Published:Updated:

"உங்க பேச்சு என் மனசை மாத்திருச்சு!"

செ.திலீபன்படம் : உ.பாண்டி

"உங்க பேச்சு என் மனசை மாத்திருச்சு!"

செ.திலீபன்படம் : உ.பாண்டி

Published:Updated:
##~##

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மைக் மூர்த்தி என்றால் அத்தனை பிரபலம். எங்கே திருவிழா நடந்தாலும் அங்கே லவுட் ஸ்பீக்கரோடு ஆஜராகிவிடுவார் மூர்த்தி. காணாமல் போனவர்கள் அறிவிப்பு, போலீஸ் எச்சரிக்கைகள், போக்குவரத்து விதிமுறைகள் என மக்கள் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலும் கூட்டத்துக்கு உதவுவதிலும் 48 ஆண்டுகளாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறார் மூர்த்தி.

 ''சின்ன வயசுல குரல் ரொம்ப நல்லா இருக்கும். 1964-ம் வருஷம் சிவகங்கை இன்ஸ்பெக்டரா இருந்த சொர்ண மூர்த்தி என்னை போலீஸ் ஜீப்ல ஏத்திப் பேசவெச்சார். இன்னைக்கு வரைக்கும் விடாமப் பேசிட்டே இருக்கேன். தென் மாவட்டம் முழுக்க எங்கே திருவிழா நடந்தாலும் போலீஸ்காரங்க போன் பண்ணி வரச் சொல்லிடுவாங்க. இதுவரைக்கும் நூத்துக்கணக்கான புள்ளைங்களைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திருக்கேன்.  கணக்குப் பார்த்தா, 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திருப்பேன். நிறைய அனுபவம் தம்பி. கொஞ்ச வருஷம் முன்னாடி, சிவகங்கையில நடந்த அம்மன் கோயில் திருவிழாவில் விழுப்புரத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசிங்கிற அம்மா தன்னோட நகையைத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"உங்க பேச்சு என் மனசை மாத்திருச்சு!"

தொலைச்சிட்டாங்க. 'அய்யோ! என் புருஷன் துபாய்ல காடு, மலைஎல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கிப்போட்ட நகையாச்சே. அவர் மூஞ்சில எப்படி நான் முழிப்பேன்?’னு தரையில உக்காந்து நெஞ்சுல அடிச்சுட்டு அழுதாங்க. மூணு மணி நேரமா அவங்களோட குடும்பக் கஷ்டத்தைச் சொல்லி அறிவிப்பு செஞ்சேன். மதுரையைச் சேர்ந்த காசிங்கிறவர் நகையைக் கொண்டுவந்து கொடுத்தார். ''இந்த நகை கீழே கிடந்துச்சு. எனக்கு நிறையக் குடும்பக் கஷ்டம். இதைவெச்சு என் கஷ்டத் தைத் தீர்த்திருக்கலாம். உங்க பேச்சு என் மனசை மாத்திருச்சு. இந்தாங்க நகை''னு கண் கலங்கச் சொன்னார். நல்ல பேச்சு... நல்ல விஷயத்தைக் கொண்டுவரும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

10 வருஷத்துக்கு முன்னாடி, சிவகங்கை மாவட்டம் சாயமங்களம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வில் அறிவிப்பு செஞ்சுட்டு இருந் தேன். பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராசுங்கிறவர் தன் மனைவியோட ஓடி வந்தார். ''என் மக பேரு அனுஷ்யா... கோயில் குளத்தங்கரையில அவளை நிக்கவெச்சுட்டுக் குளிக்கப் போனேன். ஆளைக் காணலை. அறிவிப்பு செஞ்சு கண்டுபிடிச்சுக் கொடுங்க''னு அழுதார். காலை 11 மணியில் இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் விடாம அறிவிப்பு செஞ்சேன். பொழுது வேற சாய்ஞ்சுகிட்டே போகுது. அனுஷ்யா வந்தபாடு இல்லை. அப்போதான் ஒருத்தர், ''குளத்துல ஒரு குட்டிப் பொண்ணு மிதக்குது''னு சொன்னார். ஓடிப் போய்ப் பார்த்தா, அனுஷ்யா.

"உங்க பேச்சு என் மனசை மாத்திருச்சு!"

காலையில இருந்து அனுஷ்யா பேரை மைக்ல சொல்லிட்டே இருந்ததால, கிட்டத்தட்ட திருவிழாவுக்கு வந்த எல்லோருக்கும் அனுஷ்யா பெயர் மனசுல பதிஞ்சிருச்சு. குழந்தை வேற அவ்வளவு அழகு. அவங்க அப்பா - அம்மாவோட திருவிழாவுக்கு வந்த அத்தனை பேரும் சேர்ந்து அழுதாங்க. திருவிழாவே சோகமா முடிஞ்சது.

இன்னைக்கு வரைக்கும் பல பேர் என்னைப் பார்த்துட்டு, 'அய்யா எங்களை ஞாபகம் இருக்கா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஆறு வயசுப் பையனைத் திருவிழாவில் கண்டுபிடிச்சுக் கொடுத்தீங்களே’னு கையைப் பிடிச்சு அன்பா பேசுவாங்க. அந்த நிமிஷத்துல தொண்டை கிழியக் கத்துற அலுப்பு மறந்துபோகும். சில பேர் திருவிழாவில் பணத்தைப் பறிகொடுத்து ஊருக்குப் போக வழி இல்லாம நிப்பாங்க. மைக்ல அறிவிப்பு செஞ்சு பணம் வசூல் பண்ணிக் கொடுப்பேன். கையெடுத்துக் கும்பிட்டு ஊருக்குக் கிளம்புவாங்க. நிறைய நண்பர்களைக் கொடுத்த இந்தத் தொழில்  எனக்குப் பாதிப்பையும் கொடுத்திருக்கு. பரமக்குடி கலவரம் அன்னைக்கு நான் அங்கே காவல் துறை சார்பாக பாதுகாப்பு, எச்சரிக்கை அறிவிப்பு பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு போலீஸும் பொதுமக்களும் அடிச்சுக்கிட்டாங்க. அதுல சில பேர் நான் போலீஸ்னு நினைச்சு, ஒரு பெரிய உருட்டுக்கட்டையால என் காதுல அடிச்சுட்டாங்க. மயக்கம் போட்டு விழுந்துட்டேன். யாரோ புண்ணியவான் என்னைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்த்துக் காப்பாத்தியிருக்கார். இன்னைக்கு வரைக்கும் ஒரு பக்கக் காது கேட்கலை. அதைப் பத்தி நான் கவலையும் படலை. நம்ம வேலை நாலு பேருக்கு நல்லது சொல்றது... நல்லது செய்றது...  அதைச் செஞ்சுட்டே இருப்போமே?''- சொல்லிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக்கொண்டே மைக்கில் பேச ஆரம்பிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism