் மீது விசாரணை நடத்தும்படி கமிஷனர் விஸ்வநாதன் அடையாறு துணைக்கமிஷனர் ஷாங்சாய்க்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் புகார் கொடுத்தவர்களிடம் அடையாறு துணைக் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.