Published:Updated:

“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அறநிலையத்துறை அவசியம் தேவை!”
“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

பிரீமியம் ஸ்டோரி

‘பாக்கத்தானே போற... இந்த பொன்.மாணிக்கவேல் ஆட்டத்த...’’ என்று கெத்து காட்டி வந்த ‘சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு’ ஐ.ஜி-க்கு எதிராக அவர் துறை சார்ந்த அதிகாரிகளே புகார் கொடுத்திருப்பது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி. இந்நிலையில், ‘சிலைக்கடத்தல் வழக்குகளில், எந்தவொரு அர்ச்சகரையும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி
கே.சந்துருவைச் சந்தித்தேன்.

“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

“அர்ச்சகர்கள்மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று கேட்கிறீர்கள். தவறிழைத்த அர்ச்சர்கள் யாரும் தப்பிக்க விடப்பட்டுள்ளனரா... அது பற்றிய தகவல்கள் ஏதும் இருக்கின்றனவா?”

 “பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு நடத்திவரும் சிலைத்திருட்டு விசாரணையில் யாரையெல்லாம் விசாரித்தார்கள், எப்படிப்பட்ட துப்பு கிடைத்துள்ளது என்ற தகவல் இன்றி இக்கேள்விக்குப் பதில் கூற முடியாது. அதே சமயத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே கிடைப்பதனால் அந்தக் கேள்வியை எழுப்பினேன்.”

 “அறநிலையத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சிலைகள் காணாமல் போகும்போது, அவர்களைக் கைது செய்வது நியாயம்தானே?”

“கோயில்களிலுள்ள திருச்சிலைகளில் இரண்டு வகை உண்டு. மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு தினசரி சிறப்பு வழிபாடு சம்பிரதாயப்படி நடத்தப்படும். அறநிலையக் கட்டுப்பாட்டிற்கு வருமுன் கோயில்களில் நடத்தப்படும் முதல் மரியாதை அன்றைய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. இப்போது செயல் அதிகாரிகளுக்குச் செய்யப்படுகின்றன. இருப்பினும் அவர்கள் சமய / ஆகம முறைப்படி கோயில்களின் கர்ப்பகிரகத்திற்குள் செல்ல முடியாது. வாயிலில் நின்றுதான் மரியாதைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே உற்சவர் சிலைகளோ, அதற்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்களோ காணாமல் போய்விட்டால் அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு தினசரி பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கே தெரிய அதிக வாய்ப்புள்ளது. அதேசமயத்தில் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ள நகைகள் மற்றும் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் சிலைகள் ஆகியவற்றைக் கணக்கெடுத்துப் பாதுகாக்கும் பொறுப்பு அறநிலைய நிர்வாகத்திற்கு உண்டு. இப்பொழுது தினசரி பூஜையிலுள்ள சிலைகள் காணாமல் போய்விட்டதென்றும் (அ) நவபாஷண சிலைகள் சுரண்டப்பட்டுள்ளதென்றும் வரும் புகாரில் அறநிலையத் துறை அதிகாரிகளின் பங்களிப்பு மட்டும் பற்றி சந்தேகப்படுவது எப்படி என்பதுதான் கேள்வி. இதுவரை எத்தனை கோயில் ஊழியர்கள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்துக் கோயில்களுக்குப் பல கோடி ரூபாய் செலவு செய்து புனரமைத்து வரும் டி.வி.எஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனைக் குற்றவாளியாக்கியுள்ளது கேலிக்கூத்து. குற்றவாளிகளை தக்க ஆதாரத்துடன் கைது செய்து புலன்விசாரணை நடத்துவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.”

“மதரீதியாக பொன். மாணிக்கவேலைப் பின்னிருந்து சிலர் இயக்குகிறார்கள் என்று கூறுகிறீர்கள்... அப்படி இயக்கும் நபர்கள்/அமைப்புகள் பற்றிய தகவல்களைக் கூற முடியுமா?”


“சிலைக்கடத்தல் தொடர்பாக தற்பொழுது நடக்கும் விசாரணையில் அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சில இந்து  அமைப்பினர், ‘இந்து அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, திருக்கோயில்களை இந்துக் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று குரலை உயர்த்தியுள்ளனர். இந்த எதிர்வினைதான் அப்படிப்பட்ட சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது.”

“ ‘இஸ்லாம், கிறித்துவம் மத நிர்வாகங்கள் அந்தந்த மதத்தினரிடையே இருக்கும்போது, இந்துக் கோயில் நிர்வாகமும் இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்பது நியாயமான கோரிக்கைதானே?”


 “இஸ்லாமும் கிறித்துவமும் நிறுவப்பட்ட மதங்கள். அதில் பல திருச்சபைகளுக்கு பக்தர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.

16-ம் நூற்றாண்டில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி பின்னர் அரசு அதிகாரம் செய்ய முற்பட்ட போது, இந்துக் கோயில்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தன. கோயிலின் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை கிழக்கிந்திய கம்பெனியார் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியாக வருடாவருடம் பிரித்துக்கொண்டனர். 1862-ம் வருடத்துக்குப் பின்னரே பல கோயில்களின் நிர்வாகத்தைப் பல்வேறு உள்ளுர்க் குழுக்களின் பொறுப்புகளில் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேய நிர்வாகம் ஒதுங்கிக்கொண்டது. அதன் பிறகு நிர்வாகங்களைப் பராமரித்து வந்த தர்மகர்த்தாக்களின் செயல்பாடுகளில் சிக்கல்கள் எழும் போதெல்லாம் சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நிர்வாக அமைப்பு முறை (scheme decree) ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும் சொத்துகளை முறையாகப் பராமரிக்க முடியாததனால் சுதந்திரத்துக்குப் பிறகு அறநிலையத்துறை உருவாக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள நாட்டில் அவர்களது மத நம்பிக்கையைப் புண்படுத்தாத வகையில்தான் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு ஏற்பட்ட பின்னரே வருமானம் மிகுதியாக உள்ள கோயில்கள் தவிர்த்து சாதாரணக் கோயில்களிலும் ஒரு வேளை பூஜையாவது நடத்தப்பட்டு வருகின்றன.

“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

இன்றைக்குத் திருவாங்கூர் அரசவம்சத்தினர் கட்டுப்பாட்டிலுள்ள பத்மநாப சுவாமி கோயில் (திருவனந்தபுரம்) சொத்துகள் காணாமல்போய்விட்டன என்ற புகார் வந்தபிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதிமன்ற ஆணையர் ஒருவரை நியமித்து விசாரணை அறிக்கைகள் பெறப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். நிறுவனமற்ற ஒரு சமயத்தி்ல் தாங்கள்தான் இந்து மதத்தின் ஏகபோக பிரதிநிதிகள் என்று இங்கு சில ராஜாக்கள் கிளம்பியுள்ளதை அனுமதிக்க முடியாது.

கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும்போது பக்தர்கள் சார்பில் திருப்பணிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. அதேபோல் கோயில் உண்டியல் வசூல் எண்ணிக்கையை வெளிப்படையாக நடத்துவதுடன் அதில் பக்தர்களும் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நியமிக்கப்படும் அறக்கட்டளை உறுப்பினர்களில் தாழ்த்தப்பட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்பட்டுவருகின்றனர். வருமானம் அதிகமாக வரும் பழநி திருக்கோயில், மேலையூர் திருக்கோயில்கள் சார்பாகக்  கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல திருக்கோயில்களில் திருமணக்கூடங்களும் ஓய்வு விடுதிகளும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தையும் நிர்வகிக்க அரசு தரப்பில் ஒரு அமைப்பு இருப்பது அவசியமே.”

“சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி ஓய்வு பெறும் நிலையில், வரிசையாக முக்கியமான வழக்குகள் பலவற்றிலும் தீர்ப்புகளை அளித்தார். இது சரியான நடைமுறைதானா?”


 “ஒரு நீதிபதி நியமிக்கப்படும் தேதியிலேயே அவர் என்று ஓய்வடைவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஓய்வு பெறும் நிலையில் முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துவிட்டார் என்பதைக் குற்றச்சாட்டாக்க முடியாது. பதவியின் கடைசி நாளன்று கூட அவர் நீதிபதியாகத்தான் இருக்கிறார். ஓய்வுபெறும் தேதியில் கொடுத்த தீர்ப்புகளெல்லாம் ஆதாயம் தேடித்தான் என்று கூறுவது அபத்தம். ஏன் ஒருவர் பதவிக்காலம் முடியும் வரை அப்படிப்பட்ட தீர்ப்புகளை அளிப்பதற்குக் காத்திருக்க வேண்டும்? மேலும் உச்சநீதிமன்றத்தில் தனி நீதிபதிகள் அமர்வு கிடையாது. எல்லா வழக்குகளுமே இரண்டு, மூன்று (அ) ஐந்து நீதிபதிகள் அமர்வில்தான் விசாரிக்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவரது சக நீதிபதிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அவர் வழக்குப்பட்டியல் தயார் செய்வதில் முறையான கலந்தாலோசனை செய்யாமல் குறிப்பிட்ட தீர்ப்பைப் பெறும் வகையில் மூத்த நீதிபதிகளைப் புறக்கணித்து குறிப்பிட்ட நீதிபதிகளின் அமர்வுகளில் அப்படிப்பட்ட வழக்குகளை ஒப்படைத்தார் என்பதே. வழக்குப் பட்டியலைத் தயார் செய்வதில்கூட சூட்சுமம் இருக்கிறது என்பதுதான். எனவே இதன் படிப்பினை தலைமை நீதிபதியிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை ஜனநாயக முறைப்படுத்தி மூத்த சகநீதிபதிகளிடம் கலந்தாலோசனைகளை பெருக்க வேண்டுமென்பதே.”  

“சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறதே?”

“ஐயப்பனை தரிசிப்பதற்கு வயது வித்தியாசமின்றி, பெண்கள் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் கேரளாவிலுள்ள இரண்டு முக்கியக் கட்சிகளும் (பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ்) வித்தியாசமின்றி போராட்டத்தில் குதித்துள்ளது வெட்கக்கேடு. ஒரு பக்கத்தில் அந்தத் தீர்ப்பிற்கு போராட்டக்காரர்களின் அழுத்தத்தைப் புறக்கணித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் தைரியத்தைப்  பாராட்ட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவும் கேரள அரசிடம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சில உள்ளாட்சிகளுக்கான தேர்தலும் இதை வெளிப்படுத்தியது. இப்பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து, பெண்களை இப்பிரச்சினைக்கு ஆதரவாகத் திரட்டி மக்களின் ஆதரவு மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடும் கேரள அரசைப் பாராட்ட வேண்டும்.”

“கொச்சியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட தரப்பினரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுப்பவர்களுக்கு ஆதரவாகவே மாநில அரசு நடந்துகொண்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? இதற்கு எதிராக நீதிமன்றங்கள் ஏதும் நடவடிக்கை எடுக்க முடியாதா?”

“1930களில்  மகாத்மா காந்தி நேரில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேவகோட்டையில் கண்டதேவி நாட்டார்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறுபாடு காண்பிக்கப்படுகிறது. அதன்பிறகு மாநிலத்தில் பல்வேறு கட்சிகளின் ஆட்சிகள் தமிழகத்தில்  இருந்த பின்னரும் 2005-ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னரும் கண்டதேவி கோயிலின் தேர்வடத்தைப் பிடிப்பதற்குக்கூட 13 வருடங்களாக வெற்றி கிட்டவில்லை என்பது மானக்கேடு. முதலில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படாததைப் பற்றி நாம் பேச வேண்டும். அதற்குப் பிறகு மற்ற மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றி அலசி ஆராயலாம்.”

“சில நீதிபதிகள் வழக்கின் தன்மையைத் தாண்டி, தங்கள் சொந்தக் கருத்துகளை நீதிமன்றத்தில் பிரசங்கமாக முன்வைப்பது சரியா?”

“நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்தை தங்களது தீர்ப்புகளில் கூறுவதோ (அ) தங்களது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் உத்திரவிடுவதோ தவறு என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. அதையும் மீறி, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸாக இத்தகைய நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துககள் தினசரி ஒளிபரப்பப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. அவை தவறான முன்னுதாரணமாக இருப்பதுடன் பொதுவெளிகளில் மாற்றுக் கருத்துகள் கூறி அவர்களைச் சந்திக்கு இழுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.”

“ஒரு ஜனநாயகச் சமூகத்தில் எல்லாமே விமர்சனத்துக்கு உட்பட்டவை எனும்போது, ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற நடைமுறை சரியானதுதானா?”

“நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் செயல்பாடுகளையும் பற்றி வைக்கக்கூடிய ஆரோக்கியமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தண்டிக்க முற்படுவது தவறு. ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பைப் புறக்கணிக்கும் விதமாகச் செயல்படும் நபரை ஒழுங்குபடுத்தும் விதத்தில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் செயல்படுவது தவிர்க்க முடியாதது. அதேசமயத்தில் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் நீதிபதிகளுக்கு வர வேண்டும். ஒரு ஜனநாயகக் குடியரசில் யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்லர். உண்மையைச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பாகாது என்று அச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது நல்ல முயற்சி. அதையும் தாண்டி, நீதிமன்ற விமர்சனம் என்பதே நீதிமன்ற அவமதிப்பாகாது என்ற சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றம் கொண்டுவர முற்பட வேண்டும்.”

த.கதிரவன் - ஓவியம்: பிரேம் டாவின்சி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு