Published:Updated:

தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!
பிரீமியம் ஸ்டோரி
தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

வாசு கார்த்தி

தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

வாசு கார்த்தி

Published:Updated:
தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!
பிரீமியம் ஸ்டோரி
தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

`ஈடு செய்ய முடியாத இழப்பு’. இந்த  சொற்றொடர் அதிகம் பயன் படுத்தப்படுவதால், இதிலுள்ள வார்த்தைக்கான மதிப்பு குறைந்துவிட்டது. இருந்தாலும் ஒய்.சி. தேவேஷ்வரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்புதான். ஐ.டி.சி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒய்.சி. தேவேஷ்வர், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு  72-ம் வயதில் கடந்த 11-ம் தேதி காலமானார்.  

தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

நூற்றாண்டைக் கடந்த ஐ.டி.சி நிறுவனத்தில் அரை நூற்றாண்டு பணிபுரிந்து, அந்த நிறுவனத்தை ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.50,000 கோடியாக உயர்த்திய சரித்திர நாயகன்தான் ஒய்.சி.தேவேஷ்வர். அவர் செய்த சாதனைகளைப் பார்ப்போம்.

ஐ.ஐ.டி டு ஐ.டி.சி

டெல்லி ஐ.ஐ.டி மற்றும் ஹார்வேர்டு நிர்வாகக் கல்லூரியில் படித்த இவர், 1968-ம் ஆண்டு ஐ.டி.சி நிறுவனத்தில் இணைந்தார். 35 ஆண்டுகாலம் ஐ.டி.சி-யின் இயக்குநர் குழுவில் இருந்தார். 23 ஆண்டு காலம்       ஐ.டி.சி-யின் சி.இ.ஓ-வாகவும், 21 ஆண்டு காலம் ஐ.டி.சி-யின் தலைவராகவும் இருந்திருக்கிறார். தினசரி அலுவல்களிலிருந்து 2017-ம் ஆண்டு விலகினாலும், தொடர்ந்து இயக்குநர் குழுவின் தலைவராக இருந்து வந்தார். 2022-ம் ஆண்டு வரையில் இந்தப் பதவியில் செயல்படுவார் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் அவர் திடீர் மரணம் அடைந்திருக்கிறார்.

சிகரெட் முக்கியமல்ல

ஐ.டி.சி என்றாலே சிகரெட்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு இவருக்கு முந்தைய தலைவர் களும் திட்டமிட்டுச் செயலாற்றினார்கள். ஆனால், ‘சிகரெட் முக்கியமல்ல’ என்னும் நிலைக்கு நிறுவனத்தை மாற்ற முடியாமல் போனதுடன், அந்த முயற்சி நிறுவனத்தின் நிதிநிலை விஷயத்திலும் சிக்கலாக்கியது. இத்தனைக்கும் ஐ.டி.சி 1960 முதலே சிகரெட் தவிர வேறு சில துறைகளிலும் ஈடுபட்டுவந்தது.

தேவேஷ்வர் பொறுப்பேற்ற சமயத்தில் ஐ.டி.சி-யின் மற்ற தொழில்கள் (பேப்பர் போர்டு மற்றும் ஹோட்டல்கள்) அனைத்தும் பெரும் நஷ்டத்தில் இயங்கின. அதுமட்டுமல்ல, 803 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப் பட்டதாகவும், அந்தத் தொகையை ஐ.டி.சி-தான் செலுத்தவேண்டும் எனவும் நோட்டீஸ் வந்தது. அப்போதைய கால கட்டத்தில் மூன்று நிதியாண்டுகளின் நிகர லாபம் இது. தொகை அதிகமாக இருந்ததால், முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர் களிடையே எதிர்காலம் குறித்த அச்சம் இருந்தது.  இந்த நிலையில், பல கடினமான முடிவு களை தேவேஷ்வர் எடுத்தார். நிதிச் சேவைகள் பிரிவை ஐ.சி.ஐ.சி.ஐ-க்கு விற்றார்.  சமையல் எண்ணெய், வெளிநாட்டில் உள்ள ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளை விற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்!

ஏற்கெனவே பிற தொழில்களில் செய்யப் பட்ட முதலீடுகள் பெரும் தோல்வி அடைந்தன. இந்த நிலையில், தாய் நிறுவனமான பி.ஏ.டி (BAT - British American Tobacco) புகையிலைத் தொழிலைத் தவிர, மற்ற தொழில்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கட்டாயப்படுத்தியது. (தற்போதும் பி.ஏ.டி நிறுவனத்தில் ஐ.டி.சி நிறுவனத்துக்கு 29% பங்குகள் உள்ளன). எனினும், துணிந்து பிற தொழில்களில் முதலீடு செய்தார். தற்போது ஐ.டி.சி-யின் மொத்த வருமானத்தில் 60 சதவிகிதத்துக்கு மேல் சிகரெட் அல்லாத பிரிவுகள் மூலம் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய பிராண்டுகள்

கடந்த இருபது ஆண்டுகளில் பல முக்கிய பிராண்டுகள் உருவாக்கப்பட்டன. ஆசிர்வாத் ரூ.4,000 கோடி மதிப்புமிக்க பிராண்டாக உருவெடுத்திருக்கிறது. இதற்கடுத்து சன்பீஸ்ட் (ரூ.3,000 கோடி) பிங்கோ (ரூ.1,500 கோடி) யெப்பி    (ரூ.1,000 கோடி) மற்றும் கிளாஸ்மேட் (ரூ.1,000 கோடி) ஆகியவை ஐ.டி.சி நிறுவனத்தின் முக்கிய ஐந்து பிராண்டுகள் ஆகும். தற்போது உணவு பிரிவில் மூன்றாவது இடத்தில் ஐ.டி.சி இருக்கிறது. ஏற்கெனவே சந்தையில் முக்கிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் இருக்கும்பட்சத்தில், கடைசியாக சந்தையில் நுழைந்து மிகப்பெரிய வருமானம் ஈட்டுகிறது என்றால், அது தேவேஷ்வரின் பிசினஸ் உத்தி என்றே பிற எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இ-சௌபால்

நிறுவனத்தின் வளர்ச்சி, சிகரெட் அல்லாத பிரிவை வளர்த்தது, முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்தது எனப் பல சாதனைகளைச் செய்திருந்தாலும், இ-சௌபால் திட்டத்துக்காக தேவேஷ்வரின் செய்தது ஒரு பெரிய சாதனை எனலாம். 2000-ம் ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் இணைப்புடன் கூடிய திரைகள் நிறுவப்பட்டன. இதன்மூலம் சந்தை, வானிலை உள்ளிட்ட விவரங்களைக் கிராமப்புற மக்களிடம் எடுத்துச்சொல்லி,  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது ஐ.டி.சி-யின் திட்டமாகும். 35,000 கிராமப்புறங்கள் இந்தத் திட்டம் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். 

ரு.1 லட்சம் கோடி இலக்கு

சிகரெட் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த இலக்குகளை நிர்ணயம் செய்தார். 2030-ம் ஆண்டுக்குள் சிகரெட் அல்லாத பிரிவின்மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும் என்றும், அதற்காக உழைக்க வேண்டும் என்றும் தேவேஷ்வர் இலக்கு நிர்ணயித்திருந்தார். “பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்வது தலைவர்கள் செய்யக்கூடியது தான். ஆனால், அதற்கான திட்டமிடுதலை பொறுமையுடன் சிலர் மட்டுமே செய்கிறார்கள். அந்த சிலரில் தேவேஷ்வரும் ஒருவர்” என ஆதித்ய பிர்லா குழுமத்தின் செயல் தலைவர் டி.சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் பணி தொடங்கியவர்

ஐ.டி.சி நிறுவனத்தின் அகர்பத்தி மற்றும் தீப்பெட்டி பிரிவின் முன்னாள் சி.இ.ஓ-வாக இருந்தவர் வி.எம்.ராஜசேகரன். தேவேஷ்வர் குறித்து அவர் கூறியதாவது...

‘‘தேவேஷ்வருக்கும் சென்னைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முதன்முதலாக 1968-ம் ஆண்டு சென்னை திருவெற்றியூரில் உள்ள பேக்கேஜ் ஆலையில்தான் தேவேஷ்வர் பணிக்குச் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அவருடன் அடிக்கடி மெயில், தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பிருந்தாலும், குறைந்தது காலாண்டுக்கு ஒருமுறையாவது நேரில் பார்த்து உரையாடுவோம். எப்போதும் உற்சாகமாக இருப்பார். நம்மையும் உற்சாகப்படுத்துவார்.

அகர்பத்திகான குச்சிகள் பெரும்பாலும் வியட்நாம் மற்றும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் அந்தக் குச்சிகளை வடிவமைத்தபோது அதற்காக என்னைப் பாராட்டினார்.

ஐ.டி.சி ஆலைகள் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள கிராமப் புறங்களில் அகர்பத்தி தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்க்க பல நடவடிக்கைகள் எடுத்தார்’’ என்றார்.

ரூ.5,000 டு ரூ.50,000 கோடி

தவிர, இவரது காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.50,000 கோடியாக பத்து மடங்கு உயர்ந்திருக்கிறது, வரிக்கு முந்தைய லாபம் 33 மடங்கு உயர்ந்திருக் கிறது. அதேபோல, இவர் பொறுப்புக்கு வந்தது முதல் ஐ.டி.சி பங்கு ஆண்டுக்கு 23.3% வளர்ச்சியடைந்திருக்கிறது.

இப்படிப் பல சாதனைகளைச் செய்துமுடித்த தேவேஷ்வரின் பெயர், ஐ.டி.சி வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்! 

ஐ.டி.சி-யின் அடுத்த தலைவர்!

தே
வேஷ்வர் மறைந்ததை அடுத்து சஞ்சீவ் பூரி அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐ.டி.சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பினை இவர் கவனிப்பார். ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் வார்டன் நிர்வாகக் கல்லூரியில் படித்த இவர், 1986-ம் ஆண்டு முதல் ஐ.டி.சி-யில் பணிபுரிந்து வருகிறார். 2015-ம் ஆண்டில் இயக்குநர் குழுவில் இணைந்தார். 2017-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாகவும், 2018-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டார் இவர்!