சுட்டெரிக்கும் கோடை வெயிலைவிடவும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலால் ஆந்திராவின் அரசியல் சூழல் அனல் பறக்கிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா, நகரி தொகுதியில் மீண்டும் களம்காண்கிறார். அரசியல் பரபரப்புக்கிடையிலும் விரிவாகப் பேசினார்.

``தெலுங்கு தேசம் கட்சியி லிருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு, உங்கள் அரசியல் பயணம் எப்படி மாறியிருப்பதாக நினைக் கிறீர்கள்?”
``தெலுங்கு தேசம் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்தேன். சொந்தக் கட்சி யிலேயே என் வளர்ச்சியைத் தடுத்தார்கள். இரு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, எனக்கு எதிராக வேலைசெய்த சொந்தக் கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டேன். மக்கள் நலனைவிட, தன் குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை காட்டும் சந்திரபாயு நாயுடுவின் கட்சியில் இருந்தால் மக்கள் பணி செய்ய முடியாது என்பதால், அந்தக் கட்சியிலிருந்து விலகி, 2009-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். இங்கு எங்கள் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட எல்லோரும் என்னைச் சகோதரியாக நடத்துகிறார்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``முன்னணி நடிகையாக இருந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?”
``ஆச்சர்யமாக இருக்கிறது. நடிக்க வந்த புதிதில், என் கூச்ச சுபாவத்தால் சினிமா உலகத்தைப் பார்த்து பயந்தேன். இந்தத் துறை எனக்குச் சரி வராது எனப் பின்வாங்கினேன். நடிகையாகப் புகழ்பெற சிவப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, `நடிக்க மாட்டேன்’ எனப் பெற்றோரிடம் சண்டை போட்டேன். ஆனால், நன்றாக நடிக்கத் தெரிவதுடன், முக லட்சணமாக இருந்தாலே சினிமாவில் ஜெயிக்கலாம் எனப் புரிந்துகொண்டேன். அப்போது ரஜினி சாரை விட வேகமாகவே டயலாக் பேசுவேன். `இந்த வேகத்தில் பேசினால் மக்களுக்குப் புரியாது’ எனப் பலரும் சொல்ல, பொறுமையாக டயலாக் பேசக் கற்றுக் கொண்டேன். உணவுப் பிரியையாக இருந்தநிலையில், டயட் கன்ட்ரோலில் கவனம் செலுத்தினேன். `இந்த ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன்’ என `செம்பருத்தி’ படத்தில் நடித்தேன். அப்படத்தின் வெற்றியால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. இரவு பகலாக ஓய்வின்றி நடித்தேன். 10 ஆண்டுகளுக்குள் பல மொழிகளில் 150 படங்களில் நடித்துவிட்டேன். அரசியல் பணிகளால், இப்போது நடிக்க நேரமேயில்லை.”
``சினிமா துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய `மீ டூ’ இயக்கம் குறித்து உங்கள் கருத்து?”
`` `லிவிங் டுகெதர்’ வாழ்க்கை வாழும் சினிமா பிரபலங்கள் பலரையும் எனக்குத் தெரியும். அது அவர்கள் விருப்பம். அதே நேரம் சினிமா வாய்ப்புகளுக்காக நடிகைகளை வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தத் துறைப் பெண்களுக்கும் இதுபோல நடக்கக் கூடாது. திறமைதான் எப்போதும் பிரதானமாக இருக்க வேண்டும்.”
``தமிழக அரசியல் சூழலையும் கவனிக்கிறீர்களா?”
``பின்னே... எத்தனை ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் கோலோச்சியிருக்கிறேன்! என் கணவரும் தமிழர். கவனிக்காமல் இருப்பேனா... `தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டிருக்கலாமே’ எனப் பலரும் கேட்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அம்மா நெய்வேலியில் பிரசாரத்தில் இருந்தார். அப்போது ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் நான் வேட்பாளர். அதனால் நெய்வேலி சென்று ஜெயலலிதா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்தேன். பிறகு என் வெற்றியை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் மரணச் செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதில் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர் இல்லாத தமிழக அரசியல் சூழல் பற்றிப் பேச எனக்கு விருப்பமில்லை.”
``தமிழ்த் தேசியவாதியான உங்கள் கணவர் செல்வமணி, தெலுங்குப் பெண்ணான உங்களைத் திருமணம் செய்துகொண்டாரே?”
``தமிழ் மக்கள் மீது அதிக நேசம்கொண்ட என் கணவர், தமிழ் மக்களுக்கான பிரச்னைகளுக்கு எப்போதும் குரல் கொடுப்பார். ஆனால் அதற்காக, `தெலுங்குப் பெண்ணை ஏன் திருமணம் செய்தீர்கள்?’ என்று கேட்டால், இருவருமே சிரிக்கத்தான் செய்வோம். காதலுக்கு மாநிலம், மொழி என எந்த எல்லையும் கிடையாது.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியலும் பிடிக்காது. ஆனால், என் கணவருக்குத்தான் அரசியலில் அதிக ஆர்வம். `சமையல் வேலைகள் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது மட்டும் பெண்களின் வேலை கிடையாது. அரசியலிலும் பெண்கள் சாதிக்க வேண்டும். `உன்னால் அரசியலில் வெற்றி பெற முடியும்’ என்று என் கணவர்தான் ஊக்கம் கொடுத்தார். அவரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு பதிலாக அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நானும் அவரை அரசியலுக்கு வரச்சொல்லி அடிக்கடி கேட்பேன். ஆனால், `சினிமா கலைஞர்களுக்குப் பணிசெய்யவே விரும்புகிறேன். அரசியலில் ஆர்வமில்லை’ எனச் சொல்லிவிடுவார்.
காதலர்களாக அவ்வப்போது சந்தித்துக் கொண்டபோது பரஸ்பரம் எங்கள் ப்ளஸ் பாயின்ட்டுகளை மட்டுமே பார்த்தோம். திருமணத்துக்குப் பின்னர் சேர்ந்து வாழ ஆரம்பித்தபோது, மைனஸ் விஷயங்கள்தான் பிரதானமாகத் தெரிந்தன. அடிக்கடி சண்டை போடுவோம். `யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என முடிவெடுத்த என் கணவர், அதை அவரே செய்ய ஆரம்பித்தார். பத்தாவது படிக்கும் மகள் அனுஷூமாலிகா, ஏழாவது படிக்கும் மகன் கிருஷ்ண கெளசிக்குடன் வாழ்க்கையை அழகாக எடுத்துச் செல்கிறோம்!”
``விஜயசாந்தி, குஷ்பு, நக்மா, ஸ்ரீப்ரியா என அரசியலில் வரிசையாக நடிகைகள் களமிறங்குகிறார்களே..?’’
``களச் செயல்பாடுகள் செய்து, அரசியலில் போராட்டங்களை எதிர்கொண்டு, நெருக்கடிகளில் நின்று காட்டி வெற்றி பெற வாழ்த்துகள்.”
``ரஜினி, கமல் அரசியல் என்ட்ரி பற்றி...”
``சினிமா மூலமாக மக்களை மகிழ்வித்ததுபோல, அரசியலிலும் மக்களுக்கு நல்லது செய்யட்டும். அதுதான் மக்களால் வளர்ந்த நாம், மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்.”
கு.ஆனந்தராஜ்