Published:Updated:

"கடல் மாதா திருப்பித் தருவா!"

என்.சுவாமிநாதன்படம் : ரா.ராம்குமார்

"கடல் மாதா திருப்பித் தருவா!"

என்.சுவாமிநாதன்படம் : ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

டந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப் பேரலை ஏற்படுத்திய அழிவை, அதிர்வை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் இருநூறுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தன அப்போது. அந்தக் கிராமத்தில் சுனாமிக்குத் தன் நான்கு குழந்தைகளையும் பறிகொடுத்த ஆக்னஸ் இப்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாக மறுஅவதாரம் எடுத்துள்ளார். இதில் நெகிழ்ச்சியாக இறந்த குழந்தைகளின் பெயர்களையே இப்போது உள்ள குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்.

 ஆக்னஸைச் சந்தித்தேன். ''என் வீட்டுக்காரர் ராஜ் மீன் பிடித் தொழில் செய்றார். சுனாமிக்கு முன்னாடி எங்க வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. எங்களுக்கு அருண் பிரமோத், பிரதீமா, பிரதீஷா, ரஞ்சிதானு நாலு குழந்தைங்க. சுனாமிக்கு முந்தைய நாள்தான் என் வீட்டுக்காரர் சொந்தமா ஒரு கட்டு மரம்

"கடல் மாதா திருப்பித் தருவா!"

வாங்குனாரு. குடும்பத்தோட கட்டுமரத்துல ஏறி கடலைச் சுத்திப் பார்த்தோம். சுனாமி வந்த அன்னைக்கு என் வீட்டுக்காரர் பக்கத்து ஊருக்குப் போயிருந்தார். வெளியில ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் ஊருக்குள்ள ஏதோ சண்டை நடக்குதுனு நினைச்சு குடிசையை விட்டு வெளியே வரலை.

கொஞ்ச நேரத்துல வேகமா வந்த அலையில் குடிசை இடிஞ்சு விழுந்திருச்சு. நாலு குழந்தை களையும் இறுக்கமா பிடிச்சு உட்கார்ந்திருந்தேன். தண்ணி திரும்ப கடலுக்குள் போகும்போது, என் சக்தியை மீறி குழந்தைகளை அலை இழுத்துட்டுப் போயிருச்சு. குழந்தைகளை எப்படியாவது காப்பாத்தணும்னு வெறி பிடிச்ச மாதிரி கடலைப் பார்த்து ஓடினேன். அடுத்து வந்த பெரிய அலை அப்படியே என்னைத் தூக்கி காயல், ரோடு, வயலைத் தாண்டி ஒரு பனை மரத்துல தூக்கி எறிஞ்சிருச்சு. அலை போன பின்னாடி கீழே விழுந்து மயங்கிட்டேன். தற்செயலா அந்தப் பக்கமா வந்த என் வீட்டுக் காரர் என்னைக் காப்பாத்தினார். ஒட்டுத் துணி கூட என் உடம்புல இல்லை. அவரோட மேல் சட்டையை வாங்கிப் போட்டுட்டு குழந்தை களைத் தேடி கடற்கரை முழுக்க அலைஞ்சோம். பிரதீஷாவும், ரஞ்சிதாவும் கடற்கரையில் இறந்து கிடந்தாங்க. பிரமோத்தும், பிரதீமாவும் கடைசி வரைக்கும் கிடைக்கலை.

இதையே நினைச்சு நானும் என் வீட்டுக் காரரும் இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டோம். நான் ரெண்டு மூணு தடவை தற்கொலை பண்ணிக்கிறதுக்கு முயற்சி பண்ணினேன். அப்போதான் என் கணவர் என்னை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போனார். ஏற்கெனவே பண்ணி இருந்த குடும்ப நல அறுவை சிகிச்சையை ரத்து செஞ்சு, நீங்க மறுபடியும் குழந்தை பெத்துக் கலாம்னு அரசாங்கத்தில் இருந்து கவுன்சிலிங் கொடுத்தாங்க. ஆனால், நான் பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் ஆபரேஷன் செஞ்சேன். இதோ இப்ப மூணு குழந்தைங்க இருக்காங்க. அதிலும் முதல் இரண்டு சுகப் பிரசவம்தான். எனக்கு இறந்துபோன நாலு மொட்டுகளையும் திரும்பி இந்த மண்ணுக்குக் கொண்டுவரணும்னு ஆசை. ஆனால், மூன்றாவது பிரசவம் ஆனதும் 'ஏற்கெனவே ஏழு பிள்ளை பெத்த உடம்பு. இன்னொரு குழந்தை பெத்துக்கிட்டா, உடல் ஆரோக்கியம் போயிரும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதனால திரும்ப குடும்ப நல அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன். இறந்துபோன பிரதீஷா, பிரதீமா, அருண் பிரமோத் நினைவாக இந்தக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரதீஷா, ஆரோக்கிய பிரதீமா, ஆரோக்கிய பிரமோத்னு பேரு வெச்சுட்டோம். ரஞ்சிதாவோட பெயரை வைக்குற துக்குத்தான் குழந்தை இல்லை. என் குழந்தையை எடுத்துட்டுப் போன கடல் மாதாவே அவளைத் திருப்பி தருவானு காத்திருக்கிறேன்!'' - கலங்கிய குரலில் பேசி முடிக்கிறார்.