பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!

காதல் என்பது சமயங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனால் பகுத்தறிவாளர் களுக்கும் காதல் வரும். அந்தக் காதல் அவர்களுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை, சமூகத் துக்கும் நன்மை சேர்த்துவிடுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவுக் காதலர்கள்தாம் பேராசிரியை சரசுவதியும் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரனும். 

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!

“எங்களைச் சேர்த்துவெச்சது பெரியார்தான். ஆமா, ரெண்டுபேருக்கும் பெரியார் பிடிக்கும். நான்தான் முதலில் புரபோஸ் செஞ்சேன். ஆனா அவங்ககிட்ட இருந்து ஒரு பதிலும் வரலை. எங்க வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ‘என்ன ஐடியாவில் இருக்கீங்க?’ன்னு அழுத்திக் கேட்கவும்தான் ஓகே சொன்னாங்க. ஆசிரியர் வீரமணி தலைமையில் 1979-ல் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்” என்கிறார் விடுதலை ராசேந்திரன்.

காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது என்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ‘குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்’ என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்ததுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயம். “அதற்கும் பெரியார்தான் காரணம்” என்கிறார் ராஜேந்திரன்.

“மனிதனாகப் பிறந்தவன் சமூக மனிதனாக வாழ்வது மட்டுமே முழுமையான வாழ்க்கை. மற்ற எந்த சுக வாழ்க்கையும் நம்மை முழுமையாக்காது. எங்கள் இருவருக்குமே தனித்தனி இலக்குகள் இருந்தன. அவற்றை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினோம். பிள்ளைகள் இருந்தால் அவர்களைக் கவனிப்பதிலேயே நமக்கான வாழ்க்கை கழிந்துவிடும். குழந்தை என்பது பொது வாழ்க்கைக்குத் தடங்கல்தான். சமூக மனிதன், சந்ததிக்காக  வாழவேண்டும் என்கிற தேவையில்லை என்று பெரியார்தான் சொல்லியிருக்கிறார். இந்தச் சிந்தனை இருக்கும்போது மற்ற எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை” என்கிறார் இந்தத் தீவிரக் கொள்கையாளர்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!“மாறுபாடுகளை அங்கீகரிக்க வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்பதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரி. நிஜ வாழ்க்கையில் அவங்க பேச நினைப்பதைத்தான் அவங்க பேச வேண்டும். அதற்கான உரிமை நம்முடைய இணையருக்கு இருக்கு என்பதை நாம் புரிந்து அங்கீகரிக்க வேண்டும்” என்று விடுதலை ராசேந்திரன் சொல்ல, “இந்த விஷயத்தில் நான் பேச நினைச்சதைத்தான் அவரும் பேசுறார்” என்கிறார் சரசுவதி சிரிப்புடன்.
 
அறிவார்ந்த தளத்தில் இயங்கும் இரண்டு நபர்கள் தனிப்பட்ட வாழ்வில் ஈகோ இல்லாமல் இத்தனை காலம் ஒற்றுமையோடு வாழ்வது எப்படிச் சாத்தியமானது?

“நான் ஒரு ஆண் என்கிற நினைப்பு இருக்கும்போது ஈகோ வரும். அறிவில் உயர்ந்தவன் என்கிற நினைப்பு இருக்கும்போது ஈகோ வரும். ஆனால் இரண்டு சிந்தனையுமே எனக்குக் கிடையாது எனும்போது ஈகோவுக்கு அங்கே இடமில்லை. எனக்குச் சமைக்கத் தெரியாது என்றாலும் காபி, டீ போடுவேன் அவர்களுக்கு உதவ பாத்திரங்களைக் கழுவிவைப்பேன்’’ என்கிறார்.

சரசுவதி “கூடவே, குடும்பக் கட்டமைப்பில் முக்கியப் பிரச்னை பெண்களைச் சமையலறைக்குள் வைப்பது.முற்போக்கு பேசுபவர்கள் வீட்டில்கூட இதுதான் நடக்கிறது. அப்படிப் பேசுபவர்கள் அவர்களைச் சமையலறையிலிருந்து விடுவிக்காமல் எந்த வித சமூக மாற்றத்தையும் முன்னெடுக்க முடியாது” என்கிறார்.

அவ்வளவு ஒற்றுமை இருந்தாலும் இருவருக்குள்ளும் சண்டைகள் வராமல் இருந்ததில்லை, “சாதாரணமான சண்டைகள் இருக்கும் காலையிலேர்ந்து இருவரும். பேசியிருக்க மாட்டோம். ஆனால், நண்பர்கள் வருவார்கள், சமாதானமாகிடுவோம். இதுதவிர புத்தகங்கள் வழியாக அன்பைப் பரிமாறிக்கொள்வோம். எனக்கு சமூகம் சார்ந்த கட்டுரைப் புத்தகங்கள் அவங்க வாங்கித் தருவாங்க. என் அலமாரியில் ஒரு கவிதைப் புத்தகம்கூட இருக்காது. ஆனா அவங்களுக்காக இலக்கியம், நாவல் போன்ற படைப்புகள் நான் வாங்கித் தருவேன்” என்று சொல்லிவிட்டு சரசுவதியைப் பார்த்துச் சிரிக்கிறார் ராசேந்திரன்.

அந்தச் சிரிப்பில் காதலும் தெளிவும்!

ஐஷ்வர்யா - படம்: வீ.நாகமணி