Published:Updated:

ஒன்றரை அடி உயர வித்வான்!

வி.கே.ரமேஷ்படங்கள் : எம். விஜயகுமார்

ஒன்றரை அடி உயர வித்வான்!

வி.கே.ரமேஷ்படங்கள் : எம். விஜயகுமார்

Published:Updated:
##~##

மிருதங்கத்தை நிற்கவைத்தால் அதன் உயரம்கூட வர மாட்டார்போல. ஆனால், தன்னைவிடப் பிரமாண்டமாக இருக்கும் மிருதங்கத்தை மடியில் தூக்கிவைத்து, குட்டிக் கைகளால் பெரியசாமி வாசித்தால், நமது உடலும் மனமும் அதிர்கிறது.

 ஆத்தூர் தம்மம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமியின் உயரம் வெறும் ஒன்றே முக்கால் அடி மட்டுமே. வீட்டின் மூத்த மகன். தன் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து, தனக்கு இருக்கும் இசை ஆர்வத்தால் இசையை முறையாகக் கற்றுக் கொண்டு, கச்சேரிகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.  

பெரியசாமியைச் சந்தித்துப் பேசினேன். ''என் சொந்த ஊர் ஆத்தூர், தம்மம்பட்டி அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராமம். நான்தான் வீட்டுக்கு மூத்த மகன். ஒரு தங்கச்சி இருக்கிறா. அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய்தான் எங்க ரெண்டு பேரையும் படிக்கவெச்சாங்க. எனக்கு இப்ப 16 வயசு ஆகுது. நான் சின்ன வயசுல நல்லா அழகா இருந்தேன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. வயசு கூடக் கூட ஆள் வளருவான்னு பார்த்தாங்களாம். என் கூட்டாளிங்க எல்லாம் நல்லா திமுதிமுனு வளர்ந்தாங்க. நான் மட்டும் வளரவே இல்லை. மொத்தமே ஒண்ணே முக்கால் அடி தான் நம்ம வளர்ச்சி.  

ஒன்றரை அடி உயர வித்வான்!

நாலஞ்சு வருஷம் முன்னாடி அப்பா என்னை அழைச்சுக்கிட்டு டாக்டர்கிட்ட போனார். என்னைப் பரிசோதித்த டாக்டர், ''தம்பி, இதுக்கு மேல வளர வாய்ப்பு இல்லை. ஆனா, நிறையப் புத்திக்கூர்மை இருக்கு. அவனுக்குப் பிடிச்ச துறையில சேர்த்துவிடுங்க. உயரமா வளரலைன்னாலும் பெரிய ஆளா வருவான்''னு சொன்னார். உயரம் குறைவா இருக்கிறதுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்லை. அப்பாவும் அம்மாவும்தான் வருத்தப்படுவாங்க. நான் போன வருஷம்தான் 10-வது முடிச்சேன்.  

எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சாயந்திரம் வீட்டுக்கு வந்துட்டா என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் ஆடுவேன். ஆனா, என்னைவிட பேட் உயரம்கிறதால சொந்தமா ஒரு சின்ன பேட் செஞ்சுக்கிட்டேன். பால் எல்லோருக்கும் ஒண்ணுதான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எங்க பக்கத்து வீட்டுத் தாத்தா பறை அடிக்கக் கத்துக் கொடுத்தார். அதிலிருந்து எனக்குப் பறை மேல் எனக்கு ஆர்வம் அதிகமாகிருச்சு. வீட்டில் இருக்கும் தட்டை வெச்சு பறை அடிச்சுட்டு இருப்பேன். அப்பா, அம்மாகிட்ட ''எனக்கு மியூஸிக் கத்துக்க ஆசையா இருக்கு. பறை, மிருதங்கம், தபேலானு எல்லாமே வாசிக்கணும்''னு சொன்னேன். உடனே, அப்பாவும் அம்மாவும் என்னை சேலம் கலெக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க.  அவரும் ''எங்கே பறை அடிச்சுக் காட்டு''னு சொன்னார். உடனே,  அடிச்சிக் காட்டினேன். அவர் உடனே என்னைப் பாராட்டி, சேலம் அரசு இசைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையும் கொடுக்கச் சொல்றேன்னு சொன்னார்.  

ஒன்றரை அடி உயர வித்வான்!

இப்ப மிருதங்கம் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கும் வயசு ஆகுது. பொறுப்புகள் அதிகமாகிட்டு இருக்கு. என் தங்கச்சி இப்ப 10-வது படிக்கிறா. அவ நல்லாப் படிப்பா. அவளை நிறையப் படிக்கவைக்கணும். அப்பா, அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கணும். அதுக்கு நான் சம்பாதிச்சாதான் முடியும். அதனாலதான் இந்த மிருதங்கம், தபேலா கத்துக்கிட்டு இருக்கேன். அப்பப்ப கச்சேரிகளில் கலந்துகிட்டு வாசிச்சு நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். கூடிய சீக்கிரத்தில் மிருதங்க வித்வானாகக் கச்சேரியில் என்னைப் பார்க்கலாம்!'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரராமன், ''பெரியசாமி எங்க பள்ளிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் ஐந்து தாளங்களுக்கு மேல் கற்றுக்கொண்டான். ஆறு மாதத்தில் தாளம், ராகம், சங்கீதம்னு அசத்திருவான். அவன்தான் எங்க பள்ளியின் ஸ்டார் கலைஞன்'' என்றார் மகிழ்ச்சிபொங்க.