Published:Updated:

சக்கிவீரனுக்கு குவார்ட்டர் படையல்!

கே.கே.மகேஷ்படங்கள் : பா.காளிமுத்து

சக்கிவீரனுக்கு குவார்ட்டர் படையல்!

கே.கே.மகேஷ்படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
##~##

திருவிழா என்றாலே மகிழ்ச்சிதான். அதுவும் பொன்னுமுனியசாமி கோயில் திருவிழா என்றால், சுற்று வட்டாரம் முழுக்க (சாராய) வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது மகிழ்ச்சி. மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருக்கிறது எட்டிமங்கலம் கிராமம். இந்த ஊரில் உள்ளது பொன்னுமுனியசாமி, வீரணசாமி, மலையாள வீரன், சக்கிவீரன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் சாமிக் கோயில். இந்தச் சாமிக்குத் திருவிழா நடத்துவதற்கு நாள், நட்சத்திரம் எதுவும் பார்ப்பது இல்லை. திடீரென ஒரு மூடு வந்தால், சாமியையே தள்ளாடவைக்கும் அளவுக்குப் படையல் போட்டு அசத்திவிடுகிறார்கள் ஊர் மக்கள்.

 அப்படியரு மூடு சமீபத்தில் ஊர்இளைஞர் களுக்குக் கிளம்பிவிட்டது. 'எங்கள் ஊர் சக்கி வீரனுக்கு குவார்ட்டர் படையல் போட இருப் பதால், நண்பர்களும் உறவினர்களும் வந்து தீர்த்தம் பருகிச் செல்லும்படி அன்புடன் அழைக் கிறோம்!’ என்று தெரிந்தவர்களுக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ். தட்டிவிட்டார்கள். அதில் ஒன்று நம்மிடம் வந்து சேர... நாங்களும் கிளம்பிப் போனோம்.

பொன்னுமுனியசாமி கோயில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்குச் சொந்தமான கோயிலாக இருந்தபோதும், சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்களும் பெரியவர்களும் ஆர்வமாகக் கூடுகிறார்கள். உள்ளூர்ப் பெண்கள் மட்டும் திருவிழா என்றாலே கடுகடுப்பாகப் பார்க்கிறார்கள்.

சக்கிவீரனுக்கு குவார்ட்டர் படையல்!

ஊர்ப் பெரியவர் முருகனிடம் கோயில் வரலாறுபற்றிக் கேட்டோம். ''எங்களுக்கெல்லாம் பூர்வீகம் நாட்டரசன்கோட்டை பக்கம்பா. ஆதிச்செல்வம்ங்கிறவரு 300 வருஷத்துக்கு முன்னாடி, இங்க வந்து குடியேறுனாரு. அவர் வந்த பிறகுதான் இந்த ஊரே உருவாச்சு. அவர் வரும்போது, அங்கிருந்து சாமிப் பெட்டியையும் கொண்டாந்தாரு. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த சாமிக்கும் பெட்டிக்கும் திருவிழா நடத்திக் கும்பிடுறோம்.

சேவல் அறுத்து ரத்தப்புள்ளி காட்டி, சாராயம் வெச்சிக் கும்பிடுவோம். அதுதான் சாமிக்குப் படையல். அறுத்த சாவலைச் சூட்டாங்கல் (தீயில் சுட்டு) போட்டு, கையாலயே பிச்சிச் சாப்பிடணும். சமைச்சிச் சாப்பிடக் கூடாது. சாமி கும்பிட வர்ற எல்லாரும் கண்டிப்பா தண்ணியடிச்சே ஆகணும். அது தீர்த்தத் தண்ணி அவ்வளவுதான். அதனால பச்சப்புள்ளைக வந்தாலும் ஒரு சங்கு ஊத்திடுவோம்'' என்று பரவசத்தோடு வரலாறு சொன்னார்.

சிலைக்கு முன் குவார்ட்டர் பாட்டிலை லேசாகத் திறந்து (படையல்!) சாமி முன் வைக்கிறார். அவர் வெளியே வந்து விபூதி பூசியதும் சிலருக்கு அருள் வருகிறது. இளைஞர் ஒருவர், 'சாமி பல வருஷமா நாங்க உனக்கு சூட்டாங்கல் போட்டு கோழியைப் படைக்கிறோம். இந்த வருஷம் மணக்க மணக்க மசாலா போட்டு, குழம்பும் பொரியலுமா படைக்கலாம்னு ஆசைப்படுறோம். நீ என்ன சொல்ற?' என்று கேட்க, ஒரு மிடறு எச்சில் விழுங்கிய சாமி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, 'அதெல்லாம் கூடாதுப்பா. ஐதீகம் ஐதீகம்தான்' என்றார். உடனே, பெரியவர் ஒருவர் 'முதல்ல ஈரலை மட்டும் சுட்டு சம்பிரதாயப்படி உனக்குப் படைச்சிடுறோம்ப்பா. மிச்சத்த குழம்பு வெச்சிடுவோம்'' என்று ஃபேவரைட் ஆப்ஷன் கொடுக்க 'சாமிக்குச் சம்மதம்ப்பா. ஆனா, மறக்காம ஈரலைச் சுட்டு வெச்சிடுங்க' என்று க்ரீன் சிக்னல் கொடுத்தது சாமி.

உடனே கோயிலில் இருந்து கோழிகள், ஐந்து அட்டைப் பெட்டி குவார்ட்டர்கள் (பெட்டிக்கு 48 வீதம் மொத்தம் 240 பாட்டில்கள்), வாழைப்பழங்கள், தேங்காய் போன்றவற்றோடு ஊர்வலமாக ஊர் எல்லையில் இருக்கும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். ஊர்வல முடிவில் கண்மாய்க்கரையோரம் இருந்த சக்கிவீரனுக்குச் சாராயப் படையல் போட்ட பூசாரி, 10 கோழிகளையும் பலி கொடுத்தார்.

ஒரு பக்கம் குவார்ட்டர்கள் காலியாக, இன்னொரு பக்கம் சிக்கன் பீஸ்கள் பிளேட்டுகளில் வலம் வந்தன. 'வெள்ளிக்கிழமையும் அதுவுமா கறி சாப்பிடுறதா?' என்று வெளியூர்க்காரர் ஒருவர் கன்ஃப்யூஸ் ஆக, 'சரி... தீர்த்தம் மட்டும் குடிங்க மாமா' என்று குவார்ட்டரைக் கொடுத்தார்கள். ஒரு மடக் உள்ளே போனதுமே அவரின் கை தானாகவே சிக்கன் பக்கம் நீண்டது. சின்னப் பசங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு சொட்டு நாக்கில் வைத்துவிட்டார்கள். நாக்கு சுறுசுறுக்க அவர்களும் கோழியை ஒரு கை பார்த்தார்கள். கை கழுவும்போதே, 'யப்போய், இவ்வளவு நல்ல திருவிழாவை ஏன் அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கா நடத்திக்கிட்டு இருக்கீங்க. இனிமே மாசா மாசம் நடத்தினா என்ன?' என்று ஆர்வமாகக் கேட்டார்கள் இளைஞர்கள்.

அதன் உள்ளர்த்தம் புரியாத பெரியவர், 'அடுத்த திருவிழாவுல எதுக்கும் சாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருவோம்'' என்றார். அநேகமாக இனிமேல் அடிக்கடி இந்தத் திருவிழா நடக்கலாம்!