பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இசை... எல்லோருக்கும்!

இசை... எல்லோருக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
இசை... எல்லோருக்கும்!

இசை... எல்லோருக்கும்!

18 வயதுக்குப் பிறகு `நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?’ என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அப்படி மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மனதுக்குள்ளும் எழுந்த கேள்விதான் பதினெட்டாவது வயதில் `சிவோஹம்’ (SIOWM) என்ற அமைப்பைத் தொடங்கவைத்தது. எல்லோருக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். 2014-ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் திடீரென மறைய, அண்ணன் தொடங்கிவைத்த அவரது கனவுத்திட்டத்தை, தற்போது அவர் தம்பி மாண்டலின் ராஜேஷ் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இசை... எல்லோருக்கும்!

``சிறு வயதிலிருந்து அவரை குருவாகவே ஏற்றுக்கொண்டதால், அவரைப் பார்த்தால் உட்காரக்கூட மாட்டேன்” நெகிழ்வுடன் பேசுகிறார் மாண்டலின் ராஜேஷ். ``அப்படியென்றால், குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் அண்ணன் - தம்பி சண்டைகளை மிஸ்பண்ணுனீங்களா?” என்று கேட்டேன். ``அப்படிச் சொல்லமுடியாது’’ எனச் சிரிக்கிறார். ‘’எனக்கு அவர் கற்றுக்கொடுத்தவை ஏராளம். இன்றைக்கு வரை நான் தினமும் செய்யும், செயல்படும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் அண்ணன்தான் இருக்கிறார். இசையை இலவசமாக எல்லோருக்கும் கற்றுத்தரும் அண்ணனின் சேவையை, இன்று வரை செய்துகொண்டிருக்கிறோம். வாய்ப்பாட்டு, கிடார் எனப் பயிற்றுவித்தாலும், அவற்றைத் தாண்டி மாண்டலின் கற்பதற்கு நிறையபேர் வருகிறார்கள். மாண்டலின் இசையைக் கற்றுக்கொள்வதும், அதைத் தொடர்ந்து வாசிப்பதும், கேட்டு ரசிப்பதையும்விட அண்ணனின் நினைவை வேறு எப்படிக் கொண்டாட முடியும்?” என்கிறார் அர்ப்பணிப்போடு. 

   அப்படிக் கேட்டு ரசிக்க, 2015-ம் ஆண்டில் அவர் பிறந்த நாளான பிப்ரவரி 28 அன்று இளையராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள, ஸ்ரீனிவாஸின் நினைவைப் போற்றும்வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் அந்த நிகழ்வில், இரண்டு இசை வல்லுநர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். வருகிற பிப்ரவரி 28 அன்று, ஸ்ரீனிவாஸின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் பாடகர் ஹரிஹரனும், கீபோர்டு கலைஞர் லூயி பாங்க்ஸும் கெளரவிக்கப்பட்டு நினைவுப்பரிசைப் பெற இருக்கிறார்கள். 
     
இந்த நிகழ்ச்சியை, கடந்த நான்கு வருடமாக நடத்தும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ்-வின் இயக்குநர் இளங்கோ குமணனிடம் பேசினேன். 

இசை... எல்லோருக்கும்!

``2012-ம் ஆண்டு நாங்கள் எங்கள் நிறுவனத்தைத் தொடங்கியபோது, மாண்டலின் ஸ்ரீனிவாஸை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டிருந்தோம். அப்படியான ஒரு வணிக உறவில்தான் அவருடன் எங்கள் பழக்கம் ஆரம்பித்தது. 2014-ம் ஆண்டில் நிகழ்ச்சி ஒன்று. அவரிடம் நிகழ்ச்சிக்கான தொகை குறித்துப் பேசினேன். `அண்ணன்களுக்குத் தெரியாதா தம்பிக்கு என்ன செய்யணும்னு?’ என்று கேட்டார். `அப்போ, அண்ணன்கள் என்ன செஞ்சாலும் தம்பி மறுக்காம ஏத்துக்கணும்’ என்றேன். `நிச்சயமாக’ என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அவர் மறைவுக்குப் பிறகு, அவர் நினைவைப் போற்றும் வகையில் பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்த அவரது குடும்பம் கேட்டுக்கொண்டபோது, அதை எங்கள் குடும்ப விழாவாகவும் நினைத்துச் செய்கிறோம்” என்றார்.

``இந்த வருடம் என்ன சிறப்பு?”

``ஹரிஹரன், தேவிஸ்ரீபிரசாத் பாட இருக்கிறார்கள். லூயி பாங்க்ஸ் கீபோர்டு, புர்பயான் சாட்டர்ஜியின் சித்தார், உஸ்தாத் ஃபசல் குரேஷியின் தபேலா, அருண்குமார் மற்றும் சித்தார்த் நாகராஜன் டிரம்ஸ் இவற்றோடு ராஜேஷின் மாண்டலின் என, பெரிய இசை விருந்தே நிகழவிருக்கிறது!” என்றார்.

இசை கேட்க நாங்க ரெடி!

பரிசல் கிருஷ்ணா