Published:Updated:

சென்னைக்கு மரியாதை!

மானா பாஸ்கரன்படம் : ச.இரா.ஸ்ரீதர்

பிரீமியம் ஸ்டோரி

சென்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது அந்த ஓவியக் கண்காட்சி. கடந்த வாரம் சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற அந்த ஓவியக் கண்காட்சியை அலங்கரித்திருந்த ஓவியங்கள் அத்தனையும் பிரபல ஓவியரான அரஸின் கைவண்ணம்!

 சென்னையின் பன்முக தரிசனமாக... படைப்புக் கலையின் புதிய பரிமாணமாக அமைந்திருந்த அந்த ஓவியக் கண்காட்சியின் வரைபொருள் சென்னை நகரம்தான்! சென்னை மாநகரின் 373-வது வயதைக் கொண்டாடும் விதமாக இந்த ஓவியக் கண்காட்சியை மூன்று நாட்கள் நடத்தினார் ஓவியர் அரஸ். ஓவியங்கள் அத்தனையும் ஒரு பெருநகரத்துக்கு உண்டான அடையாளங்களைத் தத்ரூபமாகப் பிரதிபலித்தன. அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், மாம்பலம் பேருந்து நிலையம், காபி ஷாப், கடற்கரையோரத்துக் குப்பம் போன்ற சென்னையை அடையாளப் படுத்தும் இடங்களை கார்ட்டூன்களாகப் பார்த்தது புது அனுபவமாக இருந்தது.

சென்னைக்கு மரியாதை!

கார்ட்டூன், கேரிகேச்சர் இணைந்த ஓவியத்தில் சென்னை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்துக்கு அருகில் மீன் விற்கும் எளிய மனிதர்களையும், டிசம்பர் மாதத்து சங்கீத சீஸனில் சபாக்களில் இசையை ரசிக்கும் அசாதாரண முகங்களின் பாவனைகளையும், சென்னை யின் அகன்ற சாலை ஒன்றில் அன்றாடம் அரங்கேறும் போக்குவரத்து நெரிசலையும் அவர் வரைந்திருந்தது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து.

பெருமிதம் பொங்க கண்காட்சி அரங்கினுள் வளையவந்த அரஸிடம் பேசினேன். ''அருப்புக் கோட்டை பக்கத்தில் இலுப்பைக்குளம் என்ற கிராமத்தில் இருந்து இந்தப் பெருநகர சென்னைக்கு நான் வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கிராமத்தானுக்கு சென்னைதான் அடையாளத் தைக் கொடுத்தது. சென்னையின் ஒவ்வோர் அடையாளத்தையும் அனுபவித்து ரசித்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை எனக்குத் தெரிந்த ஒரு கலையின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன். அதற்கான வாய்ப்பு இப்போது கனிந்திருக்கிறது. இந்தக் கண்காட்சியை நிகழ்த்த என்னோடு துணை நின்ற ஓவியர் இளங்கோவன்.ஏ.வி-யும், கலை விமர்சகர் இந்திரனும் என் நன்றிக்கு உரியவர்கள். அடுத்த வருடம் இன்னும் கூடுதல் ஓவியங்களோடு சென்னையின் வரலாற்றைப் பேசப் போகிறேன்'' என்றார் பெருமிதத்தோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு