நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது!

மேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
மேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது!

சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன் பேட்டி

ர்வதேசப் பொருளாதார நிபுணர்களில் மிக முக்கியமானவர் அனந்த நாகேஸ்வரன். பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்துவந்தவர் தற்போது தாய் நாட்டுக்குத் திரும்பியிருக்கிறார். சென்னைக்கு அருகே தடாவில் இருக்கும் ஐ.எஃப்.எம்.ஆரின் டீனாக இருக்கிறார் அனந்த நாகேஸ்வரன். 

மேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது!

சர்வதேசப் பொருளாதாரம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியிருக்கும் அனந்த நாகேஸ்வரன், தற்போது ‘தி ரைஸ் ஆஃப் ஃபைனான்ஸ்’ (The Rise of Finance) என்கிற புத்தகத்தை குல்ஸர் நடராஜனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். நிதிமயமாக்கல் தொடர்பான இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி. பொருளாதார நிபுணர்கள் விவாதிக்கும் இந்தப் புத்தகம் தொடர்பாக அனந்த நாகேஸ்வரனிடம் பேசினோம். 

நிதிமயமாக்கல் (financialisation) குறித்து புத்தகம் எழுத என்ன காரணம்?

“நிதித்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து பொருளாதார ஆராய்ச்சி மேற்கொண்டதால், 1994-ம் ஆண்டு முதலே சர்வதேச அளவில் நிதித் துறையையும் அதில் இயங்கும் அமைப்புகளையும் நெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப செயல்படத் தொடங்கிய தால், சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் ஆராயத் தொடங்கினேன். இதனால் சாதாரண மனிதர்கள் ஏதும் நன்மை அடைகிறார்களா என்கிற கேள்வி எனக்குள் எழுந்து, நிதிமயமாக்கல் குறித்து இன்னும் ஆழமாக ஆராயவேண்டும் என்கிற தூண்டுதலை உருவாக்கியது. என்னுடன் இந்தப் புத்தகத்தை எழுதிய குல்ஸர் நடராஜனும் இதேமாதிரியான கருத்தினைக் கொண்டிருந்ததால், நாங்கள் இருவரும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதினோம்.

நிதிமயமாக்கல் இந்த உலகுக்கு நன்மை செய்திருக்கிறதா அல்லது தீமை விளைவித்திருக்கிறதா?

‘‘நிதிமயமாக்கல் இந்த உலகுக்கு நன்மை செய்திருக்கிறது என்று சொல்வது எளிது. பல பொருள்களை வாங்கி நுகரவும் புதிதாக முதலீடு செய்யவும் நிதி வேண்டாம் என்று யார் சொல்லப்போகிறார்கள்? நிதிமயமாக்கலினால் தனிநபர் களுக்குக் கடன் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது; கையில் பணமில்லாமலே பொருள்களை வாங்கவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் முடிந்தது. இதனால் உருவான புதிய பிசினஸ் வாய்ப்புகளைத் தொழில் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதுடன், நிதி மூலதனம் இல்லை என்கிற காரணத்தினால் முடங்கிப்போய் நிற்கிற நிலையையும் இல்லாமல் ஆக்கியது. நாடுகளும் தங்கள் வசமிருந்த நிதியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன், பொருளாதார வளர்ச்சிக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவியது. ஆனால், அதிக அளவிலான நிதிமயமாக்கலானது பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் குந்தகம் விளைவிப்பதுடன், பொருளாதார நிலைத் தன்மையைச் சீர்குலைத்து, சமூகத்தில் ஏற்றத் தாழ்வினையும் உருவாக்கவே செய்யும்.’’

நிதிமயமாக்கல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு என்னதான் தீர்வு?

‘‘நிதிச் சந்தைகளுக்கு எளிதாக மூலதனம் கிடைக்கும் தவறான பழக்கத்தை ஏற்படுத்தி விட்டதை உலகம் முழுக்க உள்ள மத்திய வங்கிகள் உணர வேண்டும். இதனால், ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியடைய வேண்டுமெனில், சொத்துகளின் மதிப்பு உயர வேண்டும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. சொத்துகளின் மதிப்பை உயர்த்தும் முதலீட்டினை (ரியல் எஸ்டேட்டில் இதுமாதிரியான முதலீடுதான் நடக்கிறது) ஒதுக்கி வைத்துவிட்டு, சேமிப்பின் மூலமும் முதலீட்டின் மூலமும் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காமல் தள்ளிப் போடுவதினால், சமூகத்தில் ஸ்திரத் தன்மையின்மை யும் பதற்றமும் ஏற்பட்டு, மக்கள் புரட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.’’

மேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது!

நிதிமயமாக்கலை இந்தியா எப்படி எதிர்கொண்டது, இதுதொடர்பாக நடந்த தவறுகளை எப்படிச் சரிசெய்ய முடியும்?

‘‘இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிகளின் கவர்னர்கள் பல சந்தேகங்களைக் கொண்டிருந்ததது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. இதனால் தாராளமயமாக்கலுக்குப்பின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மூலதனம் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் குறித்துப் பல முடிவுகளை மிகக் கவனமாகவே எடுத்தனர். மேலும், ஊக வணிகம் (derivatives) உள்பட பல்வேறு ரிஸ்க் நிறைந்த விஷயங்களை மிகக் கவனமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் இந்தப் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் சொன்ன படி, இந்தியாவில் நிதி அமைப்புகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அது அரசியல் மயமாகி, மிகப் பெரிய அளவில் நிதிமயமாக்கல் ஆகாமலே போனது. இருந்தாலும், சில விஷயங்கள் அதிக அளவு நிதிமயமாகவே செய்திருக்கிறது.’’
 
இன்றைய நிலையில் இந்தியாவின் முக்கியமான நிதி சார்ந்த பிரச்னைகள் என்ன?

‘‘வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும். முழுக்க அரசு வங்கி அல்லது தனியார் வங்கி என்று பிரிக்காமல், இரண்டும் கலந்த கலவையாக வங்கித் துறை இருப்பதே இந்தியாவுக்கு நல்லது. பொதுத்துறை வங்கிகள் சி.பி.ஐ, சி.வி.சி, சி.எ.ஜி (CBI, CVC, CAG) ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கி களுக்கும் தனியார் துறை வங்கிகளுக்கும் ஒரே விதமான விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் மூலதனத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் எவையெல்லாம் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறுகிறதோ, அந்த வங்கிகளைப் பிற வங்கிகளுடன் இணைத்து, அவற்றுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைய வேண்டும்.

இதற்குமுன்பு நிதிச் சந்தைகளை கவனத்துடன் தாராளமயமாக்கியது போல, இனிமேலும் செய்ய வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மேற்குலக நாடுகள் செய்த தவறுகளிலிருந்து பாடத்தைக் கற்று, அந்தத் தவறுகளைத் திரும்பச் செய்யாதவாறு இருக்க வேண்டும்.

அல்காரிதம் அடிப்படையில் அமைந்த டிரேடிங்குகள் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பதால், அதை  நடைமுறைக்குக் கொண்டுவரத் தேவையில்லை.

மூலதன ஆதாய வரி தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் ஊடாக நிதித் துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். நாய்க்கு முந்திய வாலாக நிதித் துறை செயல்படாமல் பொருளாதாரத்தை ஒட்டியே வளரவேண்டும்.

ஆர்.பி.ஐ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு இண்டிகேட்டர்களை ஆராய்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.’’

ஏ.ஆர்.குமார்