Published:Updated:

சரிகமபதநி டைரி 2010

வீயெஸ்வி, படங்கள் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
னவரி முதல் தேதி. காலை 9.45 மணி. மியூஸிக் அகாடமி.

ஜனவரி 2-ம் தேதி. மாலை 4.27 மணி. நாரத கான சபா.

இரு மேடைகளிலும் திரை விலகிய சமயம்...

மூன்று வருடங்கள் தனியாக அமெரிக்காவில் இருந்துவிட்டு ஊர் திரும்பும் செல்ல மகனை ஆசை ஆசையாக வரவேற்று, உச்சி முகர்ந்து உள்ளம் குளிரும் பெற்றோர்கள் மாதிரி, டிசம்பரில் 31 நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு, புது வருடம் பிறந்ததும் அடுத்த அடுத்த நாட்கள் மேடையேறிய டி.எம்.கிருஷ்ணாவை ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றார்கள் ரசிகர்கள்!

சரிகமபதநி டைரி 2010

அகாடமியில், சரஸ்வதி மனோகரி ராகத்தில் தியாகராஜர் இயற்றியுள்ள 'எந்தவேடு கொந்து ராகவ’ பாடலுடன் நிதானமாக, அமைதியாக கச்சேரியை ஆரம்பித்த கிருஷ்ணா, நாரத கான சபாவில், தியாகராஜரின் 'மா ஜானகி’யை (காம்போதி) ஆர்பாட்டமாக ஆரம்பத்துக்கு வைத்துக்கொண்டார். 'ராஜ ராஜ...’ வரியை நிரவலுக்கு எடுத்துக்கொண்டு, காம்போதியின் முழு சொரூபத்தைக் கம்பீரமாக நிலைநிறுத்தினார். 'கமகம..’வென்று ஸ்வரம் பாடி, படபடவென்று பட்டாசு கொளுத்திப் போட்டார். இதுநாள் வரையில் செம்மங்குடியைத் தவிர, வேறு எவரையும் நாடாமல் இருந்த கிருஷ்ணா, இப்போதெல்லாம் மதுரை மணியின் ஒலி நாடாக்களையும் அதிகம் கேட்டு வருவதை காம்போதி காட்டிக் கொடுத்தது! மதுரை மணியின் ஏகபோகமான 'எப்போ வருவாரோ?’வை இரண்டு இடங்களிலும் கிருஷ்ணா பாடியதும் இதற்கு இன்னொரு வலுவான சாட்சி!

அகாடமியில் பிரதானமாக மாயாமாளவ கௌள ராகம். திடீரென்று மேடையில் இருந்து கிருஷ்ணா குறட்டைவிடும் சத்தம்! தூங்கிவிடவில்லை அவர். இந்த ராகத்தைச் சிறிது நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார்!

சரிகமபதநி டைரி 2010

நாரத கான சபாவில் கரகரப்ரியாவை மெயினாக எடுத்துத் துவம்சம் செய்தார். ஒரு பக்கம் செம்மங்குடியும், மறுபக்கம் மதுரை மணியுமாக நின்றுகொண்டு, 'இந்த சங்கதியைப் பாடு... அதை விட்டுடாதே...’ என்று எடுத்துக் கொடுப்பதுபோல் இருந்தது, கிருஷ்ணா கரகர ப்ரியாவைத் துவைத்துக் காயப் போட்டபோது! இரு ஜாம்பவான்களும் போட்டுக்கொடுத்திருக்கும் ராஜபாட்டையில் தன்னுடைய சொந்த சரக்கையும் காக்டெய்லாகக் கலந்து, பாபநாசம் சிவனின் 'ஜானகி பதே’ பாடலை நிரவலுடன் கிருஷ்ணா பருக வைத்தபோது 'கிக்’ ஏறியது!

காரைக்குடி மணி மிருதங்கம். வி.சுரேஷ் கடம். இருவரும் நாரத கான சபாவில் வாசித்த தனி, இந்த சீஸனுக்குத் தனி - மணி - மகுடம்! ஆதி தாளத்தில், திஸ்ர நடையில் பதினேழு நிமிடங்களுக்கு இவர்கள் லய சாம்ராஜ்யம் நடத்தியபோது, நடு நடுவிலும், முடிவிலும் எழுந்த விண்ணை முட்டும் கைதட்டல்கள் அண்மைக் காலத்தில் கேட்டிராத ஒன்று! ஒருவர்கூட எழுந்து வெளியே போகவில்லை. அத்தனை பேரும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்து கேட்டு ரசித்தார்கள்!

டந்த டிசம்பரில் காரைக்குடி மணி யாருக்கும் பக்கவாத்தியம் வாசிக்கவில்லை. இரண்டு சபாக்களில் மேடையில் மையமாக உட்கார்ந்து தனி ஆவர்த்தனம் நிகழ்ச்சி நடத்தி, மிருதங்க நடைகள் குறித்து வகுப்பு எடுத்தார். அந்த நாளில் பாலக்காடு மணி ஐயர் தனி ஆவர்த்தனம் வாசித்தால் வெளியே இருந்து 200 பேர் அரங்கினுள் வருவார்கள். இன்றைய 'தனி’க்களின்போது விட்டால்போதும் என்று 100 பேர் வெளியே ஓடுகிறார்கள்! வாசிப்பைப் புரியவைத்தால் இதைத் தடுக்க முடியும் என்பது மணியின் எதிர்பார்ப்பு.

கிருஷ்ண கான சபாவின் காமகோடி ஹால் நிரம்பி வழிய, 'பஞ்சமுகி’ என்று தலைப்பிட்டு, கண்டம் பற்றியும் மிஸ்ரம் பற்றியும் வாசித்து விளக்கினார் காரைக்குடி மணி. துணைக்கு சுரேஷ் கடம்.

'தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடலுக்கு தாளம் அமைந்திருப்பது கண்ட நடையில் என்பது மணி சொன்ன தகவல்.

'இது ஒரு தேடலின் முயற்சி...' என்றார் அவர்.

முயற்சி தொடரட்டும். இளம் மிருதங்கக் கலைஞர் நிறைய பேருக்கே லயத்தில் இருக்கும் கணக்கு வழக்குகள் இன்னும் முழுவதுமாகப் புரியவில்லையே!

சரிகமபதநி டைரி 2010

ன்றைய இளசுகள் யாருக்குமே இல்லாத அபூர்வமான குரல் வளம் கிடைக்கப் பெற்றவர் அபிஷேக் ரகுராம். இந்த சின்ன வயதிலேயே அசாத்திய இசை ஞானம் இவருக்கு. 'ஏனோ தானோ’ வியாபாரமே இவரிடம் கிடையாது. எக்கச்சக்க மனோதர்மத்துடனும், கற்பனை வளத்துடனும் இவர் ஒவ்வொரு ராகத்துக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வரும்போதும் 'அடேங்கப்பா...’ என்று புருவம் எகிறிக் குதித்தது!

பிரம்ம கான சபாவுக்காக அபிஷேக் பாடிய நாட்டக்குறிஞ்சி, இதை எழுதும் விநாடி வரையில் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நாகஸ்வர பிடிகள், வீணை - வயலின் பிடிகள் என்று இவர் ராகத்தை வளர்த்திச் சென்றபோது, பல பிடிகள் தெறித்து விழுந்தன. ஒற்றை நாடி சரீரம்கொண்ட இந்த இளைஞரின் ஒப்பற்ற சாரீரத்துக்கு ஒரு ராயல் சல்யூட்! சங்கீத உரம் போட்டு இவரை வளர்த்து வரும் குருநாதர் பி.எஸ்.நாராயணசுவாமிக்கும் சல்யூட்டில் நிறையப் பங்கு உண்டு!

சரிகமபதநி டைரி 2010

ஆனால், தேர்வில் மாங்குமாங்கு என்று பதில் எழுதி மாளாமல், அடிஷனல் தாள்கள் வாங்கிக் குவிக்கும் மாணவனைப்போல, அபிஷேக்குக்கு எந்த ராகத்தை ஆரம்பித்தாலும் முடிக்கத் தெரிவதில்லை! நாட்டக்குறிஞ்சி மட்டுமல்ல; அகாடமியில் தோடியைக்கூட நேரம் காலம் தெரியாமல் வளர்த்திக்கொண்டு போனாராம் இவர். அபிஷேக் தம்பி... கச்சேரி மேடையில் நேர நிர்வாகம் ரொம்ப முக்கியம்! இது தெரியாவிட்டால், வாங்கிய நல்ல பெயரெல்லாம் ரிப்பேர் ஆகிவிடும். கபர்தார்!

ர்ணம், ஆலாபனை, கீர்த்தனை, நிரவல், ஸ்வரம், துக்கடா, தில்லானா, மங்களம் என்று கேட்டுக் கேட்டு அலுத்துப்போன காதுகளுக்கு, பார்த்தசாரதி சுவாமி சபாவில் ஓ.எஸ்.அருண் பாடிய பஜன்ஸ் ஆறுதலான மாறுதல்.

கையில் மல்லிகைப் பூவைச் சுற்றிக்கொண்டு, பான்பராக்கை மென்றுகொண்டே திவானில் கால் நீட்டி உட்கார்ந்து கேட்டு மகிழ வேண்டிய மணம் கமழ்ந்த, மனம் கவர்ந்த கச்சேரி அது!

'விட்டல... விட்டல...’ அபங்கம், ஜெயதேவர் அஷ்டபதி, சங்கீர்ண சாபு நடையில் தாளத்தில் பத்ராசல ராமதாசர் பாடல்... வயலின் - மிருதங்கம் - இரண்டு தபேலா -ஹார்மோனி யம் சகிதம் அருண் பாடிக்கொண்டே போக, அரங்கில் இருந்தவர்களும் கை உயர்த்தித் தாளம் போட்டு, உடன் பாடிப் பரவசப்பட்டபோது, ஒரு சில இந்தி சினிமாக்களில், கணேஷ் சதுர்த்தியைப் பின்புலமாகக்கொண்டு ஹை பிட்ச்சில் பாடும் பாடல்கள் நினைவுக்கு வந்தன! ரேவதி ராகத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றியுள்ள 'போ... சம்போ...’வை அருண் பாடியது உருக்கமான மசாலா!

காமராஜர் அரங்கில் நடந்து முடிந்த 'சென்னையில் திருவையாறு’ வைபவத்தில் மகாநதி ஷோபனா பாட்டு.

அமெரிக்காவில் தங்கி, குறிப்பிட்ட சமயத்தில் வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வந்து குவிவது மாதிரி, டிசம்பரில் சென்னைக்கு வந்து, நான்கைந்து கச்சேரிகள் செய்து திரும்பும் பாடகர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள் - மகாநதி ஷோபனா மாதிரி!

தோடியை எடுத்துக்கொண்டால், அது மகாநதி மாதிரி பொங்கிப் புறப்பட்டு, பிரவாகிக்க வேண்டாமோ? 'ஏதோ நானும் பாடுகிறேன்’ என்று வாடி வதங்கிய தோடியைக் கொடுத்தால், வேறு இடம் தேடி ஓட வேண்டியதுதான்!

சரிகமபதநி டைரி 2010

பாடகர் பாடிக்கொண்டு இருக்கும்போது, அந்தப் பாட்டு முடியும்வரைகூடக் காத்திருக்கப் பொறுமை இன்றி பாதியில் எழுந்து வெளியே செல்வது ரொம்பத் தப்பு! அதுவும், முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் வி.ஐ.பி-க்கள் அப்படிச் செய்வது பாடகருக்கு இழைக்கும் அநீதி.

மியூஸிக் அகாடமியில் விஜயலட்சுமி சுப்ரமணியம் பூர்வி கல்யாணியைப் பாடிக்கொண்டு இருந்தபோதே, முன் வரிசையில் உட்கார்ந்திருந்த நோபல் வெற்றி யாளர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுந்து வெளியே சென்றதும், அவரை வழியனுப்ப அகாடமி யின் தலைவர் என்.முரளியும் பின்னாலேயே விரைந்து சென்றதும் 'நோபல்’ செயலாகத் தெரியவில்லை!

- டைரி புரளும்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு