நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்?

அதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்?

வாசு கார்த்தி

ஜெட் ஏர்வேஸ் சிக்கலுக்கே இன்னும் முடிவு தெரியாமல் இருக்கும் சூழலில், விமானப் போக்கு வரத்துத் துறையில் புது சர்ச்சை புகுந்திருக்கிறது. `ஜெட் ஏர்வேஸ் பயணிகளை அதிகம் ஈர்த்தது இண்டிகோ’ எனச் செய்திகள் வருவதற்குப் பதிலாக, `இண்டிகோ நிறுவனர்களுக்கிடையே பிளவு’ என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கி யிருக்கின்றன. 

அதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்?

இந்தச் செய்தி வெளியாகத் தொடங்கிய சில நாள்களுக்குள் இந்தப் பங்கின் விலை சில சதவிகிதம் சரிந்தது. மற்ற விமான நிறுவனங்களுக்கு உள்ளதுபோல நிதி நெருக்கடி இந்த நிறுவனத்துக்கு இல்லை யென்றாலும், அதிகாரப் போட்டி உருவாகி யிருப்பதுதான் இந்த நிறுவனத்தின் சிக்கலுக்குக் காரணம்.

நிறுவனத்தின் பின்னணி

கடந்த 2006-ம் ஆண்டு இண்டிகோ நிறுவனம் தொடங்கப்பட்டது. ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகிய இரு நண்பர்கள் தொடங்கிய நிறுவனம் இது. 2012-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்த நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டது. இண்டிகோவில் தற்போது 225 விமானங்கள் உள்ளன. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 47% சந்தையை வைத்திருக்கிறது இந்த நிறுவனம். தவிர, 70-க்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களுக்குச் சேவையை வழங்குகிறது இண்டிகோ.

தற்போது இந்த நிறுவனத்தில் ராகுல் பாட்டியா 38.26 சதவிகிதப் பங்குகளும், ராகேஷ் கங்வால் 36.69 சதவிகிதப் பங்குகளும் வைத்திருக்கின்றனர். மீதமுள்ள பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசம் உள்ளன.

இந்த நிலையில், நிறுவனர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் நிறுவனத்தைக் கைப்பற்ற இருவரும் முயற்சி செய்துவருவதாகவும் கடந்த 16-ம் தேதி தகவல் வெளியானது.

இதற்காக ராகுல் பாட்டியா ஜே.எஸ்.ஏ என்னும் ஆலோசனை நிறுவனத்தையும், ராகேஷ் கங்வால் கெய்தான் அண்டு கோ என்னும் ஆலோசனை நிறுவனத்தையும் நியமித்திருப்ப தாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி வெளியான தினத்தில் 9 சதவிகிதத்துக்கும்மேல் இண்டிகோ பங்கு சரிந்தது.

கருத்துவேறுபாடு ஏன்?

கருத்துவேறுபாடு ஏற்பட முதல் காரணம், விமானங்கள் குறித்து எனத் தெரிகிறது. ஆரம்பம் முதலே ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320 விமானங்களை மட்டுமே இண்டிகோ பயன்படுத்தி வந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக விமானம் செல்லும் நகரம் மற்றும் நேரத்தைப் பொறுத்து மற்ற நிறுவன விமானங்களை வாங்க ஆரம்பித்தது இண்டிகோ. 

அதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்?

சிறிய ஊர்களுக்கு ஏ.டி.ஆர் ரக விமானங் களை வாங்கிய இண்டிகோ, நீண்ட தூரப் பயணங்களுக்குப் பெரிய சொகுசு விமானங் களை வாங்கத் திட்டமிட்டது. விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது ராகுல் பாட்டியாவின் திட்டம்.

ஆனால், பட்ஜெட் விமான நிறுவனங்கள் சொகுசு விமானங்களை வாங்குவது நிதி நெருக்கடியை அதிகரிக்கும் எனக் கருதியதால், ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பயன்படுத்தலாம் என கங்வால் நினைத்தார். இதுதான் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கான முதல் புள்ளி.

வாவ் ஏர் மற்றும் நார்வே ஏர்லைன்ஸ் பட்ஜெட் சேவையிலிருந்து மாறியபோது, நிதி நெருக்கடியில் சிக்கின. ராகேஷ் கங்வால், விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவ மிக்கவர். இவர் யுஎஸ் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர். அதற்கு முன்பாக, சர்வதேச அளவில் முக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். அதனால் ஒரே ரக விமானத்தை மட்டுமே இயக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

மேலும், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேகமான வளர்ச்சியை அடைய வேண்டும் என கங்வால் நினைப்பதாகவும், வளர்ச்சி வேகத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாட்டியா நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே புகைந்துவந்த இந்த ஈகோ பிரச்னை, இப்போது எல்லோருக்கும் தெரியும்படி வெடித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பழைய நண்பர்களை நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில்  நியமனம் செய்த வகையிலும் இருவருக்குமிடையே ஈகோ பிரச்னை எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இண்டிகோ சி.இ.ஓ விளக்கம்

நிறுவனர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியபிறகு, கடந்த மே 18-ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரனோ ஜாய் தத்தா, ‘‘ராகேஷ் கங்வால் நிறுவனத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் இல்லை’’ என்று விளக்கம் அளித்தார்.

‘‘ஒவ்வொரு பெரிய நிறுவனமும் காலத்தைக் கடினமாகக் கடந்துவந்திருக்கிறது. சிறு குழப்பங்களைக்கூட பெரிய கருத்துவேறுபாடு என நாம் நினைக்கக்கூடாது. இரு நிறுவனர்களும் தனித்தனியாக ஆலோசனை நிறுவனங்களை நியமித்தது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அப்போது முதல் இந்த இரு நிறுவனங்களும் ஆலோசனை வழங்கிவருகின்றன என்பதால், இது புதிதல்ல.

நிறுவனர்களுக்குள் மாறுபட்ட கருத்து இருந்தாலும், கடந்த காலங்களில் இதுபோன்ற சிக்கல் களிலிருந்து மீண்டுவந்திருக் கிறோம். இப்போது ஏற்பட்டுள்ள சில கருத்துவேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவை யில்லை. நாங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து வளர்ச்சியில் கவனம் செலுத்திவருகிறோம்’’ என விளக்கம் அளித்திருக்கிறார் அவர்.

முக்கிய ஒப்பந்தம்

நிறுவனர்களுக்கிடையே கருத்துவேறுபாடு சில காலமாகவே இருக்கும் சூழலில், தற்போது முக்கிய ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இரு நிறுவனர்களில் ஒருவர் இண்டிகோ பங்குகளை முழுமையாக விற்க வேண்டும் என நினைத்தால், மற்றொருவர் வேண்டாம் எனச் சொன்னால் மட்டுமே மூன்றாம் நபருக்கு விற்க முடியும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம், வரும் நவம்பரில் காலாவதியாகிவிடும். அதன்பிறகு யாருடைய அனுமதியில்லாமலும் மூன்றாம் நபருக்கு இருவரில் ஒருவர் விற்க முடியும். இந்த விதியைத் திருத்தம் செய்ய இருவருமே முயற்சி செய்து வருவதாகத் தகவல்.

அதிகாரப் போட்டி அதிகரித்து நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியும் நல்லதல்ல; விரக்தியில் இந்த நிறுவனம் வேண்டாம் எனப் பங்குகளை மூன்றாம் நபருக்கு விற்பதும் நல்லதல்ல. 

தனிநபர்களைவிட நிறுவனம் முக்கியம் என்பது பாட்டியாவுக்கோ, கங்வாலுக்கோ நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை!