Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

"வந்தால் கூட்டிப் போ!"

நானே கேள்வி... நானே பதில்!

"வந்தால் கூட்டிப் போ!"

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!

''தன்மானத்தைச் சீண்டும் அசட்டுத்தனமான கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்வது எப்படி?''

 ''ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டார், 'பொதுவுடமை... பொதுவுடமை என்கிறீர்களே... உங்கள் மனைவியைப் பொதுவுடமை ஆக்குவீர்களா?’ என்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சமும் கோபப்படாமல் பெரியார் பொறுமையாக இப்படிப் பதில் சொன்னார்: 'இதற்கு நான் என்ன பதில் சொன்னாலும், அது ஆணாதிக்கத்தில் விளைந்த பதிலாகவே தோன்றும். ஆகவே, இதை என் மனைவியிடமே கேட்டுப்பார்... வந்தால் கூட்டிப் போ... அல்லது எது, என்ன கிடைக்கிறதோ அதை வாங்கிக்கொள்!’ ''

- அனார்கலி, தஞ்சாவூர்.

''குடும்பப் பற்றைக் காட்டிலும் நாட்டுப் பற்று இன்றைய இளைஞர்களிடம் அதிகம் இருக்குமா என்ன?''

''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அழகிரி மகன் துரை தயாநிதியை கிரானைட் வழக்கு விசாரணைக்காக போலீஸ் வலை வீசித் தேடிக்கொண்டு இருந்தபோது, அவரது 'தம்பி’ அருள்நிதி, 20/20 உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறாத கடுப்பில், 'அரையிறுதியில் மோதும் பாகிஸ்தான் - இலங்கை ஆகிய இரு அணிகளும் தோற்க வேண்டும்’ என்று ஃபேஸ்புக்கில் ஆதரவு தேடிக்கொண்டு இருந்தார். இதற்கு என்ன சொல்வீர்கள்?''

- கி.சித்ரா, மதுரை.

##~##

''இலங்கைக் கடற் படையினரால் நம் மீனவர்கள் தாக்கப்படும்போது, ஜனாதிபதியோ, இந்தியப் பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பதற்றம் அடைவது இல்லையே... ஏன்?''

''இலங்கைக் கடற் படையினரால் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், ஊடகங்கள் 'ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றோ, 'தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றோதான் சொல்கின்றனவே தவிர, 'இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்று சொல்வது இல்லை. ராமேஸ்வரம் தமிழகத்தில் இருப்பதோ, தமிழகம் இந்தியாவில் இருப்பதோ அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்!''

- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

'' 'கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு நம்பிக்கை உள்ளது’ என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சொல்கிறாரே?''

''அந்த நம்பிக்கை அமைச்சருக்கு மட்டும் இருந்தால் போதுமா? மக்களுக்கு வேண்டாமா?''

- பிருந்தா சுந்தரம், சென்னை-26.

''தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை விவகார செய்திகளைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றுகிறது?''

'' 'கல்லைத்தான்... மண்ணைத்தான்... காய்ச்சித்தான்... குடிக்கத்தான்... சொன்னானோ...'' என்ற சினிமா வசன வரிகள்தான். வசனம்: கலைஞர்!''

நானே கேள்வி... நானே பதில்!

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

''இப்படி எல்லாம்கூட அலேக் பண்ண முடியுமா என்று ஆச்சர்யப்படுத்திய சம்பவம் ஏதாவது?''

'' 'புதுவை மாநகரம்’ என்ற படத்தின் போஸ்டர்களில் தாவணி விலகியும் விலகாமலும் ஜிலுஜிலு சிலுசிலுவென போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் டாப்ஸி. 'அட... தலைப்புக்கேற்ற கிக் ஏற்றுகிறதே’ என்ற நினைப்பு சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை. 'தெலுங்கில் டாப்ஸியை வைத்து நாங்கள் தயாரிக்கும் படத்துக்காக எடுத்த படம் அது. அதை எப்படி உங்கள் பட விளம்பரத்துக்குப் பயன்படுத்தலாம்?’ என்று புகார் கிளப்பியிருக்கிறார்கள் தெலுங்குப் படக் குழுவினர். அட... அப்பாடக்கர்களா... இவ்ளோ 'டக்’குன்னா இருப்பீங்க!''

- ரா.ரமேஷ், தஞ்சாவூர்.

'' 'நடைமுறைக்கு உதவாத சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்’ என்று ஒருசிலர் குரலெழுப்பி வருகிறார்களே?''

''விருதுநகர் மாவட்டம், கே.கம்மாபட்டியைச் சேர்ந்தவர் சுப்பைய நாயக்கர். இவர் தன்னைக் கொல்ல வந்த 13 அடி ராஜநாகத்தைக் கம்பால் அடித்துக் கொன்றிருக்கிறார். அரிய வகை உயிரினமான அதைக் கொன்றது சட்டப்படி குற்றம் என்று இவரைக் கைது செய்திருக்கிறார்கள். அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காகத் தன்னைக் கொல்ல வந்த ராஜநாகத்தைக் கொன்றவரைக் கைது செய்யும் சட்டத்தை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!''

- ஜெ.கண்ணன், சென்னை.

''இலவசங்களும் சன்மானங்களும் வழங்கும் வியாதி எல்லா நாடுகளிலும் உண்டா?''

''சீனாவில் அரசன் ஒருவன் தன் உயிர் காக்க உதவிய ஊழியன் ஒருவனைப் பாராட்டி சன்மானம் வழங்க எண்ணினான். ஆனால், அரசனின் கஷ்ட காலத்தில் கூடவே இருந்த அவனோ, அரசன் நல்ல நிலைக்கு வந்தவுடன் விலகிச் சென்றுவிட்டான். எப்படியாவது அவனைத் தேடிக் கண்டுபிடித்து சன்மானத்தை வழங்க முடிவு செய்த அரசன் ஆட்களை வைத்து அவனைத் தேடினான். ஆனால், நாடெங்கும் தேடியும் அந்த ஊழியன் கிடைக்கவில்லை. எவரும் நுழைய முடியாத காட்டுப் பகுதி ஒன்றில் தன் தாயுடன் அவன் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அவனை வெளியே வரவைக்கத் திட்டமிட்ட அரசன், காட்டுக்குத் தீ வைக்க உத்தரவிட்டான். காடு முழுக்க எரிந்து பொசுங்கும்வரை யாரும் வெளிவரவில்லை. ஆனால், தீ முற்றிலும் அணைந்த பிறகு காட்டுக்குள் இரண்டு சடலங்களைக் கண்டெடுத்தனர். கை நீட்டி இலவசம் பெறக் கூசிய தாயும் மகனும் தப்பிக்க முற்படாமல் நெருப்புக்குத் தங்களை இரையாக்கிக்கொண்டார்கள். கலங்கிப்போன அரசன், அந்த ஊழியனின் மரணத்தைத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். அதுவே 'கிங்மிங்’ திருவிழாவாக சீனாவில் கொண்டாடப்படுகிறது. அங்கே அப்படி.. இங்கே நாம்?''

- அனார்கலி, தஞ்சாவூர்

''தோண்டத் தோண்ட புதையல் என்பார்கள். இங்கு தோண்டத் தோண்ட ஊழல் வருகிறதே?''

''வித்தியாசத்தை உணருங்கள். உங்களுக்குத்தான் அது ஊழல். அவர்களுக்கு அது புதையல்தானே?!''

- உமா ராஜேந்திரன், காரைக்கால்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism