Published:Updated:

மேரி கோல்வின்!

சமஸ்

மேரி கோல்வின்!

சமஸ்

Published:Updated:
##~##

'படுகொலை அச்சத்தில் வாழ்தல்!’ - சிரியாவின் ஹோம்ஸ் நகரில், பாபா அமர் பகுதியில் ஷெல் குண்டுகளுக்குப் பலியாகும் முன்னர் மேரி கோல்வின் 'சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு அனுப்பி இருந்த கடைசி செய்திக் கட்டுரையின் தலைப்பு இது!

 அமெரிக்காவில் பிறந்து, பின்னர் லண்டன்வாசியான மேரி கோல்வின், உலகின் எந்தப் பகுதியில் எல்லாம் வெளிச்சத்துக்கு வராத போர்க் கொடூரங்கள் அரங்கேறுகின்றனவோ... அங்கு எல்லாம் துணிச்சலாகச் சென்று செய்தி திரட்டியவர். 'சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த மேரி கோல்வின்... கொசோவா, செசன்யா, ஈழம் என உலகின் ரத்த நிலங்களைத் தேடிச் சென்று களப் பணியாற்றுகிற போராளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேரி கோல்வின்!

போர்ச் செய்திகளை உலகம் எப்போதுமே எண்ணிக்கைகளாலேயே அளக்கும். ஊடகங்களும் அப்படித்தான். மேரி கோல்வின் வலிகளால் அளந்தவர். அவருடைய கடைசிக் கட்டுரையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ராக்கெட் தாக்குதலால் வீட்டையும் கணவனை யும் இழந்து ஒரு சின்ன கொட்டகைக்குள் இரண்டு சின்ன குழந்தைகளுடன் பதுங்கி இருக்கும் நூர்; ரொட்டி வாங்கி வருவதற்குள் மனைவி, வளர்ப்பு மகன், இரு சகோதரிகளைக் குண்டுகளுக்குப் பறிகொடுத்து நிற்கும் அபு; வெளியே சென்ற கணவன் திரும்பாத சூழலில், தாய்ப்பாலும் வற்றிவிட்ட நிலையில் பிறந்த குழந்தைக்குக் கைவசம் உள்ள சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துப் புகட்டும் ஃபாத்திமா... சிரியர்களின் துயரமும் உலகின் புறக்கணிப்பும் ஒருசேர முகத்தில் அறைகின்றன.

சிரியாவில் 42 ஆண்டு கால பஷர் அல் அசாத் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, கடந்த 11 மாதங்களாக சிரிய மக்கள் போராடிவருகிறார்கள். உள்ளூர் ஊடகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலை யில், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்திருக்கிறது பஷர் அல் அசாத் அரசு. மேரி கோல்வின் கடத்தல்காரர்கள் பயணிக்கும் வழிகளில் பயணித்து சிரியா சென்றார். இரவில்தான் பயணிக்க வேண்டி இருக்கும். இருபுறமும் தாக்குதல்கள் நடக்கும். விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் காரை ஓட்டிச் செல்ல வேண்டும். மேரி கோல்வின் எல்லாவற்றுக்கும் பழகியிருந்தார்.

மேரி கோல்வின்!

2001-ல் ஈழத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் தன்னுடைய ஒரு கண்ணை இழந்தார் மேரி கோல்வின். ''எல்லோரும் இனி அவள் அவ்வளவுதான் என்று சொன்னார்கள். ஆனால், மேரி அதற்குப் பிறகுதான் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினாள்!'' என்கிறார் அவருடைய சகா ஒருவர்.

மேரி கோல்வினின் மரணத்தால் தமிழர்களுக்கு கூடுதல் இழப்புகள் ஏதேனும் உண்டா? உண்டு. ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், குறிப்பாக மே 13 முதல் 17 வரை யிலான ஐந்து நாட்களில் விடுதலைப் புலி களுடன் சர்வதேசம் நடத்திய ரகசிய பேரத் துக்கும் இழைத்த துரோகத்துக்கும் முக்கிய மான மௌன சாட்சி மேரி கோல்வின். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசனும் அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவனும் புலிகள் சரணடைவது தொடர்பாகப் பேச்சுகளை முன்னெடுத்தது மேரி கோல்வின் மூலம்தான். ''வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தால் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள்'' என்ற ஐ.நா. சபையின் உத்தரவாதம் விஜய் நம்பியார் வாயிலாகப் புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதும் மேரி கோல்வின் மூலம்தான். ஈழப் போரின் கடைசி நாட்களில் என்ன நடந்தது என்ற மர்மம் தெரிந்த எல்லோருமே அன்றைக்கு ராஜ தந்திரத் துறையில் இருந்தவர்கள். ஒருபோதும் உண்மையை வெளியேவிடும் வாய்ப்பு இல்லா தவர்கள். விதிவிலக்காக மேரி கோல்வின் இருந்தார். இப்போது அவருடைய மரணம் ஈழ மர்மத்தை மேலும் இருட்டாக்கி இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism