
வி.இறையன்பு ஐ.ஏ.எஸ், இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமுகப் பயிற்சி நிறுவனம்சிறப்புப் பேட்டி
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமுகப் பயிற்சிகள் நிறுவனத்தின் (Entrepreneurship Development and Innovation Institute) இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் வி.இறையன்பு ஐ.ஏ.எஸ். தனது புதுமையான சிந்தனைகள் மூலம் எல்லோரிடத்திலும் நம்பிக்கையை ஊட்டி, நல்வழிப்படுத்துவதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும், அக்கறையும் அளப்பரியது. கடந்த பல பத்தாண்டுகளாக பல்வேறு துறைகளில் உற்சாகமாகச் செயல்பட்டவர், புதிய தமிழகத்தை உருவாக்குவதில் சுறுசுறுப் பாகச் செயல்பட்டு வருகிறார். அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...
இன்றைக்கு தமிழக இளைஞர்களிடம் தொழில்முனைதல் எப்படி இருக்கிறது?
‘‘இன்றைய இளைஞர்கள் புத்தாக்க எண்ணங்களுடன், சமுதாய மாற்றத்தைநோக்கி துடிப்பாகவும் விரைவாகவும் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள். தமிழக இளைஞர்கள், பல்வேறு துறைகளில் தடம்பதித்து, அந்தத் துறைகளில் பெரிய சாதனையாளர்களாக உருவாகியுள்ளதை நாம் கண்டுள்ளோம். புதுமையானக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்றைய இளைஞர்கள், வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி அரசாங்க உதவிகளையும் முறையாகப் பெற்று பெரிய தொழில்களையும் எளிய முதலீட்டுடன் தொடங்க முடியும் என்பதை அறிந்துள்ளனர். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலமே பல முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் வெற்றிகரமாகத் தொழில் தொடங்கி சாதித்து வருகின்றனர்.’’

அரசு மற்றும் தனியார் வேலைகளில் ஆர்வமாக இருக்கும் நமது இளைஞர்கள் தொழில்முனைதல் பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறதா?
‘‘இன்றைய தேதி வரை, தமிழகத்தில் சுமார் 89 லட்சம் இளைஞர்கள் பல்வேறு கல்வித் தகுதிகளுடன், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலை அளிப்பது இயலாத செயல். சமீப காலங்களில், லட்சங்களில் சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்கள், மென்பொருள் ஊழியர்கள் போன்றோர், தங்களின் செல்வச் செழிப்பான வேலைகளை உதறிவிட்டு சுயதொழில் பக்கம் பயணித்து வெற்றியடைந்து உள்ளனர். குறிப்பாக, வேளாண் சார்ந்த தொழில்களில் முத்திரை பதித்து, பிறருக்கு வேலை தருபவர்களாகப் புதுப்புது தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி, சாதித்து வருகின்றனர். இந்தப் பாதையில் பயணிக்க பலரும் ஆயத்தமாக உள்ளனர்.’’
இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு அரசுத் தரப்பில் நீங்கள் என்ன உதவிகளைச் செய்கிறீர்கள்?
‘‘ ‘தொழில் தொடங்க வாருங்கள்; தோள் கொடுக்க நாங்கள்’ என்பதே தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தாரக மந்திரம். அரசுத் தரப்பில் தொழில் முனைவர் களுக்குப் பல்வேறு ஆலோ சனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் இயங்கும், தொழில் ஆலோ சனை மையம்மூலம் எல்லா வேலைநாள்களிலும், தொழில்முனைவருக்கான ஆலோசனைகள் இலவச மாக வழங்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு வியாழக் கிழமையும் தொழில் முனைவர் கிளினிக், கிண்டி யில் உள்ள எங்கள் அலுவலக வளாகத் திலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பாகத் தொழில் நடத்தி வருபவர்களைத் தங்கள் கேள்விகளுக்கு விடை காணவும், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தேர்ந்தெடுத்தல், தொழில்நுட்பத் தகவல், சந்தைப்படுத்துதல், அரசின் நிதி உதவிகள்/ மானியங்கள், வல்லுநர்கள் மூலம் தொடர் தொழில் வழிகாட்டுதல் போன்ற சேவைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும், ஒரு நாள் தொழில்முனைவர் விழிப்பு உணர்வு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. தொழிலைத் தேர்வு செய்த வர்களுக்கு ஒரு வார கால வணிகத் திட்டம் தயாரிக்கும் பயிற்சியும், இதனைத் தொடர்ந்து மூன்று வார கால தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவை தவிர, தேவையின் அடிப்படையில், வாய்ப்புகள் அதிகமுள்ள தொழில்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள்/ பட்டறைகள்/ கருத்தரங்குகள் புதிதாகத் தொழில் தொடங்கவரும் இளைஞர் களுக்கு நடத்தப்படுகின்றன.
மேலும், 88 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தொழில்முனைவர் விழிப்பு உணர்வு முகாம் நடத்தி அவர்களைத் தொழில் தொடங்க வைத்து வேலை தருபவர்களாக மாற்ற அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் தொடங்க முடி வெடுத்துள்ளவர்களுக்கு, அவர்களுடைய தொழிலின் தன்மைக்கேற்ப அரசின் மானியக் கடன் உதவிகள் பரிந்துரைக்கப்படு கின்றன. மேலும், வங்கிக் கடன் பெற அவசியமான திட்ட அறிக்கை தயாரிக்க பயிற்சியளிக்கப்படுகிறது. வழிகாட்டிகள் மூலம் வங்கிக் கடன் பெறத் தேவையான அம்சங்கள் பயிற்றுவிக்கப்படு கின்றன.
1. புதிய தொழில்முனைவர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) - ரூ.5 கோடி வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
2. படித்து வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP) - ரூ.10 லட்சம் வரை அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
3. பிரதம மந்திரி வேலை உருவாக்கும் திட்டம் (PMEGP)- ரூ.25 லட்சம் வரை அதிகபட்சமாக ரூ.8.75 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
4. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில் கடனுதவித் திட்டம் (TAHDCO) - ரூ.10 லட்சம் வரை அதிகபட்ச மாக ரூ.2.25 (ஆதி திராவிடர்) மற்றும் ரூ.3.75 (பழங்குடியினர்) லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
இவை தவிர, மத்திய அரசின் திட்டங்களான முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா போன்றவைக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் நடத்தப் படுகின்றன.
தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் தொழில் காப்பகங்களை/பொரிப் பகங்களை (Incubation) உருவாக்கி/விரிவாக்கி அதன்மூலம் புதுத் தொழில்களைத் தேர்ந்தெடுத்துள்ள இளைஞர்களுக்கு அவற்றை சீரிய முறையில் ஆராய்ச்சி செய்து சந்தைப்படுத்திட ஏதுவாக அரசு உதவியுடன் தொழில் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.’’
தொழில்முனைதலில் மற்ற மாநிலங் களுடன் ஒப்பிடும்போது நமது மாநிலம் எப்படி இருக்கிறது?
‘‘மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய அளவில் மொத்த குறு, சிறு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 16% தமிழகத்தில் உள்ளது. 1.13 கோடி நபர்களுக்குமேல் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. உலகின் அனைத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவ னங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தமிழகத்தைத் தங்களின் உற்பத்தித் தளமாக கொண்டு இயங்கி வரு கின்றன. இதன்மூலம், வேலை வாய்ப்புகள் மற்றும் உபதொழில்கள் வளர்ச்சியடைந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மின்னணு வன்பொருள் உற்பத்தியில் தமிழகம் பிரதான இடத்தை வகிக்கிறது. ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்களில் முன்னோடி மாநில மாக உள்ளது. 1,000 கிலோ மீட்டருக்கு மேல் கடல் வளத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் கடல்சார் உணவுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகளவில் உள்ளது. விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்கள் குறிப்பாக, உணவுப்பதப்படுத்துதல், நார் பொருள்கள், மலர்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
மொத்தத் தொழில் துறையின் வளர்ச்சியில், தமிழ்நாடு, முதல் ஐந்து இடங்களில் உள்ளது. குறிப்பாக, உற்பத்தித் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் சிறந்து விளங்கி முதலிடத்தைக் கொண்டுள்ளது. மேற்கூறியவை அனைத்தும் பல்வேறு புதுப்புதுத் தொழில்களை ஆரம்பிக்க ஏதுவாக உள்ளது. குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் சுமார் 6000 விதமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முக்கியமானவை, ஜவுளி, மின் மற்றும் மின்னணுப் பொருள்கள், பொறியியல் பொருள்கள், தானியங்கி மின் பொருள்கள், தோல் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் (பிளாஸ்டிக்), ஆயத்த ஆடைகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் ஆகும்’’
இவரது வழிகாட்டுதலில் இன்னும் பல லட்சம் புதிய தொழில்முனைவர்கள் தமிழகத்தில் உருவாவார்கள் என்று எதிர்பார்ப்போம்!
- ஏ.ஆர்.குமார்
பிசினஸில் இறங்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
‘‘வாழ்கையில் எந்தவொரு செயலையும் ஆரம்பிக்கும்போது இடர்பாடுகள் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. இன்றைய உலகம் திறன் சார்ந்தது. இந்தத் திறன்கள் கல்வி வழியாகவும், அனுபவரீதியாகவும் பெறக்கூடியவை. வாழ்க்கைத் திறன்களும் இதில் அடங்கும். ‘தொழில் முனைதல் ஒரு கலை’ என்கிறார் பீட்டர் ட்ரக்கர் என்ற மேலாண்மை நிபுணர். ஒரு செயலைச் செய்ய எத்தனிக்கும்போது, முதலில் அவற்றைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்வதும், தெளிவுபெறுவதும் அவசியம். அதற்கான தேடலில் ஈடுபட்டு, தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் தேர்வு செய்யும் தொழிலுக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய வேண்டும். தொழிலுக்கான மூலப்பொருள்கள், சந்தை நிலவரங்கள், ஏற்கெனவே உள்ள போட்டிகள், தரம் போன்றவற்றை அனுபவமுள்ளவர்களுடன் பகிர்ந்து தெளிவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தொழில்முனைவர், சரியாகத் திட்டமிடாததால், சந்தையின் தேவை மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கணிக்க முடியாததால், தோல்வியைச் சந்திக்கின்றனர். மேலும், புதுமையான முறையில் தங்கள் தொழில்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.’’