Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ந்திய சுதந்திரத்தின் மீதான வேட்கையை, அன்றைய புதிய தேசவரைபடம் முழுக்கக்

தலையங்கம்

கொண்டுசேர்த்தவர்களில் முதன்மையானவர் காந்தி. அதனாலேயே, உலகின் மாபெரும் ஜனநாயக தேசத்தின் ‘தந்தை’ என்று அவர் கொண்டாடப்படுகிறார். “பரிசோதனைகளை நான் வெறுமனே மனதளவில் நடத்த விரும்பவில்லை” என்று சொன்ன காந்தி, தன் கருத்துகளை, போராட்டங்களை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் எப்போதும் உறுதிபட நின்றார். ‘அகிம்சை’ எனும் கோட்பாட்டை, போராட்ட வடிவத்தை  சர்வதேச அளவில் கொண்டுசேர்த்ததால், உலகு தழுவிய புகழுக்கும் மதிப்பிற்கும் உரித்தானார். கோடிக்கணக்கான மக்களால் ‘மகாத்மா’ என்று அழைக்கப்படுகிற காந்தியைப்போல, போற்றுதல்களையும் எதிர்விமர்சனங்களையும் ஒருங்கே எதிர்கொண்டவர்கள் வரலாற்றில் மிகச் சிலரே.

மனித உடல், ஆன்மிகம், அறம், அகிம்சை, மதம், வர்க்கம், வகுப்பு, வன்முறை, மொழி, இலக்கியம், கல்வி, தொழில், அரசு, வணிகம் என அவர் சிந்திக்காத தளமே இல்லை எனும் அளவிற்கு சிந்தித்துக் கருத்து தெரிவித்தவர். தனது பிரம்மச்சர்ய பரிசோதனை முயற்சிகள் உட்பட, ரகசியங்களுக்கு இடமற்ற வகையில் தனது வாழ்க்கையைப் பொதுவில் வைத்தவர். காந்தியை அவர் இயங்கிய தளங்களின் முழுமையான பரிமாணங்களோடு சுருக்கமாக விவரிப்பது சாத்தியமற்றது.

நுகர்வுக் கலாசாரம், கிராமங்களின் தற்சார்பிழப்பு, பெருகும் வன்முறை மனோபாவம், இயற்கையழிப்பு, ஊழல்கள், மத, மொழி மேலாதிக்கங்கள், நம்பிக்கைக்குரிய பொதுமனிதரற்ற சமூக அரசியல் வெளி போன்றவை நிலவும் இன்றைய சூழல், காந்தியத்தின் தேவையையும் காந்தியின் இருப்பையும் இன்று கோரி நிற்கின்றன.

காந்தியை எப்படிப் புரிந்துகொள்வது, இந்தியாவின் இச்சூழலுக்கு அவர் எப்படி உதவுவார், அவர் தற்காலத்திற்கு அப்படியே பொருந்தக்கூடியவரா, அவர்மீதான முக்கிய விமர்சனங்கள் எவை,  காந்தியிடமிருந்து  பெற்றுக்கொள்ள வேண்டியவை எவை என்ற உரையாடலை நோக்கிச் செல்லும் முயற்சியாக இவ்விதழில் சிறப்புக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியின் 150-ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை, அவரை மேலும் நெருங்கிச் செல்வதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்வோம். அதற்கான ஓர் எளிய முயற்சியே இந்த ‘காந்தி 150’ சிறப்பிதழ்!

- ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz