Published:Updated:

சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!

சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!

முகில்

மெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்த சீன் ஸ்வார்னெர் (Sean Swarner) என்ற சிறுவன், தனது பன்னிரண்டாவது வயது வரை ஆரோக்கியமாகவே இருந்தான். படிப்பு, விளையாட்டு என்று நண்பர்களுடன் வாழ்க்கை இயல்பாகத்தான் கழிந்தது. பதின்மூன்றாவது வயதில் தொடர்ந்து காய்ச்சல், உடல் எடை குறைந்தது.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் முடிவு... சீன் ஸ்வார்னெருக்குப் புற்றுநோய் என்றது. (Hodgkin's lymphoma என்ற வகை Cancer.) அதுவும் நான்காவது நிலை, ‘நோய் முற்றிவிட்டது.  அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை உயிருடன் இருப்பான்’ என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.

ஆனாலும், மருத்துவ சிகிச்சை தொடர்ந்தது. நூறாவது நாளிலும் ஸ்வார்னெர் இயல்பாகப் புன்னகை செய்தான். உடைந்து போயிருந்த பெற்றோருக்கு நம்பிக்கை வந்தது. மருத்துவர்களே வியக்கும்படியாக ஸ்வார்னெர், அந்தப் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தான்.

16 வயதில் (1990) மீண்டும் படுக்கையில் விழுந்தார். இந்த முறையும் புற்றுநோய்தான். Sarcoma வகை. இப்படி இந்த இரண்டு புற்றுநோய்களும் ஒரே மனிதனுக்கு வருவது மனித குல வரலாற்றிலேயே முதன்முறை என்று பயம் காட்டினார்கள் மருத்துவர்கள். இந்தமுறை அவர்கள் ஸ்வார்னெரின் உயிருக்கு விதித்த கெடு இரண்டே வாரங்கள்.

முற்றிலும் சோர்ந்து போயிருந்தார் ஸ்வார்னர். அவரது நுரையீரலின் ஒரு பக்கம் எலுமிச்சை அளவுக்கு புற்றுநோய்க் கட்டி இருந்தது. அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். ஒரு பக்க நுரையீரலுடன் ஸ்வார்னரின் சுவாசம் தொடர்ந்தது. ஆனால், அவனுக்கு நினைவே இல்லை. கோமா நிலையில் மரக்கட்டையாக இருக்க, சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்தன.

சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஸ்வார்னெர் கண் விழித்தார். இரண்டு முறையும் கேன்சரிலிருந்து உயிர் தப்பி மறுபிறவி எடுத்திருந்தார். இதெல்லாம் சாத்தியமா என எல்லோருக்குமே ஆச்சர்யம்.
 
படுக்கையிலிருந்து கழிவறைக்குத் தானே தவழ்ந்து செல்லும் முயற்சியைத் தொடங்கியிருந்தார் ஸ்வார்னெர். ‘இந்த நோய்களெல்லாம் என் உடலைத்தான்  பலவீனப்படுத்தியிருக்கின்றன. என் நம்பிக்கையை எந்த நோயாலும் ஒன்றும் செய்ய முடியாது.’

ஸ்வார்னெர், மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். மறுபடியும் படிப்பைத் தொடர்ந்தவர், 1997-ல் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஸ்வார்னெருக்கு எதையாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று எண்ணம். ‘இந்த ஒற்றை நுரையீரலுடன்  இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறமுடியுமா?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. கேன்சரிலிருந்து மீண்டு வந்தவர்கள் யாராவது எவரெஸ்ட்டில் ஏறியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தார். அப்படி யாரும் இல்லை. அந்தச் சாதனையைச் செய்யும் முதல் மனிதனாக நான் ஏன் இருக்கக்கூடாது?’ என நினைத்தார்.

ஸ்வார்னெர் தீவிரமாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். சாதித்தே தீர வேண்டும் என்ற எண்ணம், அவரது மனத்தையும் உடலையும் வலிமையாக்கியது. 2003-ம் ஆண்டு, எவரெஸ்ட்டை நோக்கிக் கிளம்பினார். ஆம், சில வருடங்களுக்கு முன், மருத்துவமனையில் கழிவறையை நோக்கி வலியுடன் தவழ்ந்தவர், அப்போது உலகின் உயரமான சிகரத்தை நோக்கி வலிமையுடன் அடியெடுத்து வைத்தார். அந்தப் பயணம் எளிதானதல்ல. பனிச்சரிவிலோ, கடும் குளிரிலோ, கால் இடறியோகூட மரணம் நேரலாம். எல்லாவற்றையும் கடந்து உலகின் உச்சியில் நின்ற தருணத்தில், தன் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்தார் ஸ்வார்னெர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்வின் மீது நம்பிக்கை அளிப்பதே இனி தனது பணி என களம் இறங்கினார். எவரெஸ்ட் தவிர, உலகின் உயரமான 6 சிகரங்களான கிளிமாஞ்சாரோ, எல்பரஸ், கொஸ்கியஸ்கோ, மெக்கின்லே, வின்சன் மாஸிப், அக்கோன்காகுவா ஆகியவற்றிலும் ஏறுவதை, ‘7 Summits’ என்பார்கள். அடுத்தடுத்த வருடங்களில் அந்தச் சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்தார் ஸ்வார்னெர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!

கேன்சரிலிருந்து மீண்டு 7 சிகரங்களைத் தொட்ட உலகின் முதல் மனிதர் ஆனார்.  வட துருவத்தையும், அண்டார்டிகாவில் அமைந்துள்ள தென் துருவத்தையும் தொட்டுவிட்டால், ‘Explorer’s Grand Slam’ என்பார்கள். 2015-ல் தென் துருவத்தில் கால்பதித்த ஸ்வார்னெர், 2017-ல் வட துருவத்தையும் முத்தமிட்டார். இதுவும் தனித்துவமான சாதனையே.

தி கேன்சர் கிளைம்பர் அசோஷியேசன் (The Cancer Climber Association) என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கும் ஸ்வார்னர், அதன்மூலம் புற்றுநோயாளிகளுக்காக நிதி திரட்டி உதவுகிறார். பல்வேறு சிறப்பு விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நோயாளிகளிடையே உரையாற்றி, அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

ஸ்வார்னரின் அனுபவங்களைச் சொல்லும், ‘கீப் கிளைம்பிங்’ (Keep Climbing) என்ற புத்தகம், அவரது அசாத்தியமான வாழ்வனுபவங்களைச் சொல்கிறது.

‘இப்படி ஒரு சாகச வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?’ என்று ஓர் உரையாடலில் ஸ்வார்னெரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்...

சூப்பர் ஹீரோஸ்! - சீன் ஸ்வார்னெர்!

‘‘ஒரு மனிதனின் உடம்பு 30 நாள்கள் வரை உணவின்றி வாழும். தோரயமாக 3 நாள்கள் வரை நீரின்றி பிழைத்துக்கொள்ளும். ஆனால், நம்பிக்கை இழந்துவிட்டால் 30 நொடிகூட வாழமுடியாது.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை தேவைப்படுகிறது. இருமுறை கேன்சரால் தாக்கப்பட்டவன், 14 நாள்கள் விதிக்கப்பட்ட கெடுவிலிருந்து உயிர் மீண்டவன், ஒற்றை நுரையீரல் மூலமே சாகசங்கள் செய்யமுடிகிறது என்றால், நம்மால் ஏன் முடியாது என்று மற்றவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கிறதல்லவா. அதைக் கொடுக்கும் வாய்ப்பு என் வாழ்வில் அமைந்திருக்கிறது என நம்புகிறேன். ஆம், இப்போதும் நான் உயிரோடுதான் இருக்கிறேன்!’’

- முகில்