Published:Updated:

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?
பிரீமியம் ஸ்டோரி
News
நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

ஆர்.மோகனப் பிரபு, cfa

தவி ஆசை சிலரைப் பாடாய்ப்படுத்தும். பல்வேறு நிதிச் சிக்கலில் சிக்கி, திவால் நிலைக்குச் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெருந்தடையாக இருந்து வந்தார் அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல். வங்கிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததுடன், அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்கிறார். கூடவே, அவரது மனைவியும் (அனிதா கோயல்) நிர்வாகக் குழுவிலிருந்து விலகியிருக்கிறார்.  

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

இந்த விலகல் அறிவிப்பு வந்த ஒரே நாளில் ஜெட் பங்குகள் ஐந்து சதவிகிதத்துக்கு மேல் உயர்வடைந்ததைப் பார்த்தால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கோயலின் வெளியேற்றத்தை மனதார விரும்புகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இத்தனை நாளும் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகமறுத்த நரேஷ் கோயல், இப்போது திடீரென குடும்பத்துடன் விலகியது ஏன் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

உயர உயரப் பறந்த ஜெட்

சுமார் 25 வருடங்களுக்குமுன், நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.வான்வெளி பயணிகளின் நல்லாதரவைப் பெற்ற ஜெட் நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் பின்னடைவு மற்றும் கிங்ஃபிஷரின் வீழ்ச்சி ஆகிய புறக்காரணிகளும் மறைமுகமாக உதவியதால், குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமாக ஜெட் உயர்ந்தது. நஷ்டத்திலிருந்த சஹாரா நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் அதிக எண்ணிக்கையிலான நகரங்களை இணைத்த ஜெட், அபுதாபியின் எத்தியட் (Ethiad)   நிறுவனத்துடனான உறவின் பலத்துடன் சர்வதேச வானில் தன் முத்திரையைப் பதித்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

2005-ல் பெரும் ஆரவாரத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜெட் நிறுவனம், ஆரம்ப முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது. 2000-களில் இந்திய வானில் உதயமான  இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் போன்ற பட்ஜெட் ரக விமான நிறுவனங்கள் கடும்போட்டியை அளித்தபோதிலும், ஜெட் ஏர்வேஸ் தனது தனித்துவத்தைத் தக்கவைத்தது.

மேற்கூறிய நிறுவனங்கள் பட்ஜெட் சர்வீஸை வழங்கி, முதல் தலைமுறை விமானப் பயணி களைக் கவர முயல, ஜெட் நிறுவனமோ பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 1990-களில் தொடங்கப்பட்ட பல தனியார் துறை விமான நிறுவனங்கள் தோல்வியடைந்துபோதிலும் ஜெட் மட்டும் தனிப் பாதையில் பீடுநடை போட்டுவந்தது.

தரையிறங்கிய ஜெட்


உலகப் பொருளாதார தளர்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற இக்கட்டான தருணங்களில் தப்பிப் பிழைத்த ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் 2012-ல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை இண்டிகோ நிறுவனம் நிரப்ப அனுமதித்தது தான் இந்த நிறுவனத்தின் வீழ்ச்சியின்ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது. வான்வெளியில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஜெட் நிறுவனத்தின் நிதிநிலை செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. 

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.4,244.23 கோடி நஷ்டத்தை ஜெட் ஏர்வேஸ் சந்தித்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் லாபமில்லாத வழிகளில் விமானச் சேவையை நடத்தியதும் விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வும் இந்த நிறுவனத்தின் நஷ்டத்திற்கு அடிகோலின. விமானப் பராமரிப்புச் செலவு வேறு அதிகரித்தது,  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்ததும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதிநிலையைப் பாதித்தன.

கடன் சீரமைப்புத் திட்டம் சொல்வது என்ன?

திவால் நிலைக்குச் சென்றிருக்கும் ஜெட் ஏர்வேஸுக்கான கடன் சீரமைப்புத் திட்டம் இதுதான்... வங்கிகள் தந்த கடனுக்கு ஈடாக, 11.4 கோடி புதிய பங்குகள் வங்கிகளுக்கு வழங்கப் படும். வங்கிகளின் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளைக் கொண்டிருக்கும்.

நரேஷ் கோயல், அனிதா கோயல் மற்றும் கெவின் நைட் (எத்தியட் நியமன உறுப்பினர்) பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும். அதேசமயம், கோயல் சார்பாக இருவர்,  எத்தியட் நிறுவனத்தின் சார்பாக ஒருவர் நிர்வாகக் குழுவில் தொடரலாம். வங்கிகளின் சார்பின் இரு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இடைக்கால நிவாரணமாக, வங்கிகள் ரூ.1,500 கோடியை வழங்கும். இதன்மூலம் குத்தகைத் தொகை, ஊழியர்களின் சம்பளம், மற்ற பாக்கித் தொகைகள் வழங்கப்படும். ஜெட் விமானங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கும். புதிதாக அமைக்கப்படவுள்ள இடைக்கால மேலாண்மைக் குழு, ஒட்டுமொத்த நிதி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை மேற்பார்வையிடும். இந்த நிறுவனம் மீண்டும் இயல்பு நிலைக்குத்  திரும்பியதும் (ஜூன் 2019-க்குள்) வங்கி வசமுள்ள பங்குகள் புதிய முதலீட்டாளர்களிடம் விற்கப் படும்.

கோயல் மீதான குற்றச்சாட்டுகள்

ஆரம்பம் முதலேயே, கோயல்மீது ஏராளமான சந்தேகக் கணைகள்  முன்வைக்கப்பட்டு வந்தன. கோயலின் பின்னணி, மத்திய கிழக்கிலிருந்து வந்த முதலீடுகள் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.  

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

ஆளும் அதிகார வர்க்கத்துடன் நரேஷ் கோயலுக்கு இருந்த தனிப்பட்ட உறவைப் பயன்படுத்தி தனக்குச் சாதகமான பல முடிவு களை அவர் எடுக்கவைத்ததாகவும் சொல்லப் படுகிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு உரிய தருணத்தில் அந்நிய முதலீடு கிடைக்க முடியாமல் போனதன் பின்னணியில் கோயல் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில்கூட டாடா நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தைக் கையகப் படுத்த முடியாமல் போனதின் பின்னணியிலும் அவர் தலையீடு இருந்ததாக மீடியாக்கள் தகவல் சொல்லின. தற்போது ஏற்பட்டிருக்கும் கடன் தீர்வில்கூட, கோயல் மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. 

இரண்டாவது பொதுத்துறை விமான நிறுவனம்..?

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா  ஏற்கெனவே தட்டுத் தடுமாறி வருகிறது. இதனை வாழ வைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பொது மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டு வருகிறது. ஜெட் சீரமைப்புத் திட்டத்தின்படி, உரிய காலத்தில் புதிய முதலீட்டாளர்கள் கிடைக்காமல் போனால், ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியாபோல மாறிவிடும் அபாயம் உள்ளது.

பயமுறுத்தும் போயிங் மேக்ஸ் 737

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோரமான விமான விபத்துக்கள், போயிங் நிறுவனத் தயாரிப்பான மேக்ஸ் 737 ரக விமானத்தின் பறக்கும் தகுதி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன. உலகின் பல நாடுகளிலும் இந்த ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டுவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, ஜெட் ஏர்வேஸ் உபயோகப்படுத்தும் விமானங் களிலும்  மேக்ஸ் 737 ரக விமானங்கள் உள்ளன. எரிபொருளைப் பெருமளவு மிச்சப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாங்கப்பட்ட இந்த ரக விமானங்களினால் ஜெட் நிறுவனத்திற்கு உடனடிப் பலன் எதுவும் கிடைக்காது.

இன்னொரு கிங்ஃபிஷர் வேண்டவே வேண்டாம்

பாமர மக்கள் முதல் படித்த மேதைகள் வரை மோசமான கடன் மேலாண்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாகக் காட்டப்படுவது கிங்ஃபிஷர் நிறுவன சீரமைப்புத் திட்டத்தைத்தான். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இன்றுவரை ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதும் இந்த கிங்ஃபிஷர் விவகாரத்தைத்தான். அதேபோல தற்போதைய ஜெட் கடன் சீரமைப்புத் திட்டம் தோல்வி யடைந்தால், அது தவறான முன்உதாரணமாக மாறிவிடும்.     

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.)