Published:Updated:

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…
பிரீமியம் ஸ்டோரி
கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

வரலாறும் அரசியலும் தமிழ்-தலித் உணர்வாக்கங்களும்க.காமராசன் - ஓவியங்கள் : ஹாசிப்கான்

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

வரலாறும் அரசியலும் தமிழ்-தலித் உணர்வாக்கங்களும்க.காமராசன் - ஓவியங்கள் : ஹாசிப்கான்

Published:Updated:
கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…
பிரீமியம் ஸ்டோரி
கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

மிழக தலித் இயக்கங்களில் மிகவும் போர்க்குணம் மிக்க, அதேவேளையில் அதிகம் பிரபலம் பெறாத இயக்கமான ‘நீலப்புலிகள்’ அமைப்பின் நிறுவனரான உமர் ஃபாருக் ஆகிய டி.எம்.மணி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில், இயக்குநர் பா.இரஞ்சித் அண்மையில் பேசியது பிரச்னை ஆகியுள்ளது. இப்பிரச்னை வரலாறு, அரசியல், தலித், தமிழ் ஆகிய சொற்களினூடாகப் பேசப்படுகிறது.

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

உரையாடலில் தேர்வின் அரசியல்

உரையாடல் என்பது ஒரு தருக்கம். அது பல விஷயங்களைத் தழுவிச் செல்லும். அவற்றில் எதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு உரையாடுவது என்பது அவரவரின் அரசியல் ஆகும். ‘சாதிமுறை ஒழிப்பு குறித்த உரையாடலை விரும்புகிறவன்’ என்ற குரலுடன் வலம்வருகின்றவர் இயக்குநர் பா.இரஞ்சித். ஆனால், இந்த உரையாடல் ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல என்பது இப்போது நடைபெறும் விவாதங்களின் மூலம் அவருக்குத் தெரியவந்திருக்கும். ஏனென்றால், 20 நிமிடத் தன் பேச்சில் ராஜராஜ சோழன் பற்றி ஒன்றிரண்டு நிமிடங்கள்தாம் ரஞ்சித் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சு முழுவதும் கோயில் அதிகாரம், நில உரிமை, சாதிமுறை ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளமை; மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் சாதிப் படிநிலையில் மிகவும் கீழ்நிலையில் இருப்பதற்கு நிலமின்மையே காரணம்; இன்றைய ஜனநாயக யுகத்திலும் சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகுகிற போக்கு; இந்திய/தமிழ்ப் பண்பாட்டில் உள்ள நோய் எனச் சாதிமுறையை, தீண்டாமையை நோக்க வேண்டியதன் அவசியம்; இதுபற்றிய உணர்வில்லாத தமிழ்த் தேசிய, இந்தியத் தேசியக் கதையாடல்கள்; ஒடுக்கப்பட்ட மக்களிடையில் படித்தோர் அல்லது வாழ்வில் ஓரளவு உயர்ந்தோர் தமது அடையாளத்தை மறைத்துக்கொள்வது; உழைக்கும் மக்களை ஒடுக்கிய ராஜராஜனைத் தம் முன்னோர் எனப் போலிப்பெருமிதம் கொள்வதில் உள்ள முரண்; கறுப்பின மக்கள் இயக்கம் போன்று தம் சொந்த அடையாளத்தில் ஊன்றி நின்று விடுதலைக்கு உழைக்க வேண்டியதின் அவசியம் முதலானவை பற்றி உரையாட முயன்றுள்ளார். அவர் தன் பேச்சின் ஓரிடத்தில் சாதி ஒழிப்பைப் பேசிய திராவிட இயக்கத்திற்கும் முற்பட்டது, பண்டிதர் அயோத்திதாசர் முன்னெடுத்த தலித் அறிவு மரபு என்று சுட்டுகிறார்; அதில் பெருமை கொள்கிறார்.

இந்தத் தருக்க உரையாடலிலிருந்து ராஜராஜ சோழன் குறித்த இரஞ்சித்தின் கருத்தை மட்டும் பிரித்தெடுத்து, அது தவறு என நிலைநாட்ட முயற்சி நடப்பது ஏன்? மனித மாண்பை அழிக்கும் தீண்டாமையை, சாதிமுறையை இந்திய/தமிழ்ப் பண்பாட்டில் உள்ள நோய், அதை ஒழித்தே தீர வேண்டும் என்ற பேச்சு, ராஜராஜ சோழனைக் குறித்த பேச்சு அளவுக்குக் கவனம் பெறவில்லையே ஏன்? இந்தக் கேள்விகளுக்கு உடனடியாக முழுநிறைவான பதிலொன்றும் என்னிடம் இல்லை. ஆனால் இந்து/தமிழ் உணர்வாக்கத்தின் இன்றைய ‘பெருமித’ உரையாடல் போக்கிலிருந்து மேற்கண்ட பொது உரையாடல் வெளி இருப்புக்கு வந்துள்ளது எனத் தோன்றுகிறது. ‘தமிழ்ப் பெருமிதம்’ கண்முன் இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிரச்னைகளின் வேர்களை, தமிழ்ச் சமூகத்தில் உள்ள ‘அந்நியர்’, ‘வடுகர் /தெலுங்கர்’ ஆதிக்கம் என்ற சொல்லாடல் களில் தேடுகிறது. ‘தமிழ்ப் பெருமித’ அரசியல் சொல்லாடல்களைக் கேள்விக்கு உட்படுத்தும் திராவிட, பொதுவுடைமை, தலித் அரசியல் சொல்லாடல்களை ‘அந்நியர்/வடுகர் சதி’ என வாதிடுகிறது. இந்த வகையில்தான் ‘மாமன்னன் ராஜராஜன்’ குறித்த ரஞ்சித்தின் விமர்சனங்கள் மட்டும் ‘தமிழ்ப் பெருமித’ச் சொல்லாடல்காரர்களால் கவனப்படுத்தப் படுகின்றது; உரையாடலுக்கு உட்படுத்தப் பெறுகின்றது. இது ஒருவகையில் ‘தமிழ் நிலத்தைத் தமிழனே [தமிழ்ச் சாதியே] ஆள வேண்டும்’ என்ற அரசியல் முழக்கத்தின் சொல்லாடலும்கூட.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

‘சாதிமுறையையும் தீண்டாமையையும் கட்டிக் காப்பாற்றி வளர்த்த ராஜராஜன் முதலான தமிழ் மன்னர்கள் எம் முன்னோர் எனப் போற்றிக் கொண்டாடுவது நியாயமா?’ என்று சாதிமுறையால் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கிற தமிழர் கேள்வி கேட்டால்,  ‘ராஜராஜன் எவ்வளவு பெரிய தமிழ் மாமன்னன், அவனால் உனக்கு எவ்வளவு பெருமிதம் தெரியுமா?’ என்று எதிர்க்கேள்வி எழுப்புவதும், ராஜராஜனை இழிவுப்படுத்து கிறார்கள் என்று குற்றம் சுமத்துவதும், ‘கொட்டையூர்க்கு வழி என்ன?’ என்று கேட்டால் ‘கொட்டைப் பாக்கு எட்டு அணா’ என்று சொல்வது போலாகும்.

மறதிகளும் நினைவுகளும் வரலாற்றின் அரசியல்

‘தமிழ் உணர்வாக்கத்தின் ஒரு பகுதியாக ராஜராஜ சோழன் எப்போது ஆனான்?’ என்பது ஒரு சுவாரசியமான கேள்வி ஆகும். ஏனென்றால், மிகப்பெரிய சோழப் பேரரசைக் கட்டியெழுப்பிய ராஜராஜன் குறித்து தமிழ் இலக்கியப் பனுவல் ஏதுமில்லை. ‘மூவருலா’விலும், ‘கலிங்கத்துப் பரணி’யிலும் போகிற போக்கில் ராஜராஜன் குறிப்பிடப் பெறுகின்றான். மூவர் தேவாரப் பதிகங்களைச் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தது பற்றிய மிகவும் பிற்காலத் திருமுறைகண்ட புராணக் கதையின் உண்மைத் தன்மையை அறிஞர்கள் ஐயுறுகின்றனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ராஜராஜ சோழன் கட்டினான் என்ற நினைவுகூட, அக்கோயிலின் தலபுராணங்களில் இல்லை. இத்தலத்தில் உள்ள சிவகங்கை என்னும் ஆவியில் நீராடி குட்ட நோய் நீங்கிய கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலன் கட்டியதாகத் தலபுராணங்கள் நினைவுகூர்கின்றன. இக்கோயிலின் கல்வெட்டுகளை, 1891-ல்  ‘தென்னிந்திய கல்வெட்டுகள் - இரண்டாம் தொகுதி’யில் ஹுல்ஸ் என்னும் அறிஞர் பதிப்பித்த பின்னரே, ராஜராஜன் இக்கோயிலைக் கட்டினான் எனத் தெரியவந்தது. இடைக்காலத் தமிழ் இலக்கிய நினைவுகளில், ராஜராஜன் நினைவு ஏன் பேணப்படவில்லை. பின்னிடைக்காலத்துப் பல சிற்றரசர்கள் குறித்த கதைப்பாடல்கள் இருக்கும்போது, ஒரு பெருவேந்தன் குறித்து ஒன்றுமே இல்லையே ஏன்?

ராஜராஜ சோழன், பண்டைக்காலத் தமிழ் மன்னர்களைப்போன்று தன்னை ‘தண்டமிழ் வேந்தன்’ என்றெல்லாம் கூறிக் கொண்டவன் இல்லை. தமிழ் நூல்கள் இயற்றுவதற்கு, தமிழ்ப் புலவர்களுக்குக் கொடை நல்கியவனுமில்லை. மாறாக, கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் கொடை நல்கியவன். ராஜராஜன் வாழ்க்கை குறித்த வசன நூல் ஒன்று இயற்றுவதற்கும் நாடகமொன்று இயற்றுவதற்கும் நேரடியாக ஆதரவு நல்கியதாகக் கல்வெட்டுச் செய்தி உண்டு. இந்த நூல்களும் இப்போது கிடைக்கவில்லை. இவ்வாறு பழைய தமிழ் உணர்வில் இடம்பெறாத ராஜராஜன், எவ்வாறு நவீனத் தமிழ் உணர்வில் மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றான். இதற்குப் பதில், தமிழகத்தில் இந்தியத் தேசியவாதத்தின் அறிவுசார் அரசியல் வரலாற்றில் தங்கியுள்ளது.

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

இந்திய தேசிய வாதத்தால் கிளர்ச்சியுற்ற நவீன இந்திய வரலாற்று ஆசிரியர்கள், பிரிட்டிஷ் பேரரசின் நிதர்சன இருப்புக்கு எதிரிடையாகப் பழங்கால இந்திய வரலாற்றில் பேரரசுகளைத் தேடினர். அவர்களில் சிலர் வட இந்திய வரலாற்றில் மௌரிய, குப்த பேரரசுகளைக் கண்டுபிடித்தனர். இதுபோலத் தென்னிந்திய வரலாற்றில் நீலகண்ட சாஸ்திரி, சோழப் பேரரசைக் கண்டுபிடித்தார். இது பைசாண்டிய பேரரசு போன்ற ஒரு பேரரசு என்றார். நீலகண்ட சாஸ்திரிக்குப் பின்னர் சோழர் வரலாற்றைத் தமிழில் எழுதிய மா.இராசமாணிக்கம், சதாசிவ பண்டாரத்தார், கே.கே.பிள்ளை முதலானோர் இந்தியத் தேசியவாத உணர்ச்சியுடன் தமிழ்ப் பெருமித உணர்வையும் சேர்த்து, சோழர் வரலாற்றை வரைந்தனர். இந்த வரலாற்றுக் கச்சாப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டு, கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற புனைவு இன்றுவரை தமிழ் வெகுசன வாசிப்பில் மிகச்சிறந்த வாசிப்புத் திளைப்பைத் தந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப் பற்றையும் தெய்வப் பற்றையும் இரு கண்களாகக்கொண்ட ஏ.பி.நாகராஜன் இயக்கி, 1973-ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜராஜ சோழன்’ திரைப்படம்,  ‘பொன்னியின் செல்வன்’ வழங்கிய வாசிப்புத் திளைப்பு ஏற்படுத்திய தாக்கத்தைவிட மிகப் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இரு புனைவுகளும் நவீன காலத் தமிழ் வெகுசனப் பரப்பில் ராஜராஜ சோழனுக்கு மறுத்தொதுக்க முடியாத இடத்தை வழங்கியுள்ளனவொ என எண்ணத் தோன்றுகிறது. இப்புனைவுகள் சோழ அரச மரபை நவீனத் தமிழ் உணர்வா க்கத்துடன் இரண்டறக் கலக்கச் செய்துள்ளன. முன்னிடைக் காலத்தில் தெலுங்குப் பகுதியை ஆட்சிசெய்த ரேநாட்டு சோழர் ஆகிய தெலுங்குச் சோழரும் கரிகாலன் தோன்றிய பண்டைய சோழ அரச மரபுக்கு உரிமை கோரியுள்ளனர் என்ற உண்மையும், இடைக்காலச் சோழ அரச மரபினர் ‘வடுக’ அரச மரபுகளுடன் நெருங்கிய மண உறவைக்கொண்டிருந்தனர் என்பதும் நவீனத் தமிழ் உணர்வாக்கத்தில் உள்ள மறதிகள் ஆகும்.

பெருவேந்தனும் கொசுபோல் சிறியவனும்


இடைக்காலத் தமிழ் அரச அவைகளில் அன்றாட நிகழ்வுகளைக் குறித்துவைக்கும் குறிப்பேடுகள் ஏதுமிருக்க வில்லை. இதுபோலவே, மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளும் எழுதப்பெ றவில்லை. கிடைப்பதெல்லாம் மெய்க்கீர்த்திகளும், அரசனின் தானக் கட்டளைகளைத் தாங்கி நிற்கும் கல்வெட்டுகளும்தாம். இவற்றைக் கொண்டு தனியோர் அரசனின் மனப்பாங்குகளையும் குணப்பண்புகளையும் விளங்கிக்கொள்ள இயலாது. புகழ்பெற்ற இளவரசனாக விளங்கிய, ராஜராஜனின் தமையன் ஆதித்த கரிகாலனை எதற்காக நான்கு பார்ப்பனர்கள் கொன்றனர், அவர்களை ஏன் பதினாறு ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் தண்டித்தான் என்பது பற்றிய விளக்கங்களையே பெற முடியாமல், முடிவே இல்லாத ஊகங்களில் சோழர் அரசியல் வரலாற்று ஆசிரியர்கள் மூழ்கியுள்ளனர். ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதிலும் இதுதான் நிலைமை.

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மநக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, வேங்கை நாடுங் கங்கைபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெனழில் வளரூழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீராஜராஜ தேவர்” என்பது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி வாசகம். இந்த வாசகம் உண்மையாகவும் துல்லியமாகவும் ராஜராஜனின் வெற்றிகளைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. இந்த விவரங்களைக்கொண்டு ராஜராஜன் பெருவேந்தன், மாமன்னன் என வரலாற்று ஆசிரியர் வாதிடமுடிகின்றது. ஆனால், சீன சோங் பேரரசுக்கு ராஜராஜன் அனுப்பிய தூது குறித்த விவரங்களை நொபொரு கராஷிமா சீன மொழியிலிருந்து பெயர்த்துத் தந்துள்ளார். சீனப் பேரரசருக்கு ராஜராஜன் எழுதிய கடிதத்தில், ‘உங்கள் அடிமையாகிய நான், கொசுபோல் சிறியவன்; காகிதநாய்போல அடக்கமானவன்… ஆதவனைக் கண்டு வளையும் சூரியகாந்தியைப்போல தங்களுக்கு நான் பணியாற்ற விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளான். இம்முரண்பட்ட விவரங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது? ராஜராஜன், தன் சொந்த மக்களிடம் தன்னை ராஜகேஸரி (ராஜசிங்கம்) என ஏன் முன்னிறுத்திக்கொள்கிறான்; சீனப் பேரரசரிடம் ‘கொசுபோல் சிறியவன்; காகிதநாய்போல அடக்கமானவன்’ என ஏன் அடிபணிகிறான்? இதற்கு அக்காலச் சமூக வரலாற்றிலும் வணிக வரலாற்றிலும் பதில் கிடைக்கலாம். (‘நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை’, - ஆங்கில மூலத் தொகுப்பாளர்கள்: ஹெர்மன் குல்கே, கே.கேசவபாணி, விஜய் சக்குஜா)

நில உரிமையும் பார்ப்பனர்களும் கோயில்களும்

சோழர் காலச் சமூக வரலாறு குறித்து அறிவதற்கு நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆகியோரின் ஆய்வுகளே நம்பகமானவை. காரணம், அக்கால வரலாற்றை ஆராய்ந்த வேறு எந்த ஆசிரியரையும்விட, இவ்விருவரும் மூலச் சான்றுகளை மிக விரிவான பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். துல்லியமான பகுப்பாய்வுகளின் மூலம் சமூக அசைவியக்கம் குறித்த முடிவுகளை முன்வைத்துள்ளனர். இவர்களின் ஆய்வுகளின் வழி பின்வரும் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

சோழர்கள் காலத்தில் நிலங்களைக் கூட்டுடைமையாகக்கொண்ட வெள்ளான் வகை ஊர்களும் தனியுடைமையாகக் கொண்ட பிரமதேயங்களும் இருந்தன. வெள்ளான் வகை ஊர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தன. வெள்ளான் வகை ஊர்களிடையில் பிரமதேயங்கள் விரவி இருந்தன. வெள்ளான் வகை ஊர்கள் காலத்தால் மிகப் பழைமையானவை. பிரமதேயங்கள் பல்லவர் காலம் முதல் அரச தனங்களால் உருவாக்கப் பெற்றுவந்தவை. சோழர் காலத்தில் பிரமதேயங்கள் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றன. சோழர் காலத்தில் அரச ஊழியத்திற்காகவும் கோயிலுக்காகவும் நிலதானங்கள் வழங்கப்பட்டன. உழவர்களைப் பொறுத்தவரை உழுதுண்ணும் உழவர்களும், உழுவித்து உண்ணும் நில உடைமையாளரும் இருந்தனர். பார்ப்பனர்கள், அரசு அலுவல் புரிந்த வேளாளர், படையில் பணிபுரிந்தோர், கோயிலாளர் ஆகியோர் உழுவித்து உண்ணும் நில உடைமையாளர்கள் ஆவர். கோயில் ஒரு நிலவுடைமையாளராக இருந்தது என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும். தனக்குக் கீழ் நேரே உள்ள நில உடைமையாளர் என்ற வகையில் கோயில்களை உருவாக்குவதிலும் பேணுவதிலும் அரசர்கள் தனிக்கவனம் செலுத்தினர். அதுவரை இல்லாத வகையில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் பெருங் கட்டுமானத்தை மட்டுமல்ல, பெரும் நில உடைமையாளரையும் ராஜராஜ சோழன் உருவாக்கினான். இதுமட்டு மில்லாமல், நில வரி வருவாயைக் கறாராக வசூலிப்பதற்காகத் துல்லியமாக அளவிட்டான்.

பறையர், புலையர் முதலானோர் உழுகுடிகளாக விளங்கினர். இந்த உழுகுடிகள் குறிப்பிட்ட ஊரின் நிலத்தில் உழுகுடிகளாக இருப்பதற்கு உரிமை பெற்றிருந்தனர். இந்த வகையில் நில உரிமையின் அடிவாரம் உழுகுடிகளுக்கு ஆனது. சில வேளைகளில் இந்த உழுகுடிகளை நீக்கி தேவதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு ராஜராஜன் குடிநீக்கி தேவதானம் வழங்கிய செய்தியைத் தரும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டை நா.வானமாமலை எடுத்துக் காட்டியுள்ளார். உழுகுடிகள் நீக்கப்பட்ட கோயில் நிலங்களில் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக்கொண்டோர் உழவுப் பணி செய்திருக்கலாம் என கராஷிமா ஊகிக்கின்றார். பாசனத்தை விரித்து உற்பத்தியைப் பெருக்கிய சோழர் காலத்தில்தான், குறிப்பாக ராஜராஜ சோழப் பெருவேந்தன் காலத்திலும்கூட பஞ்சத்தால் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக்கொண்ட அடிமைகள் இருந்தனர். கோயில் அடிமைகளுக்கும் தேவரடியார் களுக்கும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் முத்திரை இடப்பட்டது. இடைக்காலச் சோழர் காலத்தின் நடுக்கூறிலிருந்து சோழ அரசு தலையிட்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நில விற்பனை நடத்தது. அரச குடிகள், பார்ப்பனர்கள், அரச அலுவல் குடிகள் தேவதானம் என்னும் பெயரில் கூட்டுடைமையாகக்கொண்ட ஊர்சபை களிலிருந்து நிலத்தை வாங்கினர். இது நிலத்தில் தனியுடைமைப் பெருக்கத்திற்கும் கோயிலுடைமைப் பெருக்கத்திற்கும் உழுகுடிகளின் நிலை மேலும் மேலும் தாழ்ந்துபோகவும், அடிமைகளாக விற்றுக்கொள்ளவும் இட்டுச்சென்றது. இந்தப் போக்கு பார்ப்பனர், வேளாளர், கோயில் ஆகிய நில உடைமையாளருக்கும் உழுகுடிகளுக்கும் இடையிலான மோதலைத் தோற்றுவித்தது. இம்மோதல் சோழப் பேரரசு வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது.

அந்தணன் முதலாக அரிப்பன் கடையாக

சோழர் காலத்தில் இக்காலத் தமிழகத்தில் உள்ளது போன்ற சாதி அமைப்பு இல்லை. ஆனால் ‘சாதிமுறையைப் போன்ற’ ஒரு சமூகப் படிநிலை அமைப்பு நிலவியது. அதைக் கல்வெட்டுகள், ‘அந்தணன் முதலாக அரிப்பன் கடையாக’ எனக் குறிக்கின்றன. ஆதிவாரத்து மலையாளர், மலையாள முதலிகள், முதுநீர் மலையாளர், மலையரண் முதலிகள், செட்டிகள், வாணிகர், கணக்கர், கருமப்பேர், பன்னாட்டவர், பன்னாட்டு முதலிகள், பொற்கொற்ற கைகோளாளர், ஆண்டார்கள், சிவப்பிராமணர், மன்றாடிகள், உவச்சர், தென்கரை நாட்டு வடதலை நாட்டவரும் தென்மலை நாட்டவரும், தெல்ல…. புலவர், பண்ணுவார், நியாயத்தார், பன்னிரண்டு பணிமக்கள், பெரும்வேடர், பாணர், பறையர், பறை முதலிகள், செக்கலியர், இறு[ரு]ளர்  முதலான ‘சாதியைப் போன்ற குழுக்கள்’ குறிப்பிடப்பெறுகின்றன. இக்குழுக்களில் சிலவற்றை இக்காலச் சாதிகளில் ஒன்றோடு அடையாளம் காணலாம்; பலவற்றை அவ்வாறு அடையாளம் காண இயலவில்லை. குறிப்பாக, இக்காலத்தில் ராஜராஜ சோழனுக்கு உரிமை கொண்டாடும் சாதிகளை அக்காலத்தில் அடையாளம் காண்பது மிகவும் சிரமம். அத்துடன் இக்காலத்தில் உள்ளதைப்போன்று அக்காலத்தில் பறையர் தீண்டாதாராகக் குறிக்கப்படவில்லை. மேலும், அக்காலத்தில் சமூகப் படிநிலையில் காணப்பட்ட அசைவியக்கத்தைப் பின்வருமாறு எ.சுப்பராயலு விளக்குகிறார்:

கோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…

“ஐஞ்சுநாட்டார், பள்ளிநாட்டார் அல்லது பன்னாட்டார், திரு வாய்ப்பாடி நாட்டார் முதலிய பெயர்களில் உள்ள நாட்டார் என்ற பின்னொட்டு, இவ்வினங்கள் இப்போது வேளாண் நாட்டாரைப்போல் தாங்களும் நிலவுடைமையாளர் என்ற தகுதியுடையவர்கள் என்பதை நிலைநிறுத்தச் செய்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். இந்த வகையில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் உடைந்த கல்வெட்டில் காணப்படும் அகம்படி வேளானும் பள்ளிவேளானும் என்ற சொற்றொடர் முக்கியத்துவம் வாய்ந்தது (இக.1915:416). அதாவது வேளாளர் தகுதிக்கு அகம்படியாரும் பள்ளிகளும் உரிமை கொண்டாடினார்களென்று இதை விளக்கலாம்”.

சில குழுக்கள் வேளாளர் தகுதியைக் கோரிப் பெறும் அளவுக்கு அக்காலச் சாதிமுறையைப்போன்ற அமைப்பு நெகிழ்வுடையதாக விளங்கியது. அதேவேளையில் சமூகத்தில் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக்கொள்ளும் அடிமைமுறையும், உழைப்பாளர்கள் பொருள்களைப்போல விலைக்கு வாங்கவும் விற்கவுமான முறை நிலவியது என்பதும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டியது.

இவ்வாறான சமூக அமைப்பைப் பேணும் வகையில்தான் ராஜராஜ சோழன் தன்னை ராஜகேஸரி என்று முன்னிறுத்திக் கொண்டான். அதேவேளையில் இடைக்கால உலகத்தின் வணிகப் பேரரசான சீனப் பேரரசர் முன்பு, ‘கொசுபோல் சிறியவன்; காகிதநாய்போல அடக்கமானவன்’ எனப் பணிவு கொண்டான். இந்த மெய்மைக்கான சான்றுகளைத் தமிழ்ப் பெருமிதத்தில் திளைக்கும் அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்திலும் ‘ராஜராஜ சோழன்’ திரைப்படத்திலும் தேடினால் காணமுடியாது. நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆய்வுகளிலும் அவர்கள் காட்டும் மூலச் சான்றுகளிலும் எல்லோராலும் காணமுடியும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism