Published:Updated:

உறவுகளை இணைத்த சினிமா!

க.ராஜீவ்காந்திபடம் : கே.ராஜசேகரன்

உறவுகளை இணைத்த சினிமா!

க.ராஜீவ்காந்திபடம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

'வழக்கு எண் 18/9', பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாடமாக அமைந்த படம். ஆனால், அந்தப் படத்தின் மூலம் ஒரு பெற்றோருக்குத் தொலைந்துபோன மகன் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்திருக்கிறான். படத்தில் வரும் சேரியைச் சேர்ந்த ஹீரோயின், மன நலம் குறைந்த பையன் ஒருவனை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டு இருப்பார் நினைவிருக்கிறதா? அவன் பெயர்தான் அன்பு என்கிற ராஜேஷ்குமார். வாய் பேசவோ, காது கேட்கவோ முடியாத ராஜேஷ்குமார் அன்பு ஆனது எப்படி? கீழ்ப்பாக்கத்தில் ஹோம் ஒன்றில் ராஜேஷைக் கொஞ்சிக்கொண்டு இருந்த லோக்நாத் - மஞ்சுளா தம்பதியைச் சந்தித்தேன்.  

 ''நாங்க திருப்பூர் பக்கம். இவன் பிறந்து ஒரு வருஷம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். ஒரு வயசுல வந்த காய்ச்சல் இவனோட மூளையைப் பலமா தாக்கிருச்சு. அதனால மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுச்சு. ஆறு வயசு இருக்கும்போது, சின்னம்மா வீட்டுக்கு ராஜேஷைத் தூக்கிட்டுப் போன என் அம்மா வழியிலேயே இவனைத் தொலைச்சுட்டாங்க. எங்கே தேடியும் கிடைக்கலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறவுகளை இணைத்த சினிமா!

ஒருகட்டத்துல எங்கே இருந்தாலும் நல்லா இருப்பான்கிற நம்பிக்கையில தேடுறதையே விட்டுட்டோம். ஆனா, ஆறு வருஷத்துக்குப் பிறகு இப்ப கிடைச்சிருக்கான்'' - கண்களில் வழியும் நீரைத் துடைக்கிறார் லோக்நாத்.

''போன வாரம் பிள்ளையார் சதுர்த்திக்கு 'வழக்கு எண்’ படம் போட்டாங்க. நாங்க பார்த்துட்டு இருக்கும்போது கரன்ட் போயிருச்சு. என்கூட வேலை பார்க்குற ஒருத்தர் போன் பண்ணி, 'உன் பையனை அந்தப் படத்துல பார்த்தேன்’னு சொன்னாரு. உடனே, டி.வி.டி. வாங்கிப் பார்த்தோம். அப்புறம் லிங்குசாமி சாரைப் பார்த்தோம். அவர் மூலமா அன்பு தங்கி இருந்த ஹோமுக்குப் போய் நாங்கதான் பெத்தவங்கனு நிரூபிச்சு ராஜேஷைக் கூட்டிட்டு வந்தோம்'' என்கிறார் மஞ்சுளா.

இதுகுறித்து இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பேசினோம். '' 'வழக்கு எண்’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படலை யேனு நிறையப் பேர் வருத்தப்பட்டாங்க. ஆனா, படத்தால ஒரு குடும்பம் சேர்ந்து இருக்கு பாருங்க... இந்த சந்தோஷத்தை ஆஸ்கர்கூடத் தராதுங்க'' என்று சிலாகித்தார்.

அப்பா, அம்மா கிடைத்த சந்தோஷத்தில் சக தோழர்களுக்கு வாய் நிறையப் புன்னகையுடன் டாட்டா காண்பிக்கிறான் அன்பு என்கிற ராஜேஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism