Published:Updated:

``நான் உருவ அழகில் குறைந்துபோனவள் இல்லை!''- கேலிச் சித்திரம் குறித்து தமிழிசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நான் உருவ அழகில் குறைந்துபோனவள் இல்லை!''- கேலிச் சித்திரம் குறித்து தமிழிசை
``நான் உருவ அழகில் குறைந்துபோனவள் இல்லை!''- கேலிச் சித்திரம் குறித்து தமிழிசை

``நான் உருவ அழகில் குறைந்துபோனவள் இல்லை!''- கேலிச் சித்திரம் குறித்து தமிழிசை

பெண்களின் திறமையைப் பற்றிய மரியாதையின்றி, அவர்களுடைய உடல் அமைப்பை எள்ளல் செய்கிற சமுதாயம் இன்னமும் மாறவே இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னால், ஊடகம் ஒன்றில் தன்னை கேலிச் சித்திரமாக வரைந்திருந்ததைப் பற்றி தமிழிசை செளந்தரராஜன் நம்மிடம்  சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.  

``அந்த ஊடகத்தில் வெளியான கார்ட்டூன் என்னை மட்டுமல்லாமல் என் கட்சியைச் சேர்ந்தவர்களையும் வருத்தப்பட வைத்தது. அதைப் பார்த்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நபர், `உங்களை மாதிரியே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற மற்ற பெண்களை இப்படிக் கேலிச் சித்திரமா போடறதில்ல மேடம். இவங்க உங்களைத்தான் குறி வைச்சு தொடர்ந்து கேலிப் பண்ணிட்டு வர்றாங்க'னு ரொம்பவும் வருத்தமாகப் பேசினார். எங்கள் கட்சித் தொண்டர்கள் அந்த ஊடக அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்'' என்றவர், தொடர்ந்து மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார். 

``ஒன்றைக் கவனித்துப் பாருங்கள். நிறம் அதிகமாக இருக்கிற பெண்களை இந்தச் சமுதாயம் இப்படிக் கேலி செய்வதில்லை. இதன் பெயர் வக்கிரம். நான் ஒரு  ஒழுக்கமான பெண்ணாக இருந்தாலும், டாக்டராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், இவர்கள் என் நிறத்தையும் உருவ அமைப்பையும்தான் கவனிக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய அநியாயம். இவர்கள் இப்படிப் படம் போடுகிற அளவுக்கு நான் ஒன்றும் உருவ அழகில் குறைந்து போனவள் இல்லை'' என்று சற்று கோப முகம் காட்டியவர், ``ஒரு பெண் வலிமையான தலைவராக வளர்வது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அடிப்படையில் பெண்களை மதிக்காத இயல்பு கொண்டவர்களால்தான்  அப்படியொரு கார்ட்டூன் போட முடியும். என்னைப் போல வலுவாக பின்னணி கொண்டவளையே பெண் என்கிற காரணத்தால் இவ்வளவு கேலி பேசினால், மற்றப் பெண்களுக்கு அரசியலுக்கு வர எப்படித் தைரியம் வரும் சொல்லுங்கள்'' என்று கேள்வி எழுப்பினார். 

``இந்த கார்ட்டூனைவிட கொடுமையான விஷயம் ஒன்று சொல்லட்டுமா? அரசியல் நாளிதழ் ஒன்றில் என்னை `மீம்ஸ் சூப்பர் ஸ்டார்' என்று எழுதியிருக்கிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் என்றுதான் இதை நான் சொல்வேன்'' என்றவர், இதைத் தன் குடும்பத்தினர் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

``என்னைப் பற்றி மீம்ஸ், கேலிச் சித்திரங்கள் என்று வரும்போது கணவரும் குழந்தைகளும் வருத்தப்படுவார்கள். `என்னம்மா இப்படியெல்லாம் மீம்ஸ் போடுறாங்களே' என்று ஃபீல் பண்ணுவார்கள். இதுநாள் வரை அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டுதான் வருகிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னைப் பற்றி மீம்ஸ் போடுங்கள்; கார்ட்டூன் போடுங்கள். ஆனால், என் அரசியலை, என் திறமையை, என் கட்சிப் பணியை விமர்சனம் செய்யுங்கள். என் நிறமும் என் தலைமுடியும் என் பர்சனல் விஷயங்கள் என்ற நாகரிகம் இன்னும் ஏன் உங்களுக்குப் புரியவில்லை'' என்று சற்று ரெளத்ரமாகத் தன் பேச்சை முடித்தார் தமிழிசை செளந்தரராஜன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு