''கேலிச் சித்திரங்கள் வழியேதான் விகடன் எனக்கு அறிமுகம். ஆக்கிரமித்துக்கொள்ள சின்னத் திரை வந்திராத அந்தக் காலகட்டத்தில், மந்திரவாதிகள், சூனியக் கிழவிகள் சேர்ந்து சிறுவர்களைக் கனவிலும் பயமுறுத்திக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இதமான தென்றலாய் வாய்ப்பது கேலிச் சித்திரங்கள்தான்.

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என் பால்ய காலத் திரைப்பட ரசனையை உருவாக்கியதில் விகடனின் பங்கு அதிகம். பள்ளியில் என் நண்பர்கள் எல்லாம் அப்போதைய சூப்பர் ஹிட் படங்களைப் பற்றிப் பேசும்போது, நான் மட்டும் அந்நியமாகி விலகிப்போவேன். காரணம், அந்த வார விகடனில் அந்தப் படத்துக்கு விமர்சனம் சற்றுக் கடுமையாகவும் மதிப்பெண் சராசரிக்குக் குறைவாகவும் கிடைத்து இருக்கும். விகடன் விமர்சனம் பார்த்து சினிமாவுக்குச் செல்லும் தமிழ்ச் சமூகத்தின் முன்னோடியாக... என் தாய், தந்தையின் மூடநம்பிக்கையை(!) எதிர்த்துப் போராட சின்ன வயதில் பெரிய திட்டங்களை எல்லாம் தீட்டி இருக்கிறேன். '16 வயதினிலே’ திரைப்படத்துக்கு 62 1/2 மதிப்பெண்கள் கொடுத்ததாக நினைவு. அந்த அரை மதிப்பெண் கொடுக்க விமர்சனக் குழுவினர் எவ்வளவு நேரம் விவாதித்தார் களோ என்று யோசிக்கையில், பள்ளியின் தமிழாசிரியர் நினைவுக்கு வருவார். இப்போது 'தமிழாசிரியர்’ சற்று மனம் இரங்கி மதிப்பெண்களைக் கொஞ்சம் அள்ளிக் கொடுக்கிறார் என்ற விமர்சனம் இருந்தாலும், இன்றும் நான் பார்க்கும் தமிழ்ப் படங்களை அநேகமாக விகடன்தான் தீர்மானிக்கின்றது.
இதில் சமீபத்திய ஆச்சர்யம்... 'தி ஆர்ட்டிஸ்ட்’. இந்தப் படம் எப்படி இருக்கும், அது எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும் என யோசித்துக்கொண்டு இருந்த தருணத்தில்தான் படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது அந்த வார விகடனில். ஆம், விகடன் எப்போதும் என்னோடு தொடர்ந்து பயணிப்பதை உணர முடிகிறது.
விகடனின் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்துவருபவன் நான். பத்திரிகைச் சுதந்திரம் காத்திட சிறை சென்று மீண்ட ஆசிரியரின் புகைப்படத்தோடு வெளிவந்த விகடன் இதழ், கொரில்லாக்களை அட்டைப் படமாகப் போட்டு, கொஞ்சம் பெரிய சைஸில் விகடனின் இலவச இணைப்பாக முதலில் வெளி வந்து பின் தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஜூ.வி. என விகடனின் ஒவ்வொரு முயற்சியும் பளிச் பாய்ச்சலாகத்தான் இருந்துவருகிறது!
'ஜூனியர் போஸ்ட்டை நாளிதழாகக் கொண்டுவரலாமா?’ என்று கேட்டு, அதை வாசகர்கள் நிராகரிக்க... அதையும் ஜனநாயகரீதியில் ஏற்றுக்கொண்ட விகடன் குழுமத்தின் பாங்கு... சுதாங்கனின் 'அந்தக் கனல் வீசும் நேரம்’ தொடர்கதை மூலம் விகடன் இளமைத் துள்ளலோடு நடை பயில முயற்சித்ததை முதலில் கவலையோடு கவனித்த தமிழ்ச் சமூகம் என, விகடனின் இதழியல் பயணத்தின் முக்கியமான தருணங்களைக் கவனத்துடன் தொடர்ந்து குறித்துவைத்துக்கொண்டே வருகிறேன்.
என் தலைமுறை வாசகர்களுக்குத் துப்பறியும் தொடர்கதைகள் வழியே பரிச்சயமாகி, பச்சக்கென வசீகரித்துக்கொண்ட எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் விகடனில் எப்போதும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாகவே வெளிவரும். அவருடைய 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ வழியே சிற்றிலக்கிய இதழ்கள் அறிமுகம். அந்தக் காலகட்டத்தில் ஜூ.வி-யில் ஓவியர் ஆதிமூலத்தின் கோட்டோவியங்களுடன் வெளிவந்த கி.ரா-வின் 'கரிசல் காட்டுக் கடுதாசி’ மிகப் பிரபலம். இப்படி விகடன் குழும இதழ்கள் அனைத்திலும் இலக்கியப் பகுதிகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பது என் விருப்பம்!
1990-ல் நான் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதுதான் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து ஜூ.வி. கையெழுத்து இயக்கம் நடத்தியதாக நினைவு. சில ஆண்டுகள் கழித்து விகடனில் மாணவ நிருபராகச் சேரலாம் என்று மனு போட்டால், கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தால் மாணவ நிருபராக முடியாது என்ற நிபந்தனை அணை போட்டது. அந்த நிறைவேறாத முதல் காதலும் இன்றளவும் விகடனுடனான என்னுடைய இறுக்கமான உறவுக்கு ஒரு காரணம்!
என் அலுவல் பயணத்தைப் பயனுள்ளதாக மாற்றி அமைத்த தில் இதழியல் நண்பர்களுக்கு... குறிப்பாக விகடனுக்குப் பங்கு அதிகம். இப்போது திரும்பிப் பார்த்தால் எப்படி நிகழ்த்தினோம் என்று எனக்கே மலைப்பாக இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல், பிராணிகள் நல வாரிய எதிர்ப்பு களுக்கு இடையே அமைதியான முறையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தற்போ தைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரை அனைத்திலும் பத்திரிகைகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு உண்டு.
மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும்போது, அவசியம் நிறைவேற்ற வேண்டியது என நான் முன்னரே குறித்துவைத்துக்கொண்டவை இரண்டு. ஒன்று, புத்தகத் திருவிழா. அடுத்து, கல்விக் கடன் முகாம்கள். மதுரையில் நடத்திய புத்தகத் திருவிழா இன்று பல மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறத் தொடங்கி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நாங்கள் நடத்திய கல்விக் கடன் முகாம்கள் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 8,000 மாணவர்களுக்கு 110 கோடி ரூபாய் கல்விக் கடன் கொடுத்த செய்தியை ஜூ.வி-தான் முதலில் வெளியிட்டது. தனி மனித சாதனைகளைத் தாண்டி, தமிழ்ச் சூழலில் இவற்றின் நீண்ட காலத் தாக்கம் முக்கியமானது என்றே தோன்றுகிறது. வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் மாவட்ட ஆட்சியர்களின் வரையறுக்கப்படாத கடமைகளில் ஒன்றாக சமீப காலத் தில் புத்தகத் திருவிழா நடத்துவதும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கு தலும் உருவாகியது குறிப்பிடத்தக்கது.
இயற்கை வேளாண்மையில் எப்போ தெல்லாம் புதிய முயற்சிகளைத் தொடங்கினோமோ அப்போதெல்லாம் 'பசுமை விகடன்’ உதவிக்கு வந்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 'ஒற்றை நாற்று நெல் நடவுமுறை’ குறித்து வேளாண் துறை அதிகாரிகளுக்கு முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க நடத்திய முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு 2007-ம் ஆண்டுக்கான 'டாப்-10’ மனிதர்களுள் ஒருவராக என்னை விகடன் தேர்வுசெய்தது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி. தொடர்ந்து நான் எப்படிச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தும் நினைவூட்டலாகவும் அதை நான் உணர்கிறேன்!
கடந்த 35 ஆண்டு காலப் பிணைப்பில் நான் விகடனை மிக நெருக்கமான தோழமையோடு உணர்ந்தது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத் தமிழரின் தாயகக் கனவுகள் தற்காலிகமாகச் சிதைந்துபோன தருணத்தில், அவர்தம் வலியை, சோகத்தைத் தொடர்ந்து பதிவுசெய்துவந்த போதுதான்.
எதிர்காலத்தில் ஈழத் தமிழர் முகங்களில் வெற்றிச் சிரிப்பு படரும்போது, அவர்தம் இதழோரம் கசியும் புன்னகைக் கீற்று மட்டும் விகடன் திசை நோக்கி நன்றியோடு நகரும் என உறுதியாக நம்புகிறேன்.
தற்போது விகடன் இதழில் நான் விரும்பித் தேடுவது 'சொல்வனம்’ பகுதி! புதுக் கவிதைகளின் தரத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்திச் சென்றதில் இந்த வனத்தின் பங்கு அதிகம்.
அண்டன் பிரகாஷ் எழுதும் கணினித் தொழில்நுட்பத் தொடரின் புதிய கலைச் சொற்கள் தமிழ் மொழியின் வீரியத்தைச் சுட்டுகின்றன. விகடனின் பக்கங்களைப் புரட்டும்போது மனம் இன்னொரு சேனலில், இளையராஜாவின் ஓவியங் களைத் தேடிக்கொண்டு இருக்கும்.
விகடன் குழும இதழ்கள் எனக்குப் பல வகைகளில் உதவி இருக்கின்றன. என் செல்ல மகள் ஓவியாவின் நுனி நாக்கு ஆங்கிலத்தை மாற்றத் தொடர்ந்து முயற்சிக் கும் 'சுட்டி விகடன்’, உணவருந்தும்போது ஆவலோடு புரட்டிப் பார்க்கும் 'அவள் விகடன்’ சமையல் குறிப்புகள்... ஆம். விகடன் என்னோடு தொடர்ந்து பயணிக்கிறது!''
படம்: சொ.பாலசுப்ரமணியன்